பசில் ராஜபக்ச உடப்ட பல உயர்மட்ட அதிகாரிகளுடன் கிராம மக்கள் பேச்சுக்கள் நடத்தியுள்ளார்கள். இதன் பின்னர் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றை கிராம மக்கள் ஒழுங்கு செய்து நடத்தினார்கள். ஆறாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் எந்த முன்னறிவுப்புமின்றிப் புகுந்த போலிஸ் படை கண்ணீர்ப் புகை, தடியடிப் பிரயோகம் செய்து வன்முறையத் தூண்டிவிட்டது. அமைதியாக பெரணி நடத்திய மக்கள் மீது போலிசாரின் வன்முறைக்குப் பின்னர் இராணுவம் கண்மூடித்தனமாகச் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் கொல்லபட்ட காட்சி பதிவானது. அங்கிருந்த ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களின் புகைப்படக் கருவிகள் சேதமாக்கப்பட்டன. அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, சாட்சியின்றிய மக்கள் மீதான பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
கிராமத்தவர்கள் அனைவருமே சிங்களவர்கள். அதிலும் பெரும்பாலனவர்கள் பௌத்தர்கள். வன்னியில் பயங்கரவாதத்தை அழித்து அப்பாவி மக்களை விடுவித்தோம் என்ற இலங்கை அரசின் பிரச்சாரத்தை நம்பிக்கொண்டிருந்தவர்கள்! நாட்டைப் பௌத்ததின் பெயரால் பயங்கரவாதத்திலிருந்து மீட்டு சுதந்திர பூமியாக்கிவிட்டோம் என்ற பேரினவாத பொய்களை அப்பாவித்தனமாக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள்!! வன்னியில் இலங்கை இராணுவம் நுளைந்து சிங்கள பௌத்த கொடியை நாட்டிய போது தெருக்களில் பால் சோறு வழங்கி மகிழந்தவர்களில் கம்பஹா மாவட்ட மக்களும் பங்கெடுத்தார்கள்.
சம்பவத்தின் பின்னர் இலங்கைத் தொலைக்காட்சி ஒன்றில் தனது உணர்வுகளைக் கூறிய வெலிவெரிய சிங்கள விவசாயி ஒருவர் “எங்களது நாட்டில் போரை ஒழித்து அவர்கள் ஏதோ பெரிதாகச் சாத்த்துவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தோம். இப்போது தான் தெரிகிறது அவர்கள் அப்பாவிப் பொதுமக்களைத் தான் கொன்றார்கள் என்று. ஆர்ப்பாட்டம் நடத்திய எங்களையே இப்படிக் கொன்றார்கள் என்றால் வடக்கின் நிலைமையை ஒருவர் இலகுவாகக் கற்பனை செய்து பார்க்கலாம்” (If they treated us like this for engaging in a demonstration one can imagine the situation in the North. We thought they did something big by finishing the war in our country. Now it looks as if they just killed innocent people) என்று கூறியிருக்கிறார்.
கடந்த அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இலங்கை தென்பகுதி சிங்கள பௌத்த விவசாயி ஒருவரிடமிருந்து இவ்வாறான வாக்குமூலம் வெளியாகியிருக்கிறது.
சிங்கள பௌத்த பேரினவாத நச்சை ஊட்டி அப்பாவி சிங்கள மக்களை மாயைக்குள் வைத்திருந்த பாசிச அரசுகளின் முகத்திரை தவிர்க்க முடியாமல் விலகும் இன்றைய காலம் இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனை. போராட முனையும் சிங்கள மக்கள் மீது ராஜபக்ச பாசிசம் கடந்த மூன்று வருடங்களில் நடத்திய மூன்றாவது துப்பாக்கிச் சூடு இது. மூன்று தடவையும் பல்தேசிய நிறுவனங்களின் நலன்களுக்காகவே மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறான உழைக்கும் மக்களின் எழுச்சிக்கு ராஜபக்ச அரசு அச்சமடைந்துள்ளது என்பதையே இத் தாக்குதல்கள் எமக்குக் கூறுகின்றன. இலங்கை முழுவதையும் ஆக்கிரமிக்கும் அன்னிய வியாபார நிறுவனங்களின் கொள்ளை சிங்கள மக்களையும் சூறையாடுகின்றது. கிராமங்களில் வறுமையின் அவலம் தலைவிரித்தாடுகின்றது. 90 வீதமான வறியவர்கள் நிலமற்ற அல்லது வறிய விவசாயிகள். இவர்களிடமிருந்து நிலங்கள் பறிக்கப்பட்டு பல்தேசிய உற்பத்திகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பணப் பயிர்ச்செய்கையோடு இவர்களால் போட்டி போட முடிவதில்லை.
சிங்களக் கிராமங்களில் ஒரு நாளைக்கு 11 பேர் என்ற எண்ணிக்கையில் வருடத்திற்கு நான்காயிரம் உழைக்கும் மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
உலகத்தில் மிக அதிகமாகத் தற்கொலை செய்துகொள்வோர் வாழும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.
யுத்தம் நடைபெற்ற போது கிராமங்களில் இராணுவப் பொருளாதாரம் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் கூட உலகின் ஏகாதிபத்திய அரசுகள், உலக நாணய நிதியம், இந்திய சீன அரசுகள் போன்றன செயற்பட்டன. இராணுவ பொருளாதாரத்திற்குத் தேவையான கடன் வசதிகளை இவர்களே வழங்கினார்கள். இதற்கான பிரதிபலனாக தமது முதலீடுகளை தங்குதடையின்றி இலங்கை முழுவது கொண்டுசெல்வதை எதிர்பார்க்கிறார்கள். மறுக்கும் போதெல்லாம் போர்க்குற்றம் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். கொலைகளுக்குக் துணை போனவர்களுக்கு போர்க்குற்றம் ஒரு கேடா என்ன?
போர்க்குற்றத்திற்காக அவர்கள் யாரையும் தண்டிக்கப் போவதில்லை. வெலிவெரியவிலும் தாக்குதலிலிருந்து தப்பித்து தேவாலயத்தில் தஞ்சமடைந்த குழந்தைகளையும், பெண்களையும், முதியவர்களையும் அங்கு புகுந்த இராணுவம் தாக்கியுள்ளது. ‘இலங்கையில் உலகப் போர்விதி முறைகளைக் கூட இராணுவம் பின்பற்றுவதில்லை என இப்போது தான் புரிந்துகொண்டோம்’ என மற்றொரு விவசாயி கூறியிருக்கிறார்.
இவ்வாறான தாக்குதல்களும் போராட்டங்களும் இலங்கையில் இனிமேல் தவிர்க்கமுடியாத நிகழ்வாகிவிடும். இது ஒரு திருப்பு முனை. தமிழ்ப் பேசும் மக்கள் மீதான திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பையும் தேசிய இன ஒடுக்குமுறையின் வலியையும் சிங்கள் மக்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.
சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களை மனிதகுலத்தின் மீதான தாக்குதலாகத் தமிழ்ப் பேசும் மக்கள் உணர்ந்துகொள்ளும் போது மட்டுமே, அவர்களின் போராட்டங்களை ஆதரிக்கும் போது மட்டுமே தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் வெற்றியை நோக்கி நகர முடியும் இல்லையெனில் அது தனது குறுந்தேசிய எல்லைக்குள் முடங்கி அழிந்து போவது தவிர்க்க முடியாதது.