Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விஜிதரன் போராட்டமும் விமலேஸ்வரன் நினைவுகளும் : சோதிலிங்கம் நேர்காணல்

விமலேஸ்வரனுக்கும் விஜிதரன் கடத்தப்பட்டது தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கும் ஒரு அரசியல் பாத்திரம் உண்டு. ஜனநாயகமற்ற சூழலில் மக்கள் போராட்டங்களை ஒழுங்கமைப்பது எவ்வாறு என்பது குறித்த கற்றலாகக் கூட இந்தப் போராட்டம் நோக்கப்படலாம். பாசிசச் சூழலில் மக்கள் அரசியலில் முளைத்து மூன்று நாட்களே முடிந்திராத நிலையில் மாணவர்களும் சமூகப் பிரக்ஞையுள்ள நூற்றுக்கணக்கான இளையோரும் நடத்திய போராட்டங்களும் அவற்றிற்காக வகுத்துக்கொண்ட தந்திரோபாயங்களும் உலகின் எந்த மூலையில் போராட்டம் நடந்தாலும் திரும்பிப் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறையவே உள்ளன.விமலேஸ்வரன் மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்கள் தவறாக வழிநடத்தப்பட்ட போராட்டத்தின் வன்மத்திற்குப் பலியாக்கப்பட்டுள்ளனர்.

மேன்மை பளிச்சிடாத எளிமை, திமிர் தோன்றாத மக்கள் பற்று என்பனவெல்லாம் விமலேஸ்வரனிடமிருந்து ஒவ்வோரு போராளியும் கற்றுக்கொள்ள வேண்டிய பண்புகள். விமலேஸ்வரனின் குறித்த காலத்திற்குரிய சமூகப் பங்களிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூக அடையாளத்தைத் தலைகீழாக மாற்றியிருந்தது.

ஆரம்பத்தில் புளட் அமைப்பின் மாணவர் அமைப்பாக உருவான ரெசோ அமைப்பில் இணைந்த விமலேஸ்வரன், பல்கலைக் கழகத்தில் கல்விகற்க ஆரம்பித்த காலப்பகுதியில் அவ்வமைப்புடன் முரண்பட்டிருந்தார்.

பின்னதாகப் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான வேலைகள் குறித்த ரெசோ அமைப்புடனான கருத்துவேறுபாடுகளால் அவ்வமைப்பிலிருந்து முற்றாக வெளியேறியிருந்தார். அவ்வேளையில் பாசறை விஜி என்பவருடன் ஏற்பட்ட தொடர்புகாரணமாக, பாசறை அமைப்பின் துணையோடு உருவான தேசிய மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பின் அமைப்பாளர் குழுவிலும் பின்னர் கிராமிய உழைப்பாளர் சங்கத்திலும் தனது அரசியல் பங்களிப்பை வழங்கினார்.

விமலேஸ்வரனின் பங்களிப்பும் விஜிதரன் குறித்த போராட்டமும் திரிக்கப்பட்டு அதன் பெறுமானங்கள் சிதைக்கப்படும் சூழலில் அப்போராட்டத்தை வழி நடத்திய மாணவர் அமைப்புக் குழுவின் தலைவராக இருந்த சோதிலிங்கத்தின் நேர்முகம் பயனுடையதாக அமையும் என நம்புகிறோம். எதிர்காலத்தில் இன்னும் இரு மாணவர் தலைவர்களின் அனுபவக் கட்டுரைகள் இனியொருவில் பதிவாகும்.

இருபத்தி இரண்டு ஆண்டுகளின் முன்னர் கொலைசெய்யப்பட்ட விமலேஸ்வரனுக்கு அஞ்சலிகள்.

ஈழ மக்கள் பேரின வாத அரசின் பிடிக்குள் மனிதப் பேரவலத்தைச் சந்திக்கும் இன்றைய சூழலில், இணையங்களை இரத்தம் வடியும் குழுவாதச் சண்டைக் களமாக மாற்றுவதில் எமக்கு உடன்பாடில்லை. ஆயினும் நீண்ட காலத்தின் பின்னரும் ஆவணமாகக் கூடிய ஆபத்துள்ள இணையத்தில் உண்மைகள் உண்மைகளாக வெளிவரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

இனியொரு : விமலேஸ்வரன் குறித்த உங்கள் அனுபவங்கள்?

சோதிலிங்கம்: முதலில் புளொட் மாணவர் அமைப்பில் செயற்பட்டார். பின்னதாக அகதிகள் புனர்வாழ்வு வேலைகளில் ஈடுபட்டார். பின்னர் சிலகாலம் ஒதுங்கியிருந்த விமலேஸ்வரன் பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்புக்குழு உருவாக்கப்பட்ட போது அதில் என்னோடு இணைந்து செயற்பட்டார். அவ்வமைப்பு உருவாக்கப்பட்ட போது முதலில் நானும் விமலேஸ்வரனும் மாணவர் அமைப்பை ஒழுங்குபடுத்துவது காலத்தின் தேவை என உணர்ந்த போது தீவிரமாக மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டோம். நான் அவ்வமைப்பின் தலைவராக இருந்தேன்.

விமலேஸ்வரன் தேசியப் போராட்டத்தில் பங்காற்ற வேண்டும் என்று முனைப்புடன் செயற்பட்ட தேசியவாதி. தேசிய விடுதலைக்கான திசைவழி நோக்கி தனது உழைப்பைச் செலுத்த வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருந்தவர். தேசியப் போராட்டத்தினூடான சமூக மாற்றத்தைத் தனது அடிப்படையாகக் கொண்டிருந்தவர். அன்று மாணவர்களாக இருந்த எம்மிடம் பூரணமான தெளிவு ஒன்றிருந்ததில்லை எனினும் அடிப்படை விடயங்களில் உறுதியாக இருந்தோம். விமலேஸ்வரனைப் பொறுத்தவரை ஒரு நடைமுறைப் போராளி. தத்துவார்த்த விடயங்கள் அவை தொடர் நீண்ட விவாதங்கள் என்பவற்றிற்கு அப்பால் நடைமுறையில் மாணவர்களோடும் மக்களோடும் இணைந்து வேலை செய்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டியவர்.

அதன் பின்னதாகக் கிராமிய உழைப்பாளர் சங்கத்தில் எம்மோடு இணைந்து கிராமிய மட்டங்களில் வேலைசெய்தார். அங்கு அந்த மக்களுடனேயே தங்கியிருந்து அவர்களில் ஒருவனாக வேலைசெய்தார். அதனால் தான் அவர் மரணச்செய்தி கேட்டதுமே அவர் தங்கியிருந்த கிராமத்தவர்கள் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாது மரண வீட்டில் பங்குபற்றினார்கள். கொழும்பிற்கு நான் தலைமறைவாக வந்தபோது அவரும் என்னோடு வந்தார். ஆனல் அவரால் மக்கள் வேலைகளை மறந்து நகரச் சூழலில் வாழப்பிடிக்காத நிலையில் நான் திரும்பிச் செல்லப் போகிறேன் என்று கூறிச் சில நாட்களிலேயே திரும்பிச் சென்றுவிட்டார்.

அவர் இன்றைக்கு இருந்திருந்தால் அவரின் மக்கள் பற்று அரசியல்ரீதியாக வளர்ந்த போராளியாகவும் தலைவனாகவும் கூட மாற்றியிருக்கும். விமலேஸ்வரனின் தலைமைப் பண்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

இனியொரு : விமலேஸ்வரன் கொல்லப்பட்டதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

சோதிலிங்கம்: அன்று மாகாண சபைக்கான தேர்தல்களை இந்திய இராணுவ அதிகாரம் திட்டமிட்டிருந்தது. அவ்வேளையில் விமலேஸ்வரன் போன்றோர் அத் தேர்தலில் போட்டி போடலாம் என்ற என்ற பயம் புலிகளுக்கு இருந்திருக்கலாம். இவ்வாறு ஒரு கருத்துத் தான் அப்போது நிலவியது.

இனியொரு : விமலேஸ்வரன் என்.எல்.எப்.ரி என்ற தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் எந்த அங்கத்திலாவது உறுப்பினராக இருந்தத்துண்டா?

சோதிலிங்கம்: எனக்குத் தெரிந்த வரை அவருக்கு அவ்வமைப்பின் சில உறுப்பினர்களோடு நெருக்கமான தொடர்பு இருந்தது என்பதைத் தவிர அவ்வாறு உறுப்பினராக இருந்தார் என்பது உண்மையில்லை. அவ்வாறு அவர் எனக்கு எப்போதும் கூறியதில்லை. அதற்கான எந்தச் சாத்தியமும் இருந்ததில்லை. தவிர, புளட் மற்றும் பாசறைக் குழுவின் கிராமிய உழைப்பாளர் சங்கத்தில் அரசியல் வேலைகள் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.

இனொயொரு: விஜிதரன் கடத்தப்பட்ட போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள் யார்?

என்னோடு விமலேஸ்வரன். நாவலன், சுந்தரமூர்த்தி, ஔவை, தெய்வேந்திரம், இவர்களோடு கலா, ஸ்டேல்லா, ரயாகரன், பிரபாகரன் போன்றோர் உட்பட பலர். கிட்டத்தட்ட 2 தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த போராட்டத்தில் அனைவருடைய பெயர்களும் எனக்கு நினைவில் இல்லை.

இனியொரு : ரயாகரன் விஜிதரன் குறித்த பல்கலைக் கழக மாணவர் போராட்டத்தைத் தானே தலைமை தாங்கி நடத்தியதாகக் குறிப்பிடுகிறார். இது குறித்து உங்கள் கருத்து?

சோதிலிங்கம்: இது முற்றிலும் பொய். உண்மையில் போராட்டம் அந்த அமைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் எனதும் விமலேஸ்வரன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது. அதன் பொதுவான போக்கும் அவ்வாறே அமைந்தது. ரயாகரனின் செயற்பாடுகளால் மாணவர்கள் மத்தியில் சில நெருக்கடிகளை நாம் சந்திக்க நேர்ந்தது என்பதே உண்மை.இவ்வளவு நீண்ட காலத்தின் பின்னர் இவற்றையெல்லாம் விலாவாரியாக பேசுவதை நான் உண்மையில் விரும்பவில்லை. தவிர, ஏனையோரின் பங்களிப்புகளைப் போல அவரின் பங்களிப்பையும் நான் மறுக்கவில்லை.

இனியொரு : மாணவர் போராட்டம் நடைபெறுவதற்கு ஏதாவது அரசியல் சக்திகள் பின்னணியில் தலைமை வகித்தனரா?

சோதிலிங்கம்: அந்த நேரத்தில் நான் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இணைந்திருந்த காரணத்தால் அது அவர்களோடு அடையாளப்படுத்திப் பேசப்பட்டது. ஆனால் அவ்வாறு எந்த அரசியல் சக்திகளும் போராட்டத்தில் செல்வாக்குச் செலுத்தவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப், பாசறைக் குழு, என்.எல்.எப்.ரி போன்ற அமைப்புகள் உட்பட பலர் சில உதவிகளைச் செய்திருந்தாலும் போராட்டம் மாணவர்களின் தன்னெழுச்சியாகவே அமைந்தது. மாணவர் தலைவர்கள் அரசியல் ரீதியான வளர்ச்சியடைந்தவர்களாக இருந்ததனால் அதனை புதிய நிலையை நோக்கி வளர்தெடுக்க வாய்ப்பிருந்தது.

Exit mobile version