Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வியட்நாம் நீயுமா? : இதயச்சந்தி​ரன்

யுத்தக் குற்றம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்குமாயின், அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்துவோமென கருணா என்றழைக்கப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அச்சுறுத்துகின்றார்.

இப்படிச் சொன்னால் மகிந்தர் மனம் குளிர்ந்து போவாரென்பது அவரது கணிப்பு. எரிக் சொல்ஹெமோடு பேச அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வாவும், பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு உரையாட பேராசான் ஜீ.எல்.பீரிசும் பயணம் செய்த விடயம் கருணாவிற்கு தெரியவில்லை.

மகிந்தரை போர்க் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க கருணாவும், கே.பியும் பலவிதமான அறிக்கைகளையும், நேர்காணல்களையும் வழங்குகின்றார்கள். விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு இப்போது போர்க்குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல் குறித்து அலட்டிக் கொள்ளும் பல நாடுகள், இலங்கை அரசிற்கு உதவி புரிந்தது சிதம்பர இரகசியமல்ல.

காட்டிக் கொடுக்கும் படலத்தை தொடரும் கருணா, இனி என்ன புதிதாகச் செய்யப்போகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களையும் தெரிந்தவன் நானென்று கூறுவதால், இவருக்கு கலாநிதிப் பட்டமா வழங்கப் போகிறது இலங்கைப் பல்கலைக்கழகம்?

ஒடுக்கு முறைக்கு எதிராக இப் பூமிப் பந்தில் நடைபெற்ற பல போராட்டங்களில் இத்தகைய காட்டிக் கொடுப்புக்களும், எதிரியோடு கைகுலுக்குவது போன்ற அசிங்கங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

கே.பியும், கருணாவும், முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கி சிங்களத்தோடு சங்கமமாகிய சருகுகளும், நல்ல உதாரணங்கள்.

புலம் பெயர் தமிழ் மக்கள், விடுதலைப் பயணத்தில் இணைவதைத் தடுப்பேன் என்கிறார் குமரன் பத்மநாதன் (கே.பி).
மகிந்தரை அச்சுறுத்தும் சர்வதேச நாடுகளின் நிஜமுகத்தை அம்பலமாக்குவேன் என்கிறார் முன்னாள் புலிப் போராளி கருணா.

மகிந்த கம்பனி திவாலானால், தமது இருப்பிற்கு ஆபத்து வந்துவிடுமென்பதே இந்த இரு பிரகிருதிகளின் அச்சம். ‘தமிழ்மிறர்’ என்ற இணையத் தளத்திற்கு கே.பி வழங்கிய நேர்காணலில் இந்த அச்சம் தெளிவாகத் தெரிந்தது.

போராளிகளைக் காப்பாற்றப் போகிறேனென அறிக்கைமேல் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இந்த சுதந்திரமாக
உலவும் சூழ்நிலைக் கைதி, அலரிமாளிகையில் 1800 போராளிகளை விடுதலை செய்வதாக பொய்யுரைத்த மகிந்தரின் ஏமாற்று வித்தை குறித்து இன்னமும் வாய்திறக்கவில்லை.

கூட்டமைப்பு போட்டியிடாததால், இலவசமாக கிடைத்த முதலமைச்சர் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையானும், கருணா, கே.பி போன்று அரசியல் தத்துவார்த்த விளக்கங்களை கூற ஆரம்பித்துள்ளார். இலட்சியத்திற்கும் இலட்சத்திற்கும் வேறுபாடு புரியாத தமிழ்த் தலைவர்களைத் தான் சிங்கள தேசமும் விரும்புகிறது.

அதற்கேற்றவாறு பொருத்தமான இடத்திலேயே பிள்ளையானையும் அரசு அமர்த்தியுள்ளது. ஏனெனில் விடுதலை உணர்வற்ற, ஒடுக்கு முறையாளனோடு சமரசம் செய்யக்கூடிய, விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் சிறு குழுக்களையே சிங்களம் தேர்ந்தெடுக்கிறது. ஆனால் இந்த அடிபணிவு வாதிகளால் போர்க்குற்ற அழுத்தங்களிலிருந்து தன்னைக் காப்பாற்ற முடியாதென்கிற விடயத்தையும் மகிந்த சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள்.

புலம் பெயர் மக்களால் முன்னெடுக்கப்படும் பரப்புரைப் போராட்டத்திற்கு எதிராக சிறு அசைவையும் இவர்களால் ஏற்படுத்த முடியாது. ஆகவேதான் விடுதலைப் புலிகள் புலம்பெயர் நாடுகளில் இயங்குகிறார்கள் என்கிற வகையில் இவர்களூடாக எதிர்ப்பரப்புரைகளில் கவனம் செலுத்துகிறது சிங்களம்.

அதே வேளை தமிழின அழிப்பினை அம்பலப்படுத்திய சனல்-4 தொலைக்காட்சி ஆயுதப் போராட்டத்தை து£ண்டுகிறது என்று சிலர் உளற ஆரம்பித்துள்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டுமென்கிற போராட்டங்கள், சிங்கள பேரினவாதத்தை தண்டித்து விடுமோ என்கிற பதட்டமே, இத்தகைய ஒவ்வாத மதிப்பீடுகளின் ஆதாரமாகவிருக்கிறது. நிலம் பறிபோனாலும், மக்களின் இயல்பு வாழ்வு அபகரிக்கப்பட்டாலும், ஒடுக்குமுறையாளன் தண்டிக்கப்படக்கூடாதென்கிற விடயத்தில், இத்தகைய அடிபணிவு சக்திகளின் நலன்களும் அடங்கி இருப்பதை புரிந்து கொள்ளலாம்.

இவற்றைவிட மிக அபத்தமான விடயமொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. மூன்றுநாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்த வியட்நாம் குடியரசின் அதிபர் ரூரோங் ரான் சாங் அவர்கள், போரில் கொல்லப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய விவகாரம், போராடும் இனங்களுக்கு நெருடலான விடயமாக இருக்கிறது.

அதாவது அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராக வீரம் செறிந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தியவர்கள், தமிழ்த்தேசிய இன அழிப்பில் ஈடுபட்டு மாண்டுபோன படையினருக்கு அஞ்சலி செலுத்தி, உலகின் போராட்ட வரலாற்றில் பெரும் கறையினை ஏற்படுத்தியுள்ளார்களெனக் கூறுவதில் தவறேதுமில்லை.

தென் சீனக் கடல் கனிம வள ஆதிக்கத்தில் சீனாவோடு வியட்நாம் முரண்பட்டாலும், இனவழிப்பில் ஈடுபடும் சிங்களத்திற்கு ஆதரவு வழங்குவதில் இவர்கள் ஒன்றாகப் பயணிப்பதை என்னவென்று சொல்வது.
ஆகவே போராளியாக இருந்து பின் போராட்டத்திற்கு எதிராகத் திரும்பிய கருணா, பிள்ளையான், கே.பி வரிசையில், ஒரு காலத்தில் ஓடுக்கப்பட்ட உலக மக்களின் தோழமை நாடுகளாகவிருந்த செஞ்சீனாவும், கம்யூனிஸ்ட் வியட்நாமும் அணிசேர்ந்தது கொடுமையிலும் கொடுமை.

இந்தச் சிவப்புச்சாயம் பூசிய கம்யூனிஸ்ட் நாடுகள், ஒடுக்கப்படும் மக்களின் பார்வையில் நவீன ஏகாதிபத்தியங்களாகவே காட்சியளிக்கும்.
கடந்த வாரம், தோழர் மாவோவினால் உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை இராணுவத்தின் பெருந்தலையான மேஜர் ஜெனரல் குயன் லிஹுவா அவர்கள் இலங்கை வந்திருந்தார்.

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை புரிந்து களைப்படைந்திருக்கும் மகிந்தரின் சிங்கள இராணுவத்திற்கு உடற்பயிற்சி வழங்கப் போவதாக இப் பெருந்தகை கூறியது. அது மட்டுமல்லாது தியத்தலாவையிலுள்ள இலங்கை இராணுவக்கல்லூரியின் உட்கட்டுமாண விரிவாக்கத்திற்கு உதவுவதோடு, படையினருக்கு உயர் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப் போவதாகவும் இக்குழு உறுதியளித்துள்ளது.

ஆகவே இந்தியாவிற்கு எதிரான போட்டி நகர்வதாக இது இருந்தாலும், இதனால் மேலும் நசிபடப்போவது ஈழத்தமிழினமே.

Exit mobile version