Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கின் வசந்தம்? -கிழக்கின் உதயம்?:வடபுலத்தோன்.

rangan10இவ்விரண்டு அழகான பெயர்களும் மகிந்த சிந்தனை அரசாங்கத்தால் புனையப்பட்ட பெயர்களாகும். இராணுவ நடவடிக்கையின் கடுமையான யுத்த முனைப்புக் காட்டி விடுவிக்கப்பட்ட இவ்விரு பிரதேசங்களும் தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களாகும். இத்தகைய இரு பிரதேசங்களிலும் யுத்தத்திற்கு பின்பான அபிவிருத்தியெனக் காட்டுவதற்கே வடக்கே வசந்தமும் கிழக்கே உதயமும் என்ற பிரசாரம் அரசாங்க ஊடகங்களிற் பரப்பட்டு வருகிறது. இதன் மூலம் வடக்கும் கிழக்கும் தேசிய இனப் பிரச்சினைக்கு உட்பட்ட பிரதேசங்கள் என்பது மறைக்கப் படுகிறது. அதன் மூலம் தேசிய இனப் பிரச்சினை என்பது இராணுவத் தீர்வின் மூலம் வந்துவிட்டதாகவே காட்டப்படுகிறது.

வடக்கு இப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டது என்றும் அதனாலேயே அங்கு இரண்டு தேர்தல்கள் நடாத்தப் பட்டுள்ளன என்றுங் கூறிக் கொள்ளப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நல்லூர்த் திருவிழாவையும் சன்னிதி முருகன் ஆலய உற்சவங்களையும் காட்டி மக்கள் சுதந்திரமாகவும் சந்தோசமாகவும் திரண்டு இருப்பதாக காட்டி நிற்கிறார்கள். அதே வேளை முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் 3 இலட்சம் வரையான மக்கள் தடுத்து வைத்து அவலங்களுக்கு உள்ளாக்கப்படுவது பெருமளவுக்கு மறைக்கப் படுகிறது. இந்த அவலங்களுக்கு உள்ளான மக்களின் நிலை பற்றிய அக்கறைகள் குறைந்து பழங்கதையாகி வருகிறது. அங்கு ஊடகங்கள் தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை செல்ல முடியாதவாறான தடை இறுக்கமாகவே உள்ளது. முகாங்களில் ஒரு சில இடங்களை மட்டும் திரும்பத் திரும்பத் தொலைக்காட்சிகளில் காட்டி அவ்வாறே அனைத்து முகாங்களும் இருப்பதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவ்வாறு சகல முகாம் மக்களும் சகல வசதிகளோடும் இருப்பின் அவர்களைச் சென்று பார்க்கவோ பேசவோ ஏன் ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்? எதிர்க் கட்சியினரை தாராளமாக அனுமதிக்கலாம் அல்லவா!

வவுனியா இன்று அகதி முகாங்களால் நிரம்பி வழியும் நகரமாகக் காட்சி தருகிறது. இம் மூன்று இலட்சம் மக்களின் பேரால் மேல் மட்டங்களில் இருந்து கீழ் மட்டங்கள் வரை யாவும் வியாபாரம் ஆக்கப்பட்டு யாவும் மறைக்கப்பட்டு வருகின்றன. பெரும் வியாபார நிறுவனம் தொடக்கம் வீதி வியாபாரம் வரை ஓகோ என்று நடைபெற்று வருகிறது. முகாங்களில் இருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் உணவிலிருந்து உடுபுடவை பெறுவது வரை சகலதிலும் தரகுப் பணமும் இலாபப் பணமும் கறக்கப்படுகின்றன. இருப்பினும் உணவு உடை கல்வி சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் யாவற்றினும் ஊடாக முகாம்களில் இருந்து லாபம் பெறவே சகலரும் முயல்கின்றனர். அரசாங்க அதிகாரிகள் தொடக்கம் தனியார்கள் வரை, ‘இதன் மூலம் எவ்வளவு கிடைக்கும்” என்ற எதிர்பார்ப்புடனேயே அகதி முகாங்களுக்கு உள்ளும் வெளியிலும் விடயங்கள் இடம்பெறுகின்றன. மீள்குடியேற்றம் பிற்போடப்படும் ஒவ்வொரு நாளும் இப் பணம் கொத்திச் செல்லும் வல்லூறுகளுக்கே வாய்ப்பாகும்.

வன்னி மக்களின் அவல நீடிக்கும் அதே வேளை குடாநாட்டு மக்களின் நிலை திறந்த வெளிச் சிறைச்சாலை போன்றதேயாகும். ஜனநாயகம் சுதந்திரம் யாவும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளன. உணவிற்கும் வீட்டினுள் தாழ்ந்த குரலில் பேச மட்டுமே அங்கு சுதந்திரம் இருக்கிறது. விரும்பினால் தேவாரமும் திருவாசகமுமோ அன்றிக் கர்த்தரை வேண்டும் ஆராதனைகளையோ மட்டும் சத்தமிட்டு வெளிப்படுத்தலாம். அதனால் தான் திருவிழாக்களில் பெருந் தொகையிற் கலந்து கொண்டு சற்றுச் சத்தத்துடன் வாய்விட்டுப் பேசுகிறார்கள். வாய் திறந்து அரோகரா என்றும் ஆண்டவரே என்றும் கூறுவதன் மூலம் ஏதோ ஒருவகையில் நிம்மதி கொள்கிறார்கள். ஏனையவற்றுக்கு வாய்ப்பூட்டுத்தான். என்று மாறும் இந்த நிலை என்ற ஏக்கமே மக்கள் மத்தியில் காணப்படுகிறது. பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் பல தடவைகள் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டும் கடத்தப்பட்டும் போனதாற், பத்திரிகைகள் சுய தணிக்கை செய்வதைவிட வேறு வழியில்லை என்ற நிலையிலேயே வெளிவருகின்றன.நிற்க. கிழக்கின் உதயத்தின் கீழ் வீதிகள் பாலங்கள் கட்டடங்கள் ஆங்காங்கே நிர்மாணிக்கப் படுவது ஏதோ உண்மைதான். அவற்றால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் மறுக்கக் கூடாது. ஆனால் அங்கு அபிவிருத்தி என்பது எந்தளவுக்கு மக்களுக்கானதாகவும் மக்கள் பங்குபற்றுவதாகும் இருக்கிறது என்பதே முக்கியமானதாகும். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. அங்கு மாகாண சபையும் மாநகர சபைகளும் நகர சபைகளும் பிரதேச சபைகளும் இயங்குகின்றன. அவை யாவும் அதிகாரத்தின் அடையாளங்களாக இருக்கின்றனவே தவிர மக்களின் அபிவிருத்திக்கு எவ்வாறு உதவி ஒத்துழைப்பாக உள்ளன என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

இவ்வாறு மக்களின் வாழ்வும் சுபீட்சமும் எதிர்காலமும் பல்வேறு கேள்விகளுடன் இருந்தும் வரும் அதே வேளை, உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டுக் கழுகுகளின் கண்களின் பார்வை கிழக்கே பதிந்து வருகிறது. குறிப்பாக விவசாயம் உல்லாசப் பயணத்துறை ஆகிய இரண்டுக்குமான நிலங்களைப் பெற்றுக் கொள்ள உள்நாட்டு வெளிநாட்டு கம்பனிகள் முந்தியடித்து நிற்கின்றன. கிழக்கு மாகாணத்தில் 54,551 ஹெக்ற்றயர் நிலம் மத்திய அரசின் கீழ் உள்ளது. அதே போன்று மாகாண சபையின் கீழ் 76,666 ஹெக்ற்றயர் நிலம் உள்ளது. இவ் இருவகை மொத்த நிலத்தில் 620.07 ஹெக்ற்றயர் தனியார் வர்த்தக நடவடிக்கைகளுக்குக் கீழ் உள்ளன. 148.7 ஹெக்ற்றயர் நிலம் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளன. இவற்றில் நீர், நில வளம் மிக்க நிலங்கள் பெரியளவிலான விவசாய முயற்சிகளுக்கு வழங்கப்படவுள்ளன. கொழும்பைத் தளமாக கொண்ட ஒரு கம்பனி அம்பாறை மாவட்டத்தில் 400 ஏக்கர் நிலத்தைச் சோளப் பயிர்ச்செய்கைக்குத் தரும்படி கேட்டுள்ளது. இதுபோன்று மற்றொரு கம்பனி வாழைப்பழச் செய்கைக்கு 400 ஏக்கர் தரும்படி மனுச்செய்துள்ளது. அதே வேளை, திருகோணமலைக்கு வடக்கே குச்சவெளிப் பகுதியில் உல்லாசப் பயணத்துறைக்காகச் சில கம்பனிகளும் தனிநபர்களுக்குமாக 34 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவை மக்களுக்குரிய அபிவிருத்திகளுக்கல்ல.

நிலம் நீர் கடற்கரைப் பகுதிகளில் மூலதனமிட்டு சுரண்டிச் செல்லுவதற்கேயாகும். இவற்றுக்கு அப்பால் இந்தியாவின் அனல் மின்நிலையம் சம்பூரில் அமைய உள்ளமை ஏற்கனவே தெரிந்ததாகும்.

இவற்றின் மத்தியில் கிழக்கின் உதயமானது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான உள்ளக முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றன. அதனை ஊக்குவிப்பதில் ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகியவற்றின் கீழ் அமைப்புக்கள் கச்சிதமாகச் செயலாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தீகவாவி ஒரு புனிதப் பிரதேசம் என்ற பிரகடனத்தின் பெயரில் அப் பிரதேசத்திற் திட்டமிட்டதும் அத்துமீறியதுமான சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெற்றமை நினைவுக்குரியதாகும். இப்போது முஸ்லிம், தமிழ் மக்களது பாரம்பரியக் காணிகள் அத்துமீறி அபகரிக்கப்படுவதாகப் புகார்கள் அம்பாறை மாவட்டத்திலிருந்து வந்து கொண்டே இருக்கின்றன. அதே போன்று திருகோணமலை மாவட்டத்திலும் இடம்பெறுகின்றது. இவ்விரு மாவட்டங்களிலும் அரச அதிபர்களாக உள்ளவர்கள் சிங்கள உயர் அதிகாரிகளாகவே உள்ளனர். அதே போன்று கிழக்கின் ஆளுனரும் முன்னால் படை அதிகாரியே. அண்மையில் மாகாண சபை விடயத்தில் ஆளுனர் வரம்பு மீறிச் செயற்படுகிறார் என்று குற்றஞ் சாட்டப்படுகிறது.

எவ்வளவுக்கு சமாதான இன ஐக்கியம் என்று விளம்பரம் செய்யப் பட்டாலும், வடக்குக்-கிழக்கில் பேரினவாத உள்நோக்கங்களோடு தான் யாவும் முன்னெடுக்கப் படுகின்றன. எவ்வளவுக்கு மறைத்தாலும் அதன் உள்ளடக்கம் தவிர்க்க இயலாது வெளிவரவே செய்கிறது. இதனை நான் குறுகிய இனவாத அடிப்படையிற் கூறவில்லை. இடம்பெறும் பேரினவாத நடைமுறைகளையும் அவற்றின் உள்நோக்கங்களையும் வெளிப்படுத்துவது அவசியம். ஏனெனில் அத்தகைய நடவடிக்கைகளே இன ஐக்கியத்தைச் சீர்குலைத்து ஒடுக்குமுறையை நிலைநாட்டி வருவனவாகும். இவை சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரித்துக் குரோதங்களாக வளரவைத்து இறுதியில் மோத வைப்பனவாகும்.

ஆகவே வடக்கின் வசந்தமும் கிழக்கின் உதயமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி நிற்கின்றன. வடக்குக் கிழக்கிற்கான உரிய அரசியல் தீர்வு அரசியல் அமைப்பு ரீதியில் உறுதிப்படுத்துவதே அங்கு சமாதானம், இயல்பு வாழ்க்கை, ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமை என்பவற்றுக்கான அடிப்படை உத்தரவாதமாக அமைய முடியும்.

 

Exit mobile version