
லிபியா மீதான ஏகாதிபத்தியப் போரை புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கேர்ணல் கடாபியின் மக்கள் விரோத, சர்வாதிகார அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கொண்டு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தொடுத்திருக்கும் லிபியா மீதான போரை எவ்வ கையிலும் நியாயப்படுத்த முடியாது. இப்போர் நடவடிக் கைகளின் உள்நோக்கம் ஏகாதிபத்திய அக்கறையேயன்றி லிபிய மக்கள் நலன் சார்ந்ததல்ல. அதனால் லிபியா மீதான ஏகாதிபத்தியப் போரை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஆனால் இந்தக் கண்டிப்பு எந்தவகையிலும் கேர்ணல் கடாபியின் எதேச்சதிகார ஆட்சிக்கு நற்சான்றிதழ் வழங்குவதாகாது.
இவ்வாறு புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அரபு நாடுகளில் இடம்பெற்று வரும் மக்கள் கிளர்ச்சிகள் பற்றியும் அதில் ஏகாதிபத்தியத்தின் தலையீடு பற்றியும் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் குழுவின் சார்பில் அதன் சர்வதேசஅமைப்பாளர் இ.தம்பையா விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
அரபு நாடுகளின் ஆளும் வர்க்கத் தலைமைகளின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளமை தவிர்க்க முடியாதது. அந்தக் கிளர்ச்சிகள் அரசியல் வழிகாட்டலும் அரசியல் நிகழ்ச்சி நிரலுமின்றி இடம்பெறுவதால் ஏகாதிபத்திய சக்திகள் அவற்றுக்குச் சார்பாக, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அரபு நாடுகளின் சர்வாதிகாரிகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களே. அவர்கள் மக்களின் மத்தியில் நின்று பிடிக்க முடியாதபோது அவர்களை அரச தலைமை யிலிருந்து அகற்றி அவர்களுக்கு பதிலாக தமது வெளிப்படையான பொம்மைகளாக இருக்கக் கூடியவர்களை அரச தலைமையில் இருத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க ஏகாதபத்தியம் எடுத்து வருகிறது. அவ்வாறு முடியாத போது இராணுவ தலையீடுகளை முன்னெடுத்து வருகின்றன. அவ்வாறான இராணுவ தலையீட்டையே லிபியாவில் செய்து வருகின்றன. ஏகாதிபத்திய இராணுவத் தலையீட்டினால் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் சுதந்திரமோ ஜனநாயகமோ, அமைதியோ நிலைநாட்டப்படவில்லை. அதன் தலையீட்டினால் பாலஸ்தீனப் பிரச்சினை இன்னும் உக்கிரமடைந்து கொண்டே போகிறது.
எனவே நாடுகளின் இறைமை, சுதந்திரம் ஜனநாயகம் போன்றவற்றை மதிப்பவர்கள் எவ்வகையிலும் லிபியா மீதான ஏகாதிபத்திய போரை ஏற்று அங்கீகரிக்க முடியாது. ஆனால் இவ்வாறான தலையீடுகளையும் போரையும் கேர்ணல் கடாபி போன்றவர்கள் அவர்களின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, மனித உரிமைகளை மீறும் நிலைப்பாட்டினாலும் நடவடிக்கைகளினாலும் வரவழைத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
இதனை புரிந்து கொண்டு உலக மக்கள் ஒன்றுபட்டு நாடுகளினதும், மக்களினதும், இறைமையையும் சுதந்தி ரத்தையும் உள்நாட்டுப் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களிட மிருந்தும், ஏகாதிப்பத்திய சக்திகளிடமிருந்தும் பாதுகா த்துக் கொள்ள தேசிய ரீதியாகவும் சர்வதேசரீ தியாகவும் திட்டமிட்டு செயற்பட வேண்டும். உலக நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பேசுவது அவர்களுக்கு மக்களிடமிருந்து ஆபத்த வரும் போதும், அவர்களின் நலன்களுக்கு ஏகாதிபத்தியங்கள் சாதகமாக இருக்காத போதும் மட்டுமே. பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்தியத்திற்கு சார்பானவை என்பதே உண்மை. எனவே அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பை மக்கள் நம்ப வேண்டியதில்லை.
அதே போன்று ஏகாதிபத்தியம் மக்களின் சுதந்திரத்திற்கும், உரிமைகளுக்கும், விடுதலைக்கும் குரல் கொடுப்பதாகவும், தலையிடுவதாகவும் சொல்வது அதனுடைய ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவன்றி மக்களின் நலனுக்காக அல்ல. எனவே போராட்டங்களினதும் கிளர்ச்சிகளினதும் பாதுகாவலனாக ஏகாதிபத்தியத்தை நம்புவது ஆபத்தானதாகும்.
மக்கள் அவர்களின் விடுதலைக்காக ஏகாதிபத்தியத்திற்கும் உள்நாட்டுப் பிற்போக்கு ஆளும்வர்க்க த்திற்குமிடையிலான முரண்பாடுகளை நிச்சயமாகக் கையாள வேண்டி இருக்கும் என்பது உண்மையே. ஆனால் ஒன்றுக்கு எதிராக இன்னொன்றைப் பயன் படுத்துவதாக நம்புவது ஆரோக்கியமானதல்ல. அழிவுகளைக் கொண்டு வரும். எனவே லிபியா உட்பட அரபு நாடுகளில் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது நலன்களை ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்குள் முடக்கிக் கொள்ள இடமளிக்காது சரியான அரசியல் தலைமைத்துவத்துடனும் உரிய நிகழ்ச்சி நிரலுடனும் அவர்களின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அரபு நாடுகளின் மக்கள் அந்நாட்டு சர்வா திகாரிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழும் நெறிமுறையான உரிமையைக் கொண்டுள்ளனர். அதேவேளை அவ்வுரிமையைப் பறிக்கும் வகையில் ஏகாதிபத்தியம் தலையீடு செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
இ.தம்பையா
சர்வதேச அமைப்பாளர்
ஊடகங்களுக்கான அறிக்கை 25-03-2011