Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கே.பி என்ற உளவாளியின் பின்னணியில் … : அஜித்

“புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பணம் இன்னும் அவர்களின் கைகளிலேயே உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள புலம்பெயர் நாடுகளில் வாழும் புலி ஆதரவுத் தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளவும், புலிகளை மறுபடி பலம் பெறச் செய்யவும் சாத்தியங்கள் உள்ளன. இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைத்துவம் அழித்தொழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பயங்கரமான அந்த இயக்கத்தின் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அவர்களின் வலைப்பின்னல் குறித்து நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.” என்று இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்தியப் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் எச்சரிக்கை விடுத்த்திருந்தார்.

2009 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற இந்த மாநாடு நடைபெற்ற சில வாரங்களில் எம்.கே.நாராயணன் இதே கருத்தை எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் இற்கு வழங்கிய செவ்வியிலும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். இவரது கூற்று இந்தியாவின் “சிந்தனைச் சிற்பிகளின்” மூளையில் திட்டம் வகுக்கப்பட்டுவிட்டதற்கான முன்னறிவிப்பு.

நாராயணன் கரிசனை எழுவதற்கு சரியாக ஒரு மாதங்களின் முன்னதாக மலேசியத் தலை நகரில் கே.பி என்ற குமரன்பத்மநாதன் “கைது செய்யப்பட்டு” இலங்கை கொண்டு செல்லப்படுகிறார். கே.பி “கைதுசெய்யப்படுவதற்கு” சில நாட்களின் முன்னர் அவுஸ்திரேலிய வானொலியொன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகளே காரணம் என்று இந்தியாவின் பங்கை மறைத்துக் கருத்துத் தெரிவிக்கிறார். தவிர, இந்தியாவுடன் அரசியல் தொடர்புகளைப் பேணிவருவதாகக் செவ்வியில் கூறிய கே.பி இந்திய அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் நலன்களை உறுதிபடுத்தப் போவதாகக் குறிப்பிடுகிறார்.

இப்போது புலி ஆதரவுப் புலம்பெயர் குழு ஒன்று கே.பி ஊடான “இனப்படுகொலை” இலங்கை அரசுடனான சமரச்த்திற்காக இலங்கை சென்று திரும்பியுள்ளது.

கே.பியை கோதாபாய ராஜபக்ச 2006ம் ஆண்டே சந்தித்திருப்பதாக கோதாபாய கே.பியின் முன்னிலையில் தம்மிடம் கூறியதாக மருத்துவக் கலாநிதி அருட்குமார் தமிழ்நெட்டிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிடுகிறார்.

அருட்குமாரின் “மனச்சாட்சியுள்ள” கருத்துக்களின் அடிப்படையில் அவர் சொல்லவருவதெல்லாம் இது தான்:

1. கே.பி என்பவர் இலங்கை அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறார்.

2. இலங்கை அரசின் முதலாவது நோக்கம் புலிகளின் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவருவது.

3. புலம் பெயர் நாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் குறித்த அழுத்தங்களத் தவிர்த்துக் கொள்ளல்.

4. தமிழ் நாட்டிற்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் முரண்பாடுகளை உருவாக்குதல்.

ஏற்கனவே புலியெதிர்ப்பு முகாமிலிருந்த புலம் பெயர் அரசியல் பிரமுகர்கள் பலரை இலங்கை அரசு இலகுவாகவே உள்வாங்கிக் கொண்டது. அவர்களில் பலர் திறந்த வெளி முகாம்களில் மக்கள் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த முகாம்கள் “சர்வதேச தரத்தில்” அமைந்திருப்பதாகக் கருத்து வெளியிட்டவர்கள்.

இவர்கள் இலங்கை அரசின் தொங்குதசைகளாக மாறி நாளாகிவிட்டது. இப்போது புலி ஆதரவாளர்களின் சுற்று.

அருட்குமாருடன் இந்தக் குழுவுவில் சென்ற என்ற முன்னை நாள் ரெலோ உறுப்பினரும் பின்னதாக புலி ஆதரவாளருமான சார்ள்ஸ் அன்டனிதாஸ் பி.பி.சி தமிழ்ச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அருட்குமாருக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசுடன் இணைந்து கே.பி ஊடாக தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதென்பது இன்றைய கடமை என்ற கருத்துப்பட கூறுகிறார் சார்ள்ஸ் அன்டனிதாஸ்.

இந்தக் குழுவில் சென்ற ஏனையோர் புலிகளிடம் கற்றுக்கொண்ட இரகசியம் பேணும் முறைமையக் கையாள்கின்றனர்.

எது எவ்வாறாயினும் இலங்கை இந்திய அரசுகளால் திட்டமிடப்பட்ட சதிவலைக்குள் கே.பியும் அவரின் ஊடாக சாள்ஸ் போன்ற புலம் பெயர் புலிகளின் இன்னொரு பகுதியும் சிக்குண்டுள்ளனர். நாராயணனின் திட்டம் இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

புலிகள் போராட்டம் என்ற பெயரில் வளர்த்தெடுத்த சிந்தனை முறை அபாயகரமானது. அதிகாரத்தோடு கைகோர்த்துக் கொண்டு காய் நகர்த்தும் தந்திரோபாயம் தான் அவர்களின் அடிப்படை.

இந்த வகையில் நெடுமாறன், வை.கோ என்று ஆரம்பித்து ஐரோப்பிய அரசியல் கட்சிகள் வரை இவர்களின் நண்பர்களாயினர். இறுதியில் இந்தச் சந்தர்ப்பவாதிகள் கைகழுவி விட்டதும், புலிகள் பலமிழந்து அழிந்து போயினர். அதே சிந்தனை முறையின் மறுபக்கம் தான் இன்று ஐம்பதாயிம் அப்பாவிகளை ஓலமிட ஒலமிடக் கொன்று குவித்த கோதாபயவுடன் கைகோர்த்துக்கொள்ள வைத்திருக்கிறது.

இன்று புலம் பெயர் புலிகளின் வலைப் பின்னல் இரண்டு பிரதான பிரிவுகளாப் பிளவுபடுகின்றது.. ஒன்று இந்திய இலங்கை அரச உளவு வலையத்துக்கு உட்பட்டது. மற்றையது ஐரோப்பிய உளவு நிறுவனங்களோடு தொடர்பானது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி கனடாவிலிருந்து தேடகம் குழு விடுத்திருந்த அறிக்கை இங்கு குறித்துக்காட்டத்தக்கது. “இந்தியாவும், மேற்குலகும் தங்கள் மேலாதிக்கப் போக்கை நிலை நிறுத்துவதற்கு பிரயத்தனங்களை எடுத்த வண்ணமே உள்ளன.

மேற்கில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமதுநலன்களுக்காக பயன்படுத்துவதில் மேற்குலகம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் புலம்பெயர்ந்த சமூகத்தின் ஊடாக ஒரு பொது அரசியல் போக்கை இலங்கைத்தமிழர்கள் மத்தியில் உருவாக்குவதில் மேற்குலகு அக்கறை கொண்டுள்ளது.” என்று தேடகம் தனது அவதானிப்பை வெளியிட்டது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை மறுக்கப்ப்பட்டதற்கான காரணம் என இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சர் ஹகலிய ரம்புவக்கல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதிகார வர்க்கமும், புலனாய்வு நிறுவனங்களையும் நம்பியிருக்கும் அரசியல் இறுதியாக இரத்தம் தோய்ந்த கோதபாயவின் காலடியில் புலிகளின் ஒரு பகுதியை மண்டியிட வைத்துள்ளது. இஸ்ரேல் பலஸ்தீனத்தில் குண்டுமழை பொழியும் வேளைகளிலெல்லாம் மேற்கில் போராடும் சக்திகளால் அந்த நாட்டு அரசுகளுக்குப் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் தான் அவற்றைத் தணித்துள்ளது.

புலிகளின் அதிகார வர்க்க அரசியல் போராடும் சக்திகளைக் கண்டுகொண்டதில்லை. இந்தியாவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி அவர்களின் அரசியல் அவர்களின் அதிகாரவர்க்கக் கூட்டு என்பதுதே. அதுதான் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்துச் சிதைத்துச் சீரழித்துள்ளது.

மக்கள் பற்றுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் தோற்றுப் போன, அதிகாரப் போட்டிக்குள் சிக்குண்ட அரசியல் வழிமுறைகளை நிராகரித்து, இங்குள்ள போராடும் முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் போராடங்களை முன்னெடுப்பதன் ஊடாகவே இலங்கையில் ஒரு சிறிய ஜனநாயக இடைவெளியையாவது ஏற்படுத்த முடியும். அந்த இடைவெளி இலங்கையில் எதிர்காலத்தில் உருவாகவல்ல மக்கள் போராட்டத்தை உறுதிபெறச் செய்யும்.


தொடர்புடைய  பதிவுகள் :

கே.பி இன் இந்தியச் சார்பு நிலையும் இந்தியாவின் இஸ்ரேலும் – -07.07.2009

Exit mobile version