இதயச்சந்திரனின் கட்டுரை விவாத நோக்கில் பதிவிடப்படுகிறது.
அந்த விவாதங்கள் அடங்கி, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக, ஓய்வுபெற்ற நீதிபதி கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்கினேஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரை எதிர்த்து, அரச தரப்பால் களமிறக்கப்படுவதாக, ஊடாகப்பரப்பில் அதிகம் பேசப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப்பொறுப்பாளர் தயா மாஸ்டர், ஐ.ம.சு.மு.வேட்பாளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட்ட விவகாரம் குறித்து, தென்னிலங்கையில் விவாதம் தொடர்கின்றது.
இவைதவிர, அரசோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்று, முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகு தாவூது அவர்கள் விடாப்பிடியாக நின்றாலும், தனித்துப் போட்டியிடுவோம் என்கிற நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்ததால், முஸ்லிம் காங்கிரசிற்குள் பிளவு ஏற்படலாமென்று எதிர்வு கூறப்படுகிறது.
கிழக்கு மாகாணசபைத்தேர்தல் காலத்தில் இதுபோன்ற சலனங்கள் ஏற்பட்டாலும், தேர்தல் முடிவுகள் வந்த கையோடு, முஸ்லிம் காங்கிரசானது அரசோடு இணைந்து கிழக்கில் ஆட்சி அமைத்த அண்மைகால வரலாற்றினை நினைவிற் கொள்வது பொருத்தமானது.
ஆகவே முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரை, ‘ தேர்தலில் வெற்றி பெற்றவுடன், அரசோடு இணைந்து கொள்வோம்’ என்பதனை மக்களுக்கு தெளிவாகக் கூறி வாக்குக் கேட்க வேண்டும்.
தேர்தல் களத்தில் மோதிக்கொள்வதற்கு, முக்கியமான இந்த மூன்று தரப்புக்களும் தயார் நிலையில் இருக்கையில், வடக்கில் பதிவு செய்யப்பட்ட 7 இலட்சத்து 14 ஆயிரத்து 480 வாக்காளப் பெருமக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை, தென்னிலங்கை அரசியல் வாதிகளும், சர்வதேச நாடுகள் என்று அழைக்கப்படுபவர்களும், உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மாகாணசபைத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு உத்தியோகபூர்வ அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,’ தமிழ் மக்களின் தேசிய அரசியலை வட மாகாணத்திற்குள் முடக்கிவிட சிங்கள தேசம் உறுதியாகவிருக்கிறது’ என்று குறிப்பிடும் த.தே.ம.முன்னணி, ’25 வருடங்களாக நிராகரிக்கப்பட்ட, ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட மாகாணசபை முறைமையானது தீர்வல்ல’ என்பதோடு, ‘ இத்தேர்தலில் பங்குபற்றுவதா? வாக்களிப்பதா? யாருக்கு வாக்களிப்பது? போன்ற தீர்மானங்களை, தமிழ் மக்களின் மனச்சாட்சிக்கு விட்டு விடுகிறோம்’ என்கிறது.
இதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், ‘ மாகாணசபை முறைமை என்பது, அரசியல் தீர்விற்கான முதற் புள்ளியுமல்ல, முற்றுப்புள்ளியுமல்ல, இடைக்காலத்தீர்வுமல்ல’ என்கிற அரசியல் கருத்து நிலைப்பாட்டினைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதன்மை வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்கிற அறிவித்தல் வெளியாகியவுடன், அவர் ‘ இந்துஸ்தான் டைம்ஸ்’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல், சில சர்ச்சைகளை உருவாக்கி இருந்ததை கவனிக்கலாம்.
‘இன்னமும் தொடரும் தமிழின அடியழித்தலுக்கு எதிரான உலகத் தமிழ் மக்களின் ஆதரவினை ஓரங்கட்டும் வகையில், அவருடைய அரசியல் கருத்துக்கள் வெளிப்படுகின்றன’ என்பதான கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
‘சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல், நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை சிங்களத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது’ என்பதில் நம்பிக்கை கொண்டோரின், அரசியல் கருத்துநிலைக்கு முரணாக இருந்தது விக்னேஸ்வரன் அவர்களின் நேர்காணல்.
வேட்புமனு தாக்கல் செய்த பின், ஊடகவியலாளர்களுடன் உரையாடும்போது, 13 வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைபடுத்துவதற்கான அங்கீகாரத்தை மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டார்.
ஆகவே,13 ஐ உள்ளடக்கிய, மக்களின் ஒப்புதலற்ற இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு, 26 வருடங்களின் பின்னர் அங்கீகாரம் தேடும் களமாக இத் தேர்தல் பயன்படுத்தப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.
‘மக்களின் ஏகோபித்த ஆதரவு கிட்டினால், 13 ஐ நடைமுறைப்படுத்த உதவியாக இருக்கும்’ என்று கூறும் விக்னேஸ்வரன் அவர்கள், அதில் சிக்கல் வந்தால் அரசுடன் சேர்ந்து பேசி நடவடிக்கை எடுப்போம் என்கிறார்.
மாவட்ட (சபை) உரிமை, 87 இல் மாகாணசபையாக விரிவாக்கம் பெற்றதாகவும், அது முன்னேற்றகரமானதொன்று என்று சுட்டிக்காட்டும் விக்னேஸ்வரன் அவர்கள், ‘சனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் அது மக்கள் ஆணையாக இருக்கும்’ என்பதை வலியுறுத்துவதோடு, ஆயுதக் குழுக்களின் ( விடுதலைப்புலிகள் உட்பட) கோரிக்கையை இலங்கை அரசும், சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற ஒப்பீட்டையும் மேற்கொள்கிறார்.
‘இனி உலகம் செவி சாய்க்கும்’ என்ற நம்பிக்கையை, எதனடிப்படையில் கூறுகின்றார் என்று தெரியவில்லை.
13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக, இரண்டு முக்கிய பிரேரணைகளுக்கு அங்கீகாரம் வழங்கிய மந்திரிசபை தீர்மானங்கள், நாடாளுமன்ற தெரிவுக் குழு முன்பாக ஆகஸ்ட் 6 ஆம் திகதியன்று விவாதிக்கப்படப்போகும் செய்தி, உலகின் செவிகளுக்கும் எட்டியிருக்கும்.
இருப்பினும், நில அபகரிப்புக் குறித்து வாய் திறக்காத இந்த சர்வதேசம், 13 இல் மாற்றங்களை மேற்கொள்ளும் அரசுடன் முரண்படுமென்று கற்பிதம் கொள்ளமுடியாது.
நவநீதம்பிள்ளை அம்மையாரின் இலங்கைப் பயணம், அடுத்துவரும் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர், எப்பாடுபட்டாவது பொதுநலவாய நாடுகளின் மாநாட்டினை நடாத்திவிட வேண்டுமென்கிற அரசின் துடிப்பு, ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, வட மாகாணசபைத் தேர்தலை இனிமேலும் நிராகரிக்க முடியாததொரு இக்கட்டான நிலையினை, இந்தியாவும் மேற்குலகும் இணைந்து அரசிற்கு ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடந்து, அங்கு ஒரு சிவில் நிர்வாகம் உருவானால் போதும் என்பதுதான் இந்த சர்வதேச நாடுகளின் (?) நிலைப்பாடு.
ஆளுநரும், இராணுவ கட்டளைத்தளபதியும் மாகாணசபை நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்கிறார்கள் என்று சர்வதேசத்திடம் முறையிட்டாலும், காணி மற்றும் காவல் துறை அதிகாரங்களை வழங்க அரசு மறுக்கின்றது என்று அழுது புலம்பினாலும், 13 வது திருத்தச் சட்டத்தின் பிரகாரமே நாம் செயல்படுகிறோம் என்ற விளக்கங்களை சட்டத்துறைப் பேராசான் ஜி.எல்.பீரீஸ் அவர்கள் முன்வைப்பார்.
அதேவேளை காவல், காணி அதிகாரம் குறித்து மல்வத்த அஸ்கிரிய பீடாதிபதிகள் கொண்டிருக்கும் இறுக்கமான நிலைப்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில், ‘ நிறைவேற்று அதிகாரமுள்ள என்னிடமே காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் இருக்கும். அவற்றை என்னிடமிருந்து எவராலும் பறித்துவிட முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் காணி, காவல் துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது’ என அண்மையில் இலங்கை சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெளிவாகக் கூறிய விடயத்தை, 13 என்பது ஆரம்பப்புள்ளி என்போர் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
13 வது திருத்தச் சட்டத்தில் என்ன அதிகாரங்கள் உள்ளன? என்பதுபற்றி சிங்கள தேசத்தின் பௌத்த பீடாதிபதிகளும், சட்ட வல்லுனர்களும், பேரினவாத அரசியல்வாதிகளும் விளக்கமாவே கூறி வருகிறார்கள். அவர்கள் கூறுவது தவறு என்று, அரசோடு பேசி உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் என்போர், தமது அரசியலமைப்பு சட்ட அறிவைப் பயன்படுத்தி மக்களுக்கு விளக்க வேண்டும்.
17 இல் ஒட்டிக்கொண்டிருந்த அற்ப சொற்ப சுயாதீன ஆணைக்குழு சரத்துக்களும், 18 இல் , சனாதிபதியின் வசம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. அதனை மீட்டெடுக்க வேண்டுமென்று இரணிலும், மேற்குலகமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதை ஆட்சியாளர்கள் செவிமடுக்கவில்லை.
ஆகவே, இவ்வாறான சிங்களத்தின் விடாக்கண்டன் நிலையினையும், 13 வது திருத்தச் சட்டத்தில் என்ன இருக்கிறது என்பதையும், மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவோர், மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். ‘வென்றபின் அதுகுறித்து அரசோடு பேசுவோம்’ என்பவர்கள், முதலில், விரல் நுனியில் மை பூசி, புள்ளடி போடும் மக்களுக்கு, எதற்காக வாக்களிக்கிறோம் என்பதையாவது சொல்ல வேண்டும். இறைமையுள்ள மக்களின் அடிப்படை சனநாயக உரிமை அது.
இருப்பினும், 65 ஆண்டு காலமாக, பெரும்பான்மையான தமிழ் மக்கள் முன்னெடுக்கும் எதிர்ப்பரசியலின் நீட்சியாக, இத்தடவையும் அவர்கள் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பார்கள். உரிமைக்கான போராட்டம் என்பதால்தான், சலுகைகளுக்காக தமது வாக்குகளை அவர்கள் பெரும்பான்மையின ஆட்சியாளர்களுக்கு வழங்கவில்லை.
77 இல், வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு தமது ஏகோபித்த ஆதரவினை வழங்கிய மக்கள் கூட்டம், இறைமையுள்ள பூர்வீக தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அன்று வலியுறுத்தியது.
சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சனநாயகத் தேர்தல் ஊடாகவே அந்த ஆணையை மக்கள் வழங்கினார்கள். அக்கோரிக்கையை சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் குறிப்பிடும் ஆயுதக்குழுக்கள் முன்வைக்கவில்லை.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட , தாங்கள் உருவாக்கிய தீர்வினை (13) மக்கள் மீது திணித்து, அதற்கான அங்கீகாரத்தை மக்களிடமிருந்து பெறுவதற்காகவா இத் தேர்தல் நடைபெறவேண்டுமென்று இந்தியா விரும்புகிறது என்கிற கேள்வி எழுகிறது.
அதேவேளை, தேசிய இனப்பிரச்சினைக்கு அப்பால், இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதாரப் பிரச்சினையின் வடிவம், மோசமானதொரு நிலை நோக்கி நகர்வதை கவனிக்காமல் விட்டுவிடமுடியாது.
இனப்பிரச்சினைத் தீர்வில், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமென நாம் நம்பிக்கொண்டிருக்கும் இந்தியாவும் மேற்குலகமும், தமது இலங்கையுடனான உறவினை வெவ்வேறு தளங்களில் நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்பதை புறந்தள்ளி, இந்த விவகாரத்தில் முழுமையான பார்வையைப் பெறமுடியாது.
நாட்டின் தற்போதைய அரசியல்- பொருளாதார நிலைவரத்தைப் பார்ப்போம்.
அரசிறைப் பற்றாக்குறை ( Fiscal Deficit), இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் 343.5 பில்லியன் ரூபாவை எட்டியதோடு, கடந்த வருடத்தைவிட 20.3% அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2000 ஆம் ஆண்டில், மொத்த உள்ளூர் உற்பத்தியின் (Gross Domestic Product) 33% மாகவிருந்த இலங்கையின் ஏற்றுமதி, 2012 இல் 17 % ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை பொருளாதார ஒன்றியம் கவலையடைவதோடு மட்டுமல்லாது, இந்த வீழ்ச்சியானது, நாட்டினை கடன் பொறிக்குள் தள்ளிவிடக்கூடிய சூழலை ஏற்படுத்துமென்று எச்சரிக்கின்றது.
ஒவ்வொரு வருடமும், ஆடை ஏற்றுமதியில் $750 மில்லியன் நட்டமேற்படுவதால், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கு மறுபடியும் விண்ணப்பிக்குமாறு, அரசிற்கு நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்.
உல்லாசத்துறை அபிவிருத்தி அதிகாரசபையும், ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் இவ் வருடத்திற்கான 1.25 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கையை ,1.11 மில்லியனாக குறைத்துள்ளது.
பாரிய நட்டத்தில் இயங்கும் மாத்தல ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தை (MRIA ) விரிவுபடுத்த, சீனாவின் எக்ஸிம் வங்கியிலிருந்து மேலதிக கடன் பெற, அமைச்சரவையின் அங்கீகாரத்தை வேண்டி நிற்கிறார் அமைச்சர் பிரியங்கரா ஜெயரட்ணா.
இவைதவிர, அமைச்சர் டி.யு.குணசேகர தலைமை வகிக்கும் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பொது ஸ்தாபனங்களுக்கான குழுவினால் (COPE), கடந்த 23 ஜூலை அன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, 2011 இல் நட்டத்தில் இயங்கிய 18 அரச ஸ்தாபனங்கள் பற்றி விவரிக்கும்போது, இவற்றின் பாதிப்பானது வங்கிகளின் இயல்பான செயற்பாடுகளை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறது .
இதில் 14 நிறுவனங்கள், 2009 இலிருந்து தொடர்ச்சியாக நட்டத்தில் தள்ளாடுகிறது.
குறிப்பாக, இலங்கை மின்சாரசபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மிகின் லங்கா என்பன அழிந்து போகக்கூடிய நிலையை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கை சமர்ப்பித்த நாடாளுமன்ற குழுவில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த விநாயகமூர்த்தி, சீனித்தம்பி. யோகேஸ்வரன், ஈ. சரவணபவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
நாட்டின் அரசிறைப் பற்றாக்குறை அதிகரித்துச் செல்வதால், மேற்குறிப்பிடப்பட்ட 3 அரச ஸ்தாபனங்களோடு, நட்டத்தில் இயங்கும் கந்தளாய் சீனித் தொழிற்சாலை, லங்கா சலுசல, தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா செரமிக்ஸ் கூட்டுத்தாபனம், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், சிறிலங்கா றப்பர் ஏற்றுமதி கூட்டுத்தாபனம், மற்றும் சிறிலங்கா எயர் லைன்ஸ் லிமிட்டெட் என்பவற்றை, தனியார் துறையினருக்கோ அல்லது பன்னாட்டுக் கம்பனிகளுக்கோ தாரை வார்க்கும் வாய்ப்புமுண்டு.
வட மாகாணத்தில் தேர்தலை நடாத்த அழுத்தம் கொடுக்கும், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளில் இயங்கும் பன்னாட்டுக் கம்பனிகள் இந்த நிறுவனங்களைக் கையகப்படுத்தும் போட்டியில் இறங்கலாம்.
பொருளாதார உறவினைப் பலப்படுத்துவதன் ஊடாக, இராஜதந்திர மேலாண்மையை மெருகூட்டும் சீனாவின் உபாயத்தை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆளுமையை அதிகரிக்க விரும்பும் நாடுகள் பிரயோகிக்கும்.
அதேவேளை இலங்கை அரசானது,வெளிநாடுகளை கவரும்வகையில் புதியதொரு நகர்வினை இந்த வாரம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2013 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள், வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (FDI)அளவினை $2000 மில்லியனாக உயர்த்த வேண்டுமென்கிற, முதலீடு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன திட்டம், கடந்த ஆறு மாதங்களில் $430 மில்லியனை மட்டுமே எட்டியுள்ளது. ஆகவே வேறுவழியின்றி, சுதந்திர துறைமுகமாக (Free Port) ஹம்பாந்தோட்டை, கொழும்பு, திருகோணமலை ஆகியவற்றை அரசு பிரகடனம் செய்துள்ளது. இதன் மூலமாவது, அங்கு தொழில் நிறுவனங்களை நிறுவ, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வருமாவென்று அரசு ஏங்குகிறது.
இச் சந்தர்ப்பத்தை, இந்தியாவும், மேற்குலக நாடுகளும், கிழக்கு ஆசியாவிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளும் நிற்சயமாகப் பயன்படுத்தும்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் 2009 இற்குப் பின்னர் ஆரம்பமாகிவிட்டன.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு, ஜப்பானின் உள்நாட்டு அமைச்சர் யோஷிடகா ஷிண்டோ இலங்கை வந்து சென்றுள்ளார். அண்மைக்காலமாக சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவு குறித்து, எதுவித பிரச்சினையும் ஜப்பானிற்கு இல்லை என்கிற செய்தியையும் அவர் கூறியுள்ளார்.
11-13 செப்டெம்பர் வரை, சீனாவிலுள்ள டாலியான் பிரதேசத்தில் நடைபெறும் உலக பொருளாதார பேரவை மாநாட்டில், 90 நாடுகளிலிருந்து வருகைதரும் 1500 பேருடன் இலங்கையின் வர்த்தகக் குழுவினரும் கலந்து கொள்கிறார்கள்.
இலங்கை அரசியலின் மறுபக்கத்தில் நிகழும் இந்த மாற்றங்களையும், அதற்குள் மறைந்திருக்கும் சர்வதேச நுண்ணரசியலின் பரிமாணங்களையும் இணைத்து மதிப்பீடு செய்தால், வெறுமனே மாகாண சபைக்குள் முடங்கிவிடாமல், இறைமைகொண்ட தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கிய, நிரந்தரமான அரசியல் தீர்வு நோக்கிய செயற்பாடுகளை, தமிழ் தேசியத்தின் அரசியல் தலைமைகள் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை அவை உணர்த்தும் என்று நம்பலாம்.