Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாண சாதித் திமிர் குழந்தைகளின் எதிர்காலத்தில் கைவைக்கிறது : நிவேதா நேசன்

இன்று இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் அதிலும் குறிப்பாக வடக்கின் யாழ்ப்பாணம் சார்ந்த பிரதேசங்களில் சாதீ ஒடுக்குமுறை புதிய வடிவத்தைப் பெற்று வருகிறது. போரின் பின்னர் ஆங்காங்கே வெளித்தெரியும் அதிகார அமைப்புக்களைக் கையகப்படுத்திக் கொள்வதில் சாதி ஒடுக்குமுறையின் கோரம் வெளிப்படுகிறது. யாழ்ப்பாண உயர் சாதி வேளாள பிரிவினர் சமூகத்தின் எல்லைகளை கலாச்சாரம் என்ற பெயரில் இறுக்கப்படுத்திக்கொண்டு தம்மை அதிகார மையத்தின் உச்சியில் அமர்ந்துகொள்ள அலை மோதுகின்றனர்.

இந்த ஒடுக்குமுறைக்குத் துணைபோகும் புலம்பெயர் நாட்டு ஆதிக்க சாதியினர் தமது உபரிப் பணபலத்தால் தமிழ் சமூக எல்லைகளை இறுக்கப்படுத்துகின்றனர். கேட்டால் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் பாதுகாக்க முயலும் கலாச்சாரம் என்பது ஒடுக்குமுறையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அதிகார அமைப்பாகும்.

பழமைவாத நிலப்பிரபுத்துவ அமைப்பினை தேசியத்தின் பெயராலும், கலாச்சாரத்தின் பெயராலும் பாதுகாக்க முயலும் ஆதிக்க சாதியின் சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான குரல் இன்று முன்னெப்போதைக்கும் அதிகமாக அவசியமாகின்றது.

புலம் பெயர் நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு அடிமைச் சேவகம் செய்து வயிற்றுப் பிழைப்பு நடத்தும் ஆதிக்க சாதியினர் இலங்கையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலாச்சாரக் கழிவுகளை விதைக்க முயல்தலை சமூகப்பற்று மிக்க ஒவ்வோரு மனிதனும் கண்டிக்க வேண்டும்.

இதன் மறுபுறத்தில் சாதி ஒடுக்குமுறையைக்கு எதிராகக் குரல்கொடுக்கிறோம் என்று இலங்கை அரச பாசிசத்தோடு கைகோர்த்துக்கொள்ளும் தலித் வியாபாரிகளையும், சாதிக் சங்கங்களையும் இனம்கண்டுகொள்ள வேண்டும். இனப்படுகொலை அரசின் செல்லப் பிள்ளையாகிப் போன சாதிச் சங்கங்கள் சாதீய முரண்பாடுகளை ஆழப்படுத்தி தமது அரசியல் வியாபார நிகழ்ச்சி நிரலில் இணைத்துகொள்கின்றன.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த தலித்தியம் போன்ற சாதிச் சங்க தத்துவங்களோடு உலகம் முழுவதும் உலாவரும் இன்னொரு மேட்டுகுடிக் கும்பலுக்கு சாதி ஒடுக்குமுறை என்பதே பொன்முட்டையிடும் வாத்து. சாதி ஒடுக்குமுறைசாகடிக்கப்படாமல் இருந்தாலே இவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள்.

இந்த நிலையில் வடமாகானத்தின் வடக்கு மூலையில் சாதி ஒடுக்குமுறைக்கு பெயர்பெற்ற அவமானகரமான பகுதிகளில் உடுப்பிட்டியும் ஒன்று. குட்டிமணி, தங்கத்துரை, பிரபாகரன் போன்றோரின் சொந்த இடமான வல்வெட்டித்துறையின் எல்லையில் ஆரம்பிக்கும் உடுப்பிட்டி கணசமான அளவு தாழ்த்தப்பட்ட சாதியினரையும் கொண்டுள்ள பகுதியாகும்.

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி என்பது உயர்சாதி வேளார்கள்களின் பெரும்பான்மையாக குழந்தைகள் கல்விக்கற்கும் பாடசாலை. அந்தப் பாடசாலை அதிபர் வெற்றிடத்திற்கு திருமதி நவமணி சந்திரசேகரம் என்ற ஆசிரியை அதிபாராக நியமிக்கப்பட்டார். அதிபராவத்ற்குரிய முழுமையான தகுதியையும் கொண்ட இவர் இதே கல்லூரியின் பழைய மாணவி என்பது மட்டுமல்ல நிர்வாகத் திறனுள்ளவர்.

திருமதி நவமணி அதிபர் தரத்திற்கு தகுதியான ஆசிரியை என்பது மட்டுமல்ல 1995 ஆம் ஆண்டிலிருந்து உடுப்பிட்டிப் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகாமகக் கற்கும் இமையாணன் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றி வருகின்றார்.

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் அதிபர் பதவிக்கு திருமதி.நவமணி சந்திரசேகரம் விண்ணப்பித்த போதும் வடமாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் அவரை நியமிக்க மறுத்துள்ளனர்.

இவருக்கு நியமனம் மறுக்கப்பட்டது குறித்து அவர்களிடம் எந்தத் தெளிவான விளக்கமும் கிடையாது. ஒன்றை மட்டும் காதோடு காது வைத்தது போல சொல்லிவைக்கிறார்கள். நவமணி சந்திர சேகரம் உயர்சாதியைச் சார்ந்தவர் இல்லையாம்.
இவரது நியமனம் நிராகரிக்கப்பட்ட அதே வேளை அதிபர் பதவிக்கு தேவையான தகுதிகள் இல்லாத கௌரி சேதுராஜா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பதவிக்குரிய எந்த விளம்பரங்களும், நேர்முகப் பரீட்சைகளும் இன்றி கௌரி சேதுராசா குறுக்கு வழியில் நியமிக்கப்பட்டார்.

இவரது நியமனத்திற்கு எதிராகப் பெற்றோர் சிலர் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

பேரினவாத அரசுக்கும் சாதி வெறியர்களுக்கும் என்ன வேறுபாடு? இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தைப் புறக்காணித்து முன்னெடுக்கப்பட்ட முடியாது.

Exit mobile version