ஐரோப்பா எங்கும் போராட்டங்கள் ஓய்ந்துவிடவில்லை. எதிர்வரும் ஆண்டுகள் மக்கள் போராட்டங்களுக்கான புதிய ஆண்டுகள் என்று ஆட்சியாளர்களே ஒத்துக்கொள்கிறார்கள்.
பிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் போராடிப்பெற்ற சமூகப் பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்களை அந்த நாட்டின் கூட்டரசாங்கம், ஒவ்வொன்றாக அழித்து வருவதற்கு எதிராக ஒவ்வொரு நாளும் எங்காவது ஒரு மூலையில் மக்கள் போராடுகிறார்கள். சுகாதார சேவை தனியார் மயமாக்கப்படு, மக்களின் உயிர் பொருளாதார நெருக்கடிக்குள் ஊசலாடுகிறது. உயர்கல்வி கற்றுக்கொள்ள இனிமேல் பணம்படைத்தவர்களால் தான் இயலும் என கூட்டரசாங்கம் கூச்சமின்றி ஒத்துக்கொள்கிறது.
பிரான்சில் வேலையற்றோருக்கான உதவித்தொகை படிப்படியாக நிறுத்தப்படு வருருகிறது. மக்களின் பணமான ஓய்வூதியம் சிறிது சிறிதாக அழிக்கப்படுகிறது. ஸ்பானியாவில் அரச ஊழியர்களுக்கு இனிமேல் ஊதிய உயர்வு கிடையாது என அரசு அறிவித்திருக்கிறது. வேலையற்றோருக்கான உதவித் தொகை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
தொழிற்சங்களையும் தொழிலாற்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்த கனேடியப் புதிய ஜனநாயக் கட்சி இன்றைய தேர்தலில் பெரும்பான்மைக் கட்சியாக மாற்றாமடைந்திருக்கிறது.
இவற்றையெல்லாம் எதிர்கொள்ள ஏகபோகங்கள், ஈராக்கையும், லிபியாவையும், மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளிலும் போர் படையெடுத்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானின் கனிம வழங்களைக் குறிவைத்து யுத்தம் நடத்தப்படுகின்றது.
சூடானின் எண்ணை வளத்திற்காக அந்த நாட்டில் குருதியுறையும் படுகொலைகளை ஏகாதிபத்தியங்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. கொங்கோவில் ஆயுதக் குழுக்களை மோதவிட்டுக் கனிமங்களை சுரண்டும் ஏகாதிபத்தியங்களின் ஜனநாயக முகம் இரத்தக் கறையை உழைக்கும் மக்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள். லத்தீன் அமரிக்க நாடுகளில் அமரிக்காவின் கோரத்தாண்டவத்திற்கு எதிரான தேசியப் போராட்டங்கள் எழுச்சி பெறுகின்றன.
இந்திய அரசின் வல்லரசுக் கனவு பழங்குடி மக்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. கஷ்மீரில் மக்கள் எழுச்சியை இந்திய அரசபடைகள் எதிர்கொள்ள முடியாமல் திணறிப் போயிருக்கின்றன. நாகாலாந்தில் இந்திய ஜனநாயக முகத்திரையை ஒடுக்கப்படும் மக்கள் கிழித்துப் போட்டிருக்கிறார்கள். பல்தேசிய நிறுவனங்கள் மக்கள் பணத்தை வெளிப்படையாகவே கொள்ளையிடும் நாளாந்த நிகழ்வுகளோடு புதிய இந்திய சந்ததி உருவாகிக்கொண்டிருக்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் இடையே தனது இரத்தப் பசிக்கு ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் சிறுபான்மை இன மக்களைப் பலியாக்கிய இந்திய இலங்கை அரசுகள் இந்த நூற்றாண்டின் அவமானகரமான இனப்படுகொலையை வன்னியில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.
சிங்கள உழைக்கும் மக்களை பேரினவாத நஞ்சூட்டி கொள்ளையிடும் ராஜபக்ச குடும்ப அரசும் பேரினவாதிகளும், இனச்சுத்திகரிப்பைத் தமது இருப்பிற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் சிங்கள உழைக்கும் மக்களுக்கு அவர்களின் நிலைக்கு இந்திய, சீன, ஐரோப்பிய பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் இடைத் தரகர்களாகச் செயற்படும் ராஜபக்ச அதிகாரமும் தான் காரணம் என்பது உணர்த்தப்பட வேண்டும்.
இலங்கை தழுவிய உழைக்கும் மக்களின் ஆதரவோடு, சிறுபானமை இனங்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை வென்றெடுக்கப்பட வேண்டும்.
உலகம், மக்கள் எழுச்சிகளுக்கும் போராட்டங்களுக்குமான காலப்பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்கள் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் நண்பர்கள் என்பதையும் ஒடுக்கப்படும் சிங்கள உழைக்கும் வர்க்கமும், தேசிய இனங்களும் எமது நண்பர்கள் என்பதையும் பிரகடனம் செய்வதிலிருந்து மேதினத்தின் தமிழ்ப் பேசும் மக்கள் சார்ந்த புதிய வரலாறு ஆரம்பிக்கட்டும்.
தேடகம் – கனடா
புதிய திசைகள் – இங்கிலாந்து
மே 18 இயக்கம் – கனடா
இனியொரு – இங்கிலாந்து
அசை – பிரான்ஸ்
01.05.2011