Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெலிவேரியக் கொலைகளின் பின்புலத்தில் வெளிவராத மர்மம்

தம்மிக்க பெரேரா
தம்மிக்க பெரேரா

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவுகள் வெற்றுச் சடங்குகளாக மாறிப்போயின. வெலிவேரியப் படுகொலைகள் நடைபெற்று முதலாவது ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் மக்கள் இந்தக் கோரத்தை மறந்து போயினர். அரச ஆதரவுடனும் பங்களிப்புடனும் தூண்டப்படும் பேரினவாத்த்தின் இருளில் சிங்கள மக்களது போராட்டங்களும் மறைந்து போயின. அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பேரினவாதச் சகதிக்குள் புதைத்துவிட்டு அப்பாவிச் சிங்கள மக்களையும் அடிமைகளாகப் பயன்படுத்துவதே இலங்கை அரச பாசிஸ்டுக்களின் நோக்கம். ஐ.நா விசாரணைகளில் முழு மக்களதும் கவனத்தைத் திருப்பிவிட்டு உள் நாட்டில் வர்த்தகக் கொள்ளையைத் தொடர்வதே இன்று இலங்கை அரசின் உடனடி நோக்கம். இந்த அழிவுகளின் சாம்பல்களிலிருந்து முனகும் தமிழ் ஆய்வாளப் பெருமக்கள் ‘சர்வதேசம்’ வருமா வராதா என்று மூளையைப் போட்டுப் பிசைந்துகொள்கிறார்கள்.

இனப்படுகொலையின் சூத்திரதாரியும், போர்க்குற்றவாளியும், பொது பல சேனாவின் நம்பிக்கை நட்சத்திரமுமான கோத்தாபய ராஜபக்ச என்ற பயங்கரவாதி ஜப்பானில் சுற்றுபயணம் ஒன்றை மேற்கொண்டார். ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் கோத்தாபயவிற்கு விடுத்த அழைப்பினை அடுத்தே அவர் அங்கு சென்றிருந்தார். போருக்குப் பின்னர் பொருளாதாரத்தை ‘வளப்படுத்துவது’ தொடர்பாக கோத்தாபய பல்வேறு அரச மட்டப் பேச்சுக்களை நடத்தினார். பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது கோத்தாபய தன்னுடன் வெலிவேரியாவில் மக்களைக் கொன்றுபோட்டதன் பின்னணியில் செயற்பட்ட ஒருவரையும் அழைத்துச் சென்றர். இலங்கையின் முதல்தர பணக்காரரான தம்மிக்க பெரேரா என்பவரே அவர்.

 சூதாட்டத்திலிருந்து கனிமக் கொள்ளை வரைக்கும் தம்மிக்கவின் வியாபாரப் பேரரசு விரிந்தது. தம்மிக்கவின் ஐந்து நட்சத்திர கிங்ஸ்பரி ஹொட்டேல் இலங்கையில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவத்தின் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறது. ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களோடு இணைந்துகொள்ளும் தம்மிக்கவின் பிடியில் மாண்டுபோனவர்கள் பலர்.

தம்மிக்க பேரேராவிற்காகவே வெலிவேரியாவில் இலங்கை அரச இராணுவம் கோரத்தாண்டவம் ஆடிற்று. நிராயுத பாணிகளாக சுத்தமான குடிநீர் கேட்ட மக்களின் இரத்ததைக் குடித்தது.

கோத்தாபய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரைப் போன்று தம்மிக்க பெரேரா போக்குவரத்து அமைச்சின் செயலாளர்.

இலங்கையில் யார் அடுத்த கோத்தாபய என்றால் தம்மிக்கவிற்கு நிச்சயமாக இடம் கிடைக்கும். இன்றுவரைக்கும் சந்தடி இல்லாமல் காய் நகர்த்தும் தம்மிக்க பெரேரா ராஜபக்ச குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரம்.

பல்தேசிய வியாபார நிறுவனங்களின் சுரண்டல் எல்லையை விரிவுபடுத்த வசதிசெய்யும் தம்மிக்க பெரேரா, இந்த நிறுவனங்களில் வர்த்தகப் பங்காளி.

இன்னொரு வகையில் சொன்னால் பல்தேசிய நிறுவனங்கள் இலங்கையில் கொள்ளையடிப்பதற்கு மாமா வேலை பார்ப்பவர் தம்மிக்க. இதனால் மக்களின் இரத்தத்தை உறிஞ்ச்சும் சமூகவிரோதி.

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 3.15 வீதத்தைத் தனது கைகளில் வைத்திருக்கும் ஹேலிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் தம்மிக்க. துணைத் தலைவராக இருந்த போதும் தம்மிக்கவிற்கே முடிவெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஹேலிஸ் வெலிவேரியவில் கையுறை தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது, பொதுவாக வெளி நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படும் கையுறைகள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வெலிவேரிய மக்களை சிறுகச் சிறுக அழித்துக்கொண்டிருந்தது.

இது குறித்து இலங்கை அரசுடன் வெலிவேரிய மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பல தடவைகள் நடைபெற்று இப்பேச்சுவார்த்தகைகள் தோல்வ்வியடைந்த பின்னர் தாம் வாழ்வதற்காக வெலிவேரிய மக்கல் 4 ஆயிரம் பேர் தெருவில் இறங்கிப் போராட ஆரம்பித்தனர். அமைதியான ஊர்வலமாக நடைபெற்ற இப் போராட்டத்தின் மீது இலங்கை இனக்கொலை இராணுவம் துப்பாக்கிப் பிரையோகம் நடத்திற்று.

தம்மிக்க பெரேராவின் நிறுவனத்திற்கு எதிராக வெலிவேரியாவில் மக்கள் போராடுகிறார்கள் என்றதும், மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கலைந்து போகக் கோருவதர்குக் கூட அரசு முன்வரவில்லை. நிராயுதபாணிகளான ஆயிரக்கணக்கானவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரையோகம் நடத்திற்று.

தம்மிக்க பெரேரா என்ற தனிமனிதன் இலங்கை அரச போக்குவரத்து அமைச்சின் செயலாளர், பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் இலங்கை முகவர், இலங்கையின் முதல் தர மில்லியனேர் என்ற அனைத்து தலையங்களுக்குக் கீழும் அடங்க, அவரது நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடே அப்பாவிகளைப் பலி கொண்டது.

போக்குவரத்து அமைச்சை இலங்கையைக் கொள்ளையடிப்பவர்கள் சார்பாக நடத்த அனுமதிக்கப்பட்ட தம்மிக, இதற்கு முன்பதாக இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராகச் செயற்பட்டு இலங்கையில் அன்னிய நாடுகளின் கொள்ளைக்கு வசதியேற்படுத்திக் கொடுத்தவர்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நடத்திய கையோடு பிரித்தானியாவிற்கு வந்த மகிந்த ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் மாணவர் பேரவையில் உரையாற்றுவதற்காக அழைக்கப்பட்டார். அதற்கு முன்பதாக அங்கு உரையாற்றியவர் தம்மிக்க பெரேரா.

தம்மிக மேலும் பல வியாபாரங்களின் பங்குதாரர். Sampath Bank PLC, Vallibel Finance PLC, Vallibel Power Erathna PLC, The Fortress Resorts PLC, The Queensbury Leisure Ltd and Delmege Limited; ஆகிய நிறுவனங்களின் தலைவர். போர்ப் ஆசியாவின் கணிப்பின் படி 1968 ஆம் ஆண்டு மத்தியதரவர்க்கக் குடும்பம் ஒன்றில் பிறந்த தம்மிக்கவின் நிகர மதிப்பு 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

தம்மிக்க பெரேராவின் வரலாற்றை வெற்றிக்கான வரலாறு என்று இலங்கை அதிகாரவர்க்கம் உதாரணம் காட்டுகிறது. மக்களைப் பொறுத்தவரைக்கும் இலங்கையில் பல்தேசியக் கொள்ளை எப்படி நடைபெறுகிறது என்பதற்கான அருவருப்பான முன்னுதாரணமே தம்மிக்க பெரேரா. வெலிவேரியாவின் கோத்தாபயவான தம்மிக்க போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய மேற்கு ஏகபோகங்களின் முகவர்களேஇலங்கையை ஆட்சிசெய்கிறார்கள். இலங்கையின் இரத்தக்களரியின் சூத்திரதாரிகளும் இவர்களே.

கடந்தவாரம் கோத்தாபயவுடன் ஜப்பானில் வலம்வந்த தம்மிக்க தனி நபர் அல்ல. பல்தேசியக் கொள்ளைக் காரர்களின் பிரதிநிதி. தம்மிக்கவைப் பொறுத்த வரை தமிழ் சிங்கள வேறுபாடுகள் கிடையாது. வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களைக் கொள்ளையடிப்பதற்காகத் தனது தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்பவர்.

சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது இனச்சுத்திகரிப்பை நடத்தி போராட்டத்திற்காக இணையும் சிங்கள மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதே தம்மிக்க போன்ற அதிகாரவர்க்கங்களதும், கோத்தாபய போன்ற ஆளும் வர்க்கங்களதும் நோக்கம்.

சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தற்காப்பு யுத்ததத்திற்கான தயாரிப்புக்கள் அவசியமானவையே; ஆனால் இத்தாக்குதலுக்குப் பின்புலத்திலுள்ள சதி குறித்து சிங்கள மக்களுக்குக் கூறவதும் அவர்களின் முற்போக்கு அணிகளை இணைத்துக்கொள்வதும் போராட்டத்தின் நியாயத்தை உறுதிப்படுத்தும்.

தொடர்பான தகவல்கள்:

http://en.wikipedia.org/wiki/Hayleys_PLC
http://magazine.lankahelp.com/2013/11/25/the-success-story-of-sri-lankas-richest-man/
http://www.dailymirror.lk/business/other/2399-boi-chairman-outlines-sri-lankas-future-in-oxford-union-address.html

-நிவேதா

Exit mobile version