Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘ராஜபக்ச அச்சத்தில்? – டேவிட் கமரனின் இலங்கைப் பயணம் குறித்த ஆய்வறிக்கை : இனியொரு…

நன்றி : அவந்த ஆட்டிகல
நன்றி : அவந்த ஆட்டிகல

வன்னிப் படுகொலைகளை   நடத்திய வேளையில் அழிக்கும் ஆயுதங்களைச்  ‘சட்டரீதியான’ மூலங்களூடாகவே  மகிந்த பாசிச அரசு  பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தானில் பயன்படுத்திய பொஸ்பரஸ் கொத்துக்குண்டுகளிலிருந்து இரசாயன ஆயுதங்கள் வரை இலங்கை அரசு எங்கிருந்து பெற்றுக்கொண்டது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.இது வெறுமனே தமிழின் வாதம் தமிழின உணர்வு என்ற எல்லைகளுக்கு அப்பால் பரந்துபட்ட மக்களை நோக்கிச் செல்லவேண்டும். கொலைகளின் சூத்திரதாரிகளான ராஜபக்ச குடும்பமும் அதன் ஆதரவாளர்களும் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். அவர்கள் மக்கள் மத்தியில் நடமாடுவதே மனித குலத்திற்கு ஆபத்தனாதாகும்.
ராஜபக்ச அதிகாரம் தண்டிகப்பட வேண்டும் என்பது சாமனியர்கள் மத்தியில் பழிவாங்கும் உணர்வாகவும், தமிழின வாதிகள் மத்தியில் தமிழர்களின் எதிரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைகளில் அமைகிறது.

இதில் குறிப்பாக தமிழின வாதிகள் தமிழினம் என்ற குறுகிய எல்லையை வகுத்துக்கொண்டு தமக்கு ஆதரவளிக்கும் ஏனைய கொலையாளிகளை அழைத்துவந்து ராஜபக்சவைப் பழிவாங்கிவிடுவோம் என்று அப்பாவி மக்களை நம்பவைக்கிறார்கள். அந்தவகையில் இந்தியாவில் இனப்படுகொலையை நடத்தி ஆயிரமாயிரம் இஸ்லாமியர்களைக் கொன்றொழித்த, ராஜபக்சவிற்கு எந்தவகையிலும் சளைக்காத நரேந்திர மோடி போன்ற கொலைகாரர்களை ஆதரிக்கிறார்கள் இந்த இனவாதிகள். கேட்டால் நரேந்திரந்திர மோடியை அழைத்துவந்து ஈழத் தமிழர்களைக் காப்பற்றுவோம் என்கிறார்கள்.

இதனால் உலகம் முழுவதும் வாழும் ஏனைய இஸ்லாமியர்களையும், மனிதாபிமானிகளையும், ஜனநாயகவாதிகளையும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்களாக்கிவிடுகிறார்கள். உண்மையில் ராஜபக்ச அரசு போன்ற கொழுங்கோல் அரசுகளுக்கு எதிராக உலகம் முழுவதும் போராடும் ஜனநாயக முற்போக்காளர்களை அன்னியப்படுத்தி ராஜபக்ச அரசைப் பலப்படுத்தும் வேலை இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

இதனைப் பயன்படுத்திக்கொள்ளும் மனித குல விரோதிகள் இனக்கொலைக்கு எதிரானவர்கள் போல ஒரு புறத்தில் நாடகமாடும் அதே வேளை மறுபுறத்தில் ராஜபக்ச அரசோடு வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

புதிய தந்திரோபாயம் ..

ஆக, தமிழின வாதிகளதும் ராஜபக்சவினதும் ஆதரவோடு இலங்கையைச் சூறையாட இவர்கள் புதிய தந்திரோபாயம் ஒன்றை வகுத்துள்ளனர். எதிர்ப்பின்றி நடைபெறும் இவர்களின் சூறையாடலும் கொள்ளையும் மக்களை மேலும் மேலும் அவலத்திற்கு உள்ளாக்கிறது.

தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராடம் மட்டுமல்ல முழு இலங்கையுமே இதுவரை காணாத மீள முடியத அழிவை நோக்கி நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஆப்கானிஸ்தான் போன்றும் சோமாலியா போன்றும் நிரந்த அச்சத்தினுள்ளும் அவலத்தினுள்ளும் வாழும் மக்கள் கூட்டம் ஒன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் கமரன்…

யாழ்ப்பாணத்தில் கமரன்

எந்த மூலையிலுமிருந்தும் எந்த எதிர்ப்பும் எழாதவாறு அழிவிற்கான அனைத்து வழிகளும் திறந்துவிடப்பட்டிருக்கின்றன என்பதை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் யாழ்ப்பாணம் சென்று எம்.ஜி.ஆர் பாணியில் அகதி முகாம்களில் ஏழைக் குழந்தைகளை கட்டியணைத்துவிட்டு மகிந்த ராஜபக்சவுடன் முரண்பட்டுக்கொண்டார் என்பதைத் தமிழின வாதிகள் வெற்றிப் பெருமிதத்தோடு கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிழைப்புவாத அரசியல் தலைமைகளால் கைவிடப்பட்ட தமிழ்ப்பேசும் மக்களோ டேவிட் கமரன் சென்று வந்ததை தேவ தூதன் வந்துபோனதாக அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை பொறுத்த வரையில் டேவிட் கமரன் அப்பாவித் தனமான தூய மனிதர் என்றும் சம்பந்தனும் கூட்டாளிகளும் தம்மைப் பேசவிடாமல் தடுத்துவிட்டார்கள் நம்பிகொண்டிருக்கிறார்கள். சமப்ந்தன் எப்படிப் பேச வேண்டும் என்று ஆணையிடுவதே டேவிட் கமரனனும் அவர் சார்ந்த ஏகபோகக் கும்பல்களும் தான் என்பதை அவர்களுக்கு சொலவதற்கு மக்கள் சார்ந்த அரசியல் தலைமைகள் கிடையாது.

இதன் மறு புறத்தில் பிழைப்புவாதிகளோ, ராஜபக்ச அரசு சுயாதீன விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கமரன் தனது அரசியல் நலன்களுக்காகக் கூறியதை தமக்கு ஈழம் கிடைத்துவிட்டது என்பது போன்ற பிரச்சாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் ஒருபகுதியை இரவோடிரவாக இடித்தழித்த ஜெயலலிதாவையும் அவரின் பெறுமானமற்ற தீர்மானங்களையும் ஆதரித்த அதே முகங்கள் இன்று டேவிட் கமரனை ஆதரிக்கின்றன. மக்களை டேவிட் கமரினின் பின்னால் அணிதிரளக் கூட அழைப்புவிடுக்கிறார்கள்.

இனச்சுத்திகரிப்பிற்கு உதவும் டேவிட் கமரனின் அரசு

டேவிட் கமரனின் அரசாங்கம் இலங்கை அரசிற்கு இயந்திரத் துப்பாக்கிகளையும் தாக்குதல் ஆயுதங்களை விற்பனை செய்திருக்கிறது என்று பிரித்தானியாவின் ஆயுத விற்பனைக் கண்காணிப்பகத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார். இலங்கைக்கு ஆயுத விற்பனைக்கு அனுமதி வழங்கிய டேவிட் கமரனின் அரசாங்கம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று சேர்.ஜோன் ஸ்டான்லி என்ற இந்த அதிகாரி கோரியுள்ளார்.

சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற டேவிட் கமரனின் யோசனை சரியானதே எனக் கூறும் இவர் 8 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ஸ் பெறுமானமுள்ள ஆயுதங்களை எவ்வாறு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் விற்பனை செய்திருக்க முடியும் என்கிறார்.

டேவிட் கமரனின் கட்சியைச் சார்ந்த உயர்மட்ட அமைச்சர்கள் கடல் கொள்ளையைத் தடுப்பதற்கே ஆயுதங்களை விற்பனை செய்தோம் என்று கூறுகின்றனர். அதே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார்.

கமரனின் பழமைவாதக் கட்சியால் விற்பனை செய்யப்பட்ட, கணக்கிடப்படாத இயந்திரத் துப்பாக்கிகள், கணக்கிடப்படாத வெடி மருந்துகள், 600 கலகமடக்கும் துப்பாக்கி வகைகள், 210 போர்த் துப்பாக்கிகள் உட்பட பெருந்தொகை ஆயுதங்கள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமல்ல சிங்கள முஸ்லிம் மக்கள் மீதும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு மகிந்த அரசால் பயன்படுத்தப்படுகின்றது.

சில்கொட்டின் அறிக்கை…

Chilcot

இரண்டு மாதங்களின் முன்னர் அமரிக்க பிரித்தானிய அரசுகள் ஈராகில் புரிந்த போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கைகளை சேர்.ஜோன் சில்கொட் என்பவர் முழுமைப் படுத்தியிருந்தார். அறிக்கை வெளியாகவில்லை. காரணம் கேட்டால் வாஷின்டனும் லண்டனும் அறிக்கை வெளியாவதை விரும்பவில்லை என்கிறார்கள்.

7.5 பில்லியன் பவுண்ஸ் செலவில்  24 நவம்பர் 2009 இற்கும் 2. பெப்ரவரி 2011 இற்குமான காலப்பகுதியில் விசாரணைகள் ஊடாகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை ஒரு மில்லியன் சொற்களைக் கொண்டது. பிரித்தானியாவின் முன்னை நாள் பிரதமர் ரொனி பிளேருக்கும் அமரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இற்கும் இடையே நடைபெற்ற,  ஈரக் போருக்குச் சற்று முன்பதான உரையாடல்கள் இந்த அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இந்த உரையாடல் தமக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமரிக்க அதிகாரம் அறிக்கையை நிராகரிக்க,  டேவிட் கமரனும் அதனை நிராகரிக்கிறார்.

ரொனி பிளேரின் ஈராக் மீதான போரே அவர் ஆங்கிலேயர்களால் அதிகம் வெறுக்கப்படும் பிரதமராக சரிவடையக் காரணமாகவிருந்தது. கமரனின் சில்கொட் அறிக்கைக்கு எதிரான முடிவு பிரித்தானிய மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இனப்படுகொலையும் போர்க்குற்றமும் நிகழ்ந்தாகக் கூறப்படும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை நோக்கி கமரன் பயணம் செய்தமை எதிர்க்கட்சிகளால் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

டேவிட் கமரனின் இலங்கைப் பயணத்திற்கான நோக்கங்கள் தெளிவானவை:

1. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட பின்னர் 30 வருடங்களாக பயன்படுத்தப்படாமலிருந்த பல்தேசியப் பெரு நிறுவவங்களுக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது.

2. மாலைதீவின் பின்னர் தெற்காசியாவில் மத்திய கிழக்கைப் போன்று நேரடியான தலையீட்டை மேற்கொள்வது.

3. முதலாளிதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியின் பின்னதான புதிய உலக ஒழுங்கில் தெற்காசியாவின் நுளைவாயிலாக இலங்கையைப் பயன்படுத்துவது.

போருக்கு எதிரான பிரித்தானியர்கள்..

இந்த நிலையில் சில்கொட்டின் அறிக்கை, சிரியா மீதான படையெடுப்பிற்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட எதிர்ப்பு, லிபியாவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து எழுந்த குரல்கள் டேவிட் கமரனை ரொனி பிளேர் போன்ற நயவஞ்சகத் தனமான பிரதமர் என்ற கருத்து மக்கள் மத்தியில் உருவாகியிருந்தது.

சிரியாவின் மீதான படையெடுப்பை பிரித்தானியப் பாராளுமன்றம் நிராகரித்தமை வாக்குகளைப் பொறுக்குவதற்காகக் காத்திருக்கும் ஒரு சில எம்.பி களுக்கு முளைவிட்ட மனிதாபிமானமல்ல. மக்கள் இப்போது விழித்துக்கொண்டுள்ளனர். படையெடுப்பை ஆதரித்தால் அடுத்த தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்று கணக்கிட்டதாலேயே ஆளும் கட்சி உறுப்பினர்களே படையெடுப்பிற்கு எதிராக வாக்களித்தார்கள்.

எதிர்வரும் தேர்தலிலும் மட்டுமல்ல உலக நாடுகளின் மீதான படையெடுப்புக்களிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல பிரித்தானிய மக்களின் உணர்வுகளைக் கையாள கமரனுக்கும் அவர் சார்ந்த கட்சிகும் தேவை ஏற்பட்டிருந்தது.

கமரனும் பரிவரங்களும் தாம் படையெடுப்பதும் ஆக்கிரமிப்பதும் வெறுமனே தமது பல்தேசிய வர்த்தக நிறுவனங்களுக்காக மட்டுமல்ல மனித உரிமையைப் பாதுகாப்பதற்காகவுமே என்று பிரித்தானிய மக்களுக்க்குச் சொல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

பயன்படுத்தப்பட்ட மக்களின் அவலம்…

கமரனின் அடிப்படை வர்த்த நோக்கங்களுக்கும் பல் தேசிய பெருநிறுவனங்களின் முதலீடுகளுக்கும் பாதிப்பற்ற வகையில் அவர் தன்னை மனிதாபிமானியாகவும் போருக்கு எதிரானவராகவும் வெளிக்காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்காகத் தெரிவுசெய்யப்பட்ட இடம் உலகின் வரைபடத்தில் கூட தெளிவாகக் காட்டப்படாத யாழ்ப்பாணம். பயன்படுத்தப்பட்டது மக்களின் அவலம்.

பிரித்தானிய அரசுக்கும் ராஜபக்சவிற்கும் தொடரும் உறவு

லியாம் பொக்ஸ் – மகிந்த ராஜபக்ச

ராஜபக்ச குடும்பத்துடன் ரொரி கட்சிக்கு நீண்ட கால உறவு நிலவிவந்தது. பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளரகவிருந்த லியாம் பொக்ஸ் இலங்கை அரசுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததுடன் பிரித்தானியாவில் இலங்கை அரசின் பிரச்சாரப் பீரங்கி போன்றும் செயற்பட்டார்.

லியாம் பொக்ஸ் என்ற உயர் மட்ட ரோரிக் கட்சி உறுப்பினரின் இந்த நடவடிக்கைகள் டேவிட் கமரனின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நடந்தவை அல்ல. வெளிப்படையான நிகழ்வுகள்.

கமரனின் கட்சியுடன் நெருங்கிய  பல்தேசிய நிறுவங்கள் இலங்கை முதலிடுவதற்காக அவருடன் இலங்கை சென்றன. போர் நடைபெற்ற போதும் அதன் பின்பும் இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய பிரித்தானியா அனுமதி வழங்கியது. இலங்கை கொலைவெறி அரசிற்கு நல்லிணக்கத்தை உருவாக்கவென பல மில்லியன் உதவிகள்  பொது நலவாய நாடுகளின் மாநாட்டின் போது  வழங்கப்பட்டன.

இலங்கை அரசுடனான ரோரிக் கட்சிக்கு நிலவிவந்த உறவு பொது நலவாய மாநாட்டில் புதிய நாடகத்தை நடத்தப் பயன்பட்டது.

இந்த நாடகத்தில் இரண்டு காட்சிகள் நடைபெற்றன:

காட்சி 1

பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதே வேளை மாநாட்டை முறித்துக்கொண்டு டேவிட் கமரன் யாழ்ப்பாணம் செல்கிறார். அங்கு சென்றவர் மிக அவதானமாக ஊடகங்களுக்கு தன்னைக் காட்சிப்படுத்துகிறார். அவரது ஒவ்வோரு வார்த்தைகளும் மிக அவதானமாகத் தயார்செய்யப்பட்டிருந்தன. கீழ்வரும் புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றார்.

1. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்துள்ளது.

2. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதால் வெற்றிக்கான வாய்ப்புக்கள் உள்ளன.

3. மக்கள் அல்லல் படுகிறார்கள்.

4. இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் பண்புடன் நடந்தலே போதுமானது

கொழும்பு வந்த கமரன் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு முன்னர் கூறியவற்றை நிராகரிக்காமல் இன்னொரு புள்ளியைச் சேர்த்துக்கொள்கிறார்.

-இலங்கை அரசு போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

பிரித்தானியா சென்றபின் பாராளுமன்ற உரையில் மேலும் ஒன்றை வலியுறுத்துகிறார்.

-இலங்கை அரசு சுயாதீன விசாரணை நடத்தாவிட்டால் நவி பிள்ளையில் மனித உரிமை மீறல் தீர்மானத்தை நிறைவேற்ற  பிரித்தானியா ஆதரவு வழங்கி சர்வதேச சுயதீன விசாரணைக்கு அழைப்புவிடும்.

நடைபெற்ற முதலாவது காட்சியின் பெரும்பாலான பகுதிகள் கூறுவதன் சாராம்சம் இதுதான்:

1. இலங்கையில் நடைபெற்ற சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதம்.

2. பயங்கரவாதம் அழிக்கப்பட்டதை ஆதரிக்கிறோம்.

3. சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அழிக்கப்பட வேண்டும்.

இப் பிரதான பகுதிகளோடு இலங்கை அரசிற்கு எதிராக மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நிறைவு செய்கிறார்.

ராஜபக்ச அரசின் இருப்பைப் பேண கமரன் உதவி..

பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தோ, எரியும் பிரச்சனையன நிலப்பறிப்புக் குறித்தோ, சித்திரவதைக் கூடங்கள் தொடர்பாகவோ, காணாமல் போனோர் தொடர்பாகவோ ஒரு சம்பிரதாயத்திற்காவது டேவிட் கமரன் பேசவில்லை. மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை முன்வைத்து இன்னும் ஒரு ஒன்றரை வருடங்களுக்கு காலத்தை ஓட்டுவதற்கு டேவிட் கமரன் மகிந்த பாசிச அரசிற்கு உதவி வழங்கியுள்ளார்.

மற்றொரு வழியிலும் மகிந்த ராஜபக்சவிற்கு உதவிவழங்கியுள்ளதை தி எக்கொனமிஸ்ட் சஞ்சிகை சுட்டிக்காட்டியது.

தன்னைச் சிங்கள மக்களை மீட்டெடுத்த தலைவனாகக் காட்டும் ரஜபக்ச மேற்கு ஏகாதிபத்தியங்கள் தன்னைத் தண்டிக்க முனைவதாக சிங்கள் மக்கள் மத்தியில் அனுதாப அலையை உருவாக்கியுள்ளார். கமரனின் பயணத்தின் பின்னர் ராஜபக்சவின் செல்வாகு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்திருபதாக எக்கொனமிஸ்ட் சொல்கிறது. உண்மையில் ஏகதிபத்தியங்களின் நெருங்கிய நண்பனான ராஜபக்ச தன்னை அவற்றின் எதிரிகளாகக் காட்டிக்கொண்டே மக்கள் மத்தியிலிருந்து எழும் எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார்.

நாடகத்தின் காட்சி இரண்டில் ஏகாதிபத்தியங்களுக்கும் ராஜபக்சவிற்கும் இடையேயான உறவு செயல்வடிவில் நடைபெறுகிறது.

காட்சி 2

1. கொழும்பில் வில்லியம் ஹேக், ஒன்றுபட்ட இலங்கை என்ற சுய நிர்ணைய உரிமைக் கோரிக்கைக்கு எதிரான மையத்திற்கு பணம் வழங்கித் திறந்துவைக்கிறார்.

2. பிரித்தானியப் பல்கலைக்கழகம் ஒன்றின் இலங்கைப் பிரிவைத் திறந்துவைக்கிறார்.

3. பிரித்தானிய நிறுவனங்கள் ராஜபக்ச அரசுடன் பல ஒப்பந்தங்களுக்கு உடன்பட்டுக் கொள்கின்றன.

4. நானோ தொழி நுட்பத்தை இலங்கை மருத்துவத்தில் புகுத்திப் பரிசோதிக்க பிரத்தானிய நிறுவனத்துடன் ராஜபக்ச அரசு ஒப்பந்தம் மேற்கொள்கிறது.

5. பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் மகிந்த ராஜபக்சவுடன் தனது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்கிறார். உயிர்களைப் பலியெடுத்த ராஜபக்சவின் கத்தி சார்ள்சின் பிறந்த நாள் கேக்கை வெட்டப் பயன்படுகிறது.

ராஜபக்சவிற்கு முன்னர் இலங்கையில் கொடுங்கோல் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் உயர்கல்வியைத் தனியார்மயப்படுத்தும் முயற்சி சிங்கள மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இதையே ராஜபக்ச அரசு தனது போலி ஏகாதிபத்திய எதிர்ப்பையும் நாட்டின் பாதுகாவலன் என்ற விம்பத்தையும் பயன்படுத்தி எதிப்பின்றி நடத்தி முடித்திருக்கிறது.

சுய நிர்ணய உரிமைக்கு எதிராக…

ஆக, கமரனின் வருகை இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எந்தப் பலனையும் வழங்கப் போவது கிடையாது. மறுபக்கத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமையை அழிப்பதற்கு அத்தனை தயாரிப்புக்களையும் பிரித்தானிய அரசு இலங்கையில் பெரும் பணத்தொகையை செலவிட்டு நடைமுறைப்படுத்துகிறது.
இதானால் நிலப்பறிப்பு போன்ற இலங்கை அரசின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் கூட பிரித்தானிய அரசின் உதவியுடன் நடைபெறுகிறது.

இராணுவத்தின் இழப்புத் தொகையைக் காட்டியே அரசியல் பிழைப்பு நடத்திவந்த புலம் பெயர் சமூகத்தின் அரசியல் தலைமைகளின் பிழைப்புவாதத்தை இணைய ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. ‘ராஜபக்ச அச்சத்தில், டேவிட் கமரனைக்கண்டு மிரண்டுபோன ராஜபக்ச’ போன்ற தலையங்களோடு அழிவின் அகோரமான ஆரம்பத்தை வெற்றியென விளம்பரப்படுத்துகிறார்கள்.

செய்யவேண்டியது என்ன..

கமரின் பயணம் உலக மக்களுக்கு இலங்கை அரசை மனித உரிமைகளை மீறும் அரசாக அறிமுகப்படுத்தியுள்ளமை மட்டுமே தமிழ்ப் பேசும் மக்களுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகும். அந்த வெற்றியின் பலனை அனுபவிக்கப் போவது கமரனும் ராஜபக்சவும் மட்டுமே. இன்னும் சில வருடங்களில் பொது நலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பிலுள்ள ராஜபக்சவும் கமரனும் நேரடியாகவே நண்பர்களாக அறிவித்துக்கொள்ள, தமிழ்ப் பிரதேசங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டிருக்கும். இலங்கை முழுவதும் கையேந்தும் ஒரு பிச்சைக்காரக் கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கும். ராஜபக்ச அரசு தெற்காசியாவில் போராட்டங்களை ஒடுக்கும் ஏகாதிபத்திய இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்படும்.

உலகம் முழுவதும் இலங்கை அரசிற்கு எதிராக ஏற்பட்டிருக்கும் பொது அபிப்பிராயத்தைப் பயன்படுத்திக்கொண்டு உலகில் போராடும் மக்களோடு எம்மை அடையாளப்படுத்தும் புதிய அரசியல் தலைமை உருவாவது தாமதமானால் அழிவுகளிலிருந்து மீழப் பல ஆண்டுகள் செல்லலாம். ராஜபக்ச அரசிற்கு எதிரான உலகப் பொதுப் புத்தியை பயன்படுத்திக்கொண்டு ஒடுக்கப்பட்ட, போராடும் மக்கள் பிரிவுகளோடு இணைந்து, வியாபாரத்திற்கான வெறிதுக்தனமான தமிழ் இனவாத அடையாளங்களைத் துறந்து நிலப்பறிப்பு, பாலியல் வன்முறைகள், பௌத்த சிங்கள மயமாக்கல் போன்ற ஒவ்வொரு அழிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.கல்வியைத் தனியாமயப்படுத்தல், மருத்துவத்தைத் தனியார் மயப்படுத்தல் போன்றா அழிவுகளை சிங்கள மக்களோடு இணைந்து எதிர்கொள்ள வேண்டும். தமிழ்பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தை அவர்கள் புரிந்துகொள்ளிம் நிலை உருவாக வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈறான பிழைப்பு வாத அரசியல் தலைமைகளைத் தூக்கியெறிய வேண்டும். மக்களை அணிதிரட்டுவது அழிவிலிருந்து சமூகத்தைத் தற்காத்துக்கொள்வதற்கான யுத்தம் என்பன ஒவ்வொரு தளத்திலும் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கான தந்திரோபாயங்கள் வகுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

புலம் பெயர் மற்றும் புலத்தின் தமிழ்த் தலைமைகள் கூறுவது போலன்றி உலகம் எம்முன் விடுட்டுச் சென்றுள்ள அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு மக்களை அணிதிரட்டுவதற்கான அடிப்படைத் தந்திரோபாயங்களை அவரசமாகவும் நிதானமாகவும் வகுத்துக்கொண்டால் வெற்றிக்கான முதல் பகுதியை அடைந்தவர்களாவோம் அன்றெனில் அழிவிற்கான அனைத்தையும் வித்திட்டவர்களாவோம்.

Exit mobile version