Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி! : அஜித்

இன்று அதிகாலை 2.10 மணியளவில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பேரணி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் வெடித்துச் சிதறியது.

3 அடி தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது 4 அடி சுற்றளவில், 3 அடி ஆழம் ஏற்பட்டுள்ளது. 50 மீட்டர் தூரத்தில் இருந்து ஒரு மரத்தின் மறைவிலிருந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மர்ம நபர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இதையடுத்து ரயில் நிலைய அதிபர் மலைக்கோட்டை ரயில் சாரதியை எச்சரித்து வண்டியை நிறுத்தச் செய்தார். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. (செய்தி 12.06.10)

இலங்கைப் பிரச்சனையில் இந்திய உளவுத்துறையின் ஆளுமையும் தலையீடும் இனப்பிரச்சனை குறித்த இந்திய அரசியலைத் தீர்மானிப்பதில் பிரதான பாத்திரம் வகித்திருக்கிறது. இந்திய வெளியக உளவுத்துறையான RAW மற்றும் IB ,MI போன்றவற்றின் நிரந்தரமான ஆளுமை முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்திருக்கிறது. அதி முக்கியத்துவப்படுதப்பட்ட உளவுத்துறையின் தலையீட்டிற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலில், RAW இன் ஓய்வுபெற்ற அதிகாரி மேஜர் ஜெனரல் வீ.கே.சிங் குறிப்பிடுவது போல் அரசியலில் ஆளுமை செலுத்தும் அதிகாரம் அவ்வமைப்பிற்கு எப்போதும் இருந்துவந்திருக்கிறது. இரண்டாவதாக, இலங்கை விவகாரம் என்பது பிராந்தியப் பாதுகாப்புடன் தொடர்புடையதாயினும் தமிழ் நாடு என்ற காரணியும் உள்ளடங்கியிருந்தது.

80 களின் பின்னர், தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வு என்பது ஈழத் தமிழர் பிரச்சனையுடன் தொடர்புடையதாகவே உருவகப்படுத்தப்பட்டது. இதன் பின்புலம் குறித்த விவாதங்களுக்கு அப்பால் இதன் உண்மைத் தன்மை மறுக்கப்பட முடியாதது. கட்சிகள் வாக்குப் பலத்தைத் அதிகரித்துக் கொள்ளவும், பணம் திரட்டிக்கொள்ளவும் ஈழப்பிரச்சனை பல சந்தர்ப்பங்களில் பயன்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டின் தமிழ்த்தேசிய உணர்வு தீர்மானகரமான அரசியலற்ற வெற்று உணர்ச்சிக் கோசங்களாகவே அமைந்திருந்தது. இந்த உணர்ச்சியை ஈழத் தலைமைகள் தமிழ் நாட்டு சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளின் ஆதரவைப் பெறுவதற்கான மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டன. எது எவ்வாறாயினும் அப்பவித் தமிழ்த் தேசிய வாதிகளிடம் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு இருந்ததை மறுக்கமுடியாது. ஒரு வகையில் இந்த உணர்வை சரியான திசைவழியை நோக்கி நகர்த்த தமிழக முற்போக்கு சக்திகளிடமும் உறுதியான நிகழ்ச்சித் திட்டம் இருந்ததில்லை.

2009 மே மாதம் ஈழப் போராட்டமும் புலிகளும் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்த நிலைமைகள் உள்ளடக்கத்தில் மாற்றமடையாவிட்டாலும் சில பண்பு மாற்றங்களை உருவாக்கின.

தமிழக அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டுவிட்டதை வெளிப்படையாகவே உணர்ந்துகொண்ட நகர்ப் புறம் சார்ந்த மத்தியதர வர்க்கத்தின் ஒரு பகுதியினர், அறிவுஜீவிகள், வக்கீல்கள் போன்ற புதிய சமூகக் கூறுகள் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பொதுவாக தலித் ஒன்றுகூடல்கள், சிறு பத்திரிகை விமர்சனங்கள், நூல் வெளியீடுகள் நிகழும் சந்திப்பு மையங்களிலெல்லாம் ஈழப் பிரச்சனை குறித்த குரல்களே ஒலித்தன. வியாபாரப் பத்திரிகைகள் கூட ஈழப்பிரச்சனைய முதன்மைப்படுத்தும் அளவிற்கு ஒரு வாசகர்வட்டம் வளர்ந்திருந்தது.

கருணாநிதி ஆட்சியின் தமிழுணர்வு நாடகத்தை தமிழ் நாட்டு படித்த இளைஞர் வட்டம் புரிந்து கொண்டது. வழக்குரைஞர்களின் நீதிமன்றப் போராட்டம், முத்துக்குமார் போராட்டம் என்று சிறுகச் சிறுக நடைபெற்ற போராடங்கள் அரசிற்கு எதிரான மக்களின் உணர்வை தூண்டின. ராஜபக்ச சென்னை வந்த வேளையில் தன்னிச்சையாகப் போராட்டம் நடத்திய சிறிய குழுக்களின் பங்கு இப் போராட்டத்தின் வெற்றிக்கு பிரதான பங்கு வகித்தது. விரக்தியடைந்த படித்த இளைஞர் மத்தியிலருந்து இந்திய அரசிற்கு எதிரான போராட்டம் உருவாகும் நிலை காணப்பட்டது. இதுவரை தமிழக மக்களையும் போராடும் திறன் கொண்ட சமூக உணர்வுள்ளவ்ர்களையும் கட்டிப் போட்டு வைத்திருந்த திராவிடக் கோசம் அம்பலத்திற்கு வந்துவிட்டது இன்னொரு அதிர்ச்சியை அரசிற்கு வழங்கியது.

இவ்வாறான ஒரு அரசியற் பகைப் புலத்தில் தான் சீபா என்று அழைக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் முக்கிய பகுதிகளில் ஒன்று பிராந்தியப் பாதுகாப்புக் குறித்ததாகும். இவ்வேளையில் தான் மறுபடி இந்திய வெளிவிவகார உளவுத்துறையின் முக்கியத்துவம் இலங்கைப் பிரச்சனையில் அதிகரிக்கிறது.

இலங்கையுடனான கைதிகள் பரிமாற்றம், பயங்கரவாதத்தை முறியடிக்கும் கூட்டு நடவடிக்கை போன்றன பாதுகாப்பு ஒப்பந்ததின் முக்கிய அம்சங்கள். இலங்கையைப் பொறுத்தவரை “பயங்கரவாதம்” இன்று முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. அரச பயங்கரவாதம் குறித்து வேண்டுமானால் பேசலாம். இந்னிலையில் தமிழ் நாடு மட்டுமே இவர்களின் உடனடிக் குறியாக அமைய வாய்ப்புண்டு.

தமிழ் நாட்டில் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களையும் எழுச்சிகளையும் சீர்குலைக்க வலுவான காரணம் இந்திய உளவுத் துறைக்கு இல்லை. இதனால் அவ்வாறான காரணத்தை உருவகப்படுத்த வேண்டிய தேவை காணப்பட்டது. விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு இதற்கு சிறப்பான சந்தர்ப்பத்தை வழங்கும். ஆக, இந்தக் குண்டுவைப்பு சம்பவம் இந்திய உளவுத்துறையின் நடவடிக்கையாக அமையலாம் என்ற சந்தேகங்கள் வலுவாக எழுகின்றது.

தமிழ்த் தேசிய வாதிகளின் உணர்ச்சிவயப்பட்ட போராட்டங்கள் ஒரு வகையில் மக்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. தமிழ் உணர்வினூடாக மக்கள் ஆதரவைத் திரட்டி அவர்களை எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்க உந்துவதுதான் இதன் அடிப்படை. இவ்வாறான மக்கள் ஆதரவைக் கோருகின்ற தமிழுணர்வுக் கோசங்களை அடிப்படை அரசியலாக முன்வைப்பவர்கள், மக்களின் வெறுப்பை உருவாக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது இங்கு நகைமுரண்.

மக்களை அழிப்பதற்குக் குண்டுவைத்துவிட்டு அதையும் தமிழ் உணர்வாளர்களே மேற்கொண்டார்கள் என்று கடிதம் எழுதி உரிமை கோருவது என்பது வேடிக்கையானது. ஆக, பிரபாகரனின் தம்பிகள் என்று அடிக்குறிப்பிட்ட கடிதம் தமிழ்த் தேசிய வாதிகளால் எழுதப்பட்டதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவானதாகவே காணப்படுகின்றது.

குண்டுவைத்துவிட்டு கடிதத்தையும் இந்திய உளவுத்துறையே எழுதி வைத்ததற்கான சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுகின்றன.

தவிர, ரயில் தடம் புரள்வதையும், மோதலையும், நூற்றுக் கணக்கான மக்கள் அழிவையும் எதிர்பார்த்து குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு சிறிய  காகிதத்தில் எழுதப்பட்ட சில வரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியெல்லாம் தொக்கு நிற்கிறது. அப்படித்தான் உரிமை கோர வேண்டுமானால், சிறிய காற்றுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத கையால் எழுதப்பட்ட காகிதத் துண்டு தான் அவர்களுக்கு கிடைத்ததா? மின்னியல் யுகத்தில் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட சிறுபிள்ளத் தனமானவையாகவே தோன்றுகின்றன.

இன்னும் சில நாட்களில் சில இலங்கைத் தமிழர்களைம், சிறிய தமிழ்த் தேசிய வாதக் குழுக்களையும் மத்திய மாநிலப் பாதுகாப்புப் படைகள் கைதுசெய்யும் என்பது எதிர்வு கூறல். தவிர, இது போன்ற சிறிய தாக்குதல்களை இந்திய அரசே திட்டமிட்டு நிகழ்த்தி தமிழ் நாட்டில் எழுச்சியை அழிக்கும் நடவடிக்கைகளையும், மக்கள் மத்தியிலிருந்து ஈழ ஆதரவுக் குழுக்களை அன்னியப்ப்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இவையெல்லாம் ஏற்படுத்தப் போகும் பின்னடைவுகளைப் புரிந்துகொள்ளாமல், மக்கள் அழிவு குறித்துக் கரிசனையற்ற புலம் பெயர் புலி ஆதரவு ஊடகங்கள், தண்டவாளத் தகர்ப்பைப் புரட்ட்சியென்று மார்தட்டிக் கொள்கின்றன.

இவ்வாறான திட்டமிட்ட அழிப்பையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்ள வேண்டுமாயின், நீண்ட கால நோக்கிலான அரசியல் திட்டத்துடன் கூடிய முற்போக்கு அரசியல் தலைமையை நோக்கிய நகர்வை சமூக உணர்வுள்ள, மக்களை நேசிக்கும் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

Exit mobile version