Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விக்னேஸ்வரன் திருந்துகிறார்,கூட்டமைப்பு தேர்தலுக்கான கூட்டு மட்டுமே : சிவாஜிலிங்கத்துடன் உரையாடல்

வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நீண்டகால அரசியல் செயற்பாட்டாளருமான சிவாஜிலிங்கம் அவர்களுடன் உரையாடல்.

இனியொரு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் வடமாகாண சபையை அங்கீகரித்தது மட்டுமன்றி இலங்கை பாசிச அரசுடன் இணக்க அரசியல் குறித்தும் பேசிவருகிறார்கள். குறிப்பாக சுமந்திரன், சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோர் இலங்கை அரசுடன் இணங்கிப் போவதனூடாக மட்டுமே சாதிக்க முடியும் என்கிறார்கள். இது குறித்த உங்கள் கருத்து?

சிவாஜிலிங்கம்: இணக்க அரசியலும் வணக்க அரசியலும் தமிழர்களை அழிக்க வேண்டும் என்று செயற்படும் அரசுடன் எப்படிச் சாத்தியமாகும். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து நீண்டகாலமாக இணக்க அரசியலை நடத்தித்தானே பார்த்தோம். இன்று இணக்க அரசியல் என்று அடிமையாகிப் போயிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி இன் பரிதாப நிலையைப் பாருங்கள். இலங்கையில் வரும் எல்லா அரசாங்கங்களும் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்று நடந்துகொள்ளும் போது அதனோடு எப்படி இணங்கிப் போவது.

இனியொரு: நீங்கள் தான் அப்படிச் சொல்கிறீர்கள் விக்னேஸ்வரன் தேர்தலுக்கும் முன்னும் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொண்ட பின்னும் இணக்க அரசியல் என்று தானே சொல்கிறார்?.

சிவாஜிலிங்கம் : விக்னேஸ்வரன் ஒரு தடவை அல்ல இரண்டு தடவைகள் மகிந்த ராஜபக்சவின் முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்து அனுபவப்பட்டவர். அவர் இலங்கை அரசோடு இணக்க அரசியல் செய்ய முற்பட்டு தோல்வியடைந்து வருகிறார். அவற்றிலிருந்து அனுபவப்பட்டு இப்போது அவர் திருந்திவருகிறார் என்றே கூறவேண்டும். கடைசியாக நடைந்த மாகாண சபைக் கூட்டத்தில் நான் முன்மொழிந்த தீர்மானத்தை நிறைவேற்றியதே அவர் திருந்துகிறார் என்பதற்கு நல்ல சான்று.

இனியொரு: இல்லையே போர்க்குற்றம் என்று மட்டும் தான் சொல்லவேண்டும் இனப்படுகொலை என்று சொல்ல வேண்டாம் என்கிறாரே?

சிவாஜிலிங்கம் : இல்லை, இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று சொல்லலாம் என்று விவாதங்களுக்குப் பின் ஒப்புக்கொண்டுள்ளாரே. இதனைத் தான் திருந்துகிறார் என்கிறேன். நான் கொண்டுவந்த தீர்மானம் வடமாகாண சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனப்படுகொலை என்று தீர்மானிப்பதற்கு சர்வதேசத்திடம் விசாரித்துச் சொல்லுங்கள் என்று கோருகிறோம். தீர்மானத்தில் இனச்சுத்திகரிப்பு நடக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவரைக்கும் புலம் பெயர் நாடுகளிலிருந்தும் வெளி நாட்டு அரசியல் வாதிகளிடமிருந்தும் தான் போர்க்குற்றம் இனச்சுத்திகரிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இப்போது அது மக்கள் மத்தியிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து சர்வதேசத்திற்குச் சொல்லப்பட்டுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம், நவி பிள்ளை, மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு தீர்மானத்தை அனுப்பி வைத்துள்ளோம்.

இனச்சுத்திகரிப்பு என்பதையும் போர்க்குற்றம் என்பதையும் வலியுறுத்திய நாம் உள் நாட்டு விசாரணைப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானத்தில் கோரியுள்ளோம். இது மக்களிடமிருந்து வந்த தீர்மானம்.

இனியொரு : உலகில் இனப்படுகொலை பல நாடுகளில் நடைபெற்றுள்ளது அங்கு மக்கள் இனப்படுகொலை என்று கூறியிருக்கிறார்களே தவிர, சர்வதேச நாடுகளின் அதிகார வர்க்கங்களிடம் விசாரித்து முடிவு சொல்லுங்கள் என்று கோரவில்லை. சர்வதேசம் என்று நீங்கள் குறிப்பிடும் நாடுகள் இனப்படுகொலை என்று விசாரித்துச் சொன்னால் தான் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களானால் உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?

சிவாஜிலிங்கம்: என்னைப் பொறுத்தவரை நடந்தது இனப்படுகொலை தான்.

இனியொரு: இப்போதும் திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தப்படுகிறதே?

சிவாஜிலிங்கம் :அதுவும் சரி, நிரந்தர மக்கள் தீர்பாயம் இனப்படுகொலை என்று தீர்ப்புச்சொல்லியுள்ளதே. அதுதான் சரியானது. அதில் மாற்றுக் கருத்தில்லை.

இனியொரு: அப்போ விக்னேஸ்வரனும், சம்பந்தனும் சுமந்திரனும்?

சிவாஜிலிங்கம்:  வவுனியாவில் நடைபெற்ற மாநாட்டில் 54 உறுப்பினர்கள் கலந்துகொண்டோம், நானும் அனந்தியும், அரியேந்திரனும் இனப்படுகொலை நடைபெற்றது என வலியுறுத்தினோம். சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.

இனியொரு : இல்லையே அந்த மாநாட்டின் பின்னரும் சுமந்திரன் இனப்படுகொலை என்றெல்லாம் சோல்ல வேண்டாம். நல்லிணக்கம் தேவை என்று கூறியுள்ளாரே?

சிவாஜிலிங்கம் : அது அவரது கருத்து. அவர்கள் சொந்தமாகச் செயற்படுகிறார்களா, அல்லது அவ்வாறு சொல்வதற்கு வெளிச் சக்திகளால் உந்தப்படுகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. வடக்கு மாகாண சபையில் கடைசியாகக் கூட்டம் கூடப்பட்ட போது 30 பேர் அமர்ந்திருந்தோம். அங்கு முதலமைச்சர் வந்ததும், சிவாஜிலிங்கம் வந்திருக்கிறாரா அரசியல் பிரச்சனை பற்றி அவர் பேச வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார். இதிலிருந்து அந்தக் கூட்டம் எனக்காகக் கூட்டப்பட்டது போலவே அமைந்தது, இறுதியில் சில திருந்ததங்களோடு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

இனியொரு : சரி நல்லிணக்கம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

சிவாஜிலிங்கம் : இனச்சுத்திகரிப்பு நடக்கும் போதும், தமிழ் மக்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் போதும் ஏது நல்லிணக்கம். சர்வதேச சமூகத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். அவர்கள் தலையிட்டுத் தான் தீர்த்துவைக்க வேண்டும். அதைத் தவிர வேறுவழி இல்லை.

இனியொரு : நீங்கள் சொல்லும் சர்வதேச சமூகம் தான் இனப்படுகொலையை நடத்துவதற்குப் பின்னணையில் செயற்பட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் சொல்கிறதே?

சிவாஜிலிங்கம் : அது எங்களுக்கும் தெரியும். இன்றைக்கு இலங்கை அரசாங்கம் சீன உதவியில் காலத்தை ஓட்டுகிறது. அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் சீனாவை விரும்பவில்லை. இதனால் அரசாங்கத்திற்கு எதிரான தமிழர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அதனை நாங்கள் பயன்படுத்துகிறோம். இது புவிசார் அரசியல்.

இனியொரு : இதுவரைக்கும் உங்களின் சர்வதேசம் தமிழ் மக்களுக்குச் ஒன்றையுமே செய்யவில்லையே. தமிழ் மக்களை அழிப்பதற்கு மட்டுமே உதவியிருக்கிறார்கள். எப்போதும் இலங்கை அரசின் பக்கத்திலேயே நிற்கிறார்கள். டேவிட் கமரன் இலங்கைகு வருவதற்கு முன்னர் வரைக்கும் 13.6 மில்லியன் பவுண்ஸ்களுக்கு ஆயுதங்களை விற்றுள்ளார்கள். டேவிட் கமரன் ராஜபக்சவிற்கு எதிராகப் பேசிவிட்டு, லைக்கா, வேதாந்தா, போன்ற நிறுவனங்களுக்கு வியாபார ஒப்பந்ததை பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். பிரித்தானிய தனியார் பல்கலைக்கழகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. பிரித்தானிய வெளிநாட்டமைச்சர் நல்லிணக்கத்திற்கான மையம் ஒன்றை பிரித்தானிய நிதியில் திறந்து வைத்துள்ளார். நீங்கள் குறிப்பிடும் இனச்சுத்திகரிப்பு பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்தியும் நடக்கிறது. பலாலியில் கண்ணிவெடி அகற்றுகிறோம் என்ற பேயரில் அமெரிக்க இராணுவம் நிலைகொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாததல்ல. பிறகு எப்படி சர்வதேசம் உதவி செய்கிறது என்று மக்களை ஏமாற்றுவீர்கள்?

சிவாஜிலிங்கம்: நீங்கள் சொல்வது சரி ஆனால் பூகோள நலன்களின் அடிப்படையில் சர்வதேச விசாரணை கொண்டுவரப்பட்டு போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

இனியொரு : சர்வதேச விசாரணை என்று சொல்லியே ஐந்து வருடங்களை ஓட்டியாயிற்று. இதுவரைக்கும் உங்கள் சர்வதேச சமூகம் தமிழர்கள் சார்பாக மேற்கொண்ட ஒரு நடவடிக்கையை உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு சார்பாகவே செயற்படுகிறது என்பதற்கு ஆயிரக்கணக்கில் உதாரணங்களைத் தருகிறோம். போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில் மேற்கு நாடுகளில் இன்று வரைக்கும் கைது செய்யப்பட்டவர்கள் முன்னை நாள் போராளிகள் மட்டுமே. இலங்கை அரச போர்க்குற்றவாளிகள் ஐ.நாவிலும், தூதரகங்களிலும் உயர்பதவிகளில் வாழ்கிறார்கள்.

சிவாஜிலிங்கம் : எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் தலைமை இல்லை. இந்த சூழலில் இதைத் தவிர வேறு வழி இல்லை.

இனியொரு : வேறு வழி இருக்கிறதே. அதனை நீங்கள் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசிய அமைப்பு என்று சொல்லுகிற நீங்கள் உலகத்தில் மக்கள் பலத்துடன் போராடிவரும் எந்த அமைப்புக்களையாவது சந்தித்திருக்கிறீர்களா? குர்திஷ்தான் விடுதலை அமைப்பு பல கூட்டங்களை உலகம் முழுவது ஒழுங்கு செய்கிறது. கஷ்மீர், நாகாலாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்கொட்லாந்து, ஸ்பெயின், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் எல்லாம் தேசிய விடுதலைப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அவர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? சிறிய தேசத்திலிருந்து அமெரிக்கா போன்ற இனப்படுகொலைக்கு ஆதரவளிக்கும் நாடுக்களுக்கு அடிக்கடி சென்று வரும் நீங்கள் எங்களின் பலமான எங்களைப் போன்றவர்களைக் கண்டு கொள்வதே இல்லையே. அப்படி ஒரு வழி இருக்கிறது என்று கூட மக்களுக்குச் சொல்லவதைக் கூடத் தவிர்த்து, கொலைகாரர்களை நம்பச் சொல்லி மக்களைக் கேட்கிறீர்களே?

சிவாஜிலிங்கம் : நீங்கள் சொல்வது ஒரு விடுதலை இயக்கத்தின் செயற்பாடு. முற்போக்கான விடுதலை இயக்கம் அப்படித்தான் செயற்படும்.அப்போது தான் எங்கள் போராட்டத்திற்கு பலம் கிடைக்கும் என்பது உண்மை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறும் தேர்தலுக்கான கூட்டு. அதனிடமிருந்து வேறு அதிகமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் இன ஒடுக்குமுறை அதிகரிக்கும் போக்கில் அப்படியான விடுதலை இயக்கங்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் பலர் அப்படித்தான் கருதுகிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் இராணுவ வாகனத்தின் மீது சிலர் கல்லெறிந்திருக்கிறார்கள். இடைவெளிக்குப் பிறகு இப்போது வெறுப்பு வன்முறைப் போராட்டமாக மாறுவதற்குரிய அறிகுறிகள் இவை. பலாலியில் இராணுவக் குடியிருப்பு ஒன்றைத் திறந்திருக்கிறார்கள். மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

இனியொரு : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் கூட்டமைப்பு என்றால் உங்கள் போன்றவர்களுக்கு அரச தரப்பிலிருந்து ஆபத்துக் காத்திருகிறது என்று எண்ணவில்லையா?

சிவாஜிலிங்கம் : நாங்கள் போராட்டத்திற்குப் போனபோது மரணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. தேவையானதைச் செய்வதற்காக மரணிப்பதில் நான் பயப்படவில்லை. நாளை சுதந்திர தினத்தில் ஆர்ப்பாட்டம் செய்யவேண்டும். கறுப்புக்கொடி காட்டவேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று பாருங்கள் இராணுவக் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளார்கள். இதெல்லாம் இப்படியே சென்றால் நீங்கள் குறிப்பிடுவது போன்று பல முற்போக்கு சக்திகள் முன்வருவார்கள். நான் வேறு நாட்டு விடுதலை இயக்கங்களின் கூட்டங்களில் கலந்துகொண்டு எங்கள் க்பிரச்சனையைச் சொல்வேன். சிங்கள் முற்போக்கு சக்திகளில் பலர் சுய நிர்ணைய உரிமையை ஏற்றுகொள்கிறார்கள். அவர்களிடமும் தொடர்பு வைத்திருக்கிறேன்.

இனியொரு : இறுதியாக, ஐ.நா மனித் உரிமைப் பேரவையில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று இன்னும் எதிர்ப்பார்க்கிறீர்களா?

சிவாஜிலிங்கம் : கொலைகாரர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்ப்பது? வெறும் நம்பிக்கைகளுடன் மட்டுமே உயிர்வாழ்கிறோம்.

Exit mobile version