குடும்பம்தான் குழந்தையின் முதல் உலகம். அங்கு அது பிறந்து வளர்ந்து தனக்கான பழக்கவழக்கம், பண்புகள், மதிப்பீடுகள் என எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.
குடும்பம் சமூகத்தின் சிறு அலகு .ஒரு சமூகம் ஆரோக்கியமான சமூகமாக இருக்கிறதா, நோய்க்கூறுச் சமூகமாக இருக்கிறதா எனத் தீர்மானிப்பது இந்த குடும்பம்தான். குடும்பம், சமூகத்தைக் காட்டும் கண்ணாடி என்றால் சமூகமும் குடும்பத்தைக் காட்டும் கண்ணாடிதான். இரண்டும் ஒன்றையொன்று மிஞ்சியவையல்ல ஒன்றுக்கொன்று சளைத்ததுமல்ல.
ஓர் உறுப்பினரை எவ்வாறு வளர்த்தெடுத்து சமூகத்திற்குக் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட குடும்பத்திற்கும் எப்படிப்பட்டவர்களை வளர்த்தெடுத்து குடும்பத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட சமூகத்திற்கும் தெரிந்தே இருக்கிறது.
விழுமியங்களோடு ஒரு குழந்தையை வளர்ப்பதும் அல்லதுசாதியம், ஆணாதிக்கச் சிந்தனை, பெண்ணடிமைத்தனத்தோடு வளர்ப்பதும் குடும்பங்களில்தான் இருக்கிறது.
பெரும்பாலான இந்தியக் குடும்பங்கள் தந்தை வழிச் சமூக அடிப்படையிலேயே இயங்குகின்றன. எனில் தந்தைவழிச் சமூகம் உற்பத்தி செய்து வைத்திருக்கும் ஆண்தான் குடும்பத் தலைவன் என்னும் சமூக மதிப்பீட்டால் பெண்ணைவிட ஆண்தான் ஒருபடி உயர்வானவன் என்னும் கற்பிதங்களை இன்னும் வலுப்படுத்துபவையாகவே குடும்பங்கள் உள்ளன. பெண் ஒழுக்கமானவளாக, ஆணுக்கு அடங்கியவளாக, தீட்டானவளாக ஒதுக்கி வைக்கப்படும் குடும்பங்களாகவே அவை உள்ளன. இங்கு வளரும் அல்லது வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு அவை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மேற்கூறிய கற்பிதங்கள் ஊட்டி வளர்க்கப்படுகின்றன.
ஒரு குழந்தை, தன் தாயையும் தன் தந்தையையும் பார்த்தே அல்லது பழகியே, தான் எவ்வாறான ஆளாக வளர வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்கிறது. அதன் நடத்தையில் செயல்பாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஓர் அங்கம் குடும்பம்.
இந்த குடும்பம், குழந்தை வளர்ப்பில் சமரசம் செய்யாமல் ஆண்பெண் சமத்துவத்தையும் சனநாயகத்தையும் சாதி ஒழிப்பையும் பணிப் பகிர்வையும் கற்பிக்காமல் வீரம் துணிவு என்பவை ஆணுக்கானவை எனவும் அச்சம் மடம்,நாணம் பயிர்ப்பு என்பவை என்பவை பெண்ணுக்கானவை எனவும் போதிக்கிறது.
குடும்பத்திற்குள் பணிசெய்யும் பெண்ணை, வெளியே சென்று வேலைப்பார்க்கும் ஆண் அதிகாரம் செய்வதும் அடிமைப்படுத்துவதும் குடும்ப வளர்ப்பால் நிகழ்பவைதான்.
தம் பெற்றோர்களால் ஒவ்வொருவரும் எவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டார்களோ அதைப்போலவே தன் குழந்தைகளையும் வளர்த்தெடுக்கிறார்கள்.அவர்களும் குழந்தையைத் தம்மைப்போலவே வளர்த்தெடுப்பார்கள். உலகம் உள்ளவரை இப்படியே போய்க் கொண்டிருக்கும் .இது ஒரு சங்கிலி. ஒரு கண்ணி. காலங்காலமாய் இதை அறுபடாமல் பார்த்துக் கொள்வதே சனாதனம். இந்தக் கண்ணியை அறுப்பது அல்லது உடைப்பது நம் தேவையாக இருக்கிறது. இப்படி எப்படி உடைப்பது, எதைக்கொண்டு உடைப்பது?
நம் கையில் இருப்பவை கலைப்படைப்புகள்தாம். அவற்றை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும் இன்னும் அதிகமான கலைப்படைப்புகளை வெவ்வேறு வடிவங்களில் குடும்பங்களில் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்.
இது கடினமான பணி;என்றாலும் அடுத்த தலைமுறைக் குழந்தைகளை ஆரோக்கியமான குடும்பங்களில் பிறக்க செய்வதுதான் அடுத்தக்கட்ட நகர்வு .ஆரோக்கியமான சிந்தனைகளை எழுத்துகள் வழியாக, கலைகள் வழியாக, உரையாடல்கள் வழியாக, பேச்சு வழியாக ஏற்படுத்த வேண்டியுள்ளன. அதை நாம் செய்திருக்கிறோமா ?ஆம் எனில் அது போதுமானதுதானா?
எங்கே பிழை என்பதை சமூகத்தின்பால் அக்கறை கொண்டவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
குடும்பத்திற்கு அடுத்தபடியாக அவன் காலடி எடுத்து வைப்பது பள்ளிக்கூடத்தில்தான். அங்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது? ஒரு பாடசாலை திறந்தால் நூறு சிறைச்சாலைகள் மூடப்படும் என்பதெல்லாம் வெற்றுச் சொற்கள். உண்மை நிலவரம் வேறு. இடம்தான் மாறி இருக்கிறதே தவிர குடும்பமும் பள்ளியும் ஒன்றே. ஆசிரியர்கள் ஒன்றும் முற்போக்காளர்கள், சமூக ஆர்வலர்கள், சாதி மதம் அற்றவர்களோ கிடையாது. அதே குடும்பத்திலிருந்து வருபவர்கள் தான் .அதே ஆணாதிக்கச் சிந்தனை, பெண்ணடிமைத்தனம், சாதிப் பெருமை நிரம்பியவர்கள்.
மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் சானிடரி நாப்கினை,மறைத்து எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என ஆலோசனை வழங்குபவர்கள். துப்பட்டாவை சரியாகப் போடு எனச்சொல்லி பெண்ணுடல் குறித்த புனிதத்தை இன்னும் அதிகமாக்குபவர்கள். இந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடத் திட்டத்தைத் தவிர வேறெதையும் போதிப்பதில்லை. கற்றல் என்பது பாடப்புத்தகங்கள் மட்டுமா? ஒரு சமூகத்தில் வாழ வேறு எந்த விழுமியங்களும் தேவை இல்லையா? தான் எதிர்கொள்ளும் சிக்கல்களை, சவால்களைத் தீர்க்க, தான் கற்கும்
கல்வி துணை புரியவில்லை என்றால் அது கல்வியா? பிரச்சனைகளை எதிர்கொள்ளத் துணிவைத் தராத கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதைச் சாதிக்கிறார்கள் என ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
ஓர் ஆசிரியர், ஆசிரியராக இருந்தால் மட்டும் போதாது. தான் வளர்ந்த பொதுப்புத்தியையையுடைய குடும்பத்தின் உளுத்துப்போன நிந்தனைகளிலிருந்து முற்றிலும் தந்னைத் துண்டித்துக் கொண்டவராக, துண்டிப்பின் விளைவுகளை உணர்ந்தவராக, அதை மாணவர்களுக்குக் கற்பிப்பவராக இருக்கவேண்டும். ஓர் ஆசிரியர் தம்மை இவ்வாறு தகுதிப்படுத்திக் கொள்வதற்கு கலைப்படைப்புகள் எழுத்துக்கள் மட்டும் போதா. தான்கற்ற ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் அதற்கான கூறுகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டும்.
ஆசிரியர் கல்வியானது, மாணவர்களுக்குப் பாடங்களைப் போதிக்கும் முறைகள், அவற்றின் நன்மை தீமைகள் போன்றவற்றை குறித்துதான் விளக்குகின்றன. தவிர ஒரு மாணவனை விழுமியங்களோடு எவ்வாறு உருவாக்குவது ஆளுமையோடு எவ்வாறு அவனை எதிர்காலச் சமூக உறுப்பினராக மாற்றுவது என்று பயிற்சி அளிப்பதில்லை. ஆண் பெண் நட்பு, பாலின சமத்துவம், ஆண் பெண் சனநாயகம்,பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்ணியம் சமூக அரசியல், குழந்தை வளர்ப்பு, சாதி ஒழிப்பு,பணிப் பகிர்வு போன்ற சமூக கருத்தியல்கள் மற்றும் செயல்பாடுகள் என எவையும் இல்லாத கல்வியாக ஆசிரியர் கல்விக்கான பாடத்திட்டங்கள் உள்ளன. மதிப்புக்கல்வி வாழ்க்கை கல்வி போன்றவற்றை போதிக்காத பள்ளிகளும் நிறைய இருக்கின்றன
ஆண் பெண் சமத்துவத்தைப் போதிக்காத அதை ஏற்றுக்கொள்ளாத அல்லது அதைப் பற்றிய போதிய விளக்கம் இல்லாத ஆசிரியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆகவே ஆசிரியர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முன் ஆசிரியர் கல்வியில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளியிலிருந்து அவன் செல்கின்ற இடம் சமூகம். குடும்பமும் பள்ளியும் தனக்குப் போதித்ததை இதுவரை பழகிக் கொண்டிருந்தவன்.அதை செயல்படுத்த தேர்ந்தெடுக்கும் களம்தான் இச்சமூகம். இது பரந்து விரிந்தது இல்லையா? அவனும் இது வரை தான் அறிந்தவற்றை அதாவது மதம், சாதி, இனம், மொழி, வர்க்கம், பெண்ணுடல் குறித்து தான் அறிந்தவற்றை இந்தப் பரந்த சமூகத்தில் ஆண் என்னும் உணர்வுடன் பெருமிதமாகச் செயல்படுத்த முனைகிறான். அதற்குத் துணையாக குடும்பமும் பள்ளியும் தனக்கு வழங்கிய ‘ஆண்’ என்னும் முதலிடத்தை அமைத்துக் கொள்கிறான்.
ஆக, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் பெண் குழந்தைகளின்மீது நிகழ்த்தப்படுகின்ற பாலியல் வன்முறைகளில்யார் குற்றவாளியாக இருக்ககூடும்?
ஆண் உயர்ந்தவன் பெண் தாழ்ந்தவள் என்னும் கற்பிதத்தை,ஒரு குழந்தை பிறந்தது முதலே மனதில் விதைத்து, பாலினச் சமத்துவத்தை அறவே ஒழித்து குழந்தையை வளர்த்தெடுக்கின்ற ஆணாதிக்கத்திலும் பெண்ணடிமைத்தனத்திலும் ஊறிக் கிடக்கும் பெற்றோர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்கள்.
இந்தக் கற்பிதத்தைச் சிறிதும் மாற்றமின்றி அல்லது இன்னும் கூடுதலாய்ப் பின்பற்றுகின்ற குடும்பங்களின் தெரு,ஊர், சுற்றுப்புறம்.
ஆண்பெண் சமத்துவத்தை,சாதி ஒழிப்பை உள்ளடக்காத பாடத்திட்டம், இவற்றைப் போதிக்காத,ஏற்றுக் கொள்ளாத அல்லது இவற்றைப்பற்றிய போதிய தெளிவு இல்லாத ஆசிரியர்கள்.
மதிப்புக் கல்வி,வாழ்க்கைக் கல்வி மற்றும் விழுமியங்களைக் கற்றுத்தராத,அதற்கான வாய்ப்பே இல்லாத பள்ளிகள்.
மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள்பயிலும் ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தில் பெண்விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற சமூகக் கருத்தியல்கள்,செயல்பாடுகள் எவையும் இல்லாத கல்வி.
குற்றவாளிகள் சொந்த சாதிக்காரனாய் இருந்தால் வழக்குப் பதியாமல் சுணக்கம் காட்டும் காக்கிகள்.
சாதிவெறியாளர்களுக்காக வாதிடும் கருப்புக் கோட்டுகள்.
குற்றவாளிகள் தம் கட்சிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களைக் காப்பாற்ற என்ன வேண்டுமானலும் செய்யும் அரசியல்வாதிகள்.
சாதியை உயர்த்திக் பிடிக்கும் மதம்
மக்களைப் பிரித்தாளும் வர்க்கம்
நான்
நீங்கள்
நாம்
எல்லாரும் எல்லாமும்தான் குற்றவாளி.
என்ன செய்யப் போகிறோம்?