Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வன்னி மண்ணும் மக்களும் – ஒருநோக்கு : விசு

தமிழில் காடவர் எனப் பொருள்படும் சமஸ்கிருதச் சொல்லான வன்ய என்பதே வன்னி எனக் கருதப்படுவதில் இருந்து வன்னியின் தொன்மைக் காலம் நவீனங்களற்றதும் சமஸ்கிருத செல்வாக்குக்குட்பட்டதாகவும் இருந்ததாக அறியமுடிகிறது.

போத்துக்கேயர் முதல் ஆங்கிலேயர் வரையான காலங்களிலும் வன்னியின் அதிபதிகளாக இருந்த முதலிகள் இந்தியக் கோவிலான சிதம்பரத்துக்கு நிதி வழங்கிச் சேவித்தும் வன்னி மக்கள் மீது ஒடுக்குமுறைகளைத் திணித்தும் வந்துள்ளனர்.

கடந்த அறுபதாண்டுகளாக இருந்துவந்த பாராளுமன்றத் தலைமைகள் மேற்படி பிறழ்வுகளை மேலும் மெருகேற்றியுள்ளார்கள். முற்போக்கு அரசியல் கொள்கைகளைக் கருவறுத்தும் தமிழ் மக்களை நோக்கி சிங்கள மக்களிடம் இருந்து நீட்டப்பட்ட நேசக் கரங்களை புறந்தள்ளியும் பகை அரசியலை மிகவும் முயன்று முயன்று வளர்த்துச் சிங்கள-தமிழ் மேட்டுக்குடி நலன்களுடன் மிகவும் ஒத்துப்போகும் இந்திய-மேற்குலக நலன் சார்ந்த அரசியலுக்கே சேவகம் செய்து வந்தனர்.

தாம் பிறந்து வளர்ந்த இடங்களில் தொழில் வாய்ப்புகளற்ற, நிலமற்ற யாழ் மாவட்டத்து மக்களும் தென் பகுதிக் கலவரங்களால் அடித்து விரட்டப்பட்ட மக்களும், காலத்துக்கு காலம் வாழ்வும் புகலிடமும் தேடிப், பூர்வீக மக்கள் மட்டும் வாழ்ந்த வன்னியில் தாமும் நிரந்தரக் குடிகளாயினர்.

இனவாத அரசியலானது இந்த மக்கள் மீது போரையும் அவலங்களையும் திணித்துள்ளது. அடிப்படை வசதிகளற்ற நிலையில் காட்டு விலங்குகள் விஷ விலங்குகள் நோய்கள் என்பனவற்றை எதிர்கொண்டு தமது இருப்புகளைத் தக்கவைத்து வந்த மக்கள் தமது மண்ணிலிருந்து துரத்தப்பட்டு முட்கம்பி வேலிக்குள் உறவுகளையும் உடமைகளையும் இழந்து கைதிகளாயினர்.

போரின் காரணமாக மக்கள் நாலா பக்கமும் சிதறியுள்ள நிலையிலும் மீளக்குடியமர்த்தல் முழுமையாக முடிவடையாத நிலையிலும் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையிலும் அவசரமும் அவசியமுமாக அரசு இந்த மண்ணைக்கபளீகரம் செய்ய எத்தனிப்பது எதிர்காலத்தில் இந்த மக்களின் சுயம் என்பதை முற்றாக அழிக்கும் நோக்கிலாகும்.

இரண்டு தலைமுறைகளாக இந்திய மேற்குலக நலன்களுக்குச் சேவகம் செய்து வந்த தமிழர் தலைமைகள் தமிழ் மக்களுக்காக எவற்றையும் செய்யவில்லை. இலங்கை அரசு தருணம் பார்த்துத் தனது பேரினவாத நோக்கத்தை வன்னி மண்ணில் நடைமுறைப்படுத்த முனைகின்றது. இராணுவக் குடியிருப்புகள் நிறுவப்படுகின்றன. பௌத்த பீடங்கள் தொல்பொருள் ஆய்வுகளில் இறங்கியுள்ளன.

இன்றைய நிலையில் வன்னி மண்ணையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் முழுக்க முழுக்கத் தமிழ் தலைமைகளைச் சார்ந்ததாக உள்ளது என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் அதைச் செய்து முடிக்கும் நிலையில் இல்லை. அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் என்றென்றும் பாராளுமன்ற முடிதரித்த குறுநில மன்னர்கள் போன்று ஆதிக்க அரசியல் நடாத்துவதில் அக்கறையாக இருந்து வருகிறார்களே தவிரச், சாதாரணத் தமிழ் மக்கள் பற்றிய அக்கறை அற்றவர்களாகவே உள்ளனர். அந்தளவில், அவர்களும் ஆளும் வர்க்கமும் விவசாயிகளதும் தொழிலாளர்களதும் உழைக்கும் மக்களதும் நிலையை எவ் வகையிலும் கணக்கிற் கொள்ளப் போவதில்லை இதுவே வன்னியின் மிகப் பெரும் சோகமாகும்.

இலங்கை புதிய ஜனநாயக  மார்க்சிய லெனினிய கட்சியின்  “புதிய பூமி” இதழில் வெளியான கட்டுரை.  Tel: [+94] 11 2473757
Exit mobile version