சோளன் : ஐயா முதலமைச்சரே, மூடிசூடிய மன்னரே வணக்கம் வாழ்த்துக்கள்.
விக்கி : ஆயுபோவன், குட்மோர்ணிங், வணக்கம்!
சோளன் : அதென்ன ஐயா வணக்கத்துக்குள்ளேயே இப்படி பென்னாம் பெரிய குண்டு வச்சிருக்கிறீயள். வேற வேற மாதிரி எல்லாம் பேசிறியள்.
சோளன் : நீங்கள் ஆய்போவன மாதிரி ஏன் சலாம் அலைக்கத்தையும் சேர்க்கக் கூடது என்று சோளனுக்கு நீங்கள் வந்த காலத்தில இருந்தே மூளைக்குள்ள ஒரு குடைச்சல். அவையளையும் உவன் ராசபக்ச எங்கட சனத்தை அழிக்கிறமாதிரித் தானே அழிக்கிறான். அவையளுக்கும் நல்லிணக்கத்தில கொஞ்சம் பாத்தும் பாராமல் குடுக்கலாம் தானே.
விக்கி : அய்ய்யோ, ராஜபக்சவை அவன் இவன் எண்டு கதையாதைங்கோ. அவர் கோவிச்சுப் போடுவார். நீங்கள் முஸ்லீம் ஆக்களைப் பற்றிச் சொல்லுறியள் போல. அது பாருங்கோ இப்ப வேண்டாம். தற்செயலா நான் முஸ்லிம் ஆக்களைக் கதைக்கப் போய் கௌரவத்துக்குக் கோவம் வந்துட்டா ஏன்ன செய்யிறது.
சோளன் : கௌரவமா?
விக்கி : கௌரவ ஜனாதிபதி அவர்கள்.
சோளன் : ஆ.. அதுசரி அப்ப முஸ்லிம் ஆக்களப் பற்றிக் கதைக்க மாட்டியளோ. அவை ராஜபக்ச இனக்கொலை செய்தாலும் நீங்கள் ராஜபக்சவோட மட்டும் தான் நல்லிணக்கமோ?
விக்கி : ஓம் எங்களுக்கு இப்ப அவர் தான் முக்கியம். அவரைப் பிடிச்சுத் தான் எல்லம் செய்யவேணும் என்று இந்தியா வேற சொல்லியிருக்கு.
சோளன் : அப்ப ராஜபக்சவோட நல்லிணக்கம் என்று முஸ்லிம் ஆக்களை கடாசிப் போட்டியளே.
விக்கி : உந்தப் பெரிய பெரிய கதையள் எல்லாம் ஒருத்தரும் எனக்கு சொல்லித் தரேல்லெ. அப்பவே சொல்லியிருக்கிறன் அரசியல் எல்லாம் எனக்குத் தெரியாது என்று.
சோளன் : ராசபக்சவோட நல்லிணக்கம் எண்டால் இப்ப ராசபக்சவுக்கு எதிராப் போராடின மீடியா காரர், ராஜபக்ச கொலைசெய்யிற வெலிவேரிய அப்பாவி மக்கள் எல்லாரும் எதிரிகளோ?
விக்கி : அவங்கள விட்ருங்கோ, சல்லிக் காசும் இல்லாதவங்கள். அவங்கள ராசபகவோட ஒப்பிட ஏலுமே? நாங்கள் யார்? பென்னாம் பெரிய படிப்பெல்லம் படிச்சு இங்கிலீசுக் காரரையே கலக்கினவங்கள். சட்டப்படி போராடுறது குற்றம். அதுக்கான தண்டனையத் தான் அனுபவிச்சவை.
சோளன் : அப்ப தமிழ் மக்களும் தானே போராடினவை.
விக்கி : அது பிழை எண்டு தெரிஞ்சு தானே நான் முள்ளி வாய்க்கால்ல கொலை செய்யேக்க மூச்சுவிடாமல் இருந்தனான்.
சோளன் : புலம் பெயர் தலைவர் மார் உங்கள்ள கோவமா இருக்கினமாம்.
விக்கி : யார் சொன்னது. நாடுகடந்த அரசாங்கம், உலகத் தமிழர் பேரவை எல்லாம் எனக்குத் தானே வோட்டுப் போடச் சொன்னவை.
சோளன் : சிலபேர் எதிர்க்கினமாம்.
விக்கி : அட அவங்களை விடுங்கோ. அவை நான் செய்யிற அதே வேலையளைத் தான் வேற விதமாச் செய்யினம். நான் நெடுக்கால செய்தால் அவை குறுக்கால செய்யினம். அவை ஏதோ நீங்கள் சொன்ன முஸ்லிம்கள், வெலிவேரியா இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டவையே. இதால அவை இருக்கிறது மகிந்தவுக்கும் விருப்பம் தான். என்ன இந்தியாவில தேர்தல் எண்டு வரேக்க தங்களுக்குப் பிரச்சனை வந்தாலும் எண்டு தான் மன்மோகன் பயப்படுரார். எங்களுக்கு அது பிரச்சனை இல்லை. இப்ப மோடி வந்தாலும் என்ன. அவரும் என்னப் போல தான் ஒரு கடவுள் பக்தன். புலம் பெயர் நாட்டில செத்தவீடு, பிறந்த நாள் எண்டு விழா வைச்சு நடத்த தடை வந்தாலும் எண்டு பயப்படுகினம். அதெல்லாம் எங்களுக்குப் பிரச்சனையே இல்லை.
ஆகலும் மிஞ்சிப் போனால் சிங்களவன், சிங்களம், தேசியத் தலைவர், தாயகம் என்று பஞ் டயலாக்கை இடைக்கிடை எடுத்து விட்டால் அவை அடங்கிப் போவினம்.தேவை வரேக்க எடுத்துவிட எழுதிப் பாடமாக்கி வைச்சிருக்கிறன். அவைக்கு அது மட்டும் தான் முக்கியம் என்றது எனக்கும் மகிந்தவுக்கும் நல்லாத் தெரியும். பம்பலப்பிட்டி முருகனின் வேலைப் பிடிச்சு ஆணையாகச் சொல்லுறன் அவையிண்ட பிழைப்புக்கு நான் ஆப்பு வைக்க மாட்டன். அது அவைக்கும் தெரியும்.
விக்கி: நன்றி, அது சரி யார் அந்த தனுசு?
சோளன் : தனுச உங்களுக்குத் தெரியாதே. நான் என்னவோ அரசியல் மட்டும் தான் தெரியாது என்று நினைச்சால் நீங்கள் உலக அறிவில முட்டை வாங்கின ஆளா இருப்பியள் போல. தனுசு இந்தியாவில் பெரிய நடிகன். அந்தக் காலத்தி எம்சிஆர் போல இப்ப தனுசு தான்.
விக்கி : (விக்கி கடுப்பாகிறார்) அப்பவே சொன்னனான் உந்தத் தமிழ் நாட்டு காரரைப் பற்றிப் பேசக்கூடாது என்று. எங்கடை பிரச்சனைய அவை தங்கடை லாபத்துக்கு பயன்படுத்தீனம்.
சோளன் : நீங்கள் சொல்லுறது முழுக்கப் பிழையில்ல எண்டாலும் உங்கட மன்மோகன்ம் அப்படித்தானே?
விக்கி : மன் மோகனையும் லோக்கலையும் ஒப்பிடாதையுங்கோ. மன் மோகன் தனியாள் இல்லை. அவருக்குப் பின்னால ரோ, ஐபி, இந்துத் துவம் என்று எத்தினை இருக்கு..
சோளன் : சொன்னாப் போல.. இந்துத்துவத்தில உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதால கேக்கிறன். 80 ஆம் ஆண்டில தொடங்கி முள்ளி வாய்க்கால் வரைக்கும் முப்பதாயிரம் போராளிகளை நீங்கள் ஆட்சி செய்யும் யாழ்ப்பாணம் மட்டும் கொடுத்திருக்கு. அவையளின்ட ஆவி எல்லாம் உங்களை அடிச்சுப் போடும் எண்டு நினைக்கேல்லையே?
விக்கி : (விழுந்து விழுந்து சிரிக்கிறார்) நான் என்ன விசரன் எண்டே நினைச்சியள். என் குருவானவர் பிரேமானந்தா சுவாமிகள் அந்தக் காலத்திலையே யாகம் செய்து மந்திரிச்சு கட்டின தாயத்து எந்தப் பெரிய ஆவிகளில இருந்தும் பாதுகாப்பு வாங்கித் தரும். அந்த நம்பிக்கையில தான் இப்பவும் வாழ்றன். என்று சொன்னவர் கடமைகள் கண்ணை மறைப்பதால் விடை பெற்றுக் கொள்கிறார். நேரமின்மையால் சுருக்கமாக வணக்கம் சொல்கிறார். ஆயுபோவன் டொட் டொட் டொட்..
(இது ஒரு மெய் நிகர் நேர்காணல், யாவும் கற்பனை என்றாலும் உண்மை கலந்த கற்பனை)