தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவோ அவற்றைத் தயவின்றி விமர்சித்து புதிய அரசியலை முன்வைக்கவோ கோரமாகக் கேட்கும் எந்த அரசியல் குரல்களுக்கும் தன்னம்பிக்கை இல்லை. ஆண்ட பரம்பரையின் புகழையே பேசிப் பழக்கப்பட்டுப்போன பாழடைந்த பழமைவாத சமூகத்தையும் அது தோற்றுவித்த தோல்வியின் அடிப்படையான தேசிய வெறியையும் பாதுகாக்க மட்டுமே தமிழ் அரசியல் தலைமைகளும் அவற்றின் ஊது குழல்களும் உயிர்வாழ்கின்றன.
இன்னும் சாம்ராஜ்யங்களும், பேரரசுகளும், பெரு நிலப்பிரபுத்துவமும் வளர்ந்திராத குறு நில மன்னர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த பிரதேசங்களை ஒன்றிணைத்து காலனி ஆதிக்க நாடுகள் இலங்கையை உருவாக்குகின்றன. இறுதியாக ஆங்கிலேயரால் கண்டிய குறுநில அரசு ஆக்கிரமிக்கப்படுகிறது. அதன் பின்னரே இலங்கை என்ற முழு நாட்டை உருவாக்கிக் கொண்ட ஆங்கிலேய அதிகாரம், தேசிய இனங்களாக வளர்ச்சியடைந்த மக்கள் கூட்டங்களைப் பிரித்தாள எண்ணுகிறது.
மகாவம்சம் என்ற கட்டுக்கதை மேலும் புதிய புனைவுகளோடு பாளி மொழியிலிருந்து ஆங்கிலேயரால் சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்படுகிறது. சிங்களப் பகுதிகள் எங்கும் காணப்பட்ட விகாரைகளுக்கு அந்த நூல் வழங்கப்படுகிறது.
ஆங்கிலேய ஆதிக்கத்தின் ஆசியோடு டேவிட் ஹேவிதாரண என்ற கிறீஸ்தவ இளைஞர் இந்தியாவிற்கு பிடித்துச் செல்லப்பட்டு பௌத்த சிங்கள வெறியராக மாற்றப்படுகிறார்.
இன்றும் கொழும்பில் மரண அமைதியோடு வாழும் தியோ சோபிகல் சொசைட்டி என்ற அமைப்பு சிங்கள பௌத்த கல்லூரிகளையும் 350 பௌத்த விகாரைகளையும் இலங்கை முழுவதும் தோற்றுவிக்கிறது.
வளர்ந்து கொண்டிருந்த சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிராக அனகாரிக தலைமையில் சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள பௌத்த விசம் ஏற்றப்படுகிறது. இலங்கையில் வறுமைக்கும், சிதைவுக்கும் காரணம் சிங்கள பௌத்தர்கள் அல்லாத சிறுபான்மை தேசிய இனங்களே காரணம் என அனகாரிக்கவின் பரிவாரங்கள் பிரித்தானியர்களின் ஆசியோடு இலங்கையின் ஒவோரு கிராமத்தின் வாசலிலும் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.
நாளாந்த வாழ்விற்கு வானத்தையும் பூமியையும் நம்பியிருந்த அப்பாவிச் சிங்கள மக்கள் பௌத்த சிங்கள மேலாதிக்கக் கருத்துக்களால் நச்சூட்டப்படுகிறார்கள்.
இந்த நச்சு 1915 இல் முதல் முதலாக முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையாக எரிய ஆரம்பிக்கிறது.
தேசியவாதக் கருத்துக்களோடு ஆட்சிக்குவந்த பண்டாரநாயக்க தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றி இலங்கையில் முதலாவது பெரும் பெருந்தேசிய வன்முறையை ஆரம்பித்து வைத்தார்.
கண்டியமன்னன் இறுதியில் ஆங்கிலேயரோடு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்ததில் தமிழ் மொழியிலேயே கண்டி இராசதானியைச் சேர்ந்த 21 பேரும் கையெழுத்திட்டுள்ளனர். கண்டிய இராசதானியின் வழித்தோன்றல்களாகக் கருதப்படும் ரதள சாதியைச் சேர்ந்த சிரிமாவோ பண்டார நாயக்கவும், இலங்கயில் தமிழ்ப் பேசியதாகக் கருதப்படும் நாயக்கர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படும் பண்டாரநாயக்கவும் ஆட்சியைக் கையகப்படுத்துவதற்கு சிங்கள பௌத்ததையே பயன்படுத்தினர்.
சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிணங்களின் மீது தோன்றிய சிங்கள பௌத்த கருத்தாக்கம் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலை உட்பட அனைத்து பேரினவாத வன்முறைகளையும் தோற்றுவித்தது.
இனப்படுகொலையின் உச்சபட்ச வடிவம் முள்ளிவாய்க்காலில் மனிதப்படுகொலையாக நிறைவேறியது. பயங்கரவாததை அழிக்கிறோம் என்ற தலையங்கத்தில் தேசிய இன முரண்பாட்டைத் தோற்றுவித்த உலக நாடுகளின் துணையோடு அரங்கேறியது.
இனப்படுகொலை நிகழ்த்திய மகிந்த பாசிசம் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. புலிகளை அழித்துவிட்டோம் என்று அவர்கள் மார்தட்டிக்கொண்ட அடுத்த கணமே சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அரசுக்கு எதிரான போராட்டங்கள், சுதந்திர வர்த்தக வலைய தொழிலாளர்கள் ஊடாகவும், விவசாயிகள் ஊடாகவும் அரசைப் பயமுறுத்தியது.
இதனால், எஞ்சியிருக்கும் சிறிய சுயாதீனத்தையும் யாருக்காவது அடகுவைத்து ஆட்சிக்குத் துணை சேர்த்துக்கொள்ள ராஜபக்ச பாசிஸ்டுக்கள் முயற்சிக்கிறார்கள்.
இந்த நிலையில் சிங்கள மக்களை தீவிரமாக பேரினவாத சகதிக்குள் தள்ளிவிடுவது மட்டுமே அவர்கள் முன்னுள்ள ஒரே இலகுபடுத்தப்பட்ட வழிமுறை. ஏற்கனவே பேரினவாதத்தின் விசம் விதைக்கப்பட்டுள்ள சமூகத்தை மேலும் அச்சமடையச் செய்வதும், அவர்களின் பௌத்த சிங்கள ஆழ் மனநிலையைத் தூண்டிவிடுவதும் சிக்கலான ஒன்றல்ல.
ராஜப்கச அல்ல, தமிழர் ஒருவர் இலங்கை அதிபராக இருந்தாலும், நிலவும் சமூகப் பொருளாதார அமைப்பு முறைக்குள் இது ஒன்றே அவர்கள் முன்னால் உள்ள ஒரே வழி.
இந்த நிலையில் ராஜப்கச அதிகாரத்தையும் பேரினவாதத்தையும் பலவீனப் படுத்தும் இரண்டு முன்நிபந்னைகள் அவசியமாகின்றன.
முதலாவதும் முக்கியமானதுமாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான மக்களின் போராட்டம். இரண்டாவதாக பேரினவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் பலவீனப்படுத்தல்.
இந்த இரண்டுமே ஒன்றோடு ஒன்று பிணைந்தவை.
தெற்காசியாவில் 70 களின் இறுதிவரைக்கும் ஒரு சமூக நல அரசு போன்று செயற்பட்ட இலங்கை இன்று முற்று முழுதான ஏகதிபத்திய மூலதனத்திற்கு அடகுவைக்கப்பட்ட நாடாக மாறிவிட்டது.
ராஜபக்ச பேரினவாதியாக ஆட்சி நடத்துவதும், இனச் சுத்திகரிப்பைத் தலைமை தாங்குவதும் ஏகாதிபத்தியங்களுக்கு பிரச்சனையானவை அல்ல. அவை தலையிடுவதற்கான வழிகளைத் திறந்துவிடுவதே பேரினவாத அரசியல் தான்.
இலங்கையில் இலவசக் கல்வி தனியார் மயப்படுத்தப்பட வேண்டும், பொதுச் சேவைக்கான பணம் குறைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆலோசனை கூறியதே சர்வதேச நாணய நிதியம் தான்.
இவ்வாறான ஏகாதிபத்தியத் தலையீட்டினால் இலங்கையில் வறுமை தலைவிரித்தாடுகிறது.
இவற்றிற்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டங்களை நீண்டகாலத்திற்குப் பின் நோக்கி நகர்த்தும் சிங்கள பௌத்த அடையாளத்தோடு கூடிய பேரினவாததை ராஜபக்ச மட்டுமல்ல இனிமேல் ஆட்சியதிகாரத்திற்கு யார் வந்தாலும் நிராகரித்து ஆட்சி நடத்த முடியாது.
பேரினவாதிகள் எதிர்ப்பில்லாமல் இருப்பைப் பேணிக்கொள்வதற்குரிய மிக அடிப்படையான காரணங்களில் ஒன்று சிறுபான்மைத் தேசிய இனங்களில் அரசியல் தலைமைகளின் இனவாதம்.
ஆண்டபரம்பரை, மோட்டுச் சிங்களவன், போன்ற ‘சொல்லாடல்களோடு’ முன்வரும் இத்தலைமைகள் தமது குறுகிய இருப்பிற்காக இனவாதத்தைப் பயன்படுத்துகின்றன.
இந்த இனவாதத்தை சுட்டிக்காட்டியே சிங்கள பௌத்த பெருந்தேசிய அடையாளம் பாய்ச்சல் நிலையில் வளர்ச்சியடைகிறது.
இவர்கள் ராஜபக்ச அரசைப் பலவீனப்படுத்தும் போராட்டங்கள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழும்போது அதனை ஊக்கப்படுத்துவதோ அல்லது அக்கறைகொள்வதோ கிடையாது.
ராஜபக்சவின் பேரினவாதத்தை வளர்க்கும் நண்பர்களான ‘நாடுகடந்த தமிழீழம்’ போன்றே ஏனைய அனைத்து புலி ஆதரவுக் குழுக்களும் புலம் பெயர் நாடுகளிலும் செயற்படுகின்றன.
போருக்குப் பின்னர் சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சவிற்கு ஏகோபித்த ஆதரவு கிடைப்பதற்கும், ராஜபக்சவின் இருப்பை உறுதி செய்வதற்கும் இவர்களே துருப்புச் சீட்டைக் கொடுத்தவர்கள். புலம் பெயர் நாடுகளில் இவர்கள் பலமானவர்களாகவும் தமிழ் தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்துபவர்களாகவும் இருக்கும் வரையில் ராஜபக்ச இலங்கையில் முடிசூடா சக்கர்வர்த்தியாக வாழ்வார்.
ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டால் ராஜபக்ச அரசு இன்னொரு பேரினவாத அரசால் பிரதிடப்பட்டாலும் புலம் பெயர் தமிழ் இனவாதிகளும், தமிழ் நாட்டின் இனவாதிகளுமே பேரினவாத ஆட்சியை நடத்துவதற்கான ஆதார சக்திகளாக அமைவர்.
ராஜபக்சவின் நண்பர்களான இவர்கள் தமது அரசியல் வங்குரோத்துத் தனத்தால் ஏகாதிபத்தியங்களின் நேரடி முகவர்களாகவும் உளவாளிகளாகவும் உலா வருகிறார்கள். தமிழ் சமூகத்தின் சாபக்கேடுகளான இவர்கள் துடைத்தெறியப்படவேண்டும்.
இவர்களை அழிப்பதற்கான உறுதியான போராட்டம், ஆரம்பிக்கப்பட வேண்டும். இவர்கள் பேரினவாதத்தின் உறுதியான நணபர்கள் என்று தமிழ் மக்களுக்குச் சொல்லும் அதே வேளை சிங்கள மக்கள் நடத்தும் நியாயமான அனைத்துப் போராட்டங்களுக்கும் சர்வதேச முற்போக்கு அமைப்புக்களோடு இணைந்த நேரடியான ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியிலுள்ள உழைக்கும் மக்களோடு நேரடியான வர்க்க அடிப்படையிலான தொடர்பு பேணப்பட வேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் ராகபக்ச அரசிற்கு எதிரான வர்க்க அரசியல் கட்சிகள் அரசியல் அமைப்புக்களும் உருவாகுவதை ஊக்குவிக்க வேண்டும்.
தமிழ் மக்கள் சுயநலம் மிக்க ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம் படை அல்ல என்று உலக முற்போக்கு சக்திகளுக்கு சொல்லப்பட வேண்டியதைப் போன்றே சிங்கள மக்களுக்கும் சொல்லப்பட வேண்டும்.
இவற்றின் ஊடாக ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களிகளின் சுயநிர்ணய உரிமைக்கான நிறுவனமயப்பட்ட குரல் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழுமானால் தமிழ் இனவாதிகள் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படுவார்கள். பேரினவாத அரசு பலவீனபடும். தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் இலங்கையில் வாழும் மக்களின் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு வெற்றிபெறும். இந்த நிலையில் பிரிந்துபோகும் உரிமையோடு சிங்கள மக்களோடு கூட்டாட்சி நடத்துவதா என்பதெல்லாம் போராட்டத்தின் வளர்ச்சியே தீர்மானிக்கும்.