ஒரு புறத்தில் ‘ஜனநாயகம் படைக்கிறோம்’ என்று குறைந்தது இரண்டு தசாப்த்தங்களில் ஆங்காங்கு தோன்றிய புலி எதிர்ப்புக் கும்பல்கள். பிரபாகரன் சரணடைந்தாரா, சண்டை போட்டாரா, பொட்டம்மான் பிடிபட்டாரா, செத்துப்போனாரா போன்ற விவாதங்களுக்குள் தமது இறுதிக்காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறது. இந்தக் குழுக்களில் பதுங்கியிருந்த பலர் இன்று மகிந்த பேரரசின் குறுநில அதிபதிகள், குபேரர்கள் என்று ‘வாழ்வாங்கு’ வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. அதற்குப் பெயர் புலிகள். கடந்ததகால புலிகளின் ‘ஜனநாயக மறுப்பு’ அரசியலின் நினைவுகளுக்குள் ஒரு ஜால்ரா கூட்டத்தை உள்வாங்கிக்கொண்டு இன்றுவரை தக்க வைத்திருக்கிறார்கள்.
இதன் மறுபக்கத்தில் ‘புலி அடிபடைவாதிகள்’! இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம் போன்ற சீர்குலைவு சக்திகளுக்கு எந்த வகையிலும் இவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. புலி எதிர்ப்பாளர்களும் இவர்களும் பல புள்ளிகளில் இடைவெட்டிக் கொள்கிறார்கள். பிரபாகரன் இன்னும் உயிர்வாழ்கிறார் என்று நான்கு வருடங்களைக் கடத்திய இவர்கள் இன்று வரை தாம் மதிப்பு வைத்திருப்பதகக் கூறும் தலைவன் பிரபாகரனுக்கு அஞ்சலி கூடச் செலுத்த விரும்பாத குரூரமான வியாபாரிகள்.
பிரபகரனை அனாதைப் பிணமாக கேட்பாரற்று யாரும் உரிமை கோராமல் நாலு வருடங்களைத் தொலைத்துவிட்டார்கள்.
புலம்பெயர் நாடுகளிலிருந்து இந்தியா இலங்கை ஈறாக அனைத்து மட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த முனையும் இவர்கள் சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்ப் பேசும் மக்களின் சாபக்கேடு.
தவறுகள் மனித இயல்பு. சமூகம் சார்ந்த அரசியல் தவறுகள் அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை முள்ளிவாய்காலில் கண்கூடாகக் கண்டவர்கள் நாங்கள். தவறுகளை விமர்சிக்கும் போதும் அவற்றைச் சுயவிமர்சனம் செய்துகொள்கின்ற போதும் நமது அழுக்குகளைக் கழுவிக்கொள்கிறோம்.
நாம் நமது தவறுகளை விமர்சனத்திற்கு உட்படுத்த மறுத்தால் எதிரிகள் அவற்றைக் குற்றச்சாட்டாக முன்வைப்பார்கள்.
தமிழ்ப் பேசும் மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக முன்னெடுத்த நியாயமான போராட்டத்தை மீளாய்வு செய்வதற்கு யாரும் தயாரில்லை. போராட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதும், விமர்சிப்பதும் அவற்றிலிருந்து கற்றுக்கொள்வதும் அதன் எதிர்கால வளர்ச்சியைச் செழுமைப்படுத்துமே தவிர காட்டிக்கொடுக்காது. நாம் அதனைச் செழுமைப்படுத்தவும் தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் விமர்சிக்கவும் தவறுகின்ற சூழலில் அதனை எதிரிகள் தமது பலமாக்கிக் கொள்கிறார்கள்.
ராஜபக்ச சோல்ஹயிம் கும்பல்களின் விசுவாசமான நண்பர்கள் இந்த இரு குழுக்கள் மட்டுமே.
நாம் ஒவ்வொன்றையும் விமர்சித்துத் தவறுகளைத் சுயவிமர்சன செய்துகொண்டிருந்தால், மகிந்த ராஜபக்சவின் மாபியாக் கும்பல்களில்ருந்து எரிக் சோல்கையின் வரைக்கும் எமது போராட்டம் குறித்து மூச்சுக் கூட விட்டிருக்க முடியாது.
புலி எதிர்ப்பாளர்களும், புலி அடிப்படைவாதிகளும் தமது அரசியல் ஏற்படுத்திய அழிவுகளையும் பின்னடைவுகளையும் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்த மறுப்பதன் மறுபக்கத்தில் மகிந்த ராஜபக்சவிலிருந்து சோல்ஹெயிம் வரைக்கும் அனைத்து அதிகாரவர்க்க அழிவு சக்திகளையும் பலப்படுத்துகிறார்கள்.
மக்கள் ஒன்றைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். 80களில் காணப்பட்ட தேவைகளுக்கும் அதிகமாக இன்று சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் தேவை அவசியமானது. இரண்டாவதாக, இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா, அமரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், ஆபிரிக்கா, என்று எங்கிருந்தாலும் ஒடுக்கப்படும் மக்கள் போராடி மட்டுமே உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். என்பதை நடைமுறை வழிமுறைகள் அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.
ஈழத்திலாயினும், புலம் பெயர் நாடுகளாயினும் இந்த இரண்டு அழிவு சக்திகளுக்கம் வெளியிலேயே பெரும்பான்மையான மக்கள் காணப்படுகிறார்கள். புதிய போராட்ட அரசியலை முன்னெடுக்கும் அரசியல் தலைமை மக்கள் மத்தியிலிருந்து தோன்றும் போது அது பெரும் சக்தியாகத் முன்னெழும்.
மக்களின் பிணங்களின் மீதும் புனிதத்தின் மீதும் ஜனநாயகத்தின் பேரிலும் அரசியல் வியாபாரம் நடத்தும் இந்தக் குழுக்கள் தோற்கப்போகிற பந்தயக் குதிரைகள். இவர்களின் நடவடிக்கைகளால் துவண்டு போவதும், விரக்தியடைவதும் அவசியமற்றது. நாற்பது வருடங்களின் பின்னான போராட்டங்களிலிருந்து புதியன வருதல் உடனடியான ஒன்றல்ல. எது எப்படியாயினும் இந்த நீண்ட கால அனுபவங்களும், கற்றலும், உறுதியும் மக்கள் சார்ந்த அரசியல் இயக்கத்தை விரைவுபடுத்தும்.