இலங்கை அரசு உட்பட உலகம் முழுவதும் அழிவுகளை ஏற்படுத்தும் அரசுகளின் துணையோம் ஆதரவோடும் கோப்ரட் நிறுவனங்கள் தம்மை மேலும் மேலும் வளர்த்துக்கொள்கின்றன. சாமான்ய மக்களையும் சிறு வர்த்தகர்களைம் வருமான வரி, வியாபார வரி, ஊதிய வரி என்று சுரண்டியழிக்கும் அரசுகள், பல்தேசியப் பெரு நிறுவங்களுக்கு வரி விலக்குப் பெற்றுக்கொடுக்கின்றன. லைக்கா நிறுவனத்தையே இதற்கு உதாராணமாகக் காட்டலாம். நான்கு வருடஙகளாக பிரித்தானியாவில் கோப்ரட் வரி கட்டாமல் ஆளும் கட்சிக்கு மில்லையன்களை வாரி இறைத்திருக்கிறது லைக்கா.
ஆளும் அரசுகளுடனும் அழிக்கும் அதிகாரவர்கத்துடனும் இணைந்து தனது இலாபத்தைப் பெருக்கிக்கொள்வது பல்தேசிய நிறுவனங்களின் இயல்பு.
அவர்கள் வேண்டுமானால் தமிழர்களையும் தமிழையும் தமது லாபத்தை இரட்டிப்பாக்கப் பயன்படுத்திக்கொள்வார்களே தவிர தமிழர்களுக்குச் சேவை செய்ய மாட்டார்கள். அவர்கள் சேவை என்று மக்களுக்கு வழங்கும் எலும்புத்துண்டுகளால் வியாபாரத்திற்கு உரிய ‘சமாதானச்’ சூழலை ஏற்படுத்தி அவர்களை மேலும் சுரண்டிக் கொழுப்பார்கள்.
லைக்கா லிபாரா போன்ற பல்தேசிய நிறுவனங்களுக்கு தமிழர்கள் சிங்களவர்கள் என்ற வேறுபாடுகள் கிடையாது. அவர்களின் நோக்கம் தமிழ் – சிங்கள அடையாளம் அல்ல. அவர்களைப் ஒரே நோக்கம் இலாபம் சம்பாதித்துக்கொள்வதே. தமிழர்களிலும் அதிகமாகச் சிங்கள மக்களிடம் இலாபம் கிடைக்கிறது என்றால் அவர்களுக்கு சிங்கள மக்கள் தேவைப்படுவார்கள். சிங்கள அதிகாரவர்க்கத்துடன் இணைத்து சிங்கள மக்களைச் சுரண்டுவார்கள்.
இதனால்தான் பிரித்தானிய அதிகார வர்க்கத்துடன் இணைந்து இந்த நிறுவனங்கள் தமது வியாபாரத் தளத்தை விரிவு படுத்துகின்றன. இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றன.
பல்தேசிய வியாபார நிறுவனங்களிடையே வியாபாரப் போட்டி நிலவுவது வழமை. ஒரு சிறிய உதாரணம்: இலங்கையில் டொமினோஸ் பிட்சா மற்றும் பிட்சா ஹட் போன்ற அமெரிக்க பல்தேசிய உணவு நிறுவனங்கள் முதலிட்டுள்ளன. இந்த இரண்டு போட்டி நிறுவனங்களில் ஏதாவது ஒன்றின் சார்பில் தங்கியிருந்து மற்றதற்கு எதிராகப் போராட்டம் நடத்துவது மக்களுக்கானதல்ல. அது வியாபாரத்திற்கான போராட்டம்.
லைக்காவிற்கு எதிரான கருத்துக்களோடு இன்று மக்களின் அவலத்தில் அரசியல் நடத்திய பிழைப்புவாதக் கும்பல்கள் களத்தில் இறங்கியுள்ளன. இவர்களில் யாரும் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களின் அடியாள் படைகள் போலச் செயற்படுபவர்கள். லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்பது அவர்களைப் பொறுத்தவரை மற்றொரு வியாபாரம். இக் குமபல்கள் உலகின் பல்தேசிய நிறுவனங்களான லிபாரா, வேதாந்தா, டாட்டா போன்ற ஏனைய நிறுவனங்களுக்கு எதிராகப் போராடத் தயாரா என்பதுதான் கேள்வி.
லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் மற்றொரு பக்கம் சமூக உணர்வுள்ளவர்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. வன்னியில் அழிப்பு நடந்து முடிந்ததும் தென்னிந்திய சினிமாவினதும் தொலைக்காட்சிகளதும் ஆக்கிரமிப்பு வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் வெள்ளம் போல உருவெடுத்தது.
அதிகாரவர்க்கங்களது எதிர்ப்புரட்சியும் பல்தேசிய வர்க்கங்களது பண வெறியும் இணைந்து ராஜபக்ச குடும்ப அரசால் இயலாதவற்றை கலை கலாசார நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடத்தி முடித்தன. சமூகம் பற்றிய குறைந்தபட்ச சிந்தனையுமற்றவர்களாக வெளியுலகிலிருந்து மறைக்கப்பட்ட மனிதர்களை மிகக்குறுகிய காலத்தினுள்ளேயே தென்னிந்திய சினிமாவும் தொலைக்காட்சியும் உருவாக்கியுள்ளன.
ஆக, பல்தேசிய நிறுவனங்கள் தொடர்பான அரசியல் புரிதலற்று லைக்காவிற்கு எதிரான போராட்டம் என்று மட்டுப்படுத்திக்க்கொள்வது ஆபத்தானது. இதன் பின்புலத்தில் செயற்படுபவர்கள் லைக்காவின் போட்டி நிறுவனங்களைச் சார்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்.
லைக்காவிற்கு எதிரான போராட்டம் தேவையானதே ஆனால் போராட விளைபவர்கள்
1. பல்தேசிய நிறுவனங்களின் பணச் சுரண்டலுக்கு எதிரானவர்களா?
2. தென்னிந்திய சிரழிந்த கலை கலாச்சார ஆக்கிரமிப்பிற்கு எதிரானவர்களா?
3. ஈழத்தமிழர்களின் முற்போக்குக் கலை கலாசார வளர்ச்சிக்காக உழைப்பவர்களா?
4. பல்தேசிய நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் துணை செல்லும் ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிரானவர்களா?
இவற்றை நிராகரித்து லைக்காவிற்கு எதிராக நடத்தப்படும் எந்தப் போராட்டமும் ஆபத்தானது. அழிவுகளை ஏற்படுத்தும். வியாபாரிகளையும் பிழைப்புவாதிகளையும் வளர்த்துவிடும். இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால் லைக்காவிற்கு எதிராகப் போராடுகிறோம் பேர்வளிகள் எனக் கிளம்பியிருப்பவர்களின் இலாப நோக்கம் வெளிப்படும்.
விடுதலை என்பது லோபி செய்வதன் மூலம் குறுக்கு வழிகளில் பெற்றுக்கொள்ளும் விற்பனைப் பொருள் அல்ல. தமிழரசுக் கட்சி சொல்லித்தந்த அப்புக்காத்து அரசியல் விடுதலைக்கானதல்ல. அமிர்தலிங்கத்தினது உணர்ச்சிப் பேச்சுக்கள் போராட்டத்தை நோக்கமாகக் கொண்டதல்ல. அதே போன்றுதான் சீமானும். சீமான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஈழத் தமிழர் பிரச்சனையைப் பயன்படுத்தலாம் என்று கனவுகாணும் அதிகாரவர்க்கத்தின் அடியாள்.
பல்தேசிய வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காகவே வன்னி அழிப்பு நடத்தப்பட்டது. அவர்களே ஆட்சியையும் ஆளும் கட்சியையும் தீர்மானிக்கிறார்கள். இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வரவேண்டுமா அன்றி காங்கிரஸ் ஆட்சியில் தொடரவேண்டுமா எனத் தீர்மானித்தவர்களும் அவர்களே. மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் தொடரவைத்தவர்களும் அவர்கள்தான். இவர்களின் இலாபப் போட்டி என்ற சகதிக்குள் ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் போராட்டத்தை உட்செலுத்திப் பிழைப்பு நடத்தும் ஒவ்வொருவரும் மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும்.