Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தத்தின் பிறகான தேர்தலும், சிக்கல்களும் : எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், அவை குறித்த தமிழ்நாட்டின் உணர்வுகளையும், நாட்டின் அரசியல் நிலவரங்களையும் மிகச் சரியான முறையில் புரிந்து கொள்ள ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு முடியாமல் போனமையால், அதற்குப் பதிலாக பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த இலங்கைக்கு நேர்ந்தது. அதே போல விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த நீதமான பார்வை இல்லாத காரணத்தால் அதற்காக இந்தியாவுக்கும் பெரியதொரு நஷ்ட ஈட்டைச் செலுத்த நேர்ந்தது.

விடுதலைப் புலிகளுக்கெதிராகச் செய்யப்பட்ட யுத்தத்தின் போது, அதைத் தடுக்கவென இந்தியாவிடமிருந்து எந்தவொரு உறுதியான தலையீடும் இருக்கவில்லை. தமிழ்நாட்டுச் சக்திகளே இந்தியாவை ஆண்டன என்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இருந்த அரசியல் ரீதியான உறவு முறைகள் யுத்தகாலத்திலும் கூட சிறந்த முறையில் பேணப்பட்டதென்றும் கூட சொல்லலாம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்தத்தின் மூலம் தோற்கடித்த போதிலும் கூட, யுத்தத்தின் பின்னர் உருவாகக் கூடியதும், முகம்கொடுக்கவும் வேண்டி வரும் சிக்கல்களுக்கு, யுத்தத்தின் போது காட்டிய அதே தீவிரத்தோடு தீர்வு காண இலங்கையால் முடியவில்லை. அதற்காக இலங்கை முயலவும் இல்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உதவிய வெளிநாட்டு சக்திகளை முழுவதுமாக மிச்சம் வைத்துவிட்டுத்தான் இலங்கையானது, விடுதலைப் புலிகளை போரில் வென்றிருக்கிறது.

சர்வதேச மட்டத்தில் இப்பொழுதும் கூட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கென பாரிய அளவிலான சக்தியும், வரவேற்பும் இருக்கின்றது. அவர்களது பிரச்சினைகளை அனுதாபத்தோடு பார்க்கும் மக்களும் சர்வதேச அளவில் இருக்கின்றனர்.

எனினும் யுத்தம் முடிவடைந்ததன் பிறகு, யுத்தத்தினால் இன்னல்களுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையை மீளவும் சிறந்த முறையில் கொண்டு செல்லவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அனைவரும் மதிக்கக் கூடியதும், அனைவருக்கும் நம்பிக்கை ஊட்டக் கூடியதுமான நல்லதொரு தீர்வை பெற்றுக் கொடுக்கவும் என இலங்கை அரசாங்கமானது சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்திருக்குமேயானால், குறைந்த பட்சம் அரசியல் சூழல் மாறுபட்டதாக அமைந்திருக்கும்.

 இன்னல்களுக்குள்ளாகிய மக்களின் வாழ்வாதாரத்தை திரும்பவும் பழைய நிலைமைக்குக் கொண்டு செல்லவென அரசாங்கமானது, தற்போது அனேக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது உண்மைதான்.

என்றபோதிலும் அந் நடவடிக்கைகள் அப் பிரதேசங்களில் வாழும் துயருறும் மக்களை மேலும் மேலும் துயரத்துக்குள்ளாகுபவையாகவே அமைந்துள்ளன எனில் அந் நடவடிக்கைகளினால் என்ன பயன் இருக்கப் போகிறது?

தமிழ் பிரதேசங்களில், நகர சபைத் தேர்தலை நடத்தியது அரசின் மிகவும் நல்லதொரு நடவடிக்கை எனச் சொல்லலாம். எனினும் அதனை யுத்தத்துக்குப் பிறகான நகர சபைத் தேர்தல் எனக் கருதி, அரசாங்கமானது தனது ஆளுமையை அதிக அளவில் அத் தமிழ் மக்களிடம் செலுத்தாதிருந்திருக்கலாம். அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு, அவர்கள் விரும்பியவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை முழுமையாக வழங்கியிருந்தால், அத் தேர்தலில் யார் வென்றிருந்தாலும், தேர்தல் நேர்மை குறித்த கௌரவமானது இறுதியில் அரசாங்கத்துக்கே கிடைத்திருக்கும்.

எனினும் அரசாங்கத்தின் பலம் வாய்ந்த தலையீடுகளின் காரணமாக, தமிழ் மக்களால் அரசாங்கமானது தோற்கடிக்கப்பட்டமையே தற்பொழுது நடந்திருக்கிறது. அதாவது அரசாங்கமானது தான் தோற்கும் வாய்ப்புக்களை, தனது அதிகபட்ச தலையீடுகளின் காரணமாக தானே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களைப் பொறுத்த வரையில் இலங்கை அரசின் நடவடிக்கைகளில் எந்த நம்பிக்கையும் கொள்வதற்கான எந்த வாய்ப்புக்களும் இல்லை.

பொதுவாகப் பார்க்கையில், வடக்கில் நடைபெற்ற தேர்தலில், கள்ள வாக்குப் பிரச்சினைகள் ஏற்படாத போதிலும், அத் தேர்தலின் மீதான ஜனநாயக உரிமைகள் சிதைக்கப்பட்ட பல சம்பவங்கள் அங்கு நடந்தேறியிருக்கின்றன என்பதே நிதர்சனம்.

உதயன் பத்திரிகை ஆசிரியர் மீதான தாக்குதலானது, மீண்டும் வடக்கின் நிலைமைகள் குறித்த மோசமான சித்திரத்தையே வரைந்து சென்றிருக்கிறது. அத் தாக்குதலை யார் மேற்கொண்டிருப்பினும், அத் தாக்குதலுக்கான கெட்ட பெயரானது அரசாங்கத்தின் மீதே சுமத்தப்படும். வடக்கில் ஆயுதந் தாங்கியிருக்கும் அனைத்து அரசியல் குழுக்களையும் நிராயுதபாணிகளாக்குவதுவும் இராணுவப் படைகளை அங்கிருந்து அகற்றி,  கடமைகளை  செய்யவிடுவதுமே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ்வதைத் தடுக்க, எடுக்கப்பட வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் ஆகும்.

இன்னும், வடக்கில் நகர மற்றும் பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ் வேட்பாளர்களுக்கு, சுதந்திரமாக அவர்களது கடமைகளை மேற்கொள்ளும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுவும் அரசின் கடமையாகும். இவ்வாறான மிகக்குறைந்தபட்ச நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படாமல், மக்களின்  அடிப்படை உரிமைகள் குறித்த பிரச்சனைகள் கூடப் புரிந்துகொள்ளப்படாமலிருக்கும் நிலையில், இலங்கைத் தீவு இன்னும் சிக்கல்களுக்குள் தள்ளப்படும் நிலையே உருவாகும்.

Exit mobile version