Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி:பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(2): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

 

கடந்த வாரம் பதிவுசெய்யப்பட்ட ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்’ என்ற கட்டுரையின் தொடர்ச்சி. பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா ஆகியோரின் ஆய்வான இக்கட்டுரை யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதி அமைப்பு முறையை அறிந்துகொள்வதற்கான புதிய தகவல்களைக் கொண்ட நுண்ணாய்வு.

பரம்சோதி தங்கேஸ் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் கலைமானிப்பட்டத்தையும் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் அகதிகள் கற்கையில் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்றவர். தற்பொழுது தனது கலாநிதிப்பட்டத்திற்கான ஆய்வினை மானிடவியல் துறையில் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றார். இவர் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்னர், 2010 ஆம் ஆண்டுவரை கொழும்புப் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறையில் உதவி விரிவுரையாளராகவும் கொழும்பிலுள்ள திட்டமிடல் சேவைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஆய்வாளராகவும் கடமையாற்றினார். இவர் சாதி, இடப்பெயர்வு, இனத்துவம் மற்றும் அடையாளங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றினை வெளியிட்டுவருகின்றார்.

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி

யாழ்ப்பாணச் சாதியமைப்பில் தனித்துவமான பல விடயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் முதன்மையாக, தென்னிந்தியச் சாதி முறைமையுடன் ஒப்பிடும் போது, யாழ்ப்பாணச் சாதி முறைமை அதன் அடுக்கமைவு மற்றும் வேறுபல முக்கிய அம்சங்களில் சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளது என்பது புரிந்து கொள்ளப்படவேண்டிய விடயமாகும். தென்னிந்தியச் சாதி அடுக்கமைவில் பிராமணர் உயர்ந்த அந்தஸ்தினைப் பெறும் அதேவேளை, யாழ்ப்பாணச்சாதி அமைப்பில் வெள்ளாளர் உயர் நிலையிலுள்ளோராகக் கணிப்பிடப்பட்டனர்.

வெள்ளாளர் தமது இந்துக் கோயில்களில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலிருந்து பிராமணர்களை வரவழைத்தனர். வெள்ளாளர் தமது கோயில்களில் பிராமணர்களை வேலைக்கு அமர்த்தியமையாலும் பிராமணர்கள் வெள்ளாள நிலச் சுவாந்தர்களுக்கு ஊழியம் செய்தமையாலும் யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள் வெள்ளாளரைவிடக் குறைந்த அந்தஸ்தினைக் கொண்டவராகக் கணிப்பிடப்பட்டனர் (Pfaffenberger 1982).

யாழ்ப்பாணச் சமூகத்தில் ‘சாதிக்குள் சாதி’ பார்க்கப்படுவது மரபுரீதியாக இருந்தது. இன்னொரு வகையில் கூறுவதாயின் ஒரு தனிப்பட்ட சாதிக் குழுவில் வேறுபட்ட சமூக அடுக்கமைவைக் கொண்ட சாதிகள் காணப்பட்டன. அதாவது ஒவ்வொரு சாதிக் குழுவும் சிறு அடுக்கமைவு அடிப்படையிலான பிரிவுகளைத் தன்னுள் உள்ளடக்கியிருந்தது.

உதாரணமாக வெள்ளாளர் சாதியினரிடத்தே காணப்பட்ட சமூக அந்தஸ்தின் அடிப்படையில் அகம்படியார், மடைப்பள்ளி, தனங்காரர், உள்ளுர்ச் செட்டியார், சிறு விவசாயி மற்றும் செம்பு எடா வெள்ளாளர் போன்ற குழுக்கள் அடையாளம் காணப்பட்டனர். அதே போன்று திமிலர், முக்குவார், போன்றோர் கரையார் சாதியிலும் மரமேறிகள், செருப்புக்கட்டிகள் மற்றும் வேர்க்குத்திப் பள்ளர் போன்றோர் பள்ளர் சாதியிலும் அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறான உப பிரிவுகளை உள்வாங்கி இலங்கைத் தமிழர் சாதிகளைக் கணிப்பிடுகையில், சாதிகளின் எண்ணிக்கை மிகப் பெரிதாக இருந்தது. சைமன் காசிச்செட்டி (1934) இலங்கைத் தமிழர்களிடையே அறுபத்தைந்திற்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதென ‘சாதிகள், வழக்கங்கள், நடத்தைகள் மற்றும் தமிழ் இலக்கியம்’ எனத் தலைப்பிடப்பட்ட தனது நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய சாதிக் குழுக்கள் பெரும் சாதிக் குழுமத் தோற்றத்தோடு (Formation of Mega Caste Groups) எண்ணிக்கையில் குறைந்து செல்கின்றது (Sivathamby, 2005). டேவிட் (1974அ, 1974ஆ) மற்றும் ஃபாபன்பேகர் (1982) ஆகியோரது கற்கைகள் யாழ்ப்பாணச் சமூகத்தில் இருபது, பெரும் சாதிக் குழுக்கள் இருப்பதாக அடையாளம் காண்கின்றன.

வெள்ளாளர், பிராமணர், சைவக் குருக்கள், பண்டாரி, சிப்பாச்சாரி, கோவியர், தட்டார், கரையார், தச்சர், கொல்லர், நட்டுவர், கைக்குழார், சாண்டார், குயவர், முக்குவர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் மற்றும் பறையர் ஆகியோரே இவ்விருபது சாதிக்குழுக்களுமாகும். இச்சாதிக் குழுக்களின் மரபுரீதியான தொழில்கள் மற்றும் அவர்களது அடிமை, குடிமை அந்தஸ்து ஆகியன அட்டவணை-1 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னைய பாகம்:

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா

தொடரும்..

Exit mobile version