லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர், ஏகாதிபத்திய எண்ணெய் முதலாளிகளின் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்ட போர் என்பதையும், ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்திய நாடுகளின் தலைவர்கள் எண்ணெய் முதலாளிகளின் பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்பதையும் போருக்கு முன்பாக நடந்துள்ள நிகழ்ச்சிகள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.
உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் லிபியாவின் பங்கு 2 சதவீதமாகும். லிபிய எண்ணெயில் கந்தகத்தின் அளவு குறைவாக உள்ளதால், சுத்திகரிப்பதற்கான செலவு குறைவாக இருப்பதன் காரணமாக ஐரோப்பிய எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் லிபிய எண்ணெய் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்தன. லிபிய பாலைவனப் பகுதிகளில் எண்ணெய் வளம் அகழ்ந்தாராயப்பட்டு, புதிய எண்ணெய் வயல்களில் உற்பத்தி தொடங்கப்பட்டால், அடுத்த பத்தாண்டுகளில் லிபியாவின் எண்ணெய் உற்பத்தி இருமடங்கு அதிகரிக்கும் என்பதால், ஐரோப்பாவின் மிகப்பெரிய எண்ணெய் கம்பெனிகளான ஈனி, டோட்டல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், ரெப்சால் ஆகியன இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளத் துடித்தன.
அதிபர் கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்புவரை, லிபியாவின் தேசிய எண்ணெய்க் கழகம், அமெரிக்க ஐரோப்பிய ஏகபோக எண்ணெய் நிறுவனங்களை அகழ்வு சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுத்தி வந்த போதிலும், நாட்டுடமையாக்கப்பட்ட அந்நிறுவனம் சுயேட்சையாக எண்ணெய் வர்த்தகத்தை நடத்தி வந்தது. ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தம் ஒருபுறம் இருந்தாலும், முற்றாக ஐரோப்பிய சந்தையை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று கருதிய லிபியா, எண்ணெய் அகழ்வு சுத்திகரிப்பு, வர்த்தகம் முதலானவற்றில், சீனா, ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளையும் அனுமதித்தது. இதனால் ஐரோப்பிய எண்ணெய்க் கழகங்களின் நிர்ப்பந்தங்கள் லிபியாவில் செல்லுபடியாகவில்லை.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பிடம்(OPEC) தமது நாட்டின் எண்ணெய் விலையை டாலரில் அல்லாமல் தினாரில் தீர்மானித்து, அதன்படி வழங்குமாறு கடாபி கோரிவந்தார். நாட்டின் செல்வத்தை டாலரில் அல்லாமல் தினாரில் சார்ந்திருக்கச் செய்ய அவர் முயற்சித்தார். அந்நிய கடனுதவியைச் சார்ந்திராமல் நிலத்தடி நீர் திட்டங்களை அவர் நிறைவேற்ற முயற்சித்தார். வளைகுடா நாடுகளின் சில வங்கிகளைத் தவிர, மேற்கத்திய பன்னாட்டு ஏகபோக வங்கிகளை லிபியாவில் நுழைய அவர் அனுமதிக்கவில்லை. டாலரை மையமாகக் கொண்ட ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிக்கத்தின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்களும் வர்த்தகமும் முழுமையாக ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்துவிடப்படாமலிருந்ததும் ஏகபோக எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இடையூறாக இருந்தன.
இந்நிலையில், பிரிட்டனின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வர்த்தக நிறுவனமான விடோல், லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கைப்பற்றத் துடித்தது. இதற்காக பிரிட்டிஷ் அனைத்துலக வளர்ச்சித்துறை அமைச்சரான அலன் டங்கனுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இவர் அமைச்சராவதற்கு முன், விடோல் நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட்டவராவார். இன்னொருபுறம், பிரான்ஸ் நாட்டின் எண்ணெய் வர்த்தக நிறுவனங்களும் லிபியா மீது குறிவைத்தன. எண்ணெய் நிறுவனங்களின் நோக்கம் இந்நாட்டு அரசுகளின் கொள்கையாக மாறியது. பிரிட்டனும் பிரான்சும் லிபியாவில் கடாபியின் ஆட்சியை நீக்கிவிட்டு, தமது விசுவாச ஆட்சியைக் கொண்டுவரத் தீர்மானித்தன.
நன்றி : புதிய ஜனநாயகம்