Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘‘ இந்தியா ஒரு ராணுவ ஆட்சி முறையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது ’’ : அருந்ததி ராய்

மாவோயிஸ்டுகள் குறித்து நமக்கு சொல்லப்படுவதையும், அதனடிப்படையில் நாம் அவர்களைப் பற்றி வைத்திருக்கும் அபிப்பிராயங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. மாவோயிஸ்டுகள் மீது தொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப் போரை அரசாங்கம் தவிர வேறு எவருமே விரும்பவில்லை. 2004ஆம் ஆண்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியபோது, இந்தியாவில் உள்நாட்டு அபாயம் மாவோயிஸ்டுகள் தான் என்று கூறினார். அப்போது இருந்த நிலைமை என்ன?

ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் கொல்லப்படும்போது பங்குச்சந்தையில் சுரங்க நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரிக்கக் காரணம் என்ன? ஏனென்றால் சுரங்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் சொல்லுகிற செய்தியாக அது பார்க்கப்படுகிறது. ‘ உங்கள் நலன்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்‘ என்று சுரங்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் தைரியம் அளிக்கிறது. மாவோயிஸ்டுகளை அரசாங்கம் பூதாகரப்படுத்தி விட்டது.
இந்தப் போரை இவ்வளவு அவசரமாக அரசாங்கம் நடத்த வேண்டிய தேவை என்ன? 2005ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களோடு இந்திய அரசு பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டது. அவர்களெல்லாம் காத்துக்கொண்டிருக்கிறார்கள். வர்த்தக செய்திஏடுகளைப் பார்ப்பீர்களேயானால் எந்தப் பன்னாட்டு நிறுவனம் எந்த நிலத்துக்காகக் காத்திருக்கிறது என்ற விவரம் தெரியும். இப்படி நிலத்தைத் தாரை வார்த்துத் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் எண்ணற்ற குரல்களில் மாவோயிஸ்டுகளுடைய குரலும் ஒன்றாக இருக்கிறது. கலிங்கநகராக இருந்தாலும் சரி, போஸ்கோவாக இருந்தாலும் சரி அல்லது சிங்கூர் என எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்தப் போராட்டங்களின் மையமாக இருப்பது நிலம்தான். மாவோயிஸ்டுகளுடைய போராட்டத்தின் மையமாக இருப்பதும் நிலப்பிரச்சனைதான். இந்தியாவில் எந்தவொரு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், முதலில் அரசாங்கம் செய்வது அங்கே இருக்கும் மக்களைக் காலிபண்ணி வேறு இடத்துக்கு அனுப்புவதுதான்.
அப்பாவி மக்களை யார் கொன்றாலும் அதை நான் ஆதரிக்க மாட்டேன். அது மார்க்சிஸ்ட் கட்சியாக இருந்தாலும் சரி அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் சரி அதை நான் ஆதரிக்க மாட்டேன். சி.ஆர்.பி.எஃப். படையைச் சேர்ந்த 76 பேர் கொல்லப்பட்டபோது எனக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுக்கப்பட்டது. நீங்கள் காட்டுக்குள் சென்று மாவோயிஸ்டுகளைச் சந்தித்துவிட்டு வந்தபின் அவர்களைப் பற்றி புகழ்ந்து எழுதினீர்களே. அவர்கள் செய்திருக்கும் இந்த வன்முறைச் செயலை நீங்கள் இப்போது கண்டியுங்கள் என்று என்னிடம் வலியுறுத்தப்பட்டது. நான் கேட்டேன், இவ்வளவு ஆயுதங்களோடு இந்த சி.ஆர்.பி.எஃப். படையினர் காட்டுக்குள் சென்று அங்கே என்ன செய்தார்கள்? எதற்கு அவர்கள் அங்கே சென்றார்கள்? என்று நான் கேட்டேன். இதுவொரு சுலபமான பிரச்சனை அல்ல. சிக்கலான விஷயம். கோவணம் கட்டிக்கொண்டு கையில் வெறும் வில்லையும், அம்பையும் வைத்திருக்கும் மக்களிடம் சென்று, அவற்றையும் நீங்கள் பிடுங்க முயற்சிக்கும்போது நான் உங்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று சொன்னால் அது என்னால் முடியாது.

உலகிலேயே மிகவும் ஏழைகளாக இருக்கும் மக்களுக்கும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று சொல்லப்படுகிற அரசாங்கத்துக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது. கார்ப்பரேட் நிறுவனங்களை அந்த மக்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். தங்கலது போராட்டத்தின்மூலமாக அவர்கள் முக்கியமான சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். இந்த ஜனநாயகத்தைப் பற்றி, நாகரீகம் என்று நாம் நம்பிக்கொண்டிருப்பதைப் பற்றி அவர்கள் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். இந்தக் கேள்விகள் ‘ஆர்ட் கேலரி‘ களிலிருந்து எழுப்பப்படுபவை அல்ல. இவை லட்சக்கணக்கான ஏழை மக்களால் எழுப்பப்படுகின்ற கேள்விகள். அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்களில்தான் இந்த நாகரீகத்தின், மனித குலத்தின், உலகத்தின் எதிர்காலம் இருக்கின்றது.

ஆப்கான் மக்களுக்கு எதிரான யுத்தத்தில் 1980களில் முதலாளித்துவம் வெற்றி பெற்றது. அப்போது இந்தியா உள்பட உலக நாடுகள் யாவும் தமது நிலைப்பாட்டைத் தலைகீழாக மாற்றிக் கொண்டன. அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இயற்கையான கூட்டாளிகளாக நாம் மாறினோம். மாவோயிஸ்டுகளைக் காட்டில் சென்று சந்தித்து அந்த அனுபவத்தை நான் எழுதியபோது, அவர்களை ரொமான்டிஸைஸ்’ பண்ணுகிறேன் என்று சிலர் என்னை விமர்சித்தனர். உண்மைதான். நான் காட்டின் ‘ரொமான்ஸை‘ நேசிக்கிறேன். ஆதிவாசி மக்களுடைய ‘ரொமான்ஸை’ நான் நேசிக்கிறேன். நமது திரைப்படங்களில் வன்முறையை மிகைப்படுத்திக் காட்டும்போது, அங்கே வன்முறை ‘ரொ£மான்ட்டிஸைஸ்‘ செய்யப்படும்போது அதை நாம் ரசிக்கிறோம். எந்திர துப்பாக்கிகளையும் மற்ற பல ஆயுதங்களையும்கொண்டு தாக்குதல் நடத்தப்படும்போது நாம் ரசிக்கிறோம். ஆனால், ஏழை மக்களின் வன்முறையை யாரேனும் பாராட்டினால் அதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். தண்டகாரண்யா காட்டுப்பகுதியில் நான் சென்று பார்த்தபோது 640 கிராமங்கள் அங்கே காலி செய்யப்பட்டிருந்ததை கண்டேன். அந்த மக்களெல்லாம் இப்போது ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளிலும், காடுகளுக்கு உள்ளேயும் சென்று வாழ்கிறார்கள். 1950களில், 60களில் இதுதான் நடந்தது. தெலுங்கானா போராட்டத்தின்போது கூட்டுச்சேர்ந்த அதே சக்திகள் இப்போதும் மக்களுக்கு எதிராக கூட்டணி அமைத்து அணி திரண்டிருக்கின்றார்கள்.
ஜனநாயகத்தையே அனுமதிக்காத ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருந்த பாகிஸ்தானில் இப்போது ஜனநாயகம் வேண்டுமென்று கேட்கிறார்கள். அது ஒரு ஜனநாயக நாடாக மாறுவதற்கு முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்தியாவோ ஒரு ராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதைத்தான் நம்முடைய ஊடகங்களும், மத்திய தர வர்க்கமும் ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆதிவாசி மக்கள் என்ன கேட்கிறார்கள்? மலைப்பகுதியில் இருக்கும் பாக்ஸைட் தாதுவை அங்கேயே விட்டுவிடுங்கள் என்றுதான் அவர்கள் சொல்கிறார்கள். அதைத் தோண்டி எடுக்கும்போது உங்களுக்கு அலுமினியம் கிடைக்கும். ஆனால், அதனால் நீர்வளம் எல்லாம் சுத்தமாக அழிந்து போய்விடும் என்று ஆதிவாசிகள் எச்சரிக்கிறார்கள். அவர்கள் சொல்வது எனக்கு சரியாகப்படுகிறது. அவர்கள் புரட்சிகரமான ஆயுதப் போராட்டத்தை நடத்துகிறார்கள். ஆனால், ஆதிவாசிகளிடம் புரட்சிகரமான தத்துவம் கிடையாது. அது வேறு விஷயம். நான் இங்கே அவர்களுடைய போர் யுக்திகளைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை.தென்னாசியா எங்கும் எதிர்ப்புப் போராட்டங்கள் பல்வேறு அடையாளங்களோடு நடந்து கொண்டிருக்கின்றன. எல்லா இடங்களிலும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் சக்திகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தீவர இஸ்லாமிய அடையாளத்தோடு மக்களின் எதிர்ப்பு வெளிப்படுகிறது. இந்தியாவிலோ அது இடதுசாரி தீவிரவாதம் என்ற வடிவத்தை எடுத்துள்ளது. ஆனால், இங்கெல்லாம் தாக்குதல் நடத்தும் சக்திகள் முதலாளித்துவ சக்திகள்தான். இதைப்பற்றி நாம் பேசியாக வேண்டும். ஏனென்றால் இந்தத் தாக்குதலால் இறுதியில் நமது வாழ்க்கையும் பாதிக்கப்படப் போகிறது.

(2.6.2010 அன்று மராட்டி பத்ரகார் சங்கத்தின் சார்பில் மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மக்களுடைய யுத்தம்’ என்ற தலைப்பிலான கூட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய உரையின் சுருக்கம்.தமிழில் : ரவிக்குமார் )

Exit mobile version