Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உதவி தேவை – அரச குலம், பாசிச கோத்திரம் – கே.பி குழு : நிவேதா நேசன்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கென பல்வேறு நாடுகளால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் எங்கே சென்றது என தமிழ் நாட்டில் நிகழ்த்திய உரையில் நிமல்கா பெர்ணான்டோ கேள்வியெழுப்பியுள்ளார். . மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சியின் ஊழலை அவர்களே நிராகரிக்கவில்லை. மக்களின் அழிவிலும், அவலத்திலும் பணம் சேர்க்கும் இலங்கை அரச மாபியாக் குழுவின் பலம் பொருந்திய தமிழ் முகமும், இலங்கை அரசிற்கும் அதன் புலம் பெயர் தமிழ் அங்கத்திற்கும் இடையேயான முன்முகமுமான குமரன் பத்மனாதனின் நிறுவனமான NERDO வும் களத்தில் இறங்கி சில நாட்கள் கடந்தோடிவிட்டது.

இலங்கை அரச நிகழ்ச்சி நிரல்..

பேரினவாதப் பாசிச இலங்கை அரசு தனது இராணுவ அரசியல் சாம்ராஜ்யத்தை உருவமைப்பதற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் எதிர்கொண்டு வருகிறது. புலம்பெயர் நாடுகளில் நிலவுகின்ற குறைந்தபட்ச ஜனநாயகச் சூழல் தமது உறவுகளுக்காக புலம்பெயர் தமிழர்கள் குரலெழுப்புவதைத் தடுப்பதற்கான நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசு நடை முறைக்குக் கொண்டு வந்துள்ளது.

இலங்கை அரசு மனிதப்படுகொலைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளும்; சாரி சாரியாக மக்களை அகதிகளாக அடைத்து வைத்திருக்கும்; மீள் குடியேற்றம் என்ற பெயரில் இராணுவக் குடியிருப்புகளை நிறுவிக்கொள்ளும்; இவற்றில் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவிபுரிய வேண்டுமாயின் கே.பி போன்ற இலங்கை அரச அடியாட்களுடன் இணைந்து  உதவிபுரியக் கோரும்.

உதவி வழங்குவதற்கு ஒரே ஒரு முன்நிபந்தனை உண்டு! இலங்கை அரசின் போர்க் குற்ரங்களையோ, மனிதப்படுகொலைகளையோ, சர்வாதிகார எதேச்சதிகாரத்தையோ, மனித உரிமை மீறல்களையோ கண்டுகொள்ளக் கூடாது!! நாளை, நாளை மறு நாள், இன்னும் சில தினங்களில், சில மாதங்களில் தேச விரோதி அல்லது பயங்கரவாதி என்ற குற்றச் சாட்டில் சில மனிதர்களையோ அல்லது மக்கள் கூட்டத்தையோ இலங்கை அரசு கொன்று போடலாம். அவர்களுக்கு உதவி புரிவதற்கு இலங்கை அரசோடு இணைந்து கே.பி குழு மறுபடி புலம்பெயர் நாடுகளை நோக்கிக் கையேந்தும்.

கிழக்கின் பெருவெள்ளம் ஏற்படுத்திய அனர்த்தம் ஆயிரக்கணக்கானோரை அகடிகளாக்கியுள்ளது. பலர் மரணித்துள்ளனர். காணாமல் போனொரின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. இலங்கை அரசு மக்களுக்கு எந்தக் குறிப்பான உதவிகளையும் மேற்கொள்ளவில்லை. தெருக்களில் அனைதைகளாக மக்கள் கைவிடப்பட்டுள்ளனர். இரசாயனக் குண்டுகளால் மக்களைக் கொன்று போட்ட அதே கூட்டம் இன்று மக்களை நோக்கி வருகிறது. உதவி கோருகிறது. அரசியல் பேச வேண்டாம் என்கிறது. உரிமை கேட்பவர்களுக்கு வாய்ப்பூட்டுப் போடுகிறது.

ஜனநாயகம் கொன்றொழிக்கப்பட்ட இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தங்களை வழங்கவல்ல புலம்பெயர் தமிழர்களின் குரலை நசுக்குவதற்கு இலங்கை அரசின் வேலைத் திட்டத்தின் பிரதான பகுதி இது தான்.

இலங்கை அரசின் செயற்திட்டம்:

கிழக்கில் வெள்ள அவலம் நடைபெற்றுச் சில நாட்களிலேயெ கே.பியின் நிறுவனத்துடன் இணைந்து பல புலம்பெயர் நிறுவனங்கள் தமது நிதி திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டன. அவர்களின் ஒரே குரல் இப்போது உதவி தேவை என்பது மட்டும்தான். இது வரைக்கும் வழங்கப்பட்ட மில்லியன்களின் ஒரு பகுதி இராணுவக் குடியேற்ரங்களுக்குப் பயன்படுத்தப்படதையும் மறுபகுதி ராஜபக்ச குடும்ப ஆடம்பரங்களுக்காக வியாபாரிகளோடு பங்கு போடப்பட்டதையும் இன்னமும் யாரும் மறந்துவிடவில்லை.

சில சந்தேகங்கள்:

குருதி படிந்த கரங்களிடம் மக்களின் அவலவாழ்விற்கான தீர்வை ஒப்படைக்கக் கோருகின்றவர்கள், பணம் எங்கே யாரிடம் செல்கிறது என்பதைத் ஐயமின்றி முன்வைக்க வேண்டும். மக்களுக்கு எவ்வளவு பணம் எங்கே வழங்கப்பட்டது என தெளிவுபடுத்த வேண்டும். இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டம் குறித்த அரசியலை மக்கள் முன் வைக்கவேண்டும். இதற்கான மாற்று ஒன்றை அழுத்தங்களூடாகவே ஏற்படுத்த முடியும் என்ற கருத்துக் குறித்து அவர்கள் தங்கள் கருத்தை முன்வைக்க வேண்டும்.

மாற்று வழி..

இலங்கையில் அரசின் அடக்கு முறைக்கு மத்தியிலும் சில உள்ளூர்த் தன்னார்வ நிறுவனங்கள் உதவிகளை மேற்கொள்கின்றனர். குறிப்பக பவ்ரல் போன்ற அமைப்புகள் இதற்கான வேலைகளில் அரசின் மாபியா வலைப்பின்னலுக்கு வெளியில் உதவிப் பணிகளை மேற்கொள்கின்றனர். தனி மனிதர்கள், உள்ளூர்க் குழுக்கள் போன்றன இவ்வாறான வேலைகளை முன்வைக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் பல உதவிகளை மேற்கொண்டு வருகிறது. தன்னார்வ நிறுவனங்கள் நீண்ட கால நோக்கில் அபாயம் மிக்கவையாயினும், இன்றைய சூழலில் கே.பியின் அரச சார் வலைப்பின்னலின் உடனடி நோக்கத்தை எதிர்கொள்ள உள்ளூர் நிறுவனங்களைப் பயனப்டுத்தல் என்பது தவறானதாகாது.

அழுத்தங்களுக்கான போராட்டம்..

கிழக்கில் அனாதரவான மக்களின் அவலங்களுக்கு முழுப் பொறுப்பும் இலங்கை அரசைச் சார்ந்ததே. தம்மை மக்களின் இரட்சகர்களாக மார்தட்டிக்கொள்ளும் தன்னார்வ நிறுவன்ங்கள் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதற்கான போராட்டங்கள் முனைப்படைய வேண்டும். ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய அமரிக்க அரசுகள் கொடுப்பனவு நிறுவனங்கள் போன்றவற்றின் மீதான அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவலங்களையும் , அழிவுகளையும், குற்றச் செயல்களையும் அங்கீகரிக்கும் போக்கை இலங்கையை முன்வைத்து உலக மக்கள் புரிந்து கொள்ள அனைத்து வலுவும் பிரயோகிக்கப்பட வேண்டும்.

Exit mobile version