Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

“புதுவிசை” அரசியலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் -தமிழ் செல்வனுக்கு ஒரு பதில் : அசோக் யோகன்

எஸ்.வி.ஆர் இற்கான எனது  திறந்த மடலுக்கான தங்களது வருத்தம் படர்ந்த எதிர்வினையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும், தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகிறேன்.

தாங்களும், தாங்கள் சார்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புக்களான தொழிற்சங்கம், இலக்கிய அமைப்பு, வாலிபர் அமைப்பு என அனைத்திலும் செயல்படும் ஆதவன் தீட்சண்யாவினதும் பிரச்சினையின் வேர்களில் இருந்து எனது இந்த பிரதியை துவங்கலாம் என நினைக்கிறேன்.

ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் தனிநபர்கள் அல்ல.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதனது வெகுஜன அமைப்புக்களிலும் பொறுப்பிலுள்ளவர்கள்.

பொதுவாழ்வு சார்ந்த உங்களது நடத்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாரக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சார்ந்து நீங்களும் பொறுப்புடன் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

”கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளில் வருவதைத்தான் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் “என நீங்கள் சொல்வது அடிப்படையான அரசியல் பிழை என்றே நான் கருதுகினறேன்.

ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் ஆசிரியர் குழுவிலிருந்து வழிநடத்தும் புதுவிசை சஞ்சிகைகக்கும், உங்களுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கருத்தளவில் சம்பந்தமில்லை என்கின்ற மாதிரி நீங்கள் பேசுகின்றீர்கள்.

இது ஒப்ப முடியாத ஒரு வாதம் என நான் நினைக்கின்றேன்.

ஆதவன் தீட்சண்யா ஒரு அப்பாவி அல்ல. அவர் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் செய்து கொண்டிருப்பது சர்வதேசிய அரசு சாரா தன்னார்வ வலைப்பின்னலின் தொடர் அரசியல்.

அவர்தான் சுசீந்திரனைத் தேடிச் சென்று நேர்காணல் செய்து புதுவிசையில் வெளியிட்டவர்.

அவர்தான் சோபாசக்தியின் நேர்காணலை, சுகனின் நேர்காணலை வெளியிட்டவர். அ.மார்க்ஸின் கட்டுரையை வெளியிட்டவர்.
அந்த நேர்காணல்களில் தான் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவில்லை எனும் விடயம் சொல்லப்பட்டது.

இலங்கை இடதுசாரிகளின் சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் கொச்சைப்படுத்தபட்டன. கோவை ராணுவ வாகனங்கள் எதிர்ப்புப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டது.

புலிகள் எதிர்ப்பை மட்டுமே முனைப்பாகக் கொண்டு அரசு சார்பு நிலைபாடுகளை முன்வைப்பவர்கள் இந்த நால்வர் குழுதான்.

இதனது உச்சம் இலங்கை இனவாத அரசுக்கும்,இலங்கை பௌத்தக் கருத்தியலுக்கும் சம்பந்தமில்லை எனும் சுகனின் உளறல்கள்.

புதுவிசையின் இந்த அரசியலுடன் உடன்பாடு கொண்டு, நீங்கள் சொல்கிற வகையிலான இலங்கை அரசுக்கு எதிரான ‘ஒற்றுமை’ அரசியலை முன்னெடுக்க முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?

நீங்கள் மாறுபட்ட கருத்து உள்ளவர்களின் ஒற்றுமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆதவன் தீட்சண்யா திட்டமிட்ட வகையில் அதனைக் குலைப்பதற்கான அரசியலை, முனைப்பாக முன்னெடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆதவன் தீட்சண்யா அப்பாவி அல்ல.

இலங்கை அரசு ஆதரவுக் குழுவினரின் அழைப்பின் பேரில்தான் அவர் லண்டன் கூட்டத்திற்கு வந்து சென்றார்.

இந்த  இலங்கைக் ஆதரவு    குழுவினர்  தமிழகத்திற்கு வரும்போது அவர்தான் அவர்களை வரவேற்று, ஈழப் பிரச்சினை தொடர்பாக நக்கல் நளினமாகக் கேள்விகளும் கேட்டு புதுவிசை சஞ்சிகையில் தொடர்ந்து நேர்காணல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தனிநபர் உறவுகள் எனச் சொல்கிறீர்களா அல்லது அரசியல் பரிமாணம் கொண்ட உறவு எனச் சொல்கிறீர்களா?

புதுவிசை மேலெடுத்து வருகிற அரசியலுக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதில் அங்கம் வகிக்கும் உங்களுக்கும் தொடர்பற்ற ‘சுதந்திர’ அரசியல் எனச் சொல்கிறீர்களா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பான முழுநேர ஊழியரான உங்கள் பதில் இவ்விடயத்தில் ஒப்ப முடியாததாகவே இருக்கிறது.

இலங்கை குறித்த என்.ராமின் நிலைபாடுகளும் ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தங்களது கட்சியின் நிலைபாடுகளுக்கு விரோதமானது எனத் தாங்கள் கருதுவீர்களானால்-

நிலவி வரும் ஒரு குழப்பத்திற்கு நீங்கள் திட்டவட்டமாக முடிவு கட்டமுடியும்.

 தங்களது கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர் பத்திரிக்கையில், “பலர் நினைக்கிறமாதிரி, என்.ராமின் அரசியலுக்கும், ஆதவன் தீட்சண்யா முன்னெடுக்கும் அரசியலுக்கும், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக புதுவிசை முன்னெடுக்கும் அரசியலுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என நீங்கள் அறிவிக்கலாம் இல்லையா?

அறம் சார்ந்த கருத்துப் போராட்டத்தில் எமக்கு நம்பிக்கையுண்டு.
நாம் நடத்திக் கொண்டிருப்பதும் கருத்துப் போராட்டம்தான் என்பதில் நாங்கள் உறுதியான நிலைபாடு கொண்டிருக்கிறோம்.

தங்கள் மீது இப்போதும் நான் பெறுமதிப்புக் கொண்டிருக்கிறேன். இலங்கை அரசைப் பாசிச அரசு எனத் தாங்கள் விமர்சித்திருப்பதை நான் அறிவேன். இலங்கை அரசுக்கு எதிராக, கருத்து மாறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனத் தாங்கள் அறைகூவி வருவதையும் நாங்கள் அறிவோம். அதனையே நாங்களும் வழிமொழிகிறோம்.

துரதிருஷ்டவசமாக திருவனந்தபுரம் மாநாடு குறித்து தாங்கள் முழுமையாக அறியாமல், தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்தான் நீங்கள் சென்றீர்கள் என்று நீங்கள் சொல்வதை எம்மால் ஒப்ப முடியாததாக இருக்கிறது.

ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தொடர்புகளும் அறியாமையிலும் அப்பாவித்தனத்திலும் நடக்கிற காரியங்கள் அல்ல. அவரோடுதான் நீங்கள் திருவனந்தபுரம் மாநாட்டில் பங்கு கொண்டிருக்கிறீர்கள்.

தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப் புரட்சி அரசியல் குறித்து அதிஅவதானம் கொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகத் தங்களது பதிலை எம்மால் ஒப்ப முடியவில்லை.

நான் தங்களது வலைத்தள வாசகன் எனும் அளவில் எமது நண்பர் டி.அருள் எழிலனது கருத்துக்கள் தொடர்பான தங்களது பதிவில், ஆதவன் தீட்சண்யாவினது வழமையான நக்கல் நடையுடனான ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.

”டி.அருள் எழிலனதும் அவரொத்தவர்களினதும் கருத்துக்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை தன்னால் பதில் எழுத முடியும்” என எக்களிப்புச் செய்துவிட்டு, “ஆனாலும் தான் எழுதக் கூடாது என அமைதி காப்பதாக “ புத்த பகவானின் மறு அவதாரம் போல ஆதவன் தீட்சண்யா பேசுகிறார்.

அவரை வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லச் சொல்லுங்கள்.
வெறும் வாய்வீச்சு வேண்டாம். நாங்கள் அதனை ஒரு சவாலாகவே ஏற்கிறோம்.

மற்றபடி, தங்களது வருத்தம் படர்ந்த எதிர்விணையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும்,தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகின்றேன்.

அன்புடனும் தோழமையுடனும்
அசோக் யோகன்.

Exit mobile version