Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் ! : தமிழில் – எம். ரிஷான் ஷெரீப், இலங்கை

குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது.

_________________________________________________________________________________
யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !
தமிழில் – எம். ரிஷான் ஷெரீப், இலங்கை

உங்களது முந்தைய இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் புதிய நாவலின் சம்பவங்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அதன் கதையானது, பரம்பரைகள் மற்றும் கால இடைவெளி பலவற்றைக் கடந்து கிரீஸ், பாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விரிந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானைத் தாண்டி சர்வதேச அளவில் கதையை விரிவாக்கிச் செல்ல நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?

காலித் ஹுஸைனி : குடும்பம் எனப்படுவது ஒரு ஆப்கானியனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அடையாளம் ஆகும். எவரும் தன்னையும், தன்னைச் சுற்றியிருப்பவரையும் புரிந்து கொள்வதைப் போலவே உலகம் போன்ற அனைத்தினுள்ளும் தன்னை நிலைநிறுத்துவதும் குடும்பத்துக்கு இணையாகத்தான். இந் நாவலின் கதையை ஆப்கானிஸ்தானுக்கு வெளியே கொண்டு சென்றது நான் வேண்டுமென்றே செய்த ஒன்றுதான். அவ்வாறே இக் கதையின் யதார்த்தமான நடைக்கு அவ்வாறான சர்வதேசப் பரம்பல் அவசியமானது. காபூல் நகரத்தில் ஆரம்பித்து கந்தஹார் பிரதேசத்தில் முடியும் ஒரு கதையைக் கூற எனக்கு அவசியப்படவில்லை. கடந்த பத்து வருட காலத்துக்குள் நான் உலகின் பல இடங்களுக்கு பயணம் செய்து பெற்ற அனுபவங்களை, எனது கதையின் கதாபாத்திரங்களுக்குத் தேவையான பூகோளச் சுற்றாடலை உருவாக்குவதற்கு உபயோகப்படுத்த எனக்குத் தேவைப்பட்டது. அவ்வாறே ஒரு எழுத்தாளராக ஆப்கானிஸ்தானைத் தாண்டிய அனுபவங்களை எனது படைப்பில் சேர்த்துக் கொள்ள நான் விரும்பினேன். சில எழுத்தாளர்கள் தமது வாழ்நாள் முழுவதும் ஒரே நகரத்தை அடிப்படையாகக் கொண்டு அருமையான பல புத்தகங்களை எழுதுகின்றனர். அது பாராட்டப்பட வேண்டிய திறமைகளிலொன்று. எனினும் எனக்கு இத் தொகுப்பை எழுதும்போது இந்த இடத்தைத் தாண்டிச் செல்வதே எனது தேவையாக இருந்தது.

மிகச் சாதாரணமானதொரு எண்ணத்தோடுதான் இப் புத்தகத்தை ஆரம்பித்தேன். ஒரு தந்தை, தனது சிறு பிள்ளைகள் இருவரோடு பாலைவனத்தினூடு காபூல் நகரம் நோக்கிச் செல்லும் சந்தர்ப்பமொன்றின் மூலம் அந்த எண்ணம் விரிவடைகிறது. எல்லாப் பக்கங்களிலும் கிளை விரித்துள்ள மரமொன்றின் தண்டைப் பற்றிய சித்திரம் என்னுள் வரையப்பட்டிருந்தது. அந்தச் சாதாரண எண்ணம் மற்றும் மரத் தண்டின் உருவத்துக்கு மேலதிகமாக வேறெதுவும் கதையொன்றாகக் கோர்க்கப்பட்டிருக்கவில்லை. முதலில் பிரான்ஸுக்குச் செல்வது குறித்தும் அங்கிருந்து பிறகு கிரீஸுக்குச் செல்வது குறித்தும் எண்ணம் எதுவும் முதலில் எனக்குள் இருக்கவில்லை. கதையானது, அதுவாகவே படிப்படியாக அவ்வாறு உருவானது. இக் கதையானது எவ்வளவு தூரம் விரிந்து செல்லும் என்பதையும் எவ்வளவு வாழ்க்கைகளை இக் கதையின் மூலம் தொடமுடியும் என்பதையும் தேடிப் பார்ப்பதுவே எனது தேவையாக இருந்தது.

The Kite Runner நாவலுக்கு அடிப்படையாக அமைந்த அனுபவம் எது?

காலித் ஹுஸைனி : அக் கதையானது அதிகளவில் புனைவாகவே எழுதப்பட்டது. ஆனால் 1999 ஆம் ஆண்டின் மழைக்காலத்தில் ஓர் தினம் தொலைக்காட்சியில் நான் பார்க்க நேர்ந்த செய்தியொன்று அக் கதைக்கு அடிப்படையாக அமைந்தது எனக் கூறலாம். அச் செய்தியில் தலிபான்களைப் பற்றி ஒளிபரப்பப்பட்டது. ஆப்கான் மக்களுக்கு தலிபான்களால் விடுக்கப்படும் பல்வேறு எச்சரிக்கைகள் குறித்து அச் செய்தியில் கூறப்பட்டது. அவர்கள் காற்றாடி விளையாட்டையும் தடை செய்திருப்பாக அச் செய்தியில் அறிவிக்கப்பட்டது. காபூல் நகரத்தில் வாழ்ந்த காலத்தில் எனது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் காற்றாடி விட்டு விளையாடிய என்னைத் திகைப்படையச் செய்ய அச் செய்தியால் முடியுமாக இருந்தது.

ஆகவே அச் செய்தியைச் செவிமடுத்த பிறகு நான் எனது எழுதும் மேசைக்கருகே அமர்ந்து காபூல் நகரத்தில் காற்றாடி விடும் விளையாட்டை விளையாடிய சிறுவர்கள் இருவரைப் பற்றி 25 பக்கங்களில் ஒரு சிறுகதையை எழுதினேன். அது நான் நினைத்ததிலும் பார்க்க, அனுதாபத்தைத் தோற்றுவிக்கக் கூடிய விதத்தில் வெற்றிகரமாக எழுதப்பட்ட ஒரு கதையாக அமைந்தது. அதை எழுதி சில வருடங்கள் கடந்த பிற்பாடு, 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அக் கதையை மீண்டும் வாசிக்கும்போது அதனை ஒரு நாவலாக எழுத வேண்டுமென எனக்குத் தோன்றியது. ஆகவே நான் அக் கதையை மேலும் செப்பனிட்டும், மேலும் விடயங்களைச் சேர்த்து விரிவுபடுத்தியும் நாவலொன்றாக வடிவமைக்கத் தொடங்கினேன். அது பிற்காலத்தில் The Kite Runner நாவலாக அமைந்தது.

நீங்கள் அதன்பிறகு எழுதிய A Thousand Splendid Suns எனும் படைப்பில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் எதிர்நோக்கும் மிகவும் வித்தியாசமான அனுபவங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந் நாவலை எழுத நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?

காலித் ஹுஸைனி : நான் The Kite Runner நாவலை எழுதி முடித்ததுமே இரண்டாவது தொகுப்பையும் எழுத வேண்டுமென எனக்குத் தோன்றியிருந்தது. அவ்வாறே பெண்கள் குறித்து எழுத வேண்டுமெனவும் எனக்கு எண்ணமிருந்தது. நான் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற நேரத்தில் யுத்தத்தின் உண்மையான குரூரத்தை நான் எனது கண்களால் நேரடியாக காணக் கூடியதாக இருந்தது. யுத்தத்தின் காரணமாக பெண்களின் வாழ்க்கையைக் குறிவைத்துள்ள அழுத்தங்கள், அவர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ள துயரங்கள், இடர்கள் மற்றும் பாலியல் வன்முறைகள், தடைகள், சாமான்ய வாழ்க்கை நடைமுறைகளிலிருந்து விலகி வாழ வேண்டிய நிர்ப்பந்தங்கள், மகளிர் இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை, தமது சட்டங்கள், சமூக மற்றும் அரசியல் உரிமைகள் போன்றவற்றுக்காக முன்வருதல் தடுக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் குறித்த கதைகளை நான் செவிமடுக்க நேர்ந்தது.

அது மிகவும் குரூரமான நிலையென எனக்குத் தோன்றியது. அதே போல அவை அனைத்தினுள்ளும் மிகவும் முக்கியமான கதையொன்று இருப்பதாக எனக்குள் உணர்ந்தேன். நான் 2003 ஆம் ஆண்டு காபூல் நகரத்தில் இருந்தபோது, பெண்களைக் குறித்து தனிப்பட்ட ரீதியில் பல கதைகளைக் கேள்வியுற்றேன். அக் கதைகள் பல வருடங்களாக ஒன்றாக இணைந்து கதாபாத்திரங்கள் பல கட்டியெழுப்பப்பட்டன. அதற்கிணங்க ஒரு சந்தர்ப்பத்தில் கதையானது கோர்க்கப்பட்ட பிற்பாடு, நான் அதன் மூலமாக A Thousand Splendid Suns நாவலை எழுதினேன்.

A Thousand Splendid Suns நாவலை எழுதியது, The Kite Runner நாவலை எழுதியதை விடவும் சிரமமான காரியமாக அமைந்ததா?

காலித் ஹுஸைனி : மிகவும் கடினமான காரியமாக அமைந்தது. ஒருவரினதல்லாமல், ஒன்றுக்கொன்று வேறுபட்ட சமூக பின்புலத்தைக் கொண்ட, ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபட்ட பெண்கள் இருவரது கோணத்தில் எழுதுவது உண்மையாகவே ஒரு சவாலாக இருந்தது. அதனால், அநேகமான சந்தர்ப்பங்களில் நான் அதனோடு உண்மையிலேயே போராட வேண்டியிருந்தது. இறுதியில், ஆப்கான் பெண்மணியொருவருக்குப் பொருத்தமான நிஜக் குரலைக் கைப்பற்றிக் கொள்ளுதல் போன்றவை குறித்து தீவிரமாகச் சிந்திப்பதை நிறுத்தியதன் பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்தோடு படைக்கப்படத் தொடங்கின.

இக் கதையில் அச்சங்கள், சிக்கல்கள், எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப் போதல் மற்றும் ஆளுமையுடன் இணைந்த பல்வேறு அடையாளங்கள் போன்ற நிறைய விடயங்கள் ஒன்றாக இணைந்த மனித வாழ்க்கைகளை முன் வைத்து நான் எழுதினேன். எனவே, அதனாலேதான் ஏதோவோரிடத்தில் அக் கதாபாத்திரங்கள் அவற்றுக்கு உரித்தான வாழ்க்கையைப் பெற்றுக் கொண்டு மிகவும் யதார்த்தமான கதாபாத்திரங்களாகத் தோன்றின.

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தமானது உங்கள் தேசத்தின் கலாசாரத்துக்கும் ஆப்கானிஸ்தானுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கும் ஏற்படுத்திய அழுத்தங்கள் எவ்வாறானதென உங்களால் விவரிக்க இயலுமா?

காலித் ஹுஸைனி : அவை, ‘இதோ இவ்வளவுதான்’ எனக் காட்ட முடியாத அளவுக்கு மிகப் பாரிய அழுத்தங்கள். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பல்வேறு யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம். உலகில் ஆப்பிரிக்காவுக்கு உரித்தற்ற வறிய நாடுகளிடையே ஒன்றாகக் கருதப்படும் நாடாக அது மாறியிருக்கிறது. உலகில் 218 ஆவது மட்டத்திலிருக்கும் கரடுமுரடான நில உற்பத்திகளோடு, மக்கள் தொகையில் நூற்றுக்கு முப்பது சதவீதமானோர் வறுமையின் கடைநிலைக்கும் கீழிருக்கும் நிலையே இப்போது எமது நாட்டிலிருக்கிறது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்பற்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியிருக்கிறது.

பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வந்திருக்கின்றனர். 2002 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 57 இலட்சமளவு பெருந்தொகையான மக்கள் திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்கு வந்திருக்கின்றனர். இவ்வாறு ஆப்கானிஸ்தானுக்கு மீண்டு வந்த மக்கள், ஆப்கானிஸ்தானில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதென்பது மிகவும் சிரமமான காரியமாக மாறியிருக்கிறது. மீண்டும் வழமை போல, முன்பிருந்தது போன்று தமக்கு நன்கு தெரிந்த மக்கள் சமூகத்தோடு இணைந்து தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான விடயமாக ஆகியிருக்கிறது. இதனாலேயே ஆப்கானிஸ்தானுக்கு நீண்ட கால பொருளாதார அபிவிருத்தியின் அவசியத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. கிராமங்களுக்குச் சென்று கிராம மட்டத்தில் மக்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்பக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவ்வாறே ஆப்கானிஸ்தானுக்கு யுத்தத் தீர்வொன்று தேவையற்றதெனக் கூறுவது சம்பந்தமாக நாம் அனைவருமே இப்பொழுது ஒரு பொதுவான இணக்கத்துக்கு வந்திருக்கிறோம்.

_________________________________________________________________

Exit mobile version