முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது லட்சக்கணக்கான மக்கள் மட்டுமல்ல. தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்திற்கான அரசியல் நியாயமும் கூட. கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டது வெறுமனே மனித உரிமைப் பிரச்சனையாகக் குறுக்கி எமது பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தையும் அழிக்கப்பார்க்கின்றன இலங்கை பேரினவாதப் பாசிஸ்டுக்களின் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்திய அரசுகள்.
அதனைவிட தாம் அனைவரும் சேர்ந்து செய்த குற்றங்களை தாமே விசாரிப்பதாக கூறி ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு விசாரணையை கொண்டுவந்து தாம் நினைத்த கால எல்லையை மாத்திரமே விசாரிப்போமென அதற்கு நிபந்தனைகளையும் விதித்து ( இந்த விசாரணை எல்லைக்குள் இந்திய படைகள் செய்த படுகொலைகளோ, சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடத்தப்பட்ட படுகொலைகளோ, யாழ் நூலகம் போன்ற எமது வரலாறுகள் அழிக்கப்பட்டதோ விசாரிக்கப்படமாட்டாது.
விசாரணை என்ற பெயரில் எமது போராட்டத்தின் அரசியல் நியாயம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு மனித உரிமை மீறல் என்று அது கொச்சப்படுத்தப்படுகிறது. எமது பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்திற்கு 60 ஆண்டுகால நீண்ட வரலாறும் அதனோடு இழையோடும் தேசிய இன ஒடுக்குமுறையின் அவலங்களும் நிராகரிக்கப்படுகின்றன. 1956 இல் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை அழைத்து வந்த அத்தனை இனப்படுகொலைகளும் நிராகரிக்கப்படுகின்றன.
இந்த அரசியல் நாடகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் சில தமிழ் அமைப்புக்கள் பங்குபற்றி மிகவும் சிறந்த முறையில் தமது நடிப்பு திறமையை வெளிக்கொணர்ந்து உள்ளனர். அதே சமயம் இந்த 2009 யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசும் பிக்குகளும் பழையபடி பௌத்த தீவிரவாத்த்தை வளர்ப்பதையும், சிறுபான்மை மக்களை கொல்வதையும், போதைப்பொருள் வர்த்தகம், கொலைகள், பாலியல் வன்முறைகள், ஊடகங்களை அடக்குதல், நீதித்துறையை அடக்குதல், பொருளாதார வளங்களை கொள்ளையடித்தல் என்பனவற்றை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் செய்யும்போது முன்பிருந்தவாறே பிரித்தானிய மேற்குலக இந்திய அரசுகள் கண்துடைப்பு அறிக்கைகளுடனும் கண்டன பேச்சுகளுடனும் நிறுத்திகொள்கின்றன. தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்து சிரித்து பால்சோறு பொங்கியவர்களும் தற்போது கண்விழித்து கொள்ளதொடங்கியிருக்கின்றனர். ஆனால் அவர்களையும் பிரித்தானியா வழங்கிய இராணுவ ஆலோசனையின் படி “ஜனநாயகத்திற்காக” இலங்கை அரசு கொன்றுவிடும்.
இந்த ஜனநாயகத்தை பார்த்து சலித்து போன புலம்பெயர் ஈழ தமிழ் மக்கள் தமது அரச கட்டமைப்பையும், இராணுவ, கட்டமைப்பையும் தவிர தமது அனைத்து கலை, விளையாட்டு ( தமிழீழ கால்பந்து, தமிழீழ துடுப்பாட்டம் ( ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இந்த ஆண்டின் இறுதியில் இருந்து செயற்படும்) கிளித்தட்டு ( இவற்றை சுதந்திரம் அடையா ஈழ தேசத்தின் நிர்வாக அலகாக செயற்படுவதற்கான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன), பண்பாடு என கட்டமைப்புகளையும் தற்போதைக்கு புலம்பெயர்நாடுகளில் மீள கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ( இது சிறந்த ஒரு வரவேற்கத்தக்க முயற்சியாகும். எனினும் இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீள கட்டியெழுப்பும் பொறுப்பும் அவர்களிடத்தில் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது. தீவிரவாத்த்தை வளர்த்தார்கள் என கூறப்படும் தமிழ் மக்களே அனைத்து நாடுகளையும் தொண்டு நிறுவனங்களையும் விட பாதிக்கப்பட்ட மக்களிற்கு இலங்கை அரசின் தடைகள் இருந்தும் உதவிசெய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) அதை விட போரின் பின்னர் அபிவிருத்து என்ற இலங்கை அரசின் மாய வலைகளில் தமிழ் வியாபார சமூகம் விழுவதை காணக்கூடியதாக உள்ளது.
இது எமது இனத்திற்கு அழிவை தரக்கூடிய ஒரு ஆபத்தான செயற்பாடு. நாம் முதலீடு செய்யும்போது எமது வளங்களை பயன்படுத்தி, எமது மக்களின் வேலைத்திறனை பயன்படுத்தி எமது சூழலை மாசுபடுத்தாதவாறும் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். உங்களில் அனேகமானவர் வசதிகளுடனேயே வாழ்கின்றீர்கள். ஆகவே குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பதற்காக எமது வளங்களை, சூழலை, மக்களை, பொருளாதாரத்தை அழிக்கும் முதலீடுகளை மேற்கொள்ளாதீர்கள். ) இவற்றை எல்லாம் கண்டு கொண்ட இலங்கை அரசாங்கம் தற்போது புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தீவிரவாத்தை வளர்கிறார்கள் என அலறுகிறது. இலங்கை அரசின் ஐநா பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க புலம்பெயர் மக்கள் தீவிரவாத்த்தை பாடசாலைகள் அமைத்து சொல்லி தருகிறார்கள் என அறிக்கை விடுகிறார்.
ஐநா முதல் சகல அரச, தொண்டு, ஊடக நிறுவனங்களிலும் அநீதி தலைவரித்து ஆடுவதை ஈழதமிழ் மக்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். ஆக அவைகளில் மாற்றம் ஏற்படாத வரை தம் ஆயுதபோராட்டம் தீவிரவாதமாகவே காட்டப்படும் என்பதையும் தெளிவாக விளங்கியே உள்ளார்கள். ஜனநாயகம் என இலங்கை அரச தீவிரவாதத்தை வளர்க்கும் நாடுகள் ஈழ தமிழ் மக்கள் தமது கலை பண்பாடு விளையாட்டு நிர்வாக அலகுகளை வளர்ப்பதை மீண்டும் தீவிரவாதமென தடை செய்வார்களோ?