Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யார் தேசிய வாதிகள் ? : சபா நாவலன்

தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? தேசிய விடுதலைப் போராட்டம் எவ்வாறு உருப்பெறுகிறது? அன்னிய ஆதிக்கத்திலிருந்து ஒரு தேசத்தை விடுவித்தலே தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையாகும். அன்னிய ஆதிக்கம் என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் ஆதிக்கம் செலுத்தும் போது அந்த ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டமாகும். ஆதிக்கம் செலுத்தும் நாட்டின் பின்பலமாக அதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய நாடுகள் எப்போதுமே காணப்படும். இந்த ஏகாதிபத்திய நாடுகளின் ஒரே நோக்கம் தமது பொருளாதாரச் சுரண்டலை தம்மாலான அனைத்து வழிகளிலும் நிலைநாட்டுவதாகும். ஆக, அடிப்படையில் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அன்னிய மூலதனத்திற்கு எதிரான போராட்டமாகவும் அமைந்திருக்கும்.

குறிப்பாக இலங்கையின் அரசியல் சூழலை எடுத்துக்கொண்டால் சிறுபான்மையின மக்கள் சார்ந்த பிரதேசங்களின் மீதான பொருளாதார ஆதிக்கதை சிறீலங்கா அரசு செலுத்துகின்றது. இதற்கு எதிரான குரல் எழுகின்ற போது அது கலாச்சார ஆதிக்கமாகவும், அரசியல் அதிகாரமாகவும் இன்னும் இராணுவ ஒடுக்கு முறையாகவும் விரிவடைகிறது.

இலங்கையில் நாடுதழுவிய பொருளாதார உற்பத்தி வளர்ச்சியடையும் நிலையிலிருந்த போது அதனைக்கண்டு அஞ்சிய பிரித்தானிய காலனியாதிக்க அரசு இனங்களுக்கு இடையேயான பகைமையாகவும் போட்டியாகவும் அதனைத் திசை திருப்பிவிடுகின்றது. இதுவே தேசிய இனப்பிரச்சனையின் ஊற்று மூலமாகும்.

இவ்வாறான இன முரண்பாடு மக்களிடையே பிரதான முரண்பாடாக முன்னெழும் போது ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தாம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்காகப் போராடுதல் தவிர்க்க முடியாத முன்னிபந்தனையாக அமையும்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தேசிய மூலதனத்தை, முதலாளித்துவ அபிவிருத்தியை முன்னிறுத்துவதாகும். மூலதனத்தின் சுதந்திரமான அசைவிற்கும் வர்த்தக மூலதனத்தின் விரிவாக்கலுக்கும் ஜனநாயகம் அவசியமானதாகும்.ஆக, ஜனநாயகப் புரட்சி என்பது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்.

தேசிய விடுதலைப் போராட்டம் என்பது ஒரு குறித்த நாட்டை ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதாகும். நாட்டை விடுவித்தல் என்றால் என்ன? நிலப்பகுதி ஒன்றை மட்டும் விடுவித்துக்கொள்வதா இல்லை மக்களை விடுதலை செய்வதா? ஒடுக்கப்படும் தேசத்தில் மக்கள் யார்?
இந்தக் வினாக்களுக்கு எல்லாம் விடைகளிலிருந்து தேசிய விடுதலைப் போராட்டம் என்றால் என்ன என்ற குறைந்தபட்ச அனுமானத்திற்கு வந்துசேர முடியும்.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் கூட்டம், பெருந்தேசிய ஒடுக்கு முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் பகுதி, அன்னிய மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு உட்ப்பட்ட தேசிய இனம், தம் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட முனைவார்கள். அவ்வாறான போராட்டம் என்பது தாம் பிரிந்து சென்று ஜனநாயக விழுமியங்களோடு கூடிய ஒரு ஆட்சியை அமைத்துக்கொள்வதற்கான போராட்டமாகும். அங்கு அவர்களின் தேசிய உற்பத்தியும் தேசியப் பொருளாதாரமும் உருவாகுவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொள்வார்கள். இதற்கான போராட்டமே தேசிய விடுதலைப் போராட்டம் என்ற குறைந்தபட்ச கருத்துநிலைக்கு வந்து சேர முடியும்.

ஐரோப்பியத் தேசிய இனங்கள் குறித்த கருத்து..

ஐரோப்பிய நாடுகளில் தேசிய இனங்கள் உருவான காலத்தில் அதன் அடிப்படை என்பது வேறானது. முதலாளித்துவமும் மூலதன்மும் ஒரு தேசம் அல்லது தேசியம் என்ற கருத்தை உருவாக்கிக் கொள்வதற்கான அடிப்படைகளைக் கொண்டிருந்தது.

ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான மூன்றாவது உலக நாடுகளில் அவ்வாறான முதலாளித்துவம் உருவாகவில்லை. தேசிய இனங்கள் இன்னமும் வளரும் நிலையிலேயே காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் தேசியம் என்ற கருத்து ஒடுக்கு முறைகளினாலேயே வலுப்பெறுகின்றது. ஒடுக்கு முறைக்கெதிராக வலிமையோடு ஒன்றிணையும் மக்கள் கூட்டம், தனது உள்முரண்பாடுகளை மறந்து தேசிய இனமாக இணைந்து கொள்கிறது.

தமிழ்த் தேசியக் கருத்தும் போராடங்களும்…

தேசியம் என்ற கருத்து தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய பாராளுமன்றக் கட்சிகளால் முதலில் முன்வைக்கப்பட்டது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜீ,ஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்பு சார் சிங்கள பெருந்தேசிய வாதிகளின் வர்க்க நண்பர்களான இவர்களால் இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் ஒடுக்கு முறைகளின் ஊடாக உறைந்து கிடந்த தேசிய உணர்வு அவர்களின் வாக்குப் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக தட்டியெழுப்பப்பட்டது.

இவர்களால் தேசிய எழுச்சிப் போராட்டங்கள் “சமாதான” வழிகளில் நடத்தப்பட்டது. இவை மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டமாக வளர்ச்சியடைந்து விடாமல் மிக அவதானமாக இவர்கள் பார்த்துக்கொண்டார்கள். இப்ப்போராட்டங்கள் வன்முறையாக வளர்ச்சியடையுமானால் தமது பாராளுமன்ற சட்ட வரைமுறைகளுக்கு எதிரானதாக மாற்ரமடையும் என்பதிலும் விழிப்புடையவர்களாக இருந்தனர்.

மக்கள் மத்தியில் உருவாகியிருந்த கற்பனையான ஒருங்கிணைவு அவர்களை மக்களின் மன்னர்களாக மாற்றியது. தேசிய விடுதலையின் அடிப்படையான தேசிய உற்பத்திக்கும், ஜனநாகத்திற்கும் எதிரான இவர்கள், அன்னிய மூலதனதிற்கு எதிரானவர்களல்ல, ஆக, தேசிய விடுதலைக் முழக்கத்தை அதற்கு அடிப்படையில் எதிரானவர்களே முன்வைத்தனர்.

எது எவ்வாறாயினும், தேசிய இன ஒடுக்குமுறையும் சிங்கள பௌத்த மேலாதிக்கமும் , இராணுவ ஒடுக்குமுறையும் வளர்ச்சியடைய அவர்களது வழிமுறை செயலிழந்து போனது.

போராளிக்குழுக்களின் உருவாக்கம்…

இதன் பின்னதாக இந்தப் பாராழுமன்றக் கட்சிகளின் வன்முறைத் தொடர்ச்சியாக விடுதலை இயக்கங்கள் உருவாகின. விடுதலை இயக்கங்களும் தேசிய விடுதலை என்பதன் உள்ளர்த்தைப் புரிந்து கொள்ளவில்லை. அன்னிய முலதனமும், தேசியத்திற்கு எதிரான ஏகாதிபத்தியங்களும் இவர்களுக்கு கருத்தளவில் கூட எதிரிகளாகத் தென்பட்டதில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தேசிய பானமாக, அமரிக்கக் குடிபானமான கொக்கோ கோலா மட்டுமே திகழ்ந்தது. புலிகள் சில பிரதேசங்களை ஆட்சிக்கு உட்படுத்தியிருந்த வேளையில் கூட தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

ஆக, பாராளுமன்றவாதக் கட்சிகளைப் போலவே போராட்ட அமைப்புக்களும் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்ட அதேவேளை தேசியத்திற்காகப் போராடுவதாகவும் கருதிக்கொண்டனர்.

முன்னய பாராளுமன்றக் கட்சிகளைப் போலவே இவர்களும் தேசியத்தின் வளர்ச்சிக்கான முன்நிபந்தனையாக அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் உள்ளார்ந்த அர்த்ததில் அதனைப் புரிந்துகொள்ளவில்லை. ஆக, பலமான இராணுவக் குழுவொன்றையும் அதற்காகப் பிரசாரம் மேற்கொள்ளும் ஏனைய கூறுகளையும் உருவாக்கினால் மட்டுமே தேசிய விடுதலைப்போராட்டத்தை வெற்றிகொள்ளலாம் என நம்பியிருந்தனர்.

தலைமையின் அல்லது ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் அமைந்தத ஜனநாயமற்ற தன்மை தேசியத்திற்கு எதிரான நிலைமைகளைத் தோற்றுவித்தன. ஒரு குறித்த நிலப்பரப்பில் வாழும் மக்கள் சார்ந்த போராட்டமாக அன்றி, நிலத்தை விடுவிப்பதற்கான போராட்டமாக பரிணாமமடைந்த அவர்களின் போராட்டம் தேசியத்தின் அடிப்படையான மக்களின் ஒருங்கிணைவை நிராகரித்தது. மக்களின் ஒருங்கிணைவு என்பது தேசியப் பொருளாதாரத்தையும் அதன் உள்ளூர் சந்தையையும் அடிப்படையாகக் கொண்டதாக அமையாமல் தமது இயக்கதை நோக்கிய ஒருங்கிணைவாக மாறியிருந்தது. ஆக, அடிப்படையில் தேசியத்திற்கு எதிரான குழு தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏகமாகத் தலைமை தாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட துர்ப்பாகியமான சூழல் எம்மை முள்ளி வாய்க்கால் வரை நகர்த்திச் சென்றது.

ஈழ தேசியத்தை மையமாகக் கொண்டியங்கும் அனைத்துக் குழுக்களும் இதே தவறை இன்னமும் தமது அடிப்படைகளாகக் கொண்டிருக்கின்றனர். நாடுகடந்த தமிழீழம், தமிழர் பேரவை அமைப்புக்கள் போன்ற அனைத்தும் இந்த எல்லைக்குள்ளேயே இந்தச் சிந்தனை முறைக்குள்ளேயே இன்னும் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

தேசியத்திற்கு எதிரானவர்கள்…

தேசியத்திற்கு எதிரான போக்குகளே தேசிய விடுதலைப் போராட்டம் என்ற மாயைக்குள் மக்களை கட்டிவைத்திருந்தது. போராட்டம் நியாயமானது என்றும் அதன் வழிமுறையே தவறானது என்றும் விமர்சித்த தேசிய வாதிகள் கூட துரோகிகள் என்ற ஒதுக்கப்பட்டுக் கொன்றொழிக்க்ப்பட்டார்கள்.

மக்கள் மீது ஒடுக்குமுறை பிரயோகிக்கப்படும் போது அதற்கு எதிரான உணர்வு இயல்பாகவே மக்களுக்கு உருவாகும். அந்த ஒடுக்குமுறை ஈழத்தில் நடப்பதைப் போன்று இராணுவ ஒடுக்கு முறையாக விரிவடையும் போது மக்கள் போராடுவதற்கு துணிவார்கள். அதீத பாசிச அதிகாரம் இலங்கையைச் சூறையாடும் பயங்கரமான நிலையில் கூட அரசிற்கு எதிரான மக்களின் போராடங்கல் ஆங்காங்கே எழுகின்றன. இவ்வாறு போராடும் மக்களை மேலும் பயிற்றுவிப்பதும் அவர்களின் போராட்டத்தை அடுத்த நிலையை நோக்கி வளர்த்தெடுப்பதும் அரசியல் தலைமை ஒன்றின் இன்றியமையாத கடமையாகும்.

தேசியப் போராட்டத்தின் அடிப்படைத் தவறுகள்…

தமிழர் விடுதலைக் கூட்டணி தேசியம் பேசிய காலத்தில் மக்கள் போராட்டத்தைத் தமது வாக்குப் பலத்தை அதிகரித்து பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றிக்கொள்ளப் பயன்படுத்தினார்கள். பின்னதாக, தேசிய விடுதலை இயக்கங்கள் தேசியம் பேசிய காலத்தில் மக்களைப் போராட வேண்டாம் என்றும் தாங்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கி அவர்களைக் காப்பாற்றிக்கொள்வோம் என்றும் கூறினார்கள். தம்மைத் தாமே மக்களின் கதாநாயகர்களாக உருவாக்கிக்கொண்டு மக்கள் பலத்தைப் போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள்,

பலமிழந்த மக்கள் சிறிது சிறிதாகப் போராளிக் குழுக்களின் இராணுவபலத்தால் கட்டுப்படுத்தப்படார்கள். அதன் இறுதி வடிவமாக வன்னி இனப்படுகொலைக் காலப்பகுதியில் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை அரணாகப் பயன்படுத்தும் எல்லை வரை வளர்ந்திருக்கிறது. நியாயமான போராட்டம் மிக நீண்ட காலத்திற்கு பின் தள்ளப்பட்டுவிட்டது.

வெற்றிக்கான அடிப்படைகள்…

பெரும்பான்மை என்பதே போராட்டங்களில் வெற்றிகொள்ளும் என்பது வரலாற்று நியதி. தேசியப் போராட்டம் பெரும்பான்மைப் பலம் கொண்டது. தேசிய வாதிகள் தமது வெற்றிக்காக பெரும்பான்மையோடு இணைந்து கொள்வார்கள். உலகில் பெரும்பான்மை ஒடுக்கப்படும் நாடுகளும் ஒடுக்கப்படும் மக்களுமே. ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் என்ற அடிப்படையில் பெரும்பான்மை மக்களின் பலத்தைப் பெற்றுக்கொள்வதென்பதும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வளர்த்துக்கொள்வதென்பதும் இயல்பாகவே நடைபெறக்கூடிய நடைமுறைச் சாத்தியமான ஒன்று.

ஆனால் ஈழப் போராட்டம் முதலில் முஸ்லீம்களை தனது எதிரியாக்கியிருக்கிறது. மலையக மக்களை எதிரியாக்கியிருக்கின்றது. இந்தியாவில் போராடும் மக்களை எதிரிகளாகக் கணிப்பிட்டிருக்கின்றது. இவ்வாறே இன்னும் உலகம் முழுவது உதாரணங்கள் நீண்டுகிடக்கின்றன.

ஒரு நாட்டின் எல்லைக்குள்ளே சிங்கள மக்களைத் தனது ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடாமல் தடுப்பதற்காக இலங்கை அரசு அவர்களை பேரினவாத சிந்தனைக்குள் முடக்கி வைத்திருக்கிறது. இவர்களில் நாளாந்த உணவிற்கே வழியின்றி மரணித்துப் போகும் மக்கள் பிரிவினர் ஏராளம். தேசிய விடுதலைப் போராட்டம் அரசிற்கு எதிரானதாகவும் ஒடுக்கப்படும் சிங்கள மக்களைக்குறித்துப் பேசுவதாகவும் இருந்தால் இப்பிரிவினர் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அதரவு சக்திகளாக அமைவர். இதனூடாக பெரும்பான்மை மக்களின் பலத்தைத் தேசிய விடுதலைப் போராட்டம் பெற்றுக்கொள்ளும்.

ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பத்திலிருந்தே இவற்றிற்கு எதிர்த்திசையிலும், தேசியத்திற்கு எதிராகவுமே கட்டமைக்கப்பட்டு நந்தக்கடலோடு சங்கமாகிவிட்டது. அனுபவங்களிலுருந்தும், தவறுகளிலிருந்தும் கற்றுகொண்டு ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் மறுபடி மக்கள் சார்ந்த போராட்டமாக எழுவதற்கான பகைப்புலம் இலங்கையில் காணப்படுகிறது. அது முன்னைப்போல் தேசியத்திற்கு எதிரான சக்திகள் மீது நம்பிக்கை கொள்ளாது. தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியிலுள்ள அனைத்துப் மக்கள் பிரிவினரதும் ஐக்கிய முன்னணியாக முன்னெழும்.

இது ஒரு மீள் பதிவு | Published on: Jun 28, 2011 @ 7:55 

Exit mobile version