அமரிக்க ஐரோப்பிய ஆசிய அதிகாரங்கள் சமூகத்தின் மீது பிரயோகிக்கும் வன்முறையின் பொதுமை அதன் வடிவத்தில் மட்டுமல்ல உள்ளடக்கத்திலும் ஒத்திருப்பதைக் காணலாம்.
அமரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் என்று அனைத்து உலக அதிகாரங்களும் இணைந்து நடத்திய இனப்படுகொலை இரத்த வாடை இன்னும் அழிந்துவிடவில்லை. இந்த நிலையில் கூட அமரிக்காவையும், ஐக்கிய நாடுகளையும் நம்பியிருக்கும் தத்துவார்த்த முறைமைக்குள் ஈழத்தமிழர்கள் கூட அமிழ்த்தப்பட்டுள்ளனர். கொலைகாரர்களிடம் மக்களின் தலைவிதியை ஒப்படைத்தவர்கள் இன்னும் அவர்களையே நம்புகின்ற போக்கு துயர்மிக்கது.
ஆயுதங்களின் அவசியம்
ஒரே நேரத்தில் இரண்டு நோக்கங்களைத் திருப்தி செய்கின்ற ஆயுதங்களின் பின்புலத்திலுள்ள அரசியல் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைக் கொன்று போட்டுக்கொன்டிருக்கிறது.
இன்றைய உலகின் சமாதானத் தூதுவன் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு 708 பில்லியன் டொலர்கள் ஆயுதங்களுக்காகச் செலவு செய்யப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் யுத்தம் என்ற பெயரில் பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டு மக்கள் மரணித்துப் போகிறார்கள். ஆப்கான் யுத்தம் என்பது அங்கே குவிந்து கிடக்கும் ரிலியன் டொலர்கள் பெறுமதியான மூலவளங்களைக் கையகப்படுத்துவதற்காக என்ற சந்தேகங்கள் நியாயமானவை. ஒபாமா தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட வேளைகளில் ஈராக்கிலிருந்து படைகளை விலக்கிக் கொள்வதாக வழங்கிய உறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
இன்றைக்கும் உலகின் தெருச் சண்டியனாக அமரிக்கா உலாவருகிறது. ஒரு புறத்தில் உள் நாட்டுப் பொருளாதாரம் சரிந்துவிழ மறுபுறத்தில் உலகப் பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்தும் நோக்கோடு அமரிக்க அரசின் அதிகார பலம் அப்பாவி மக்களைப் பலியெடுக்கிறது.
பிரித்தானியாவும் அமரிக்காவும் இணைந்து 1 மில்லியன் கொலைகளை ஈராக்கில் நிகழ்த்தியிருக்கின்றன. இலங்கையில் வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில், உலகின் இன்னொரு பகுதியில் அமரிக்க பிரித்தானிய அரசுகளால் மக்கள் கொல்லப்படுக்கொண்டிருந்தனர். கொலைகளின் சூத்திரதாரிகளை நோக்கி தமிழ்த் தலைமை மனிதாபிமானத் தலையீட்டைக்கோரி இரந்து கொண்டிருந்ததெல்லாம் வேறுவிடையம்.
அப்பாவிச் சிறுவர்களதும், கற்பிணிப் பெண்களதும், வயது முதிர்ந்தோரதும் கொலைகளுக்கு யார்யாரெல்லாம் பொறுப்பானவர்களோ அவர்களையெல்லாம் நோக்கிக் வினாவெழுப்புவதற்கு உலகின் மக்கள் சக்தி பலமாதாக இருந்ததில்லை. எம்மைப் போன்றே பிளவுண்டிருத்தது. வன்னிப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது அண்ணார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் தான் போர் ஆரம்பிப்பதற்கு முன்பதாக அரை மில்லியன் குழந்தைகளின் கொலைக்குப் பொறுப்பாக இருந்தது. குழந்தைகளுக்கான அடிப்படை மருந்துகளுக்குத் தடைவிதித்திருந்தது.
போர்க்குற்ற விசாரணை நடத்தப் போகிறோம் என்று ஏமாற்றுகின்ற அதே ஐக்கிய நாடுகள் நிறுவனம் தான் பிரித்தானிய அமரிக்கப் போர்க்குற்றங்களுக்குச் சட்ட ரீதியான அனுமதி வழங்கியிருந்தது.
இவையெல்லாம் பிரித்தானிய அமரிக்க மக்களிலிருந்து உலக உலக மக்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இதற்கு பிறிதொரு காரணம் உலகில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும், உழைக்கும் மக்களும் எதோ ஒரு வகையில் அதிகாரங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தமையே. முதல் தடைவையாக அமரிக்கா ஈராக்கில் நிகழ்த்தியது ஜனநாயகத்திற்கான போரல்ல ஆக்கிரமிப்பிற்கான அழிப்பு என்ப்தை மக்கள் ஆதரபூர்வமாகக் கண்டிருக்கிறார்கள். அவ்வாதாரங்களின் ஊற்று மூலமாகத் திகழ்ந்தது விக்கிலீக்ஸ் இணையம். அவ்விணையத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.
இரகசியத் தகவல்களை வெளிப்படுத்துவது விக்கிலீக்ஸ் இன் தவறான செயற்பாடா என்பது மேற்கில் விவாதங்களுக்கு உட்படுத்தப்படுகின்றது. அதிகாரங்களின் தவறான பக்கங்களை உலகிற்குச் சுட்டிக்காட்டுவது எப்படித் தவறாகும் என்று கேள்வியெழுப்புகிறார் விக்கிலீக்ஸின் இணை நிறுவனரான ஜூலியன் அசாஞ். பொதுமக்கள் கூட இதை நாளந்தம் அமைப்பு ரீதியான செய்ற்பாடுகளின்றியே செய்யத் துணிகின்றனர். இதே அம்பலப்படுத்தல்கள் அரசியல் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வேளைகளில் அது அரசுகளால், சட்டவிரோதமானதாகவும், பயங்கரவாதமாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு அழிவிற்கு உள்ளாக்கப்படுகின்றது.
அமரிக்க அரச எல்லைக்குள் நடைபெறும் முறைகேடுகள் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவானதான தோற்றப்பாடு தெரிகின்ற போதிலும் உலகில் நடபெறும் அனைத்து அழிவுகளிலும் அமரிக்கா ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுகின்றது என்று கூறுகிறார் அசாஞ். ஈழத் தமிழர்கள் கண்முன்னே கண்ட மிகப்பெரிய அழிவில் அமரிக்காவினதும் அதன் ஜனநாயக முகத் தோற்றமான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தினதும் பங்கை நிராகரிக்க முடியாது. என்பதை தமிழ்ப் பேசும் வாசகர் சமூகத்திற்குச் சொல்லித் தெரிய வேண்டிய தேவையில்லை.
ஜூலியன் அசாஞ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அவதூறுகள் வடிவத்திலேயே பரப்பப்படுகின்றன. அதிகாரத்தினதும் அதன் அடிவருடிகளதும் வழமையான செயற்பாடுகளே இவை. அசாஞ் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை நிறுவுவதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று சுவீடன் நாட்டுச் சட்ட வல்லுனர்களே கூறுகின்றனர்.
விக்கிலீக்ஸின் மீதான தாக்குதல்களின் பின்னணியில் செயற்படுவோர் யார்?
மாஸ்டர் கார்ட், விசா கார்ட், சுவிஸ் பாங்க், அமசோன் போன்ற நிறுவனங்கள் விக்கிலீக்ஸை முழுமையாக நிராகரித்துத் தமது சேவைகளை வழங்க மறுத்தன. இதற்கான எந்த நியாயமும் அவர்களிடம் இருந்ததில்லை.
“இந்த நிறுவனங்களா எம்மீது தாக்குதல் நடத்துகின்றன?, இல்லை. இவைகள் எல்லாம் அரசியல் அழுத்தங்களுக்க்கு உள்ளாக்கப்பட்டனர். அழுத்தங்களைப் பிரயோகித்தவர்கள் யார்? வஷிங்டோனியன் வலைப்பின்னல். அரசியல்வாதிகள், செல்வாக்க்கு மிக்க மனிதர்கள்,பெரும் வியாபார நிறுவனங்கள் இணைந்த அமரிக்க ஐரோப்பிய அதிகாரம்… எல்லாமே குறுக்குவழிகளில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள்” என்கிறார் ஜூலியன் அசாஞ்.
இவ்வாறான தாக்குதல்களின் ஊடாக இன்றைய உலக அதிகாரம் கோருவதெல்லாம் தமது தமது சீரழிவுகளுக்கான அங்கீகாரம். மக்களின் வரிப்பணத்திலும், வறிய நாடுகள் சுரண்டப்படும் பணத்திலும் நிழக்த்தப்படும் சீரழிவுகளுக்கு அவர்கள் கோருகின்ற அங்கீகாரத்தை வழங்க உலக மக்கள் இனித் தயாராகவில்லை என்பதை விக்கிலீக்ஸிற்கு மக்கள் வழங்கிய அங்கீகாரத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
விக்கிலீக்ஸ் இயங்குவதற்கான பணத்தை எந்த அரசும், நிதி நிறுவனங்களும், தன்னார்வக் கொடுப்பனவு நிறுவனங்களும் வழங்கவில்லை. மக்களின் நன்கொடையே அதன் ஒரு வருமானம் என்கிறார் அசாஞ்.
மிகச் சிறிய, பலவீனமான விக்கிலீக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக, அனைத்துப் பலத்தையும் கொண்ட அதிகாரவர்க்கம் அணிவகுத்து நிற்கின்ற போதிலும் அதனை அழித்து நிர்மூலமாக்க்க முடியவில்லை என்றால் மக்கள் அதற்கு வழங்கிய அங்கீகாரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.
விக்கிலீக்ஸ் கற்றுத் தரும் பாடங்களில் பிரதானமானவை
1. அழிவிற்கெதிரான போராட்டத்தில் தகவற் தொழிநுட்பம் கணிசமான பாத்திரம் வகிக்க முடியும்.
2. அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களின் ஊடாகவே மக்களின் உறுதியான தார்மீக ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
விக்கிலீக்ஸ் நிறுவனமயமான மக்கள் பகுதியை தமது ஆதரவுத் தளமாகக் கொண்டிருக்கவில்லை என்பதால் அதன் எதிர்காலம் குறித்து எந்த எதிர்வுகூறலையும் யாரும் முன்வைக்க இயலாத நிலையிலுள்ளனர். எது எவ்வாறாயினும் உறுதியான அரசியல் பின்புலமுடைய அனைத்து சமூகம் சார்ந்த அமைப்புக்களும் இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
உறுதியான புதிய அரசியல் போராட்ட வழிமுறையை விக்கிலீக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது தொடரும் ..