மனிதகுலத்தின் கண்முன்னே வன்னி மண்ணில் இலங்கையில் பெருகிய இரத்த ஆறு உலகத்தைத் திகைத்துப் போக வைத்திருக்கிறது. முப்பது வருடங்களாகப் புலிகள் ஏற்படுத்தி வைத்திருந்த மாயை தகர்ந்து போனது. அமரிக்காவின் மீதும்,ஐக்கிய நாடுகள் சபை மீதும், ஐரோப்பாவிலும்,இந்தியாவிலும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்து போனது. மக்கள் அனாதரவாகக் கொலைகாரர்களின் மத்தியில் துரத்திவிடப்பட்டிருப்பது வெளிப்படையாகவே தெரியும் நிலை உருவானது. அதிகார வர்க்கத்தின் மீதான வெறுப்பும், அருவருப்பும் அதிகரிக்க மக்கள் புதியவற்றைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதிலும் புலம்பெயர் சூழலில் இந்தத் தேடல் பல புதிய சக்திகளைச் சமூகத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. பேரழிவின் விழிம்பில் நிற்கும் இலங்கை மக்களும் இதே தேடலையும் அதற்கான ஒழுங்குபடுத்தலையும் ஆரம்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இத்தேடல் உருவாகும் போதே மக்களின் மத்தியிலிருந்து முன்னணிச் சக்திகளும் உருவாகின்றார்கள். அவர்கள் தங்களது கடமையையும் சுமையையும் உணர்ந்து கொள்கிறார்கள். முதலாளித்துவக் காலகட்டத்தின் சூழல் மார்க்சியத்தை மனிதகுலத்தின் முன்னணித் தத்துவமாக மாற்றியதும் இவ்வாறுதான்.
எண்பதுகளில் நாம் எல்லோரும் இழைத்த தவறுகள் புலிகளை வளர்த்தெடுத்தது. ஹிட்லரின் ஜேர்மனிய மக்கள் போலவே, 90 களின் பின்னர் புலிகளின் பாசிசத்துள் மக்கள் கட்டுண்டு அனைத்து மாற்று வழிகளையும் நிராகரித்தார்கள். தொடர்ந்த நமது தவறுகளெல்லாம் மேலும் மேலும் அரச பாசிசத்தையும் அதன் ஆதரவுத் தளங்களையும் வளர்த்தது. இதுவே புலிகளின் தவறுகளையும் பாசிசத்தையும் மக்கள் வெற்றிகொள்வதற்கு மாறாக அரச பாசிசத்தின் அழிவிற்கு உட்படும் நிலை உருவானது.
இவ்வாறு மக்கள் தம்மை ஒழுங்கு படுத்தலுக்கான தேடலின் விளைவாக புதிய சமூகத்தின் முன்னோடிகள் உருவாகிறார்கள். சுதந்திரத்திற்குப் பின்னான இந்தியாவையும், அழிவிற்குப் பின்னான ஜேர்மனியையும், படுகொலைகளுக்குப் பின்னான ருவாண்டாவையும், ஆக்கிரமிப்பிற்குப் பின்னான ஈராக்கையும் நினைவுபடுத்தும் இவையெல்லாம் செயற்கையான மாற்றங்களல்ல.
ஒவ்வொரு போராட்டமும், அதற்கான வெற்றிடமும் உருவாகும் போதும், ஒவ்வொரு வர்க்கமும் தனது நிலையை அங்கு உறுதிசெய்துகொள்ளத் தலைப்படுதலே இதற்கான பின்புலம் எனக்கருதலாம். ஆனால் வரலாறு தெரிவிப்பதைப் போலவே இவையெல்லாம் செயற்கையானவையல்ல.
இந்த மாற்றங்களின் திசை வழி என்ன, உலகத்தை அவர்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள், முரண்பாடுகள் குறித்து அவர்களின் நோக்கு என்ன என்பவற்றின் அடிப்படையிலிருந்தே எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
இந்த ஆரோக்கியமான சூழலில், சிரிப்புமூட்டும் அரசியற் கோமாளிகள் ஒரு புறம் யாராவது ஏதாவது சொன்னால் தங்களைக் கேட்டுத்தான் சொல்லவேண்டும் என்கிறார்கள்.
வரலாற்றின் இன்றைய காலப்பகுதி உருவக்கும் பல முன்னணிச் சக்திகளுகு மத்தியில், மே 18 இயக்கமும் ஒன்றாகும். இது இன்னொரு வரவு. விவாதங்கள் வேண்டும் என்கிறது. இவர்களது உலகப் பார்வை குறித்தும், அதை முன்கொண்டு செல்ல எத்தனிக்கும் முறைமைகள் குறித்தும் நிறைய முரண்கள் இருந்தாலும், இவையெல்லம் செயற்கையான எழுச்சிகள் அல்ல.
இரண்டு உலகப்பார்வைகள் தான் உள்ளன. ஒன்று கற்பனையானது,மற்றது சமூகம் சார்ந்தது. சமூகம் சார்ந்த பார்வை சமூக உறவுகளின் வளர்ச்சி சார்ந்தது அதனை அணுகுவது. சமூக உறவுகள், அதிலும் சமூகத்தில் உற்பத்தி சக்திகளிடையேயன உறவு அதாவது வர்க்கங்களிடையேயான உறவுகளை அடிப்படையாக(பொருளாக) முன்வைத்து சமூகத்தை உணர்ந்து கொள்வதென்பது பொருள்முதல்வாதப் பார்வை எனப்படுகிறது.
இந்தப் பொருளின் (அதாவது சமூக வர்க்க உறவுகளின்) வளர்ச்சியும் இயகமும் இயங்கியல் எனப்படுகிறது. இதனை அடிப்படையாகக முன்வைத்து சமூகத்தை ஆராய்தல் என்பதும் அதிலிருந்து எவ்வாறு முடிபுகளை அடைதல் என்பதும், இலங்கை இனப்பிரச்சனையில் புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது.
உலகின் பல பிரச்சனைகளிலும் இந்த விஞ்ஞான பூர்வமான உலகப் பார்வையின் புறக்கணிப்பைக் கண்டுகொள்ளலாம். பொருள் முதல் வாதம் என்பதைப் பொருளாதார வாதம் எனத் தவறாகக் கருதுபவர்கள் கூட உண்டு.
மே 18 இன் கோட்பாட்டு இதழான வியூகம், பொருள்முதல் வாத இயங்கியலை தனது உலகப் பார்வையாகவோ, ஆராய்வதற்கான முறமையாகவோ முன்வைக்கவில்லை.. ஆக, மார்க்சிய வழிமுறை இருப்பதகத் தெரியவில்லை. மார்க்சியத்தில் பற்றுக்கொண்டவர்களாகக் கூறும் மே 18 இன் எதிர்வரும் இதழ்கள் பொருள் முதல்வாத இயங்கியலின் அடிப்படையில் வியூகம் அமைத்துக்கொள்ளும் என எதிர்பார்ப்போம்.