Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மூன்றாவது பொது வேட்பாளர் நிறுத்தப்படுவது அரசியல் அமைப்பை மாற்றுவதற்கு உகந்த வழியாகும்:தோழர் இ. தம்பையா

கே.ஏ.சுப்பிரமணியம் நினைவுதினக் கூட்டத்தில் புதிய-ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் இ. தம்பையா உரை

அண்மையில் சுவிற்சலாந்தின் சூரிச் நகரில் தமிழ் முஸ்லிம் மலையகக் கட்சிகளின் தலைவர் 24 பேர்வரை ஒன்று கூடி சிறுபான்மை மக்களின் நலனுக்கான ஐக்கியம் என்னும் மாநாட்டை நடாத்தி நாடு திரும்பினர். அத்தகைய கட்சிகளாலும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்ற இடதுசாரிக் கட்சிகளாலும் ஏன் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி நிறைவேற்று அதிகார முறைமையை ஆட்டம் காணச் செய்யும் ஒரு உறுதியான அரசியல் முடிவை எடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு பேரினவாத முதலாளித்துவ தலைமைகளில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற சுயநலப் பதவி அரசியல் நடத்துவதிலேயே மேற்படி கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன.

எனவே மூன்றாவது பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்தி இருதரப்பிற்கும் ஐம்பது வீதத்திற்குக் குறைந்த வாக்குகள் வரக் கூடியதான ஒரு நிலையை ஏற்படுத்துவதன் மூலம் இன்றைய நிறைவேற்று அதிகார முறைமையைத் தோற்கடிக்கக் கூடிய ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்க முடியும். அதனுடன் இணைந்த மக்கள் எழுச்சியின் மூலம் இந்நாட்டில் ஜனநாயகத்தையும் தேசிய இனங்களின் நியாயமான உரிமைகளையும் வென்றெடுக்கக் கூடிய அரசியல் தீர்வையும் நோக்கி முன்செல்ல முடியும். இதனை விடுத்து இரண்டு பேரினவாத வேட்பாளர்களில் யார் பக்கம் நிற்பது எனத் தீர்மானம் எடுப்பது பேரினவாதத்திற்கு அடிபணிந்து சேவகம் செய்யும் முடிவுகளாகவே இருக்க முடியும்.

எனவே இவ்வாறான ஒரு பொது வேட்பாளருக்கான சிந்தனையும் செயற்பாடும் நடைமுறைக்கு வர இன்னும் காலம் கடந்து விடவில்லை. இதனை தமிழ், முஸ்லிம், மலையயக் கட்சிகள் என்போரும் வெறும் செஞ்சட்டையுடன் தம்முள் பிரிந்து ஜனாதிபதித் தேர்தலில் நின்று வாக்களிக்கக் கோரும் இடதுசாரிகள் என்போரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கடந்த ஞாயிறு அன்று கொழும்பில் இடம்பெற்ற தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 20வது நினைவு தினக் கூட்டத்தில், நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்துகையில் புதிய-ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ.தம்பையா கூறினார்.

புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.காசெந்திவேல் தலைமையில் நடைபெற்ற மேற்டி கூட்டத்தில் சட்டத்தரணி இ.தம்பையா மேலும் தனது உரையில் கூறியதாவது,

இந்நாட்டின் தேசிய இனங்கள் ஒவ்வொரு காலகட்டங்களின் ஊடாகவும் இன, மொழி, பொருளாதார, அரசியல் நிலைகளில் புறந்தள்ளப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளில் மேற்கூறியவற்றுடன் ராணுவ ஒடுக்கு முறையினையும் மேற்கொண்டு வந்துள்ளனர். அவற்றின் ஒட்டுமொத்த விளைவையே இன்று தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இத்தகைய வழிமுறை நோக்கையே ஏனைய முஸ்லிம் மலையகத் தமிழ் மக்கள் மீதும் பேரினவாத முதலாளித்துவவாதிகள் கடைப்பிடித்து வருகிறார்கள். இதற்கு சிறிலங்கா சுதந்திரக்; கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் பொறுப்புதாரிகள் ஆவர். யுத்தத்திற்கு எண்ணெய் வார்த்தவர்கள் ஜே.வி.பியினராவர். இவர்கள் மூன்று தரப்பினருமே இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரை நிறுத்தி வாக்குக் கேட்டு வருகிறார்கள். இதில் யாரை ஆதரிப்பது என்பதில் தமிழ் முஸ்லிம் மலையகக் கட்சிகள் தமது சுயநலப் பதவி நோக்குடன் பேரம் பேசுகிறார்களே தவிர தத்தமது மக்களின் எதிர்காலம் பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. இது தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிச் செல்லும் அரசியல் வழிமுறையேயாகும். இதற்குப் பதிலாக தேசிய இனங்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் உறுதிப்படுத்தி அரசியல் தீர்வை வென்றெடுக்கக் கூடிய அரசியல் பொது வேலைத்திட்டமே இன்று தேவைப்படுகிறது.

அத்தகைய பொது வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகளும் இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதுதான் முறையான அரசியல் நிலைப்பாடாக இருக்க முடியும். இதனை விடுத்து மகிந்த ராஜபக்சவா அல்லது சரத் பொன்சேகாவா எனத் தெரிவுக்கு நிற்பது அரசியல் மடைமைத்தனமாகும். அத்துடன் இவ் இருவருக்கும் பின்னால் இருந்து வரும் அமெரிக்க இந்திய மேலாதிக்க சக்திகள் பற்றிய அபாயத்தையும் கண்டு கொள்ள வேண்டும். இவ்வாறு இரண்டு மேலாதிக்க சக்திகளும் பிரதான வேட்பாளர்களுக்குப் பின்னால் இருந்து செயல்படுவது தத்தமது மேலாதிக்க நலன்களுக்காகவே என்பதை மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும்.

இலங்கையில் நவகொலனித்துவமும் பேரினவாத யுத்தமும் ஒன்றுடன் ஒன்று இணைந்த நிலையிலேயே கடந்த முப்பது வருட யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இதில் எந்த மேலாதிக்கம் தமிழருக்கு நல்லது எனத் தேர்ந்தெடுக்க முற்பட்டதன் விளைவையே தமிழ்த் தலைமைகளும் புலிகள் இயக்கமும் பேரழிவாகத் தமிழ்த் தேசிய இனத்திற்குத் தேடித்தந்தார்கள். இத்தகைய பட்டறிவு காலம் கடப்பதற்கு முன்பாகவே இரண்டு பேரினவாதத் தலைவர்களில் ஒருவரை நல்லவராகத் தேர்ந்தெடுக்க நிற்பது எதிர்கால அழிவுக்குரியதாகும். சரியான முடிவை எடுப்பதற்கு அமெரிக்காவையோ அன்றி இந்தியாவையோ நம்பி அடிமைத்தனமாக நிற்காது மக்களை நம்பி நிற்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடாகும் என்றும் கூறினார்.

மேலும் அவ் நினைவு தினக் கூட்டத்தில் தலைமைதாங்கிய புதிய-ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தனது தலைமை உரையில், கடந்த முப்பது வருடகால பேரினவாத யுத்தத்திற்கும் அதன் பாரிய அழிவுகள் அவலங்களுக்கும் மிகப் பெரிய குற்றவாளிகள் பேரினவாத ஆட்சி அதிகாரத்தை முன்னெடுத்த முதலாளித்துவ சக்திகளேயாவர். ஆனால் அத்தகைய சக்திகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வெகுஜனப் போராட்டப் பாதையில் சரியான அரசியல் இலக்குகளைத் தேர்ந்தெடுத்து முன்செல்வதில் தவறிழைத்த தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் யாவும் அவ் அழிவுகளின் பங்குதாரிகள் என்பது மறந்து விடக் கூடியவைகள் அல்ல. அரசியல் கறை படிந்த தலைமைகளும் இரத்தக் கறை கொண்ட தமிழ் இயக்கங்களும் சூரிச் நகரில் கூடி யாருடைய நலன்களுக்காகப் பேசினர் என்பதை இன்றுவரை தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறவில்லை. இத்தகைய தலைமைகள் தான் அடுத்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் மக்களுக்குரிய கட்சிகளை மக்கள் அடையாளம் காண வேண்டும். வெறுமனே தலைமைகள் எடுக்கும் சந்தர்ப்பவாத பிற்போக்குத் தனமான முடிவுகளை தமிழ் முஸ்லிம் மலையக மக்கள் கேள்விகள் கேட்டு நிராகரித்து சரியான அரசியல் மார்க்கத்தில் பயணிக்க முன்வரல் வேண்டும்.

கடந்த முப்பது வருட கால அரசியல் போராட்ட வழிமுறைகளில் ஏற்பட்ட அழிவுகரமான தொடர் நிகழ்வுகளில் இருந்து சரியான பட்டறிவுகளையும் அரசியல் அனுபவங்களையும் தமிழ்த் தேசிய இனம் பெற்றுக் கொள்ளாது விட்டால் தொடர்ந்தும அழிவுப் பாதையில் பயணிக்க வேண்டிய அவலநிலைக்கே தள்ளப்படுவர். எமது கட்சி கடந்த முப்பது வருட யுத்தம் போராட்டம் என்பனவற்றின் மத்தியில் மக்களோடு இணைந்து வழிநடந்து வந்த இடதுசாரிக் கட்சியாகும்.

அதன் தலைமைத்துவத்தில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் பதினொரு ஆண்டுகள் பொதுச் செயலாளராக இருந்து வழிகாட்டி வந்தவர். அதனால் தழிழ்த்தேசியவாத இயக்கங்களால் அச்சுறுத்தல் மிரட்டல்கள் கொலை முயற்சிகளுக்கும் ஆளாக்கப்பட்டவர். அதேபோன்று ஏனைய தலைமைத் தோழர்களும் கட்சி உறுப்பினர்களும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மத்தியில் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் பொதுவுடைமை வழிநின்று போராடி வந்தவர்கள். தமிழ் முஸ்லிம் மலையகத் தேசிய இனங்களின் போராட்ட மார்க்கம் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி அமைப்பை வென்றெடுக்கும் வெகுஜன மார்க்கமே என்பதை வலியுறுத்தி வருவதில் உறுதியான நிலைப்பாட்டையே முன்னெடுத்து வந்துள்ளது.

அதே பாதையில் கடந்த கால அனுபவங்களின் ஊடாகத் தொடர்ந்து எமது மாக்சிச லெனினிசப் பாதையில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், அரசாங்க-தனியார் துறை ஊழியர்கள் மத்தியில் ஐக்கியத்தையும் அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி முன்செல்வதில் உறுதியாகவே இருந்து வருகின்றது. அதற்கான பலத்தையும் உறுதி மிக்க கொள்கை நிலைப்பாட்டையும் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் போன்ற புரட்சிகரப் பொதுவுடைமை முன்னோடிகள் நமக்கு வழங்கிச் சென்றுள்ளார்கள். நாம் தொடர்ந்து மேற்படி சரியான அடிச்சுவட்டில் முன்னேறிச் செல்வோம் என்றும் கூறினார்.

கொழும்பு வெள்ளவத்தையில், தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மேற்படி நினைவுதினக் கூட்டத்திற்கு அதிகளவானோர் வருகை தந்திருந்தனர். வரவேற்புரையை கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் சட்டத்தரணி சோ.தேவராஜா நிகழ்த்த நினைவுக்குழு சார்பாக தோழர். ஏ.கே.திருச்செல்வம் நன்றியுரையை வழங்கினார். கூட்ட ஆரம்பத்தில் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் உட்பட மறைந்த தோழர்களுக்கும் முப்பது வருடப் போராட்டங்களில் உயிர் நீத்த மக்களுக்கும் இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Exit mobile version