Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஸ்கொட்லாந்து பிரிவினையின் பின்புலம் – சில குறிப்புக்கள் : சபா நாவலன்

yesornoஅத்லாந்திக் சமுத்திரத்தின் உள்ளே தலையை நுளைத்து பிரித்தானியாவை உதைத்துக்கொண்டிருக்கும் அழகிய குடாநாடு தான் ஸ்கொட்லாந்து. ஏறக்குறைய 790 தீவுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் அழகான தேசம். பிரித்தானியாவின் இன்னொரு அங்கமான இங்கிலாந்திலிருந்து பயணித்தால் அழகிய நீண்ட மலைகளும் அருவிகளையும் அண்மித்த லேக் டிஸ்ரிக்கைத் தாண்டும் போதே ஸ்கொட்லாந்து எல்லைய அடைந்துவிட்டதாக உணரலாம். எடின்பரோ ஸ்கொட்லாந்தின் தலை நகரம். விசாலமான வீதிகளும், விண்ணைத் தொடத கட்டடங்களும் ஆர்ப்பாட்டமில்லாத தலை நகரம் ஒன்றை அறிமுகப்படுத்தும். கிளாஸ்கோ ஸ்கொட்லாந்தின் தொழில் நகரம். உலகில் அதிகம் பணப்பரிவர்த்தனை நடைபெறும் நகரங்களில் கிளாஸ்கோவையும் ஒன்றாகக் குறிப்பிடுவார்கள்.

நிலப்பிரபுத்துவ மன்னராட்சியிலிருந்து முதலாளித்துவம் உதித்த போது பிரான்சில் மன்னர்கள் அழிக்கப்பட்டார்கள். பிரித்தானியாவில் தமது அழிவைப் புரிந்துகொண்ட மன்னர்கள் இணைந்து முதலாளித்துவத்துடன் சமரசம் செய்துகொண்டார்கள். அவ்வகையான ஒரு சமரசத்தின் வெளிப்பாடே 1706 ஆம் ஆண்டில் பிரித்தானியாவுடன் ஸ்ட்கொடாலாந்து இணைந்து கொண்டதைக் குறிப்பிடலாம். ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் வட அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளின் இணைவையே பிரித்தானியா என்கிறார்கள்.ஐக்கிய ராஜ்யம், பெரிய பிரித்தானியா என்றெல்லாம் இக் கூட்டாட்சியை அழைப்பது வழமை.

பிரித்தானியாவுடன் ஸ்கொட்லாந்து இணைந்து கொண்ட முன்னூறு ஆண்டுகள் கடந்த பின்னர் ஸ்கொட்லாந்து பிரிந்து தனியரசு அமைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கிறது.

ஐக்கிய ராஜியத்தின் நாடுகளில் ஒன்றாக ஸ்கொடலாந்து இணைந்த போது ஸ்கொட்லாந்தில் நெருப்பெரிந்தது, மக்கள் மத்தியில் எதிர்ப்பும் வன்முறைகளும் வெடித்தன.

எதிர்வரும் 18ம் திகதி ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதா இல்லையா என்ற சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பிரிந்து செல்லவேண்டும் என்பதற்கான ஆதரவு அதிகரித்துச் செல்ல இங்கிலாந்திலும் ஏனைய பகுதிகளிலும் பதற்றம் நிலவ ஆரம்பித்துள்ளது.

ஸ்கொட்லாந்து தேசியம் தனியாகப் பிரிந்து செல்கின்ற அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளதாலேயே பிரிவினையைப் பெரும்பாலானவர்கள் ஆதரிக்கும் நிலை தோன்றியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

தேசியம் என்பது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை உடைத்துக்கொண்டு முதலாளித்துவம் முகிழ்ச்சி பெறுவதற்கான காலகட்டத்திற்குரிய குறிப்பான தத்துவம். முதலாளித்துவத்தின் தோற்றத்துடனேயே தேசங்கள் உருவாகின்றன.

இலங்கை போன்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்தைப் பேணும் சமூக அமைப்பிற்கு எதிராக மக்கள் போராட விழைகின்ற போதும் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடத் தலைப்படுகின்ற போதும் தேசியம் தேசம் என்ற கோட்பாடுகள் தோன்றுகின்றன. ஸ்கொட்லாந்தைப் பொறுத்தவரை பிரிவினை என்பது தேசிய உணர்வின் அடிப்படையில் தோன்றியது என்பதை விட இன்றைய நவ- தாரளவாதப் பொருளாதாரத்தின் தோல்வியை தேசியமாக அல்லது அது சார்ந்த அடையாளமாக ஸ்கொட்லாந்து அரசியல்வாதிகள் முன்வைக்கிறார்கள்.

பிரிவினைக்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் அண்ணளவாக ஐம்பதிற்கு ஐம்பது என்ற அளவில் கருத்துக்கணிப்புக்களைப் பெற்றுள்ளனர். பிரித்தானியாவின் எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிகளும் பிரிவினைக்கு எதிரான இருபத்து நாங்கு மணி நேரப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. பிபிசி ஊடகம் பிரிவினைக்கு எதிரான உளவியல் யுத்ததை நடத்துவதாக அதன் அலுவலகத்தின் முன்னால் இன்று ஆர்ப்பட்டம் ஒன்று நடைபெற்றது.

ஸ்கொடலாந்து பிரிவினைக்கான ஆதரவு வெற்றிபெறும் அளவிற்குப் பெருகும் என்பதை பிரதமர் கமரனோ அன்றி பிரித்தானிய அதிகாரவர்க்கமோ எதிர்பார்த்திருக்கவில்லை. இவ்வளவு காலமும் மௌனமாயிருந்த கமரன் வெற்றியை நோக்கி கருத்துக்கணிப்புக்கள் வெளியான வேளையில் புதிய கவர்ச்சிகரமான திட்டங்களுடன் முன்வருகிறார்.

ஒரு குடும்பத்தின் உறுப்பினர் பிரிந்து செல்ல முற்படும் போது ஏற்படும் வலியை போன்று இதயம் உடைந்து பேசுகிறேன் என்று கமரன் உணர்ச்சிவயப்படுகின்றார்.
ஒன்றிணைதலின் சிறப்பு என்ற தலையங்கத்தில் நடைபெறும் பிரிவினைக்கு எதிரான பிரச்சாரத்தில் லண்டனைத் தலமையகமாகக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்துள்ளன.

இவர்கள் பிரிவினைக்கு எதிரான பிரச்சாரம் ஸ்கொட்லாந்து மக்கள் மத்தியில் எதிர்மறையான மாற்றத்தையே தோற்றுவித்துள்ளது. இணைந்திருங்கள் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு கணப்பொழுதும் பிரிந்து செல்வதற்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

பிரிவினைக்கு எதிரான இறுதி ஆயுதமாக பல்தேசியப் வியாபார நிறுவனங்கள் ஸ்கொடலாந்து மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளன. ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லுமானால் ரோயல் பாங் ஒப் ஸ்கொட்லாண்ட் தனது தலைமையகத்தை லண்டனுக்கு மாற்றிவிடப்போவதாகக் கூறுகிறது.

பிரிவினையின் எதிர்விளைவைப் புரிந்துகொள்வதற்கு அரசியல்வாதிகளும் மக்களும் தவறிவிட்டனர் என்று எச்சரிக்கிறார் டொச் பாங் பொருளியலாளர் டேவிட போல்கேர்ஸ் லன்டோ.ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லுமானால் 1930 ஆம் ஆண்டிற்கு இணையான உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.டொச் பாங் இன் மற்றொரு பொருளியலாளர் பிலால் ஹபீப், பிரிந்து சென்றால் ஸ்கொட்லாந்தின் பொருளாதாரம் மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்றும் பிரித்தானியா முழுவதையும் இது பாதிக்கும் என்று கூறுகிறார்.

மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், பி அன்ட் கியூ மற்றும் ரிம்சன்ஸ் ஆகிய பல்தேசிய வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களும் தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லுமானால் விலைகள் அதிகரிக்கும் என மக்களை அச்சத்திற்கு உள்ளாக முற்படுகின்றனர். லோயிட்ஸ் வங்கி ஸ்கொட்லாந்தை விட்டு வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது.

பொதுவாக அனைத்து பல்தேசிய வியாபார நிறுவனங்களும் வங்கிகளும் பிரிவினையை எதிர்க்கும் நிலையில் சிறு வியாபாரிகளும். சிறிய அளவில் காணப்படும் தேசிய உற்பத்தியோடு தொடர்புடைய முதலீட்டாளர்களும் பிரிவினையை ஆதரிக்கின்றனர்.

பல்தேசிய வியாபார ஊடகங்கள் ஸ்கொட்லாந்து பிரிவினை தொடர்பான தகவல்களை இருட்டடிப்புச் செய்கின்றன. அலையாக எழுந்துள்ள பிரிவினைக்கான ஆதரவை மறைத்து தமது சொந்த விருப்புக்களைத் தகவல்களாக வெளியிடுகின்றன.

பல்தேசிய வியாபார நிறுவனங்களதும், வங்கிப் பொரு முதலைகளதும் மிரட்டலுக்கு எதிரான மக்கள் போராட்டமாக பிரிவினைக் கோரிக்கை மாறிவிட்டதால் இதற்கு இடது சாரி சாயம் பூசப்படுகின்றது. ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தலைவர் தாம் இடதுசாரி தேசியவாகிகள் என்கிறார். சோசலிசக் கட்சியோடு கூட்டுவைத்திருக்கிறோம் மக்கள் நலனே தமது குறிக்கொள் என்கிறார்.

ஸ்கொட்லாந்தில் மட்டுமன்றி பிரித்தானியா முழுவதிலும் மக்கள் முதலாளித்துவ நெருக்கடியின் பலிகடாக்களாக்கப்பட்டுள்ளனர்.பல்தேசிய வியாபாரிகளின் கொள்ளை மக்களின் வாழ்க்கைத் தரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கடனாளிச் சமூகம் ஒன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்கள் நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்கே வழி தெரியாது விழிக்கின்றனர்.

அதிகரிக்கும் வேலப்பழு, குறைவடையும் ஊதியம், பொருட்களின் விலையேற்றம் என்று மக்கள் முதலாளித்துவக் கொள்ளைக்காரர்களின் பிடியில் நசுங்கிச் செத்துப்போகிறார்கள்.

இதே நிலை தான் ஸ்கொட்லாந்திலும் காணப்படுகின்றது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான புதிய திட்டங்களை முன்வைப்போம் என்கிறார்கள் பிரிவினைக் கட்சிகள்.

முதலாளித்து நெருக்கடி தேசியமாக மாற்றப்பட்டு ஸ்கொட்லாந்து மக்களுக்குத் தற்காலிக தன்நம்பிக்கையை வழங்கியிருக்கிறது. இதற்கு எதிரான முழக்கங்களிலிருந்தே பிரிவினைக்கான குரல் எழுவதால் அது இடது சாரித் தன்மை பெற்றதான தோற்றப்பாட்டைத் தருகின்றது.

ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் சல்மண்டோ அன்றி அவரது தேசிய வாதக் கட்சியோ இடதுசாரிகள் அல்ல. இடதுசாரிகள் என்று தம்மை அறிவித்துக்கொள்ளும் கட்சிகள் கூடப் போலியானவர்களே. இந்த நிலையில் ஸ்கொட்லாந்து பிரிவடைந்தாலும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மீள உள் நுளைவதும், ஸ்கொட்லாந்து மக்களின் வாழ்வை ஆக்கிரமித்துக் கொள்வதும் தவிர்க்க முடியாத நிகழ்வாகிவிடும்.

பிரித்தானியாவில் ஓரளவாவது உற்பத்தி நடைபெறும் நாடாக ஸ்கொட்லாந்து காணப்படுகிறது. விஸ்கி, உலர் உணவு, விவசாயம் போன்றவற்றோடு எண்ணை, எரிவாயு போன்ற வளங்களையும் ஸ்கொட்லாந்து கொண்டுள்ளது. இவை அனைத்தையும் ஸ்கொட்லாந்து மக்களுக்காகப் பயன்படுத்தப்போவதாக பிரிவினை கோரும் கட்சிகள் கூறுகின்றன. இவை தேசியச் சாயலை வாழங்கினாலும், ஏற்கனவே பல்தேசியக் கொள்ளையர்களின் பிடியிலிருக்கும் தேசிய உற்பத்தியை மீட்பதற்கான எந்தத் திட்டத்தையும் முன்வைக்க இயலாத நிலையிலேயே ஸ்கொட்லாந்து அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. இடது சாரி அரசியல் என்பது பழைமைவாதத்தை தேசியமாக்கு மீள வழங்குவதல்ல. சமூகத்தின் முழு உற்பத்தி முறையும் மாற்றமடைதல் என்பதிலிருந்தே அது ஆரம்பமாகும். அவ்வாறான எந்தத் திட்டங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

பல்தேசிய் வியாபார நிறுவனங்களின் பொருளாதாரக் கொள்ளையை எதிர்கொள்ள வேண்டுமானால் ஸ்கொட்லாந்து மக்கள் சமூகப் புரட்சி ஒன்றை நடத்துவதே இறுதித் தீர்வாக அமைய முடியும். முதலாளித்துவ நெருக்கடியிலிருந்தும், பிரித்தானியா என்ற கிழட்டு ஏகாதிபத்தியத்திடமிருந்தும் விடுதலையடவதற்கான தற்காலிக தீர்வாக ஸ்கொட்லாந்து மக்கள் கருதினாலும் அது இறுதித்தீர்வல்ல என்பதை விரைவிலேயே உணர்ந்துகொள்வார்கள். எது எவ்வாறாயினும் பிரித்தானிய ஆளும்வர்க்கத்தையும் அதிகார வர்க்கத்தையும் பலவீனப்படுத்தும் ஸ்கொட்லாந்துப் பிரிவினை உலகின் ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பானதே.

Exit mobile version