Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரஜினி, கனிமொழி மற்றும் சின்னக் குத்தூசி : எம்.ரிஷான் ஷெரீப்

கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தில் எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும் மிக முக்கியமான இரு நபர்கள் குறித்த உரையாடல்களைத்தான் காணக் கிடைக்கின்றன. தினம் தினம் விதம் விதமாகக் காணக் கிடைத்ததால் ஒரு கட்டத்தில் அச் செய்திகள் அலுத்து விட்டன. அண்ணாச்சி, ஜீவஜோதி, நித்யானந்தா, ரஞ்சிதா போல அண்மைய காலத்தில் உலகத் தமிழர் உரையாடல்களை ஆக்கிரமித்துக் கொண்ட இரு இந்திய ஜோடிகள் ரஜினிகாந்த் மற்றும் கனிமொழி.

இருவருமே பிரபலங்கள். இருவர் குறித்தும் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. ஒருவர் மருத்துவமனையிலும் மற்றவர் திஹார் சிறைச்சாலையிலும் சிறைப்பட்டிருக்கிறார்கள். இருவர் குறித்தும் உரையாட, சமூகத்தில் பல விடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் ஊடகங்களும் கலந்துரையாடல்களும் அவர்களது மர்மப் பக்கங்களையே திறக்கப் பார்க்கின்றன. ரஜினியைப் பற்றிப் பெரிதாக ஒன்றுமில்லை. அவரது உடல் நலப் பிரார்த்தனைகளே அதிகமதிகம் சமூக இணையத் தளங்களில் பகிரப்படுகின்றன. ஆனால் கனிமொழி பற்றிய உரையாடல்களும், விவாதங்களும், ‘அவர் ஒரு பெண்’ என்ற அர்த்தமும், அடிப்படைக் காழ்ப்புணர்ச்சியும் மிகைத்த கருத்துப் பரிமாற்றங்களாகவே இருக்கின்றன.

யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் இந்திய அரசுக்கு விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் அவசியமாக இருந்ததெனவும், பொது மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்திய அரசாங்கம் நன்கு அறிந்திருந்ததென்றும் தான் நம்புவதாக ஐ.நா.சபையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் திரு. கோர்டன் வைஸ் இப்பொழுது கருத்துத் தெரிவித்துள்ளார். நல்லவேளை, அக் கால கட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியிலில்லை. அதுவே ஈழ யுத்தம் குறித்து கருணாநிதி ஆட்சியின் மீது ஜெயலலிதா பல குற்றச் சாட்டுக்களை தைரியமாக முன்வைக்கக் காரணம் எனவும் கூறலாம். அக் குற்றச் சாட்டுக்களும், அதற்கான தீர்வுகளென்ற சூளுரைகளும், பெண்களுக்கான தங்கப் புதையல் மற்றும் இன்ன பிற வாக்குறுதிகளும்தான் அவரை வெற்றியின் பக்கம் இழுத்துச் செல்லக் காரணங்களாக இருக்கக் கூடும். எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன, எத்தனை வாக்குறுதிகள் மறக்கடிக்கப்படுகின்றன என இனி பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் வெற்றியோடு எழுந்திருக்கிறது கனிமொழியின் தோல்வி. அவருடனேயே போய் சிறைக்குள்ளும் எட்டிப் பார்க்கின்றன ஊடகங்கள். அவரது சிறையறை எப்படியிருக்கும் என்ற ஊகத்தோடு, நேரடியாகப் பார்த்த அறிவிப்புக்களும் தவறாது இடம்பெறுகின்றன. பதினைந்துக்குப் பத்து அடி அளவேயான அறையானது மூன்று பக்கங்கள் சுவராலும் ஒரு பக்கம் கம்பிகளாலும் ஆனதென பிரபலமான ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. எழுதியவரை அழைத்து ‘ராசா அப்படியிருந்தால்தான் அது சிறை’ எனத் தெளிவுபடுத்த வேண்டும் போலிருக்கிறது. பழங்கால வடிவத்துக் கழிப்பறையும் அதே அறையில் அமைந்திருந்ததாக அதே ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. ‘அவ்வாறான கழிப்பறைகளைத் தன் வாழ்நாளில் பயன்படுத்தியிருப்பாரா கனிமொழி?’ என்ற ‘முக்கியமான’ விவாதம் சமூக இணையத்தளங்களில் இடம்பெறுகின்றன. குற்றம் புரிந்திருப்பினும், அவரும் நம்மைப் போன்ற ஒரு மனிதர் என்ற உண்மையை எளிதாக மறந்துவிடுகின்றனர் வாதங்களில் பங்கெடுப்பவர்கள்.

பெண்கள், அதிலும் பிரபலமான பெண்கள் பொது வாழ்க்கையில் ஏதேனுமொன்றைச் செய்துவிடுகையில் அவர்கள் குறித்த, மட்டமான கருத்துக்கள் பரவுவது இன்று, நேற்று நிகழ்ந்ததில்லை. அக் காலத்திலும் நடந்தவைதான். ஆனால் நாம் இன்னும் அக் காலத்தில்தான் இருக்கிறோமா? திரைப்படங்களில் நடிக்கும் பெண்கள் திரையில் அழும்போது சேர்ந்து துடிக்கும் சமூகத்திடம், பொதுவெளியில் அவர்கள் குறித்தான பார்வை இன்னும் ஒரு நிலையைத் தாண்டி உயரவில்லை. பெண்களைப் போகப் பொருளாகவே பார்க்கப் பழக்கப்படுத்தும் விளம்பரங்கள் சாலை முனைகளிலும், வீட்டுக் கூடங்களிலும், வெள்ளித் திரைகளிலும், ஊடகங்களிலும் இப்பொழுதும் கூட அதிகளவு மின்னிக் கொண்டிருக்கையில் இளஞ் சமுதாயத்தினரிடம் பெண்கள் குறித்தான பார்வை உயர்ந்திருக்குமென எண்ணுவது கூடப் பிழையானது.

சிறையில் கனிமொழிக்கு மூக்குத்தி மறுக்கப்படுதலும், முப்பது அடி உயரத்தில் மின்விசிறி பொருத்தப்பட்டிருப்பதுவும் கூட கிண்டல் உரையாடல்களுக்கான கருப்பொருள்களாக இணையத்தளங்களில் வலம் வருகின்றன.

இச் சிறை வாழ்க்கை, ஒரு வகையில் கனிமொழிக்குக் கிடைத்த ஓய்வு எனச் சொல்லலாம். தேர்தல் காலங்களில் அலைய நேர்ந்த உடல் மற்றும் மன உளைச்சலைக் குணப்படுத்தும் ஒரு ஓய்வாக இதை அவர் ஏற்றுக் கொள்ளலாம். புத்தகங்கள் வாசிக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது அவருக்கு. ‘கண்காணாத தீவொன்றுக்கு சிறை செல்ல நேரிட்டால் என்ன புத்தகங்களைக் கொண்டு செல்வீர்?’ என உலகப் புகழ்பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான அமினாட்டா ஃபோர்னாவிடம் கேட்டபோது, அவர் ‘அகராதியைக் கொண்டு செல்வேன்’ எனச் சொன்னது போல (நன்றி – ‘வியத்தலும் இலமே’ அ.முத்துலிங்கம்) கனிமொழியிடம் விசாரித்திருக்கிறார்கள். அவரிடம் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இருந்ததாகப் பட்டியலிடுகின்றன ஊடகங்கள்.

இந்த வகையில் ரஜினிக்கு எந்தத் தொந்தரவுமில்லை. மருத்துவமனை எல்லா வசதிகளோடும் அவரை கணம் கணமாகக் கவனித்துச் சிகிச்சையளிக்கிறது. வைத்தியர்கள் பிற நாடுகளிலிருந்து வரவழைக்கப்படுகிறார்கள். ரசிகர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். நடிகர் தனுஷ், தனது மனைவியோடு மாமனார் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் சற்று ஆறுதலடைகின்றனர். ‘ரஜினி நலம்’ என்ற செய்தியோடு அப் புகைப்படம் உலகெங்கும் அனுப்பப்படுகிறது. அடுத்த நாள் செய்திப் பத்திரிகைகளுக்கு முன்பக்கத்தில் வெளியிட புகைப்படத்தோடு ஒரு செய்தி கிடைத்தாயிற்று.

பத்திரிகைகள் விற்பனையோடு எல்லாம் நலம். இதே செய்தி சமூக இணையத்தளங்களில் மாற்றி மாற்றிப் பகிரப்படும்போதுதான் பெரும் அலுப்பு தோன்றுகிறது. இதற்காகவே ரஜினி சீக்கிரமே முழுமையாகக் குணமாகி வீடு போனால் நல்லது என்ற எண்ணம் எழுகிறது.

இப் பிரபலங்கள் குறித்து இங்கு கவனிக்கவும், விவாதிக்கவும் வேண்டிய விடயமே வேறு. ஒருவர், எங்கோ ஒரு கிராமத்தில் வறிய குடும்பத்தில் பிறந்து, இந்திய நட்சத்திரமாக உயர்ந்து, மிகுந்த புகழுக்குரியவராகி, இன்னும் மக்களின் வேண்டுதலில் இருப்பவர். மற்றவர் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து, புகழுக்குரியவராகி, தான் இருந்த உயரத்தினின்றும் வீழ்ந்து இன்று மக்களின் தூற்றுதல்களுக்கு ஆளாகி இருப்பவர். இதற்கான காரணங்களும், திறமைகளும், வெற்றி பெற்றவரின் முயற்சிகளும்தான் விவாதிக்கப்படுகையில் நல்ல கருத்துக்களை எழுப்பக் கூடியன. அதைத் தவிர்த்து கிளம்பும் விவாதங்கள் எதுவும் நல்ல விளைவைப் பெற்றுத் தருதல் சாத்தியமேயில்லை.

இவ்விருவர் குறித்த செய்திகளால் நிறைந்த இணையத் தளங்களும் வலைப்பூக்களும் பெரிதாகச் சொல்ல மறந்த மறைவுச் செய்தியொன்றும் இருக்கிறது. அது எழுத்தாளர் சின்னக்குத்தூசியின் மறைவு. சின்னக்குத்தூசி, கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப்பெயர்களைக் கொண்ட இவரின் சொந்தப் பெயர் இரா.தியாகராஜன். எனினும் வாசகர்களால் ‘சின்னக்குத்தூசி’ என்றே பெரிதும் அறியப்பட்டவர். ஒரு பிரபலமான அரசியல் எழுத்தாளர் மற்றும் பத்திரிகை ஆசிரியர்.

உண்மையைச் சொல்லப் போனால் சின்னக்குத்தூசியின் எந்தவொரு எழுத்தையுமே நான் வாசித்ததில்லை. நான் வாசித்திருப்பதெல்லாம் ஒரு நேர்காணல். எழுத்தாளர்கள் கண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரால் நேர்காணப்பட்டு, காலச்சுவடு பதிப்பகத்தால் தொகுக்கப்பட்ட ‘உண்மை சார்ந்த உரையாடல்கள்’ தொகுப்பிலிருக்கும் சின்னக்குத்தூசியின் நீண்ட நேர்காணல். நேர்த்தியானதும் நேர்மையானதுமான பதில்களால் தன் வசம் ஈர்க்கிறார் சின்னக்குத்தூசி. இதுவே அவர் மீதான அபிமானம் எழக் காரணமாயிற்று. சமூகம், சாதி நிலவரம், மதக் கலவரங்கள், அரசியல், கட்சி நிலைப்பாடுகள், பெருந் தலைவர்களுடன் தனக்கிருந்த உறவு முறை எனப் பலவற்றை வெளிப்படையாக உரையாடியிருக்கிறார் சின்னக்குத்தூசி. இவ்வாறான ஒரு அரசியல் எழுத்தாளரை இழந்தமை தொடர்பில் எவ்விதமான துயரோ, கருத்துப் பகிர்வுகளோ சமூக வலைத்தளங்களில் இல்லை. எல்லாவற்றிலும் நான் மேற்சொன்ன இரு பிரபலங்களும் மட்டும்தான் நிறைந்திருக்கிறார்கள்.

ஊடகங்கள் இப்பொழுதும் கனிமொழியின் சிறையருகேயும், ரஜினியின் மருத்துவமனை அறை வாயிலிலும் காத்துக் கொண்டிருக்கக் கூடும். கனிமொழி விடும் சிறு தும்மல் கூட உடனடியாக பெரிய செய்தியாக்கப்பட்டு, இணையத் தளங்களில் பகிரப்பட்டு, அடுத்த கலந்துரையாடலுக்கான தலைப்பாகக் கூடும். நடிகர் தனுஷ் தனது மாமனாரின் புதிய புகைப்படங்களைத் தொடர்ந்தும் ட்விட்டரில் வெளியிடக் கூடும். இவற்றோடு விலைவாசி உயர்வு, மின்வெட்டு, தண்ணீர்த் தட்டுப்பாடு, வேலையின்மை எல்லாவற்றையும் மறந்த சனங்கள் இப் பிரபலங்கள் குறித்த புதிய செய்திகளுக்காக தினந்தோறும் காத்துக் கொண்டிருப்பதுவும் தொடரும்.

– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

Exit mobile version