Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா?(2) – விஜிதரன் போராட்ட அனுபவங்களிலிருந்து : சபா நாவலன்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் 60 ஆண்டுகளாக தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தமிழ்த் தேசிய இனத்தின் சிந்தனையைத் தீர்மானிப்பதில் முக்கிய பாத்திரம் வகித்திருக்கிறது. இன்று பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்ற போராட்டத்தின் வரலாற்றுப் பாத்திரம் குறித்துக்காட்டத்தக்கது. வன்னியில் இன அழிப்பை நடத்தி முடித்த ராஜபக்ச பாசிசம் அதன் ஆதார சக்திகள் அனைத்தும் புடை சூழ இனச்சுத்திகரிப்பு நடைபெறும் நிலையில் மாணவர்கள் துணிந்து குரல் கொடுத்திருக்கிறார்கள். இவர்களது போராட்டம் பாதுகாக்கப்படவேண்டும். அது அடுத்த நிலையை நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆரம்பம்..

பேராசிரியர் கைலாசபதி போன்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளால் 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம், ஆரம்பத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகமாவிருந்து 1979 ஆம் ஆண்டு இலங்கையில் சுயாதீனமாக இயங்கும் பல்கலைகழகமாக தரமுயர்த்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு எதிராக தமிழரசுக் கட்சி போன்ற வலது சாரிக் கட்சிகள் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்துவந்தன.

கைலாசபதி தோற்றுவித்த கல்விப் பாரம்பரியம் அங்கே அதிகாரவர்க்கத்திற்கு எதிரான உணர்வை ஆரம்பத்திலேயே விதைத்திருந்தது. மத்தியதர வர்க்க சிறு நிலப்பிரபுக்கள் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாண சமூகத்தில் கைலாசபதியின் முற்போகான பாத்திரம் நிராகரிக்கப்பட முடியாத ஒன்று.

பின்னதாக பிற்போக்கு வாத வலதுசாரிகளின் ஆதிக்கம் 1977 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கிறது. அப்போதுதான் சு.வித்தியானந்தன் என்ற யாழ் வேளாள மேட்டுக்குடி சிந்தனையைக் கொண்ட தமிழரசுக் கட்சியின் அடியாள்  அரச செல்வாக்கோடு துணைவேந்தராகப் பதவியேற்றுக்கொள்கிறார். 1977 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை வலதுசாரி அதிகார வர்க்கம் சார்ந்த தலைமையும் அதற்கெதிரான மாணவர் போராட்டங்களும் ஒன்றோடொன்று முரண்பட நிலையில் வளர்ந்து வந்துள்ளன.

வெகுஜன அமைப்புக்கள்..

உரிமைக்காகப் போராடுகின்ற மக்களின் போராட்டம் வெற்றியடைவத்ற்கன அடிப்படை என்பதே மக்களை அமைப்பாக அணிதிரட்டுவதிலிருந்தே ஆரம்பமாகிறது. காஷ்மீரில் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவம் என்ற அளவில் இராணுவம் நிலைகொண்டிருகின்ற போதிலும், யாழ்ப்பாணத்தைப் போன்று இலகுவில் மக்கள் போராட்டத்தை இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் அழிக்க இயலவில்லை.

அங்குள்ள இஸ்லமிய மக்கள் தமது இஸ்லாமிய நிறுவனங்களில் ஒன்றுகூடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணையும் மக்களின் கூட்டு உணர்வு என்பது தனி மனிதர்களின் செயற்பாடுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமையும். தொழில் வளர்ச்சியடைந்த காலத்தில் தொழிற்சாலைகளில் மக்களின் ஒருங்கிணைவு புரட்சிகரமான தொழிற்சங்களை உருவாகுவதற்கும் அவை புரட்சிகரக் கடசிகளால் வழிநடத்தப்படும் போது சமூக மாற்றத்திற்கான போராட்டமாகவும் மேலெழுந்தன.

சேவைத் துறை என்பது மத்தியதர வர்க்கத்தின் பொருளாதர ஆதரமாகவும், சிறு நில விவசாயம் என்பது அதன் கீழணிகளின் உற்பத்தியாகவும் அமைந்த யாழ்ப்பாணத்தில் மக்கள் இயல்பாகவே கூடும் சமூக நிறுவனங்கள் அரிதாகவே காணப்பட்டன. சன சமூக நிலையங்கள், சிறிய பெண்கள் அமைப்புக்கள், பாடசாலை மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் சங்கங்கள், அபிவிருத்தி சங்கங்கள் ஆகியன ஆங்காங்கு காணப்பட்டன.

இந்த நிலையில் தேசிய இன ஒடுக்குமுறை இராணுவ ஒடுக்குமுறையாக விரிவடைகிறது. அதனோடு கூடவே தேசிய விடுதலைக்கான இயக்கங்கள் இராணுவக் குழுக்களாக உருவாகின்றன. அந்தவேளையில் மக்கள் மத்தியிலுள்ள வர்க்க முரண்பாடுகளையும் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் முன்வைத்து வெகுஜன அமைப்புக்கள் தோற்றம் பெறுகின்றன.

இந்திய அரச ஆக்கிரமிப்பின் ஆரம்பம்…

இதன் அபாயத்தைப் புரிந்துகொண்ட இந்திய அரசு இயக்கங்களின் இராணுவ மனோபாவத்தை ஊக்கப்படுத்தி அவற்றைப் பலம்மிக்க இராணுவக் குழுக்களாக வளர்க்கும் நோக்கில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சியை வழங்க முன்வருகின்றது.

தமிழீழ தேசிய விடுதலை இயக்கம்(TELO), தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF), ஈழப் புரட்சிகர அமைப்பு(EROS) போன்ற இயகங்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்கி அவற்றின் மத்தியில் எஞ்சியிருந்த குறைந்தபட்ச போராட்ட உணர்வையும் மழுங்கடித்தது. புரட்சிகர இயக்கங்களாக உருவாக வேண்டிய விடுதலை இயக்கங்கள் அதிகாரத்திற்காக மோதிக்கொள்ளும் இராணுவக் குழுக்களாக மாற்றமடைந்தன.

80களில் யாழ்ப்பாணப் பல்கலைகழகம்..

எண்பதுகளில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான வாசலின் முன்னால் காணப்பட்ட புத்தகக் கடையில் மார்க்சிய நூல்கள் விற்பனை செய்யப்பட்டன. பொதுவாக எந்த நேரமும் நூல்களை வாங்குவதற்கா அலைமோதும் மாணவர் கூட்டத்தைக் காணலாம். சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவான சிங்கள மாணவர்கள் தென்னிலங்கையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்து கருத்தரங்குகளில் கலந்துகொண்டனர்.

வெகுஜன அமைப்புக்கள் பல்கலைகழக்த்தில் கூட்டங்களை நடத்தின. சிறிய வெளியீடுகள், புதிய எழுத்தாளர்கள், போராளிகள் என்று பல்கலைக்கழகம் வெகுஜன அமைப்புக்களின் மையப்பகுதியாகச் செயற்பட்டது.

வெகுஜன அமைப்புக்கள் பலமற்றதாகக் காணப்பட்ட சமூகத்தில் யாழ்.பல்கலைக்கழகம் ஒரு வெகுஜன அமைப்பாகவே செயற்பட்டது. அதனை மயப்படுத்தி பலவீனமான வெகுஜன அமைப்புக்கள் இணைந்துகொண்டன.

சாகும்வரை உண்ணாவிரதம்..

1983 ஆம் ஆண்டில் யாழ்.பல்கலைக்கழகத்தில் அந்த ஆண்டு ஜூலைப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தெற்கு பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு சாகும்வரை உண்ணாவிரதமிருந்த்னர். தெற்கில் தாம் தொடர்ந்தும் கல்விகற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தம்மை தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு மாற்றுமாறே இந்த உண்ணாவிரதம் ஆரம்பமானது.

இவர்களது போராட்டம் வடக்கில் மாபெரும் எழுச்சியாக உருவெடுத்தது. இந்த எழுச்சியால் உந்தப்பட்ட இளைஞர்கள் பலர் சாரிசாரியாக இந்திய அரசின் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்காக இயக்கங்களில் இணைந்துகொண்டனர்.
அப்போது இராணுவ ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கியிருந்தது. பல பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களில் முக்கிய உறுப்பினர்களாயினர். பல்கலைகழகத்திலிருந்து விடுதலைப் புலிகள் சார்பான மறுமலர்ச்சிக் கழகம் என்ற அமைப்பும், பின்னதாக கலாச்சாரக் குழு என்ற அமைப்பும் இயங்க ஆரம்பித்தன. முரண்பாடுகளை விவாதிக்கும் தத்துவார்த்த களமாக யாழ்.பல்கலைகழகம் காணப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகம் தேசிய இன ஒடுக்குமுறை மேலோங்கிய காலத்தில் தனது எல்லைக்குள் காத்திரமான பங்களிப்பை வழங்கிய போதும் போராட்டத்தின் அரசியல் தலைமை இந்தியாவினதும் பிற்போக்குவாத இயக்கங்களினதும் பிடியில் இருந்தமையால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இயக்கங்களுக்கு ஆள்பிடிப்பதற்கான கருவியாக செயலாற்றி தனது உள்ளார்ந்த வலுவை இழந்துபோனது.

விடுதலை இயக்க இராணுவக் குழுக்களின் வருகை..

84 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் கொடுரமான இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட போராளிகள் துப்பாக்கிகளோடு வடகிழக்குத் தெருக்களில் உலாவ ஆரம்பித்தனர். இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டது. அரச சிவில் நிர்வாகம் சீர்கலைக்கப்பட்டடது. இயக்கங்கள் சிவில் நிர்வாகத்தைப் பிரதியிட்டன.

இன்னொரு அரசாக இயக்கங்கள் செயற்பட ஆரம்பித்தன. இலங்கை அரசின் அதே ஒடுக்குமுறை இயந்திரம் இப்போது இயக்கங்களின் கட்டுப்பாற்குள் வந்தன. அப்போது இயக்கங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான வெகுஜன அமைப்புக்களின் போராட்டங்கள் அங்காகங்கே எழுந்தன. அவை இயக்கங்களை ஜனநாயக மயப்படுத்துவதற்குப் பதிலாக இயக்க முரண்பாடுகளை கையாள்வதற்குப் பயன்பட்டன. சிறிய இயக்கங்களாக உருவாகியிருந்த இயக்கங்கள் தாமும் அதிகாரம் செலுத்துவதற்கான உரிமையைக் கோரி போராட ஆரம்பித்தன. அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான அவர்களின் போராட்டத்தை சிறிய இயக்கங்கள் ஜனநாயகத்திற்கான போராட்டம் என அழைத்துக்கொண்டன.

TELO இயக்கம் அழிக்கப்பட்டது…

1986 ஆம் ஆண்டு ஏப்ப்ரல் மாதம் புலிகள் இயக்கத்தால் ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டது. ஒரு சில நாட்களுக்குள் முடிந்த இந்த அழிப்பில் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராட வேண்டும் என்றே ரெலோவில் இணைந்துகொண்ட போராளிகள் ஏன் கொல்லப்படுகிறோம் என்று தெரியாமலே மரணித்துப் போயினர்.

ரெலோ இயக்கத்தை அழித்தபோது போராட்டங்களை நடத்தமுயன்ற பல வெகுஜன அமைப்புக்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. பல்கலைக்கழகத்துள் பல மாணவர்களும் அரசியல் முன்னோடிகளும் சிறிய கூட்டம் ஒன்றை நடத்தினர். அப்போது ஒரு புறத்தில் டக்ளஸ் தேவானந்தாவினதும் மறுபுறத்தில் புலிகளதும் ஆதரவாளரக் கருதப்பட்ட பேராசியர் சிவத்தம்பி இனிமேல் இந்த அழிப்பிற்கு எதிராகப் போராட்டம் நடத்துவதில் பயனில்லை என்றும் ஏற்கனவே கள்வியன்காட்டுப் பகுதியில் போராட்டம் நடத்தும் வெகுஜன அமைப்புக்களோடு பேசுமாறும் முடிவெடுக்கிறார்.

மாணவர்களின் எதிர்ப்பு..

ரெலோ போராளிகளின் கோரமான கொலைகள் யாழ்ப்பாணம் முழுவதிலும் விரக்தியையும் அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது. இது நடைபெற்று சில மாதங்களின் பின்னர் யாழ்.பல்கலைகழக்த்திற்கு புதிய மாணவர்கள் இணைக்கும் கல்வியாண்டு ஆரம்பமானது. அவ்வேளையில் புதிதாக இணைக்கப்படும் மாணவர்களைப் பகிடிவதை என்ப்படும் ராகிங் இற்கு உட்படுத்தக்கூடாது என புலிகள் உத்தரவிட்டிருந்தனர்.

ரெலோ அழிப்பின் போதான வன்முறைகளும் புலிகளின் ஆணையும் மக்கள் மாணவர் மத்தியில் விரக்தியையும் எதிர்ப்புணவையும் ஏற்படுத்தியிருந்தது. சில மாணவர்கள் அடையாளமாக பகிடிவதைகளை மேற்கொள்ள அவர்களைப் புலிகள் கைது செய்து விசாணைசெய்கின்றனர்.

விசாரணையின் போது தாக்கப்பட்ட அவர்கள் விடுதலை செய்யப்படவுடன் பல்கலைகழகத்திற்கு சென்றனர். அவர்கள் அங்கு இரத்தவாந்தி எடுத்ததைக்கண்டு உணர்ச்சிவசப்பட்ட மாணவர்கள் இயக்கங்களின் வன்முறைக்கு எதிராகப் போராடுவதற்கு என அமைப்புக்குழு ஒன்றை உருவாக்கிக்கொள்கின்றனர். அங்கு ஏற்கனவே இருந்த மணவர் தலைமை புலிகள் மேற்கொண்ட வன்முறைக்கு எதிராகப் போராட மறுத்தமையால்,  அமைப்புக்குழு முழுமாணவர்களதும் ஆதரவோடு தோற்றுவிக்கப்படுகின்றது. மாணவர்களின் தலைமைச் அலுவலகம் அமைப்புக்குழுவால் கைப்பற்றப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நிலையில் அமைப்புக்குழுவிலிருந்த மாணவன் விஜிதரன் புலிகளால் கைது செய்யப்பட்டு விசாரணையில் மரணத்தைத் தழுவிக்கொள்கிறான்.

விஜிதரன் என்ற மானவனை விடுதலை செய்வதற்கான போராட்டம்…

அதன் பின்னர் அமைப்புக்குழுவிலிருந்தவர்கள் மாணவர்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். மாணவர்கள் சாகும் வரைக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகின்றது. இயக்கங்கள் தோன்றிய 80 களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அதிகளவில் மக்கள் கலந்துகொண்ட போராட்டமே விஜிதரனின் கைதிற்கு எதிரான ஜனநாயகப்போராட்டம். அதற்கு முன்னரும் பின்னரும் இதுவரைக்கும் பெரும் எழுச்சியாக எந்த ஜனநாயகப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. கிராமங்களிலிருந்து மக்கள் சாரிசாரியாகப் போராட்டங்களில் கலந்துகொண்டனர். பாடசாலைச் சீருடைகளுடன் மாணவர்கள் போராட்ட களத்திற்கு கால்நடையாக வந்தனர்.

இந்தப் போராட்டம் குறித்த காணொளி கீழே:

புலிகள் இயக்கத்திற்கு யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளரக இருந்த கிட்டுவின் உத்தரவின் பெயரில் மாணவர்கள் பல சந்தர்ப்பங்களில் நேரடியான தாக்குதல்களுக்கு உள்ளாகினர். ஒரு மாணவனைப் பலிகொடுத்த பின்னரும் உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது. சமரச முயற்சிகள், பேச்சுக்கள் தோல்வியுற்றன. குறைந்தபட்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என மாணவர்கள் அறிவித்தனர்.

வாரக்கணக்கில் வீடுகளுக்குச் செல்லாமல் நூற்றுக்கணகான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே தங்கியிருந்தனர். இரவு வேளைகளில் பல்கலைக்கழகத்தின் வெளிவீதி வெறிச்சோடிக்கிடந்தது. 22 துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. பாடசாலைகளிலும், கிராமங்களிலும் மாணவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். சாவக்கச்சேரி பாடசாலையில் பிரச்சாரங்களை முடித்துக்கொண்டு தங்கியிருந்த மாணவர்கள் அப்போது அப்பகுதியில் புலிகளின் பொறுப்பதிகாரியாகவிருந்த கேடி என்பவரின் தலைமையில் தாக்கப்பட்டு இரண்டு மாணவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காணொளியில் கூறப்படுவது போன்றே போராட்டத்திற்கு 27 வெகுஜன அமைப்புக்கள் ஆதரவளித்தன. ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும் அடையாள உண்ணாவிரதங்களிலும் அவர்கள் கலந்துகொண்டனர். அந்த வெகுஜன இயக்கங்களே போராட்டத்தின் அடிப்படைப் பலமாக அமைந்திருந்தன. அவர்களின் துணையின்றி மாணவர்கள் ஒரு துரும்பைக்கூட நகர்த்தியிருக்க முடியாது.

மாணவர்களின் முழக்கங்கள் தெளிவானவை:

1. இலங்கை அரசு பேரினவாத அரசாங்கம்.

2. இலங்கை அரசின் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் இயக்கங்கள் சுதந்திரப் போராளிகள்.

3. போராளிகளுக்கும் இயக்கங்களுக்கும் நாம் எதிரானவர்கள் அல்ல, மக்கள் மீதும் மாணவர்கள் மீது அவர்களின் வன்முறையையே நாங்கள் எதிர்க்கிறோம்.

4. இயக்கங்களின் மக்கள் மீதான வன்முறை இராணுவ வாதத்தை அதிகரித்து மக்களைப் போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தி இயக்கங்களையே ஒரு நாள் அழித்துவிடும்.

இதைவிட இரண்டு முக்கியமான விடையங்களைக் காணலாம்:

முதலில் இயக்கங்கள் அனைத்தும் மாணவர்களது கோரிக்கைகளை நிராகரித்தாலும் இறுதியில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இரண்டாவதாக போராட்டத்தை ஈ.பி.ஆர்.எல்.எப் இன் போராட்டமகக் காட்டமுயன்ற சுரேஷ் பிரமச்சந்திரனது முயற்சி தோல்விகண்டது.

உறுதியான அரசியல் தலைமை பல்கலைக்க்ழகத்திற்கு வெளியில் காணப்படாத நிலையில் ஜனநாயகத்திற்கான போராட்டம் அடுத்த நிலையை நோக்கி வளர்த்துச் செல்லப்படவில்லை என்பது போராட்டத்தின் தோல்வியாகும். தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் குறித்துக்காட்டத்தக்க போராட்ட்ங்களில் ஒன்றான விஜிதரன் விடுதலைக்கான ஜனநாயகப் போராட்டம் அரசியல் தலைமையின்மையால் பின்னதாக சில விசமிகளால் கொச்சைப்படுத்தப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற மிகப்பெரும் வங்கிக்கொள்ளையான ஹட்டன் நஷனல் வங்கியில் கொள்ளைடித்த பணத்தைச் சுருட்டிக்கொண்ட ரயாகரன் என்ற தன்முனைப்பு விசமி தன்னிடமிருந்த பணத்தை விஜிதரன் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், தாக்குதலுக்குள்ளான பல்கலைக்கழக தளபாடங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தியதாகக் தனது இணையத்தளத்தில் எழுதியிருந்தான்.

மாணவர்களால் திட்டமிட்டு ஆபத்தான சூழலில், உயிரைப் பண்யமாக வைத்து, இரண்டு உயிர்களைப் பலிகொடுத்து நடத்தப்பட்ட போராட்டத்திற்கு பணம் வழங்கியதாகக் கூறிக் கொச்சைப்படுத்தும் ரயாகரன் போராட்டத்திற்கு தலைமைதாங்கியதும் தானே எனவும் கூறியது பலரை அருவருக்கச் செய்தது. விஜிதரன் போராட்ட அனுபவங்களையும் அதிலிருந்த கற்றலையும் வெளிக்கொண்டுவருவதயும் சிக்கலான ஒன்றாக மாற்றிவிட்டிருந்தது.

விஜிதரன் குறித்த போராட்டத்தின் வெற்றி, மாணவர்களது வெகுஜன அமைப்புக்களதும் வெற்றி. சிறிய அளவில் கணப்பட்ட வெகுஜன அமைப்புக்களை ஈ.பி.ஆர்.எப் இயக்கம் அழிக்கப்பட்ட பின்னர் புலிகள் இணைத்துக்கொண்டனர். புலிகளின் அழிவோடு அவைகளும் அழிந்துபோயின.

மிகவும் ஆபத்தான சூழலில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது இன்றைய மாணவர் போராட்டங்களுக்கு பயன்படக்கூடியவற்றைக் கற்றுத்தfருகிறது. அன்று வெகுஜன அமைப்புக்கள் பலவீனமானக் காணப்பட்ட சூழலில் அவற்றை ஒருங்கிணைக்கும் புள்ளியாகப் பல்கலைக்கழகமே காணப்பட்டது, இன்று வெகுஜன அமைப்புக்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழகமே வெகுஜன அமைப்பாகச் செயற்படும் நிர்ப்பந்தம் காணப்படுகின்றது.

இந்த சூழலில் தமது ஒன்றுகூடும் உரிமைக்காக மாணவர்கள் முன்னெடுத்த் போராட்டங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும். போராட்டங்களின் ஆதரவு சக்தியான வெகுஜன அமைப்புக்களுக்கு பதிலக சர்வதேச ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஆதரவு திரட்டப்பட வேண்டும். மாணவர்களின் போராட்டத்தை ஆரம்பமாக முன்வைத்து இலங்கை பாசிச அரசிற்கு எதிரகவும் இந்திய ஆக்கிமிப்பு அரசுக்கு எதிராகவும் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் போராட்டம் திட்டமிடப்பட வேண்டும்.

இலங்கையில் பிரதான முரண்பாடாக தேசிய இன முரண்பாடு மேலும் கூர்மையடைந்திருக்கும் நிலையில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு ஆதரவாக சிங்கள் முற்போக்கு ஜனநாயக் சக்திகள் அணிதிரட்டப்பட் வேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான குரல் எழும் போது மட்டுமே தமிழ்ப் பேசும் மக்கள் மக்களின் போராட்டம் இனவாத ஐதீகங்களைக் கடந்த மக்களின் விடுதலைக்கான போராட்டமாக மாற்றம் பெறும் என்பது சொல்லப்பட வேண்டும்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களதும் சர்வதேச முற்போக்கு இயக்கங்கள் சூழ வாழும் புலம் பெயர் மக்களதும் போராட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்க எமக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் பற்றும் மனித அபிமானமும் உடைய அனைவரும் மாற்றத்திற்கான அரசியலை முன்வைத்தால் மட்டுமே அறுபது ஆண்டுகள் சுறையாடப்படும் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் அடுத்த நிலையை நோக்கி முன்செல்ல முடியும்.

இனச்சுத்திகரிப்பைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் இலங்கை அரச பாசிசம் யாழ்.பல்கலைக்கழகத்தை ஒரு அபாயச் சின்னமாகவே கருதுகின்றது. அதனை அழிப்பதற்கான தனது வேலைத்திட்டத்தை துணைக்குழுக்களின் ஆதரவோடு ஆரம்பித்துவிட்டது. இதற்கு எதிரான போராட்டங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இன்று ஆரம்பிக்கப்படாவிட்டால் இன்னொரு சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுவோம்.

இலங்கை அரசிற்கு எதிரான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் திட்டமிடுதலை மாணவர் போராட்டத்திலிருந்து எப்படி ஆரம்பிப்பது என்பதே இன்று எமக்க்கு முன்னால் உள்ள வினா..

இன்னும் வரும்…

முதல்பாகம்:

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா? – படிப்பினைகளிலிருந்து..

தொடர்புடைய பதிவுகள்:

பல்கலைக்கழக மாணவர் போராட்டம் – அழிப்பதற்கு ஆயத்தமாகும் பிழைப்பு வாதிகள்
பல்கலைக்கழகம் மூடியே இருக்கட்டும் மாணவர்களை விடுதலை செய்ய முடியாது : இராணுவத்திமிர்
யாழ்.பல்கலைகழக மாணவர் போராட்டம் தொடரும் : பிரதிநிதிகள் உறுதி
பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிக்கொடுத்த நிர்வாகம்
பல்கலைக்கழக மாணவிகளையும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு

 

 

Exit mobile version