இந்த இரண்டு பகுதிகளுமே புலம் பெயர் சந்தர்ப்பவாத அரசியல் அசைவுகளோடு இணைந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு அப்பால் இலங்கையில் சிறுபான்மையினங்களின் புதிய அரசியல் தலைமை இப்போது இன்னமும் அதிகமாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
காஷ்மீரிகளைப் போன்று, நாகா மக்களைப் போன்று, பழங்குடி மக்களைப் போன்று, ஈராக்கியர்களைப் போன்று, அரேபிய மக்களைப் போன்று ஈழத் தமிழர்களும் போராடக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் போராட்டத்தைப் பேசுவார்த்தகளை நோக்கித் திசைதிருப்பவும், அற்ப சலுகைகளுக்காக விலை பேசவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போன்ற பாராளுமன்ற அரசியல்வாதிகள் ஒவ்வொரு கணத்திலும் தயாராகவிருக்கின்றார்கள்.
வட கிழக்கும்ப் பிரதேசங்கள் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்வதற்கு உகந்த பிரதேசங்கள் அல்ல என்ற உணர்வை ஏற்படுத்தும் இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இலங்கை அரச பாசிச அரசு உலாவவிட்டிருக்கு மர்ம மனிதர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த போதெல்லாம் தேசியக் கூட்டமைப்பு அரசை இரந்துகொண்டிருந்தது.
திட்டமிட்ட குடியேற்றங்களை எதிர்த்து மக்கள் தெருவிற்கு வந்தது போர்குரல் எழுப்பிய போது வாக்குக் கட்சிகள் அரசோடு பேச்சு நடத்துவதாகவும் இந்திய அரசை வளைத்துப் போடுவதாகவும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தனர்.
புலம் பெயர் தேசங்களிலிருந்து கொன்றுபோடப்பட்ட மக்களின் பிணங்களில் மேல் நடந்துசென்று ஊர்க் கோவில்களில் கோலாகலமாகத் திருவிழா நடத்திவிட்டுத் திரும்பும் யாழ்ப்பாணப் புதிய மேட்டுக் குடிகளின் ஈழப் பிரதிநிதிகளான தேசியக் கூட்டமைப்பும் இன்னோரன்ன அரசியல் வியாபாரிகளும் மக்களின் போராட்டங்களைக் கடத்திச் சென்று தமது நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களே மக்களின் போராட்டங்களை மழுங்கடித்துத் திசை திருப்புகிறார்கள்.
இவர்கள் தான் மக்கள் விடுதலைக்கான போராட்டங்களின் முதலாவது தடைக்கல்.
இரண்டாவதாக புலம் பெயர் நாடுகளின் அரசியல் வியாபாரிகள். யாரிவர்கள்? முள்ளிவாய்க்காலில் மக்கள் சாரிசாரியாகக் கொலைசெய்யப்பட்ட போது, அமரிக்கா வருகிறது, ஐக்கிய நாடுகள் ஆலவட்டம் பிடிக்கிறது என்று கூக்குரலிட்டவர்கள். நந்திகடலில் இறுதி மனிதன் சித்திரவதை செய்யப்படுக் கொல்லப்படும் வரைக்கும் இதையே திரும்பத் திரும்பக் கூறியவர்கள். மூன்று லட்சம் மக்கள் வன்னி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட வேளையிலும் இதையே கூச்சமின்றிச் சொன்னவர்களும் இவர்கள் தான்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கடந்து போய்விட்டது. ராஜபக்ச சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு மண் கூடக் கொட்டவில்லை. இன்னும் அமரிக்கா வரும். பிரித்தானியா தீர்த்துவைக்கும். ஜெயலலிதா கண் திறப்பார். ரோபர்ட் பிளக் விமானத்தில் அமர்ந்துவிட்டார். இப்படி மறுபடி மறுடி மக்களை ஏமாற்றுகிரார்கள்.
விளம்பரங்கள் மூலைக்கு மூலை தொங்கிக்கொண்டிருக்கும் வியாபார இணையத் தளங்கள் இவர்களின் பிரச்சாரப் பீரங்கிகள். ஈழத்தில் வாக்குக் கட்சிகள் எப்படிப் போராட்டங்களை திசை திருப்புகின்றனவோ அதைவிட அதிகமாகவே அவற்றை மழுங்கடிக்கும் பணியினை இவர்கள் கன கச்சிதமாகச் செய்து முடிக்கிறார்கள்.தேசியம் என்றால் இனவாதம் என்பது இவர்களின் அரசியல் சமன்பாடு. மக்கள் மத்தியின் நஞ்சை விதைப்பதற்கு அத்தனை கீழ்த்தரமான தந்திரோபாயங்களையும் கையாளும் இவர்கள் புதிய இலங்கை அரச பேரின வாதத்தை எதிர்கொள்ளும் அரசியல் தலைமையின் உருவாக்கத்திற்கு எதிரான அத்தனை தடைக் கற்களையும் தமது இலத்திரனியல் ஊடகங்களில் விதைத்து வைத்திருக்கிறார்கள்.
பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்ற மயக்க நிலையை ஏற்படுத்தி சில காலங்கள் தமது இனவாத அரசியலை நகர்த்தியவர்கள், அமரிக்காவும் ஐக்கிய நாடுகளும் இலங்கை அரசை அழிப்பதற்கு நுலிடை இடைவெளியில் தான் நிற்பதாக நம்பவைக்கிறார்கள்.
அமரிக்கா வராது. மனிதப் படுகொலைகளை இலங்கையில் மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு திருப்பங்களிலும் திட்டமிட்டு நடத்துபவர்களே அவர்கள் தான். ரோபர் ஒ பிளக் வரமாட்டார். ஒசாமா பின்லாடனைக் கொலைசெய்துவிட்டு பிரபாகரனும் ஒசாமாவும் வேறுபட்டவர்கள் இல்லை என ராஜபக்சவின் கோட்டைக்குள் இருந்து அறிக்கைவிட்டவரே அவர்தான். பிரித்தானியா வராது. தேசிய இனப்பிரச்சனையை ஆரம்பித்து வைத்தவர்களும் அனுபவித்து இன்பம் காண்பவர்களும் அவர்கள் தான். ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் செயலாளர் மக்கள் சாரிசாரியாகக் கொல்லப்படும் ஒவ்வோரு கணத்திலும் இலங்கை அரசிற்கு எதிராக மூச்சுக்கூட விடவில்லை.
இந்திய அரசு தான் இனப்படுகொலையையே திட்டமிட்ட இராணுவ வித்தகன். சீனா தனது வியாபாரத்திற்காக ஆசிய நாடுகளில் யாருடன் வேண்டுமானாலும் சோரம்போகத் தயாரான திருட்டு அரசு.
யாரும் வரமாட்டார்கள். ஆனால் ஈழமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். தமது போராட்டத்தைத் தாமே நடத்துவதற்கு அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். மலையக முஸ்லீம் மக்களும் கூடத்தான். சிங்கள மக்கள் சுதந்திர வர்த்தக வலையத்தில் துப்பாக்கிகளுக்கு மத்தியில் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
புலம் பெயர் அரசியல் வியாபாரிகளோ யாராவது வருவார்கள் என்றும் தாங்கள் காய் நகர்த்திக் கொண்டிருப்பதாகவும் வன்னியில் இன அழிப்பு ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரைக்கும் திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.
இவர்களின் அரசியல் கருத்துக்கள் “வராது ஆனால் வரும்” என்பது பொன்ற கோமாளித்தனமாகவும் வெகுளித் தனமாகவும் வெளித்தெரிந்தாலும் அதன் பின்புலத்தில் வர்க்க நலனும் வர்த்தக நலனும் பொதிந்திருப்ப்தை இலகுவாக அடையாளம் காணலாம்.
புலம் பெயர் சூழலில் போராட்ட உணர்வும் தியாக மனோபாவமும் கொண்ட ஆயிரக்கனக்கானோர் விரக்திக்கும் வெறுப்பிற்கும் உள்ளாகும் வரை இவர்களின் அழிவரசியல் தொடரும்.
சமூக உணர்வுள்ளவர்கள் இவர்களை மக்கள் மத்தியில் இனம் காட்டுவதும், ஈழத்தில் புதிய அரசியல் தலைமையை உருவாக்க ஒத்துழைப்பதும் இன்றைய அவசரக் கடமை. பாசிசம் கோலோச்சும் நாட்டில் புதிய தந்திரோபாயங்களை வகுத்துக்கொண்டு உறுதிமிக்க அரசியலை முன்வைப்பதிலிருந்தே புதிய மக்களியக்கம் வலுப்பெறும்.