Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வாழைக் குலையும் லண்டன் தமிழ் அப்புக்காத்துகளும் : சோளன்

vaazaikulaiஅப்புக்காத்தும் விதானையும் என்றால் ஊரில் நினைவுக்கு வருவது சாராயப் போத்தலும் வாழைக்குலையும் தான். கோர்ட் கேஸ் வெற்றி என்றதும் சோளனின் மாமா அன்னலிங்கர் அப்புக்காத்துவுக்கு ரெண்டு வாழைக்குலையும் ஒரு சாராயப் போத்திலும் அரை குறை உசிரோட சேவலும் கொண்டுபோய்க் குடுத்ததை குடும்பத்தோடு அமர்ந்து பெருமையாகச் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்குக் கண்டியளோ.

83 ஆம் ஆண்டு 13 ஆமிக்காரன் சாகிறதுக்கு மூன்று வருசம் முதல் சோளன் வெறும் 7 வயதுக் குழந்தை என்றாலும் சேவலின் மீதிருந்த அனுதாபத்தால் மாமாவின் கதை இன்னும் ஞாபகத்தில் உள்ளது.

தமிழனின் பரம்பரையில வந்த இளம் அப்புக்காத்துகள் லண்டனில ஆபீசு வைச்சு ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் சேவை பென்னாம் பெரிசு! அதுவும் வாழைக் குலை கிடைக்காத ஊரில!!

ஈழத்தில இருந்து அரசியல் அப்புக்காத்து எம்.ஏ.சுமந்திரன் ஆமிகாரனோடு உச்சி வெய்யிலில நின்று பேரம் பேசிச் செய்யும் சேவைகளைப் போலவே லண்டன் அப்புக்காத்துகளும் செய்யின.

சோளனின்ர தோஸ்து ஒருத்தன் லண்டன் அப்புக்காத்து ஒருத்தரிட்ட அகதிக் கேஸ் நடத்தப் போயிருக்கிறார். தமிழ்த் தேசிய அப்புக்காத்தாக அறியப்பட்ட அந்த மகான், கேசை எடுத்து “ஊ சிவமயத்தை” முதல் பக்கத்தில் எழுதிவிட்டு கோப்புக்குள் போட்டுப் பூட்டிவிட்டுப் பேசத் தொடங்கினார்.

“நீர் முன்னை நாள் போராளி என்றதால கேசை நாங்கள் வெண்டு தருவம், பயப்படாதைங்கோ, இப்ப காசு தராட்டிலும் பரவாயில்லை… ஏனெட்ன்டால் நீங்கள் முன்னை நாள்.. ஆனா காலில ஒரு சூடு போட வேணும்.. ஆமிக்காரன் சித்திரவதை செய்த அடையாளம் காட்ட வேணும்..

பெரிய சூடாப் போட டொக்கர் ஒருதரிட்ட நான் ஒழுங்கு செய்யிறன்.. அவருக்கு ஒரு 500 பவுண்ஸ் போகும்.. சுட்ட காயத்தை காட்டி ஆமிக்காரன்ட சூடு என்று துண்டு வாங்க இன்னொரு டொக்ரை ஒழுங்கு செய்யிறன்.. அவருக்கு ஒரு 500 மட்டும் தான்..

அது போக சித்திரவதையால மன நிலை பாதிக்கப்பட்டதாக துண்டுவாங்க மன நோய் வைத்தியரிட்ட ஐந்து தரம் மருந்தெடுக்க வேணும்.. ஒரு தரத்துக்கு 500 படி 2500 முடியும்.. என்ர காசை பிறகு பார்க்கலாம்…. நீங்கள் முன்னை நாள்…. இப்ப டொக்ரர்மாரை மட்டும் தவற விட வேண்டாம் அப்பத்தான் கேஸ் வெல்லலாம்….”

என்ர தோஸ்து என்ற முன்னை நாள் போராளி துப்பாக்கி மௌனித்த நிலையில் அப்புக்காத்தை நோக்கினார். அண்ணை எனக்கு ஏற்கனவே முதுகு முழுக்க சித்திரவதை செய்யப்பட்ட காயம் இருக்கு அது போதாதோ என்று அப்பாவித் தனமாகக் கேட்டார்.

இதுவரையில் தனது உணர்ச்சிகளை மௌனித்திருந்த அப்புக்காத்து தனது தாக்குதலை அப்பாவிப் பொதுமகனான எனது தோஸ்தின் மீது ஆரம்பித்தார்.

“நீர் லோயரா, நான் லோயரா, இங்க ஹோம் ஒப்பீசு காலில சூட்டுக் காயம் இல்லாதவனை எல்லாம் திருப்பி அனுப்புறானாம்; இதெல்லாம் உமக்குத் தெரியுமா? முதுகில காயமாம் முதுகில… முதுகெல்லாம் காயப்படுகிற இடம் இல்லை என அகதிச் சட்டத்தின்ட ஐம்பத்து அஞ்சாம் பிரிவே சொல்லுது…

இப்ப டொக்டர் மாரிட்ட போக ஏலும் என்றால் மட்டும் தான் நான் கேஸ் எடுப்பன் இல்லையெண்டால் நீர் வேறை ஆக்களப் பாரும்…” என்று ஆவேசமாகக் கத்தியதும் தண்ணி அடிக்காமலெயே அப்புக்காத்துவின் கண்கள் சிவந்தன.

பேச்சை முடித்ததும் தனக்கு அருகாமையிலிருந்த கோப்பைத் தூக்கி முன்னை நாள் போராளி தோஸ்துவின் முன்னால் போட “ஊ சிவமயம்” அவன் முன்னால் விழித்துப் பல்லைக் காட்டியது.

பயந்து பெட்டிப் பாம்பாகிப் போன தோஸ்து, நீங்கள் சொன்னபடியே கேட்கிறேன் என்றான்.

அப்புக்காத்து அன்னலிங்கரின் காலம் மலையேறிவிட்டது. இப்ப எல்லாம் கதை வேறு. வாழைக்குலையும் சாராயப் போத்தலும் உரிக்காத சேவலும் 500 பவுண்ஸ்களால் பிரதியிடப்பட்டுள்ளது. நேரடியாக அன்னலிங்கருக்குப் போன சன்மானம் இப்போது வேறு வழிகளால் ரூட்டிங் செய்யப்பட்டுப் போகிறது. முன்னர் எல்லாம் வாழைக்குலையும் போத்தலும் சக்சஸ் சன்மானமாகவே வழங்கப்பட்டது. இப்பொதெல்லாம் வெற்றியோ தோல்வியோ அவை வழங்கப்பட வெண்டும்.

கலாநிதி, திரு, டொக்டர், சேர் போன்ற பட்டங்களைப் போன்று முன்னை நாள் போராளி என்ற பட்டத்தைச் சுமந்து லண்டன் வந்த தோஸ்து இப்போது இன்நாள் போராளி ஆகிவிட்டான். அப்புக்காத்துவின் சன்மானங்களைச் செலுத்துவதற்கக அரை ஊதியத்தில் தமிழ்க் கடையில் வேலையோடு போரிட்டுக்கொண்டிருக்கிறான்.

இந்த அப்புக்காத்துக்களில் பலர் தமிழ்த் தேசிய “திங் டாங்குகள்”-think tanks- . கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவர்கள் “திங் குட்டைகள்” மட்டுமே. முன்னேறிப் போன லண்டன் அப்புக்காத்துக்களை விட அன்னலிங்கர் ஆயிரம் மடங்கு மேல்.

Exit mobile version