குடாநாட்டில் யுத்தம் முடிந்த ஒரு வருடத்துக்கு மேலான காலப்பகுதியில் எத்தனை கோவில்கள், கோபுரங்கள், சுற்று மதில்கள், மூலத்தானங்கள், வசந்த மண்டபங்கள் பெருமெடுப்பிலான கலியாண மண்டபங்கள் ஆங்காங்கே வேக வேகமாக எழுந்து வருகின்றன. கடைக் கட்டத் தொகுதிகள், முதலீட்டு நிலையங்கள், வர்த்தக வியாபார விரிவாக்கங்கள் எத்தனை எத்தனையாக வளர்ந்து வருகின்றன. அரசாங்கம் அபிவிருத்தி என்ற பெயரில் கண்கவர் பம்மாத்துக்கள் காட்டி நிற்க, உயர் வர்த்தக மேட்டுக்குடித் தமிழர் எனப்படுவோர் தத்தமது சொத்துச் சுகபோகப் பெருக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே வீழ்த்தப்பட்ட மனிதர்கள்– தமிழர்கள் –பற்றி அத்தகையோரிடம் எத்தகைய அனுதாபத்தையும் காண முடியவில்லை.
தமிழ் இனம், தன்மானத் தமிழர்கள், ‘பொங்கு தமிழர்கட்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு’ என்றெல்லாம் கூவியவர்கள் இன்று எங்கே போய்விட்டார்கள்? தமிழர்களைத் தமிழர்களே ஆள வேண்டும் என சண்டமாருதம் கிளப்பியவர்கள் இன்று தமிழர்களுக்குத் தமிழர்களே உதவ வேண்டும் என்று பேசாது ஓடி ஒளிந்து கொண்டது ஏன்? தமிழ் இரத்தம் கொதிப்பதாகக் கூறி இன உணர்வேற்றி முள்ளிவாய்க்கால் வரை ஏழை உழைப்பாளர்களைத்– தமிழர்களை –அழைத்துச் சென்று கொள்ளி வைக்க வழிகாட்டியவர்களின் சகபாடிகள் தான் இன்று வன்னி மக்களுக்குப் புறமுதுகுகாட்டி நிற்கிறார்கள்.
வன்னி மக்களினதும் குடாநாட்டின் இழப்புகளுக்கு உள்ளான மக்களினதும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனரமைப்பு என்பனவற்றின் ஊடக மறுவாழ்வு ஏற்படும் வரை, எந்தப் பெரும் திருவிழாவும் வேண்டாம், கோவில் கட்டிடங்கள் வேண்டாம், எந்த ஆடம்பரத் திருமணங்களும் வேண்டாம், பணச் செலவு மிக்க நிகழ்வுகள் எதுவும் வேண்டாம் அத்தனை பணத்தையும் பொது நிதியமாக்குவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்து அளிப்போம் என எந்தவொருவரும் அல்லது தாமே தமிழரின் ஆதிக்க அரசியல் பிரதிநிதி எனத் தேர்தலில் வெற்றி பெற நிற்கும் கட்சிகளும் முன்வரத் தயாராக இல்லை. அல்லது நாடு கடந்த அரசை உருவாக்கி அதனையே தமது மூலதனத் திரட்சியாக்கி வரும் ஆண்ட பரம்பரை வாரிசுகள் வன்னி மக்களுக்கு உதவ முன்வரவில்லை.
இவை ஏன் என்பதைத் தமிழ் உழைப்பாளர்களான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சாதாரண மக்கள் புரிந்து கொள்வது அவசியம். இங்கே தான் பழமைவாத மேட்டுக்குடிப் பிற்போக்குக் கருத்தியலும் சிந்தனையும் முன்னெழுந்து நிற்கிறது. ஆண்ட பரம்பரைக் கருத்தியல் இவர்களை வழி நடத்துகின்றது. இன மொழிப் பாசம் என்பவை போலியானவையாகும். வர்க்க வேறுபாடு, சாதி வேறுபாடு வன்னியான், மட்டக்களப்பான் என்பன போன்ற யாழ்ப்பாண மேட்டுக்குடிச் சிந்தனையும் செயற்பாடுமே இத்தனைக்குப் பின்பும் முன்னெழுந்து நிற்கின்றது. இத்தகைய கருத்தியலும் அதன் சிந்தனை நடைமுறைகளும் கண்ணோட்டங்களும் அடித்து வீழ்த்தப்படாத வரை, தமிழ்த் தேசிய இனத்திற்கு விமோசனமோ விடுதலையோ கிடைக்கமாட்டாது. அகத்திலும் புறத்திலும் ஆயிரம் மாநாடுகள் கூடினாலும், யாழ் மேட்டுக்குடி ஆதிக்கக் கருத்தியலை அரசியலிலும் சமூகத்திலும் பலவீனப்படுத்த வேண்டும். தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் உள்ள உழைக்கும் வர்க்கம் தன்னைப் பொத்தியுள்ள, இறுகிப் போன மூடிகளை உடைத்தெறிய முன்வர வேண்டும்.
இதுவே வன்னி மக்களைப் பற்றிய யாழ் மேட்டுக்குடிச் சிந்தனையை உடைத்து மனித நேயத்தையும் மறுவாழ்வையும் முன்னெடுக்கவுள்ள வழிமுறையாகும். இதனைத் தமிழ் இளந்தலைமுறை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இனிமேலும் இரண்டாயிரம் ஆண்டு காலப் பழைய, இற்றுப் போனவற்றை இனம் மொழி மதத்தின் பேரால் சுமந்து கொண்டு ஆதிக்க அரசியல்வாதிகளின் வாகனமாக இளந் தலைமுறையினர் குருட்டுத்தனமாக வழிநடக்கக் கூடாது. ‘கேள்விகள் எழுப்பி உண்மைகளைக் காண இளைஞர் யுவதிகளே முன்வாருங்கள்’ என்பதே இன்றைய அறைகூவலாகும்.
இலங்கை புதிய ஜநாயகக் கட்சியின் புதியபூமி இதழிலிருந்து