Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

சுருக்கம்

இக்கட்டுரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி மற்றும் சமூக விலக்குப்பற்றியதொரு ஆய்வுக் கற்கையாகும். இக்கற்கையின் முன்னைய பகுதி வரல◌ாற்றுரீயாக இடம்பெற்ற இரண்டாம்தரத் தகவல்களிளன அடிப்படையாகக் கொண்டது. ஏனைய பகுதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களின் ஒரு பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளினைப் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றன. உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களில் பஞ்சமர் என அழைக்கப்படும் மரபரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவம் அதிகமாக காணப்படுவது இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்ட மிக முக்கிய விடயமாகும். யுத்தம் சாதி, வகுப்பு வேறுபாடுகளின்றி அனைவரையும் பாதித்த போதிலும், நீண்டகால அடிப்படையில் உருவாகிய உள்ளுரில் இடம்பெயர்ந்தோர் வசிக்கும் அகதி முகாம்கள் யாழ்ப்பாணத்தில் எண்ணிக்கையில் அதிகமான வெள்ளாளர் சாதியினைரை தவிர்த்து, மரபுரீதீயாக சலுகை மறுக்கப்பட்ட சாதிக்குழுக்கிளின் பின்னணியில் உருவாகியதை அவதானிக்க முடிகின்றது.

இக்கற்கைக்காக தெரிவு செய்யப்பட்ட மல்லாகம் என்ற கிராமத்திலுள்ள அனைத்து இடம் பெயர்ந்தோர் முகாம்களும் நளவர், பள்ளர் சாதிகளின் பின்னணியில் உருவாகிமை குறிப்பிடத்தக்கது. உயர்ந்த சாதிகளின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடாற்றுவதில் உள்ள பாரபட்சம், உயர்ந்த சாதிக்காரர்களுக்கு சொந்தமாக உள்ள கிணற்றுத் தண்ணீரை பெற்றுக் கொள்ளவதில் உள்ள சிரமங்கள், நிலச் சந்தையில் பஞ்சமர் சமூகத்தினைச் சேர்ந்தோர் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் யாழ்ப்பாணச் சமூகத்தில் இன்றுவரையுள்ள சாதிப் பாகுபாட்டுகளுக்கான எடுத்துக்காட்டுகளாகும். சாதியானது பலவிடயங்களில் வெளிப்படையாக அங்கீகரிக்கப்படாத போதிலும் சாதியின் முக்கியத்துவம் பற்றி பலரினாலும் குறிப்பாக கல்விகற்ற மத்திய தரவர்க்கத்தினால் பொதுவானதொரு மறுப்புநிலையே காணப்படுகின்றது.

சாதிதொடர்பான உண்மையான சமூக நடைமுறைகள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும் பல்வேறு விசாரணைகளுக்கு இடம்கொடுப்பதாகக் காணப்படும் அதேநேரம் பயங்கரவாதம், தேசியவாதம், விடுதலைப் போராட்டம் முதலிய பாரிய எடுத்துரைப்புக்களைக் (Meta-narratives) குறைப்பதற்கு ஆர்வம் காட்டிவரும் அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் மேலெழுந்தவாரியான அதிகாரப+ர்வமான உண்மைகளுக்கும் அப்பால் புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்று என்பதை வலியுறுத்துகின்றன.

பின்னணி

இலங்கையில் 1960 பது, 1970 பதுகளில் சமூகவியல் மற்றும் மானிடவியல் கற்கைகளில் சாதி ஒரு முக்கிய ஆய்வுப் பொருளாக இருந்தது. பொரும்பாலான இக்கற்கைகள் சாதியினை சமூகத்தை ஒழுங்குபடுத்தும் சமூக முறைமையாக பகுப்பாய்வு செய்ததோடு, சமூக ஊடாட்டம், சமூக ஒழுங்கு என்பவற்றை முறைமைப்படுத்துமொரு சமூக நிறுவனமாக ஆராய்ந்தன (Banks 1957, 1960; Leach 1960, 1961; Yaman 1967, Ryan 1993; Silva 1982; David 1973, 1974a, 1974b; Arumainayagam, 1979; Pfaffenerger 1982). சாதி என்ற சமூக நிறுவனத்திற்குள் இடம்பெறும் சமூக விலக்குகளையோ சமூகப் பாகுபாடுகளையோ ஆராய்வதற்கு இக்கற்கைகள் அதிக ஆர்வம் காட்டவில்லை. இவ்வாறு சமூகத்தினை செயற்பாட்டுவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆய்வுக் கற்கைகள், ஒரு சமூகத்தின் மக்களிடையே காணப்படும் பிரிவினைகள், பாகுபாடுகள் என்பவற்றை சமூக, பொருளாதார, கலாசார செயற்பாங்கில் தவிர்க்கமுடியாததொரு விடயமாகவே புரிந்துகொள்கின்றது.

இச்செயற்பாடுகள் ஒரு சமூகத்தின் குழு அடையாளத்தினை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதனை நடைமுறைப்படுத்தி நிற்கின்றது. எவ்வாறாயினும், இத்தகைய சமூக, பொருளாதார, கலாசார நடைமுறைகளால் ஒரு குழு சமூகத்தின் இன்னொரு குழுவிடமிருந்து வேறுபடுவதென்பது தவிர்க்க முடியாது. யாழ்ப்பாணச் சமூகம் யுத்தம், வன்முறை என்பவற்றை எதிர்கொள்வதற்கு ஐக்கியம் ஆகும் அதேநேரம் சாதி மற்றும் சமூக வேறுபாடுகளான பால்நிலை, மதம், பிரதேசம் என்பவற்றின் அடிப்படையில் உள்வாரியாக வேறுபாடுகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. உண்மையில் பாரம்பரிய நடைமுறைகளால் தோன்றிய சில சமூக விலக்குகள் அல்லது பாகுபாடுகள் தற்கால வன்முறைச் சமூகத்தில் தேவையற்றதொன்றாக மாற்றம் கண்டுவரும் அதேநேரம், அவை அத்தகையதொரு நிலையில் (மீள்)உற்பத்திசெய்யப்பட்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

இக்கற்கை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களிடம் தொடர்புபடும் சாதி அடிப்படையிலான சமூக வேறுபாட்டினை ஆராய்வதில் ஆர்வம் காட்டுகின்றது. மேலும், இக்கற்கை முன்னைய, தற்கால யாழ்ப்பாணச் சமூகத்தில் இடம்பெற்ற, இடம்பெறும் சாதி விலக்கு, பாகுபாடு வடிவங்களை அடையாளம் காண்பதற்கு முயற்சிக்கின்றது.

யாழ்ப்பாணச் சமூகம் தொடர்பாக அறியப்பட்ட வரலாறு பூராகவும் சாதி ஒரு பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைக்கூறாக இருந்து வருகின்றது. யாழ்ப்பாணச் சாதி முறைமையானது சிங்களச் சாதி முறைமையின் பல இயல்புகளுடன் ஒத்த நிலைகளைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பாரிய நிலத்திற்குச் சொந்தக்காராகவுள்ள ஆதிக்க சாதியான வெள்ளாளர், சிங்களச் சமூகத்தில் கொய்கம சாதிக்குப் பல வழிகளில் இணையான இயல்புகளைக் கொண்டுள்ளனர். சாதி அடுக்கமைவில் இடைப்பட்ட நிலையிலுள்ளோராகக் கருதப்படும் கரையார் சிங்களச் சமூகத்தில் கராவ சாதியினையொத்த பல கண்புகளைக் கொண்டுள்ளனர். பிறப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டதாகக் கருதப்படும் கடைமைகளைச் செய்யும் குறிப்பிட் சில சாதிக் குழுக்கள் ஆதிக்க சாதிக்கு சேவகம் செய்பவர்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். எனினும், உயாழ்ப்பாணச் சாதிமுறைமை சிங்களச் சாதி முறைமையிலிருந்து சில வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. முறைமையிலிருந்து சில வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணச் சாதி முறைமையில் சடங்குசார் தூய்மை என்ற கருத்து நிலை நாளாந்த இந்து நடைமுறையில் மிக முக்கியமானதொன்றாகவுள்ளது.

அதிகமான இந்துச் சடங்கு முறைகள், யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட சடங்குரீதியாகத் தூய்மையற்றதாக் கருதப்படும் ஊழியம் செய்யும் சாதிக் குழுக்களைச் சமூக, பொருளாதாரப் படிநிலைகளில் நிலபுலன்களை ஆளும் வெள்ளாளர் தமது தலைமையின் கீழ் கட்டுப்படுத்திக் கொண்டனர். மரபுரீதியாக விவசாயம், பொருளாதாரம் மற்றும் சடங்கு ஒழுங்கு போன்ற விடயங்களால் வெள்ளாளச் சாதியினர் சமூகத்தில் ஒரு வலுமிக்க இடத்தினைப் பெற்றிருந்தனர். ஆனால் இம்முறைமைகள் தங்கி வாழும் ‘கீழ்ச்’ சாதியினருக்குப் பல வழிகளில் பாதிப்புக்களைக் கொடுத்ததுடன் அடிமை நிலைக்கும் அவர்களை இட்டுச்சென்றன. ஏலவே சலுகையளிக்கப்பட்ட வெள்ளாளக் குடும்பங்கள் காலனித்துவ காலங்களில் முன்னேற்றததிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட

புதிய வாய்ப்புக்களை (கல்வி, வியாபாரம், வர்த்தக விவசாயம் மற்றும் அரச உத்தியோகம் முதலானவை) தமதாக்கிக் கொண்டனர். இவ்விடயம் சாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை மேலும் மெருகூட்டவும் சாதி முறைமையினை இறுக்கப்படுத்தவும் துணையோயின (Pfaffenberger 1982, 1990). வெள்ளாள அல்லது ஐரோப்பிய எழுத்தாளர்களால் யாழ்ப்பாணச் சமூகம் பற்றி எழுதப்பட்ட காலனித்துவ கால இலக்கியங்கள் வெள்ளாளரது கருத்துக்களை அதிகம் உள்ளடக்கியிருப்பதோடு இவ்வெழுத்துக்கள் பெரும்பாலும் தீண்டத்தகாதவர் எனக்கருதப்பட்ட சாதிக் குழுக்களின் நிலை தொடர்பாக மௌனத்தினையே கடைப்பிடித்தன.

யாழ்ப்பாணச் சாதி முறைமைக்கு எதிரான முதலாவது கிளர்ச்சி 1920களில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியினாலும் அதன் முகவர்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக உரிமை மறுக்கப்பட்ட சாதிக் குழுக்கள் பல கிளர்ச்சி நடவடிக்கைகளைத் தாடர்ச்சியாக மேற்கொண்டனர். இவ்வத்தியாயத்தின் பிற்பகுதியில் விபரிக்கப்படுவது போல, இக்கிளர்ச்சி நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களை எடுத்ததுடன் நீண்டகாலமாகப் பல அமைப்புக்களாலும் (சடங்கு, அரசியல் மற்றும் பொது சமுதாய அமைப்புகள்) தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களின் இக்கிளர்ச்சி நடவடிக்கைகளை அடக்குவதற்காக வன்முறைகள் உட்பட பல்வேறு திட்டங்களை வெள்ளாளர் சாதியைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டனர்.

கீழ்ச் சாதி எனக்கருதப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்குச் சில சலுகைகள் அளிக்கப்பட்டன. ஆனால் இறுதியாக எழுச்சிபெற்ற தமிழ்த் தேசியவாதம் (Tamil Nationalism) தமிழ்ச் சமூகத்திலிருந்த வித்தியாசங்களை சீர்செய்ய முனைந்தது. 1960கள் வரை அதிகரித்துவந்த சாதி தொடர்பான சிக்கல்கள் ஒப்பீட்டுரீதியில் அலட்சியத்திற்குள்ளாகின. இந்நிலைக்கு சிங்கள ஆதிக்க அரசியலில் தமிழர்கள் தமது பொது மனக்குறைகளை மையப்படுத்தி ஒரு ஒழுங்கு நிலைக்குள்ளாகி இயங்குநிலை பெற்றமை குறிப்பிடத்தக்க முக்கிய காரணமாகும். ஃபாபன்பேகர் (1990) இவ் விடயத்தினை ‘தற்பாதுகாப்புத் தமிழ்த் தேசியவாதம் (Defensive Tamil Nationalism) என அடையாளப்படுத்துகின்றார். இந்நிலை தாழ்த்தப்பட்ட சாதிக்காரர்களின் சாதி எதிர்ப்புப் போராட்டங்களைப் படிப்படியாக நிலைகுலையச் செய்ததோடு மறுபக்கத்தில் இத்தகைய போராட்டங்கள் தமிழர்களால் சிங்கள ஆதிக்க அரசுக்கு எதிரானதொரு பாரிய போராட்டமாக நகர்த்தப்பட்டன. ஆரம்பத்தில் தற்பாதுகாப்புத் தமிழ்த் தேசிய வாதம் பாராளுமன்ற அரசியல் வரையறைக்குள் இயங்கும் வெள்ளாள அரசியற் தலைவர்களாலேயே கையாளப்பட்டும் இயற்குநிலைக்கு உட்படுத்தப்பட்டும் வந்தது.

இக்காலத்தில் யாழ்ப்பாணச் சமூகத்தில் செயல்நிலையிலிருந்த சாதிக்கெதிரான போராட்டம் பலவழிகளிலும் மாற்றத்திற்குள்ளாகி வந்தது. எவ்வாறாயினும், தமிழ்த் தேசியவாதத்தினை முன்னிலைப்படுத்தித் தோற்றம் பெற்ற தமிழ் ஆயுதக் குழுக்களில் வலிமை பெற்ற LTTE யினது வளர்ச்சியோடு இந்நிலைமை மாற்றத்திற்குள்ளாகின்றது. இப்போக்கு பல்வேறு நிலைகளிலும் யாழ்ப்பாணச் சமூகத்தில் வெள்ளாளரது ஆதிக்கத்தினைக் குறைவடையச் செய்தது. ஆனால் இத்தகைய விடயங்களால் தமிழச் சமூகத்திலுள்ள உரிமைகள் குறைக்கப்பட்ட சாதிக்குழுக்களின் மனக்குறைகளுக்குப் பதிலளிக்கப்பட்டதா என்பது இன்னமும் கேள்விக்குரிதொரு விடயமாகவே உள்ளது. LTTE அனைத்து தமிழர்களையும் சாதியற்றதொரு நிலையிலேயே அடையாளம் காணவிளைகின்றது. அத்துடன் சாதி அடிப்படையில் பிரிவு காணப்படும் ஒரு சமூகத்தில் LTTE அமைப்பின் வெள்ளாளர் அல்லாத தலைமைத்துவத்தால் சாதி தொடர்பான மனக்குறைகளுக்கு வெளிப்படை யானதொரு நடவடிக்கைளும் எடுக்கப்படுவதில்லை.

பதிலாக இச்சாதி உணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. பதிலாக இச்சாதி உணர்வு நிலைகளை இணைத்து அதனை ஒரு பொதுத் தேசிய இயக்கத்தினை நோக்கி நகர்த்துவதே அவர்களது வெளிப்படையானதொரு முயற்சியாக பதிலாக இச்சாதி உணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. பதிலாக இச்சாதி உணர்வு நிலைகளை இணைத்து அதனை ஒரு பொதுத் தேசிய இயக்கத்தினை நோக்கி நகர்த்துவதே அவர்களது வெளிப்படையானதொரு முயற்சியாகவுள்ளது. இத்தகைய நோக்கம் கருதிய உபாயங்கள் சாதி பற்றிய உண்மையானதொரு நிலைமையினையும் தொடர்ச்சியாக வெளித் தெரியும் சாதிச் சமத்துவமின்மையையும் மறைத்துள்ளது. இன்னொரு பக்கத்தில், யாழ்ப்பாணச் சமூகத்தில் என்றாவது சமாதானம் உருவாகி, ஆட்சி யார் கையில் இருப்பினும், அரசியல், சமூகச் செயற்பாடுகளில் சாதி மீள உருவாக்கம் பெறும்நிலையே காணப்படுகின்றது.

இத்தகையதொரு சிக்கலான சூழ்நிலையில் யாழ்ப்பாண சமூகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் போக்கு மற்றும் பண்பு என்பவற்றை அடையாளம் காண்பதாகவும் மதிப்பீடு செய்வதாகவும் இக்கற்கையுள்ளது. இவ்வத்தியாயம் யாழ்ப்பாணத்தின் சாதி தொடர்பான தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதுடன் ஆரம்பமாகி, இடப்பெயர்வு மற்றும் யுத்த சூழ்நிலைகளில அடக்கப்பட்ட சாதிக் குழுக்களின் நிலைமைகளைப் பரீட்சிக்கின்றது. மேலும் இக்கற்கை வடக்கிலங்கைத் தமிழ்ச் சனத்தொகை மீதான LTTEயின் வலுப்பிரயோகப் போக்கினையும் பரிசீலிக்கின்றது. தற்கால யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாடு தொடர்பான விவகாரங்களை எடுத்துரைப்பதற்கு எம்மிடையே தகவலற்றதொரு நிலைமை காணப்படுகின்றது. தற்கால பாதுகாப்புச் சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட சனத்தொகை தொடர்பாக எத்தகையதொரு காத்திரமான இனவரைவியல் ஆய்வினையும் மேற்கொள்ள முடியாததொரு நிலையே இந்நிலைமைக்கான முக்கிய காரணமாகும். துரிதமாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்விலிருந்து பெறப்பட்ட முதற்தரத் தகவல்களைக் கொண்டு சாதி அடிப்படையிலான பாகுபாடு பற்றியதொரு விளக்கத்தினைக் கொடுப்பதற்கான முயற்சியே இங்கு மேற்கொள்ளப்பட்டது.

தொடரும்….

Exit mobile version