Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !! : அப்துல்

mikhail-kalasnikov
ஏ.கே.-47 துப்பாக்கியை உருவாக்கிய மிகயில் கலாஷ்னிகோவ்

93 வயது முதியவர் அவர். தன் வாழ்நாள் முழுவதும் பொறியியல் துறையில் வேலை செய்து இப்போது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வேலையான துப்பாக்கி வடிவமைப்பு பரிசோதனைகளின் போது தொடர்ந்து உரத்த சத்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்ததால் காது செவிடாகி விட்டிருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளாக அவரது நாட்டில் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்கள் அவரைப் பெரிதாக ஏதும் பாதித்திருக்கவில்லை.

அவர்தான் 1947-ம் ஆண்டு ஏகே 47 என்ற துப்பாக்கியை வடிவமைத்தவர். அவரது வடிவமைப்பில் உருவான துப்பாக்கி பின்னர் அவரது பெயராலேயே ஏகே 47 (அவ்டோமாட் கலாஷ்னிகோவ் மாடல் 1947) என்று அழைக்கப்படுகிறது. அவர் பழைய சோவியத் யூனியனைச் சேர்ந்த மிகயில் கலாஷ்னிகோவ்.

இப்போது சோவியத் யூனியனின் போலி சோசலிச குடியரசுகள் வீழ்த்தப்பட்டு, முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதாரம் ரசியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தில், கலாஷ்னிகோவ் என்ற பெயரின் வணிக மதிப்பு $1000 கோடி (சுமார் ரூ. 60,000 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இஜ்மாஷ் என்ற ரசிய நிறுவனம் அவரது பெயரை பயன்படுத்திக் கொள்வதற்காக பல கோடி ரூபாய் உரிமத் தொகையாக அளிக்க முன்வந்த போது அவர் அதை மறுத்து விடுகிறார். தன் வாழ்நாள் முழுவதுமான உழைப்பும், அதன் விளைவுகளும் தன்னை உருவாக்கி, வளர்த்து, பராமரிக்கும் சமூகத்திற்குத்தான் சொந்தம், தனிப்பட்ட முறையில் தனக்கு அதன் மீது எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி விட்டிருக்கிறார்.

இன்னொரு பக்கம் 65 வயதான ஒரு நிறுவனம். அந்நிறுவனம் 1998-ம் ஆண்டு ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்ற பாடலுக்கான காப்புரிமையை (சொத்துரிமையை) கைப்பற்றியது. ஒரு திரைப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அந்தப் பாடலை பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு கட்டணமாக $1500 (ரூ. 90,000) ஐ அந்த நிறுவனம் வசூலிக்கிறது. கட்டணம் செலுத்தாமல் பாடலைப் பயன்படுத்தினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து $1,50,000 (ரூ. 90 லட்சம்) வரை அபராதமாக வசூலிக்கிறது.

இத்தனைக்கும் அந்தப் பாடல் வரிகளையோ, இசையையோ உருவாக்கியது அந்த நிறுவனம் இல்லை. அந்த மெட்டு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பேட்டி ஹில், மில்ட்ரெட் ஹில் என்ற இரு சகோதரிகளால் உருவாக்கப்பட்டது. வரிகள் அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டன. இதை ஆங்கிலம் தெரிந்த மக்கள் உலகமெங்கும் பாடி வருகிறார்கள். இந்த பிறந்த நாள் வாழ்த்துக்கு காப்புரிமை பெற்றிருக்கும் அந்த அமெரிக்க நிறுவனத்தின் பெயர் வார்னர் மியூசிக்.

வார்னர் மியூசிக் 2012-ம் ஆண்டு திரட்டிய மொத்த விற்பனையின் மதிப்பு $270 கோடி (சுமார் ரூ. 14,000 கோடி). இதன் பெரும்பகுதி பல்வேறு இசைக் கலைஞர்களின் படைப்புகளை தனக்கு ‘சொந்தமாக்கி’, அந்த சொத்துடைமையை அங்கீகரிக்கும் முதலாளித்துவ சட்டங்களை பயன்படுத்திக் கொண்டு குவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் உருவாக்கிய படைப்பை தனது சொத்து என்று ஒரு நிறுவனம் உரிமை கொண்டாடும் வண்ணம் அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை நேரடியாகவும், வளைத்தும் பயன்படுத்தி வார்னர் போன்ற நிறுவனங்கள் உலக மக்களைச் சுரண்டி வருகின்றன. ‘இது எங்கள் சொத்து. இதற்கு எங்களிடம் உரிமை இருக்கிறது’ என்ற முதலாளித்துவ அறத்தின் மூலம் அதை நியாயப்படுத்துகின்றன.

ஹேப்பி பர்த்டே பாடல் வரிகளுக்கும், இசைக்கும் காப்புரிமை தன்னிடம் இருப்பதாகச் சொல்லி வார்னர் நிறுவனம் இது வரை $15 கோடி (சுமார் ரூ. 900 கோடி) சம்பாதித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சோவியத் சோசலிசம் உருவாக்கிய சமூக மனிதர் மிகயில் கலாஷ்னிகோவ். அமெரிக்க முதலாளித்துவம் உருவாக்கிய சமூக சுரண்டல் நிறுவனம் வார்னர் மியூசிக். போர்களில் மனிதர்களை கொல்லப் பயன்படும் துப்பாக்கியின் அதி நவீன வகையைக் கண்டுபிடித்தவரின் இதயத்தில் சமூக உணர்வு நிறைந்திருக்கிறது. பிறந்த நாள் வாழ்த்து எனும் மெல்லிய உணர்ச்சியை விற்பனை செய்யும் வார்னர் மியூசிக்கின் இதயத்தில் சமூக விரோதம் நிறைந்திருக்கிறது.

கம்யூனிசம் என்றால் என்ன, முதலாளித்துவம் என்றால் என்ன என்பதற்கு வேறு சான்றுகள் வேண்டுமோ?

– அப்துல்
_________________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013

_________________________________________________

Exit mobile version