இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் அரசு ஈடுபடும் போது அரசிற்கு எதிராக, போர்க் குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென புலம்பெயர் தமிழர்களும் புலிகளின் ஆதரவாளர்களும் மீண்டும் கோஷம் எழுப்ப ஆரம்பித்து விட்டார்களென நாடாளுமன்றில் பிரதமர் டி. எம். ஜயரட்ன உரையாற்றியிருந்தார். உலக நாடுகளின் ‘நலன்’ சார்ந்த பொது மொழி, ஆட்சியாளர்களை அச்சுறுத்த ஆரம்பித்திருப்பதை இவ்வுரைகள் புலப்படுத்துகின்றன.
விடுதலை செய்யப்படுபவர்கள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களென்றும் அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் வருடாந்த மாநாட்டில் விவாதிக்கப்படப் போகும் போர்க் குற்றம் தொடர்பான பிரேரணைக்கு பிரிவினைக்கு ஆதரவான சக்திகளும், அதற்குத் துணை போகும் நாடுகளும், பின்புலத்தில் நின்று செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஆட்சியாளர்கள், உலகின் மொழியை மிகத் தெளிவாகவே புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதனை பிரதமரின் ஒப்பீட்டாய்வுகள் தெளிவுபடுத்துகின்றன. அதேவேளை இரட்டை வெள்ள அனர்த்தத்தால் 5000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடும் அனர்த்த நிவாரண அமைச்சர் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடுவது போல் தெரிகிறது. அவலப்படும் மக்களுக்கு உதவ முன்வரும் சர்வதேச தொண்டர் அமைப்புகள், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டுமா என்பதையும் அவர் தெளிவுபடுத்தினால் நடைமுறைச் சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும். அண்மையில் சர்வதேச நாடுகளின் நிதியுதவியைப் பெறுவதற்கு பாரிய சேத விபரப் பட்டியல் ஒன்றினை அரச தரப்பினர் வெளியிட்டிருந்தனர்.
13 மாவட்டங்களில் 490 குளக்கட்டுக்கள் உடைந்து 51,000 வீடுகள் சிதைந்து இரண்டரை இலட்சம் ஏக்கர் பயிர்ச் செய்கை நிலங்கள் அழிந்து 75,000 மாடுகள் வெள்ளத்தால் கொல்லப்பட்டதாக நீண்ட பட்டியலிடும் அமைச்சர், இறுதிப் போரில் நிகழ்ந்த அழிவுகள் குறித்த முழுமையான தரவுகளை இன்னமும் வெளியிடவில்லை.
அதேவேளை வலி சுமக்கும் மக்கள், இயல்பு வாழ்விற்குத் திரும்ப வேண்டும் என்பதில் அக்கறை கொள்ளாமல், குச்சவெளி நிலங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபடுகிறது.
திறைசேரி காலியாகி, வரவு செலவுப் பற்றாக்குறை அதிகரிக்கையில், நிதி வளமிக்கவர்களுக்கு நிலத்தைத் தான் கொடுக்க முடியும். வெளிநாட்டு நேரடி முதலீடுகள் வந்து குவிந்தாலும் நிறுவனங்கள் இயங்குவதற்குத் தேவையான நிலங்களை அரசு வழங்க வேண்டும். அதிலும் வடகிழக்கிலுள்ள கரையோரப் பிரதேசங்களைப் பிரித்துக் கொடுத்தால் கேட்பதற்கு யாருமில்லை என்கிற இறுமாப்பும் அரசிற்குண்டு.99 வருட குத்தகையில், ஏக்கரொன்றிற்கு 20 மில்லியன் ரூபா வீதம், 500 ஏக்கர் நிலம் விற்கப்படுகிறது. ஐந்து நட்சத்திர உல்லாசப் பயணிகளுக்கான விடுதிகளை அமைப்பதற்கு ஏறத்தாழ 20 முதலீட்டாளர்கள், வரிசையில் நிற்பதாக, இலங்கை உல்லாசப் பயண அபிவிருத்தி சபையின் தலைவர் நாலக கொடகுஹவா தெரிவிக்கின்றார்.
அத்தோடு உள்நாட்டு சந்தை விலை, ஏக்கர் ஒன்றிற்கு 6 மில்லியன் ரூபாவாக இருந்தாலும் தாம் அதனை முதலீட்டாளர்களுக்கு 20 மில்லியன் ரூபாவிற்கு விற்று, அரசின் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக பெருமிதம் அடைகின்றார். குச்சவெளி நில விற்பனை விவகாரம், வடமேற்குப் பிரதேசத்திலுள்ள கல்பிட்டியவிற்கு பரவப் போகிறது. நில ஆக்கிரமிப்பும், இன வழிப்பின் ஒரு முக்கியமான கூறு என்பதனை, தெளிவான மொழியில் உலகிற்கு எடுத்துரைக்கும் கடப்பாடு எல்லோருக்கும் உண்டு. தமிழ் மக்களுடைய சட்ட ரீதியான உரிமைகளுக்கு ஆதரவு உண்டென்றும், ஆனால் தனி தமிழ் அரசிற்கு ஆதரவில்லையென்று குழம்பும் எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்களுக்கும் இதனைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அதேவேளை, அமெரிக்காவிலுள்ள பிரசித்தி பெற்ற ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் கூட்டப்படும் கருத்தரங்கமொன்றில் இலங்கைக்கான ஐ. நா. சபையின் பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன்ன உரையாற்றவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.’பயங்கரவாத ஒழிப்பு’ என்கிற உலகப் பொது மொழியூடாக, இறுதிப் போரில் குற்றங்கள் நடைபெறவில்லையென கோஹன்ன வாதிடுவாரென எதிர்பார்க்கலாம். ஆயினும் குற்றங்கள் தண்டிக்கப்படாமல், தேசிய நல்லிணக்கம் உருவாகுவது சாத்தியமில்லையென்கிற அறம் சார்ந்த பொது மொழியூடாக, எதிர்நிலைக் கருத்துக்களை முன் வைப்பதற்கும் பலர் தயாராக இருப்பதாக தெரிய வருகிறது.
இவை தவிர, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இன அழிப்பிற்கெதிரான தமிழர் அமைப்பும் (TAG) சுவிஸ் தமிழர் பேரவையும் இணைந்து, ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன்ன மீது, போர்க் குற்ற வழக்கொன்றினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பதிவு செய்யவிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேற்குலகெங்கும் பரவலாகப் பதியப்படும் போர்க் குற்ற வழக்குகள், இலங்கை அரசினை, இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தக் கூடிய நிலைக்கு இட்டுச் செல்லலாம். இதனை ஆழமாகப் புரிந்து கொள்ளும் இலங்கை ஆட்சியாளர்கள், ஐ.நா. பாதுகாப்புச் சபையில், அடுத்த வருடம் அங்கத்துவம் பெறும் முயற்சியில் முனைப்புக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ. நா. பாதுகாப்புச் சபையில், வெட்டு வாக்கு அதிகாரமுடைய சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற 5 நாடுகளும் இரண்டு வருடத்திற்கொரு முறை மாற்றமடையும், நிரந்தர உறுப்பினரல்லாத 10 நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. ஆசியாவை பிரதிநிதித்துவம் செய்யும் இந்தியா, 2012 ஆம் ஆண்டு வரை பாதுகாப்புச் சபையில் வீற்றிருக்கும். ஆகவே ஐ. நா. பாதுகாப்புப் படைக்கு அதிகளவு இலங்கை இராணுவத்தை அனுப்பி, நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டினாலும் உறுப்புரிமை பெறும் சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே இருக்கும். வெட்டு வாக்கு அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்புரிமையை பாதுகாப்புச் சபையில் பெற, இந்தியா, பிரேசில், ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் மோதும் போது, இலங்கையின் விவகாரம், கவனிப்பாரற்று ஓரங்கட்டப்படுமென்பதை விளக்கத் தேவையில்லை. மாதமொருமுறை மாறும் பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பினை இந்த மாதம் பிரான்ஸ் வகிக்கின்றது.
ஐ. நா. சபைப் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த மூவரடங்கிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை, அடுத்த மாதம் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் (?) போது பாதுகாப்புச் சபையில் கபொன் (எச்ஞணிண) என்கிற நாடு, தலைமைப் பதவியில் அமர்ந்திருக்கும். அதேவேளை சீனா, அமெரிக்காவிற்கு அடுத்ததாக, உலகப் பொருளாதார நெருக்கடியிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளே பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெற அவசரப்படுவதைக் காணலாம். ”சீனச் சுவரில் மோதித் திரும்பும் இந்தியாவின் பாதுகாப்புச் சபை நிரந்தர உறுப்பினர் கனவு” என்று தலைப்பிட்டு மேற்குலக இணையத்தளங்களில் ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவர ஆரம்பித்துள்ளன.
புதிதாக ஒருவரை இணைப்பது, காலத்திற்கு ஒவ்வாத, முதிர்ச்சியற்ற விடயமென்றும் 192 ஐ.நா. சபை உறுப்பு நாடுகளுக்கிடையே நிலவும் இணக்கப்பாட்டினை சிதைத்து விடுமென்று சீனா தெரிவிப்பதை அடிப்படையாகக் கொண்டே இக்கட்டுரைகள் வரையப்படுகின்றன.
1965 இல் ஐ. நா. சாசனத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டத்தின் ஊடாக 6 ஆக இருந்த நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 10 ஆக மாற்றப்பட்டது. ஆகவே நான்கு நாடுகளை திருப்திப்படுத்துவதை விட ஏனைய 177 நாடுகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் நிரந்தரமற்ற உறுப்பினர்களை 10 இலிருந்து 15 ஆக மாற்றும் முன் மொழிதலை சீனா முன் வைக்கலாம். திறைசேரியில் 2.85 ரில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஈரோக்களையும் குவித்து வைத்துள்ள சீன தேசம், சர்வதேச அரசியல் உறவுகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுகிறது என்பதனை மேற்குலகம் புரிந்து கொள்ளும். ஸ்பனிய அரசின் கடன்களை, திறைசேரி பிணையங்களூடாக அல்லது திறைசேரி முறிகள் ஊடாக பெற்றுக் கொள்வதற்கு 8.1 பில்லியன் டொலர்களை செலவிட சீனா தயாராக இருப்பதனைக் கவனிக்க வேண்டும்.
ஆனாலும் பலமடையும் சீன தேசமானது பொருண்மிய நலன்களுக்கு அப்பால் நின்று தன்னையும் காப்பாற்ற முன்வருமென இலங்கை தப்புக் கணக்குப் போடுவது போல் தெரிகிறது.
வட சூடான் தலைநகர் காட்டோமில், விமானத் தள நிர்மாணிப்பிற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சீனா, நாளை தென்சூடான் தலைநகர் ஜீபாவிலும் விமானத் தளத்தை நிர்மாணிக்கலாம். சீனாவைப் புரிந்து கொள்ள
வேண்டுமாயின், அமெரிக்காவின் நகர்வுகளை கூர்ந்து அவதானித்தாலே போதும்.