Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராஜபக்ச ஆதரவாளர்களை எதிர்கொள்ளலும் முன்னோக்கி நகர்தலும் : சபா நாவலன்

தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கையில் வாழ முடியாத சூழலில் அங்கிருந்து வேற்று நாடுகளை நோக்கித் தஞ்சமடைகின்றனர். இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டம் ஏகத் தலைமை என்ற பெயரில் பன்முகத் தன்மையின்றி அழிந்து போன பின்னர், இலங்கை அரசின் வெளிப்படையான இனச் சுத்திகரிப்பிற்கு முகம்கொடுக்க முடியாமல் அங்கிருந்து வெளியேற வசதி கொண்வர்கள் வெளியேறுகின்றனர். பலர் இலங்கை அரச பாசிசத்தின் கோரப் பசிக்கு இரையாகின்றனர்.

வெளியேற இயலாமை காரணமாக அங்குள்ள மக்கள் தம்மாலான வழிகளில் போராடுகிறார்கள். திருகோணமலையில், மட்டு நகரில், கிளிநொச்சியில், யாழ்ப்பாணத்தில் என்று அனைத்துப் பிரதேசங்களும் இராணுவச் சிறைச்சாலைகள் போன்று மாற்றப்பட்ட நிலையிலும் அங்கு மக்கள் தமது வாழ்விற்காக, பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடுகின்றனர்.

இடது சாரியம் பேசிய சிறு குழுக்கள் ஈறாக அனைத்து விடுதலை இயக்கங்களும் மக்களை அணிதிரட்டுவதற்கும், அதன் அடிப்படையிலிருந்து போராடுவதற்குமான வேலைத் திட்டம் ஒன்றை முன்வைக்கவில்லை. ஏனைய இயக்கங்கள் புலிகளால் துவம்சம் செய்யப்பட்டு ஏகத்தலைமை என்ற தலையங்கத்தில் போராட்டம் இராணுவமயப்படுத்தப்பட்டது. பலமிழந்து, உதிரிகளாக ஆக்கப்பட்ட மக்கள் இதனால் போராடும் வலுவை இழந்தனர்.

காஷ்மீர் உரிமைப் போரையும், நாகாலாந்து விடுதலை முழக்கத்தையும், பழங்குடி மக்களின் வாழ்வாதரப் போரையும் அழிப்பதற்காக அங்கு மக்கள் இன்னும் போராடுகிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் தொகைக்கு அதிகமாகவே காஷ்மீரில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மக்கள் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள் என்றால், அங்கெல்லாம் மக்கள் ஒருங்கிணையும் அமைப்புக்கள் அழிக்கப்படவில்லை என்பது பிரதான காரணம்.

மக்களை ஏதாவது வழியில் அமைப்பாக்கவும், அவர்களின் போராட்டங்களை ஒருங்கிணைக்கவும் சந்தர்ப்பவாத, பாராளுமன்ற வாத அரசியல் தலைமைகள் எதுவும் தயாராகவில்லை. பாசிச சூழலில் மக்களை ஒருங்கிணைப்பதும், அமைப்பாக்குவதும் அவர்களின் போராட்டத்தை ஊக்குவிப்பதும் குறித்த வேலைத் திட்டங்கள் யாரிடமும் இல்லை. அவற்றை முன்னெடுக்க அரசியல் தலைமைகள் தயாரில்லை. ஒரு புறத்தில் இனப்படுகொலை அரசோடு இணைந்து மக்களை விலைபேசும் அரச துணைக்குழுக்கள், மறுபுறத்தில் இலங்கை அரசையும் இந்திய அரசையும் நம்பியிருக்கும் பாராளுமன்ற வாக்கு வியாபாரிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு; இந்த இரண்டுக்கும் அப்பால் புதிய தலைமையை உருவாக்குவது எவ்வாறு? மக்களை அணிதிரட்டுவது எவ்வாறு?? சிங்கள மக்களின் காத்திரமான பங்கு இவற்றில் எவ்வாறு அமையலாம்???

இவற்றிற்குக் குறைந்த பட்ச விடை காணப்படுமானால் அழிவுகளை மட்டுப்படுத்தலாம்.

இதற்கு விடை காண முற்படும் போதெல்லாம், பேரினவாத அரசின் நண்பர்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ செயற்பட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

-கொல்லப்படுவதிலிருந்து மக்கள் அஞ்சியோடும் போதெல்லாம் அங்கே அபிவிருத்தி செய்கின்றோம் என்றோ, கே,பியும் டக்ளசும் பார்த்துக்கொள்வார்கள் என்றோ அரச ஆதரவாளர்கள் கூச்சலிடுகிறார்கள். அரசைத் திட்ட வேண்டாம் என்று குரூரமான நகைச்சுவையோடு கொக்கரிக்கிறார்கள்.

-எங்காவது மூலையிலிருந்து எதிர்ப்புக்குரல் எழும்போதெல்லாம் புலிகள் தான் அனைத்திற்கும் காரணம் என்று பேரினவாத அரசைப் பலப்படுத்தும் குழுவாதிகள் செயற்படுகிறார்கள்.

-இலங்கை அரசிற்கு எதிரான குரல்கள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்தும், முஸ்லீம்கள் மற்றும் மலையக மக்கள் மத்தியிலிருந்து எழும் போதெல்லாம் தமிழ் இனவாதிகள் அவற்றை நிராகரித்து மகிந்த அரசைப் பலப்படுத்துகின்றனர்.

-ஏனைய போராட்ட அமைப்புக்களும் ஜனநாயக முற்போக்கு சக்திகளும் மக்கள் மத்தியிலும் போராட்ட உணர்வையும், இனப்படுகொலைக்கு எதிரான நேர்மையான அரசியல் போராட்டங்களை முன்னெடுக்கும் போது அவற்றைப் புறக்கணிக்கின்றனர்.

உலகளாவிய அளவில் பரந்திருக்கும் தமிழ் இனவாதிகளின் ஆபத்தான மறுபக்கம் மாறுதலுக்க்கு உள்ளாக்கப்படுவதும், இலங்கை அரச ஆதரவுக் குழுக்கள் எதிர்கொள்ளப்பட வேண்டியதும் இன்றைய சமூக உணர்வுள்ள அனைவரதும் கடமை.

சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழுகின்ற வாழ்வாதரத்திற்கான அனைத்துப் போராடங்களையும் ஊக்குவிப்பதும், ஆதரிப்பதும் பாசிச அரசை பலவீனப்படுத்தும் பிரதான வேலை முறைகளில் ஒன்று. மூன்று நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மலையக மக்கள் குறித்த உலகளாவிய ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலான பிரச்சாரங்களும் அவர்களின் போராட்டங்களை ஆதரிப்பதும் மற்றொரு தார்மிக்கக் கடமை. தவிர, முஸ்லீம் மக்கள் மீதான அரச வன்முறைக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுப்பதும் அவர்களின் எதிர்ப்புக்குரலை நியாயபூர்வமாக ஆதரிப்பதும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை உற்பத்தியைப் புறக்கணித்தல், விளையாட்டு மைதானத்தில் புலிக் கொடியோடு ஓடுதல் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் அதிகமாக இலங்கைக்கு உள்ளிருந்து எழும் போராட்டங்களை உணர்வு பூர்வமாக ஆதரிப்பதும், அவற்றில் பங்களிப்பதும், ஊக்குவிப்பதும், இலங்கை அரசிற்கு எதிரான பெரும்பான்மையையும் அப் பெரும்பான்மை முன்னெடுக்கும் போராட்டங்களையும் வளர்ச்சியடையச் செய்யும்.

இனவாத அரசியலை முன்வைக்கும் வியாபாரிகளைச் சார்ந்த அளவில் சிங்கள் மக்களை தமிழ் மக்களின் எதிரிகளாக்குவதும், முஸ்லீம்களைத் துரோகிகளாக்குவதும், மலையக மக்களை அடிமைகளாக்குவதும் தமது இருப்பை உறுதிப்படுத்தப் பயன்படும். ஆனால் ராஜபக்ச அரசைப் பலவீனப்படுதப் பயன்படாது. இவர்கள் ஒரு வகையில் மகிந்த ராஜபக்ச பேரினவாத அரசைப் பலமடையச் செய்யும் செயற்பாட்டை மேற்கொள்கின்றனர்.

தமிழ் இனவாதிகளின் இலங்கை அரசு சார் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக உணர்வுமிக்க அரசியல் பொதுதளம் ஒன்று உருவாக வேண்டும். அத் தளத்தில் புதிய அரசியலின் பிரதான பகுதியாக இலன்கைப் பாசிச அரசைப் பலப்படுத்தும் அனைத்து நாவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறான செயற் திடங்களை நோக்கிய இணைவும் அதற்கான நகர்வும் அனைத்து மக்கள் பற்றுள்ளவர்களாலும் முன்னெடுக்கப்படுமானால், இலங்கையில் அழிவுகளை குறைந்த பட்சம் மட்டுப்படுத்தவும், குறைந்தபட்ச ஜனநாயக சூழலை ஏற்படுத்தவும் ஏதுவாக அமையும். பாசிச சூழலில் மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஆரம்பப் புள்ளியாக இவை அமையலாம்.

Exit mobile version