கட்டுரையாளரின் கருத்துக்கள் இனியொருவின் கருத்துக்கள் அல்ல. கட்டுரை உரையாடல் வெளியை உருவாக்கும் என்று நம்புகிறோம்.
மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.நோய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; புதிய நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பிற நாடுகளில் ஊன்றி பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து மருந்துகளை அனுப்புகின்றன. நோய்க்காக மருந்து அல்ல; மருந்துக்காக நோய் என்ற புதிய மருத்துவ ஒழுங்கைத் தோற்றுவித்துள்ளன. மக்களது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வணிகமயப் புதிய ஒழுங்கை நிறுவியதின் விளைவுகள் குறித்து, 5 ஆண்டுகள் முன் அமெரிக்கா, 225 பக்கங்கள் கொண்ட உலக அரசியல்-20-21’’ (Global politics 20-21) என்றொரு அறிக்கையை வெளிப்படுத்தியது.
“உலகம் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. மிகப் பெரிய பணக்கார வர்க்கம் ஒன்று உலகெங்கும் உருவாகியுள்ளது. அதைச் சுற்றி, அவர்களுக்குச் சேவை செய்யும் நடுத்தர வர்க்கம் ஒன்றும் உருவாகி வருகிறது. பெரும்பாலான மக்கள் ஏழைகளாகப் போனார்கள். இந்த ஏழைகள் போராடுவார்கள். மக்கள் திரள் எழுச்சிகள், தடுத்து நிறுத்த முடியாமல் போகும்’’
தொடர்ந்து அமெரிக்க முதலாளியச் சிந்தனையாளரான ஹென்றி கிஸிங்கர் ஒரு அறிக்கை தந்தார். “இந்தப் போராட்டத்தை எவ்வாறு கையாண்டு அடக்குவது? இது தொடர்பாக மிகப்பெரிய ஆய்வுகளைச் செய்ய வேண்டிய கடப்பாட்டில் நிற்கிறோம்“
ஆயுதந்தாங்கிய போராக இருக்குமானால் அடுப்பு எரிக்க விறகுகள் வைத்தவனே, விறகை வெளியே எடுத்து, நெருப்பினை அனைத்துவிட முடியுமாப் போல, ஆயுதங்கள் வழங்கிய நாமே வழங்கலை நிறுத்தி விடுகிறபோது, ஆயுதப் போர் அடங்கிப்போகும். அல்லது ஆட்சித் தரப்புக்கு ஆயுதம் வழங்க ஆரம்பித்தால், எழுச்சியை அடக்கிவிட இயலும் என்ற வகையில் அவர்களின் சிந்திப்பு ஓடியது. மக்கள் எழுச்சிகளை அடக்க அந்தந்த நாட்டு பணக்கார வர்க்கத்தின் ஆட்சிகளுக்கு அடக்கும் தொழில்நுட்பமும், நவீன ஆயுதங்களும் வழங்கும் நிலையை மேற்கொண்டனர்..
மக்களின் உத்வேகமான போராட்டங்களை அடக்கும் சோதனைக் கூடங்கள் என்பதற்கு முள்ளிவாய்க்கால் படுகொலையும், இந்தியாவின் மத்திய மாநிலங்களின் பழங்குடி மக்கள் வேட்டையும் வெளிப்படையான சாட்சியங்களாகின. முள்ளிவாய்க்கால் சுற்றி வளைப்பைப் போலவே, – மத்திய மாநிலங்களில் பழங்குடி மக்களின் இராணுவச் சுற்றி வளைப்பைப் போலவே, கூடங்குளத்தின் சுற்றிவளைப்பைக் காணமுடியும்.. மத்திய துணை இராணுவம், தொழில் பாதுகாப்புப் படை, கடலோரக் காவற்படை, தமிழகக் காவல்துறைகளின் முற்றுகையில்-அரச பயங்கரவாதம் செயல்ப்பட்ட விதம் மக்களுக்கான மின்சார விநியோகம் அல்ல, உலகமயச் செயல்பாட்டுக்காக என்பதானது.
சுருங்கச் சொல்வதாயின் மக்கள் எழுச்சிகள் உருவாகக் காரணமாக இருந்து, ஒரு எல்லை வரை வளர்ச்சிக்குக் கொண்டு செல்வது, பின்னர் அதனை அரச பயங்கரவாதம் வழியாய் உள்மடங்கச் செய்வது என எல்லாமும் உலகமயம் உண்டு பண்ணும் கட்டம் கட்டமான நகர்வுகளேயாம். மன்மோகன் சிங்குகளை அவர்களே உருவாக்கினார்கள். அதிலிருந்து பிறந்த மேதாபட்கர்களை அவர்களே எதிர்கொண்டார்கள். இலங்கையின் செயவர்த்தனா, இராசபக்ஷேக்களை அவர்களே உருவாக்கினார்கள். அங்கிருந்து அதனால் பிறப்பெடுத்த போராளிகளையும் அவர்கள் எதிர்கொண்டு இல்லாமல் செய்தார்கள். இரு துருவங்களை உண்டு பண்ணி இயக்குதலும், மோதலில் இரு துருவங்களிடமிருந்தும் ஆதாயத்தைக் கரந்து கொள்வதும், இந்தப் புதிய ஒழுங்குகளின் உலக நிரலாக ஆகியுள்ளது.
இன்னும் வெளிவராத அந்த ஈழத்து நாவல் என் பார்வைக்கு கிடைத்தது. சுகுமார் என்ற போராளி வாசகங்களால் நிறைந்தவன். அவனது வாசகங்கள்அனுபவங்களால் நிறைந்தவை. அவன் உடல் வயதை விட மனவயது அதிகம். ஒரு நேரத்தில் சுகுமார் சொல்லும் வாசகம் இப்படி வரும்.
“விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்கலாம். அதற்கு மேலும் கொடுக்க முடியாது. கொடுக்க கூடாது. கொடுக்க நேர்ந்தால் நாம் தோற்றுவிடக்கூடும்“
இராசதந்திர அணுகுமுறைகளைக் கைவிட்டு, இலட்சியவாதத்தையும், தியாகவாதத்தையும் இராணுவவாதத்தையும் முன்னிறுத்தியதால் நாம் வீழ்ந்து போனோம். எந்த ஒரு விடுதலைப் போரிலும் இத்தனை ஆயிரம் கல்லறைகள் எழும்பிய வரலாறு இல்லை. தமிழீழம் பெறுவதற்கான போரில் எந்த எல்லைவரையும் செல்லலாம்; எத்தனை தியாகத்தையும் செய்யலாம்- என்ற கருதுகோளே நம்மை வீழ்த்தும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய நாவலில் முன்குறிப்பாய் உணர்த்துகிறார் படைப்பாளி.
இரட்டைக் கோபுர மரணங்களும், இரட்டை வாய்க்கால் கொலைகளும் (முள்ளிவாய்க்கால், இரட்டைக் கால்வாய்), வேறு வேறு நிகழ்வுகள் அல்ல. உலகமய அரசியலின் முன்னும் பின்னுமான விளைவுகள் இவை. மூவாயிரம் மரணங்கள் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தகர்ப்பு பெற்ற விசுவ ரூபம், 50 ஆயிரம் பேர் கொலையுண்ட இரட்டைவாய்க்கால் பெறவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போராக இரட்டைக் கோபுரம் விசுவ ரூபம் கொண்டு ஈராக், ஆப்கான் என தாண்டவம் ஆடி இறுதியாய் பின் லேடன் அழிப்பில் முடிந்தது. சாட்சியங்களற்ற போரால் பொசுங்கிய இரட்டை வாய்க்கால், இன்றும் முள்வேலி முகாமும் புலம்பலும் கண்ணீருமாய் காத்திருக்கிறது.
2005 இலங்கைத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே என்ற நரியை ஆதரிப்பதைவிட இராசபக்ஷேக்களை ஆயுதங்களால் எதிர்கொள்ள முடிவெடுத்து தேர்தல் புறக்கணிப்புச் செய்தனர் புலிகள். ஆயுதங்களே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்ற பழைய சுலோகம் காலாவதியாகி விட்டதைக் கண்டு கொள்ளாமல் ஆயுதங்களால் எதிர்கொள்ள முடிவு செய்தனர். நரியை விட, சிங்கமே நரவேட்டையாடும் மிருகம் என்பதைக் காலம் உணர்த்தியது. தேர்தல் புறக்கணிப்பு அமெரிக்கச் சார்பு ரணிலின் வெற்றியைத் தடுத்து, சீனச் சார்பு இராசபக்ஷேக்களை வெற்றிக் கொள்ளச் செய்தமையால் அமெரிக்காவும் மேற்குலகும் புலிகளின் வீழ்ச்சியை விரும்பினர். நண்டு வளையான இலங்கையில் வால் நுழைத்து, இலங்கை என்ற நண்டையே இழுத்துச் சாப்பிடவிருந்த அமெரிக்காவுக்கு தன் கனவைச் சிதைத்த விடுதலைப் புலிகளைச் சிதைப்பதே திட்டமாயிற்று. 2005ம் ஆண்டின் பின்பு மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் 11 ஆயுதக் கப்பல்களில் 5 ஆயுதக் கப்பல்களை அமெரிக்க மூழ்கடித்து உதவியது. ராசபக்சே 2009-ம் ஆண்டின் மத்தியில் இதை வெளிப்படையாக அறிவித்தார். அமெரிக்கத் தரப்பிலிருந்து மறுப்பு வரவில்லை. இப்போது மார்ச் 23 ஜெனிவா தீர்மானத்தின்போது “ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக வழங்கப்பட்ட ஆயுதங்களில் 40 சதவீத ஆயுதம் நீங்கள் வழங்கியதுதானே` என்று கியூபா எள்ளலாகக் குற்றம் சுமத்தியது. `2009-ல் மட்டும் பிரிட்டன் ரூ 7000 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியது’’ என்று டாக்டர் ராகுல் சாய்ஸ் என்ற பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் பிப்ரவரி 13, 2009-ல் தெரிவித்தார். “அதற்காக வெட்கப்படுகிறோம் ’’ என்று அவர்தெரிவித்த போதிலும், உண்மை வெளியே வந்தது.
“ பின்லேடன் கொல்லப்பட்டவுடன் இஸ்லாமிய உலகிற்கு எதிரான அமெரிக்க யுத்தம் ஒரு முடிவுக்கு வந்து விட்ட நிலையில், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தன் யுத்தத்தைதொடங்கியுள்ளது’’ என்று சில மாதம் முன்பு சீன அமைச்சர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிலாரி கிளிண்டனுக்கு காட்டமாய் அளித்த பதிலில் உண்மை அடங்கியிருக்கிறது. இலங்கையை ஆதாரப் புள்ளியாகக் கொண்டு இந்துப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது விரிவாக்கத்தைப் பெருக்கி வருகிறது சீனா. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான சீனாவின் கடல்வழி வர்த்தகப் பாதையில், இலங்கைத் தீவு ஆதாரப் புள்ளியாக இருப்பதைக் கலைத்து தனக்குச் சாதகமான புள்ளியாக மாற்ற முனைகிற அமெரிக்காவின் தாக்குதலே ஜெனிவா தீர்மானம். உண்மையில் அத்தீர்மானம் இலங்கைக்கு எதிரானது அல்ல, தன்னுடைய உலக ஆதிக்கத்தை கேள்வி கேட்டுப் போட்டியாக வளரும் சீனாவுக்கு எதிரானது என்ற சூட்சுமத்தை சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இரட்டைவாய்க்கால் பேரழிவென்பது இந்துப் பெருங்கடல் பிராந்தியத்தில் வல்லரசுகளின் பரஸ்பர மறைமுக வியூகம், ஜெனிவா தீர்மானம் என்பது அந்த வல்லரசுப் போட்டிகளின் நேரடி வியூகம். இத் தீர்மானம் நிறைவேறிய அதே நாளில் கடலோரப் பாதுகாப்பு, கடல் வளையக் கண்காணிப்பு சார்ந்த தொழில்நுட்பம், கண்காணிப்புக் கருவிகள் என ஆயுத வழங்கலுக்கு 30 ஆண்டுகளாய் இலங்கைக்கு விதித்திருந்த தடையை, அமெரிக்கா நீக்கிய செய்தி வெளியாயிற்று. அத்துடன் ஈரானிலிருந்து இலங்கை எண்ணெய் இறக்குமதி செய்து கொள்வதிலும் அமெரிக்க நிறைய சலுகைகளை வழங்கியுளளது.
ஜெனிவா தீர்மானத்தில் இலங்கை மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படியாய் எதுவும் இல்லை. அது ஒரு சொத்தையான தீர்மானம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பது போல், எல்.எல்.ஆர்.சி அறிக்கையில் இருப்பதுதானே தீர்மானத்தில் வரும் என இலங்கைக்கு தோளோடு தோள் உரசி காதைக் கடிக்கிறது அமெரிக்கா என்றுதான் கொள்ள வேண்டும்.இருந்த ஒன்றிரண்டையும் திருத்தங்கள் செய்து இந்தியா உருவி எடுத்து விட்டது. உங்களுக்கு ஒன்றுமே நேராமல் என்னென்ன செய்தோம் என்று இராசபக்ஷேவுக்கு எழுதி புளாகித்துக் கொண்டார் மன்மோகன்.
இந்த தீர்மானத்தையும், தீர்மானத்துக்கு ஆதரவாக நின்றது போல் காட்டிக்கொண்ட இந்தியாவையும் பார்த்து அடங்காத ஆத்திரத்துடன் `பின்னொரு நாளில் பயங்கரவாத காஷ்மீர் உங்களுக்க ஒரு பாடமாக இருக்கப் போகிறது’’ என்கிறார் இராசபக்ஷே.
உள் அரங்கிலும்,உலக அரங்கிலும் இனச் சமத்துவம் பேணாத, விரும்பாத ஒரு நாடு இந்தியா. காஷ்மீர், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அஸாம் (உல்பா) என்று முதுகின் மீது அனல் கொப்புளங்களைச் சுமந்து கொண்டிருக்கிற இந்தியா, இலங்கை வழியிலேயே இனப் பிரச்சனையைக் கையாளும் என்பதற்கு, காஷ்மீரம் கண்முன்னான சாட்சியாக இருக்கிறது. இரு சகோதரர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபித்துக் கொள்வது போலத்தான், இராசபக்ஷேயின் மன்மோகன் மீதான கோபிப்பும் அமைகிறது.
எந்தப் பிரச்னையிலும் ஒரு தாக்கம் உண்டென்றால் அதற்கு எதிர்த்தாக்கம் இருக்கவே இருக்கும். அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தமை சிங்களப் பெருந்தேசிய இனத்திற்குள் பெரும்ப பகையை மூட்டிவிட்டுள்ளது. இந்தியா மீதான பகையை எப்போதும் தமிழர்கள் மீது திருப்பி பழிதீர்த்துக் கொள்வதை இப்போதும்ம தொடங்கியுள்ளார்கள். 1983ல் நிகழ்ந்த இனக் கலவரம் போல் இப்போதும் நிகழுமோ என தமிழர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். குறிப்பாக, சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கிற கொழும்புவிலும் கிழக்கு மாகாணத்திலும் உயிர்ப்பயம் ஓடுகிறது தமிழர்கள் மத்தியில்.
தமிழர்களிடம் உலகளாவிய ஒரு உளவியல் திருப்தி ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் முடிந்த 3 ஆண்டுகளின் பின் உலகின் கவனத்தை ஈர்க்க முடிந்திருக்கிறது என்ற திருப்தி அது. ஒன்றுமில்லாத தீர்மானமாக இருந்தாலும் இலங்கை மீது கேள்வி எழுப்ப முடிந்ததே என்று ஒரு உள் ரசிப்பு அனைத்துத் தமிழரிடமும் காணமுடிகிறது. முள்ளி வாய்க்கால் முடிவல்ல, ஆரம்பம் என்பதை உணர்த்திய இக்கால கட்டம் முக்கியமானது.
-2-
சர்வதேச அரசியல் வியூக நகர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலை அரசியலை முன்னெடுத்துச் செல்ல முடியும். உலகஅரசியலே உள்ளூர் அரசியலுக்கு வழிகாட்டி. “இரட்டை வாய்க்கால் அழிப்பு, தமிழினத்துக்கு ஏற்பட்ட அழிவை மட்டும் போதிக்கவில்லை. தமிழினத்துக்கு இருக்க கூடிய சர்வதேச அரசியற் பலத்தின் முக்கியத்துவத்தையும் போதித்துள்ளது’’ என்ற சமகாலம் பற்றிய கருத்து மனங்கொள்ளப்பட வேண்டும்.
தமிழர்களை இனி வாழ விட மாட்டோம் என்ற இடத்துக்கு அரசு, இராணுவம் மட்டுமல்ல மனோவியல் ரீதியாக சிங்களர்களும் வந்துள்ளார்கள். இணக்கப்பாடு, சமரசம் என்ற நல் நோக்கங்களை தமிழர்கள் ஏற்றுக்கொண்டால் கூட சிங்களர் அந்த எல்லைகளைத் தாண்டி விட்டார்கள். தமிழர் தமக்கு கட்டுப்பட்ட அடிமைச் சமூகமாக இருக்கச் சம்மதித்தால் மட்டுமே வாழலாம் என்ற நினைப்பில் சிங்களர் இருக்க இலங்கைத் தீவு இரண்டாக உடையாமல் சிங்கள அரசியலை ஒருவராலும் இனிக் கையாள முடியாது என்ற புள்ளியில் அரசியல் ஆய்வுகள் உருவாகின்றன. ராஜிவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்த வரைவு இறுதி செய்யப்பட்ட வேளையில் இந்தியத் துhதராக இருந்த ஜே.என்.தீட்சித், அதன் போதாமையைப் பற்றிக் கூறினார்
“சிங்களருக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையில் இட்டு நிரப்ப முடியாத அதல பாதாளமான வேறுபாடுகள் உள்ளன. வெறுமனே பொருளாதார வளர்ச்சியாலோ சாதாரண அரசியல் சீர்திருத்தங்களினாலோ சரிப்படுத்திவிட முடியும் என எண்ணுவது பிழையானது’’
ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக, ஆயுதப் போராட்டமற்ற வழிமுறையை வரலாறு கோருகிறது. ஆயுதக் களம் இல்லாத நிலையில் சனநாயகத்திற்கான, வாழ்வாதார உரிமைகளுக்கான, தேசிய விடுதலைக்கான மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கான புதிய மூன்று களங்கள் திறக்கப்பட்டுள்ளன
முதலாவது-ஈழத் தமிழ்மக்கள்
இரண்டாவது-புலம் பயர் தமிழர்கள்
மூன்றாவது -தாயகத் தமிழர்
அவரவர் தளங்களுக்கென தனித்தனிக் கடமைகள் முன்னிற்கின்றன.
தெளிவான, மெய்மையான,யதார்த்தமானஅடிப்படையை தமிழினம் வகுத்துக்கொள்ள வேண்டிய காலம் இது. நாம் விடுதலையின் ஆதரவு சக்திகள் என்ற வரையறை அது. உலகளாவிய ஆதரவைப் பெறவும் உலகிற்குள் போய் பயணத்தை முன்னெடுக்கவும் இது வழி அமைக்கும்.
முதற்தளம்-ஈழம்
அனாதரவான ஈழமக்களின் மனசின் எல்லா அசைவுகளும் மூடப்பட்டுள்ளன. கை, கால்கள் மட்டுமல்ல, மனசை வெளிப்படுத்தும் நாக்குகளும் வெட்டப்பட்டு விட்டன. தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாலைவனத்தில் அவர்கள் ஜீவிக்கின்றனர்.
இனிப்பொறுக்க முடியாது என்று டுனிசியா போல்,எகிப்து போல்,சிரியா போல், லிபியா போல் ஒரு மக்கள் எழுச்சி பரவி வர சாத்தியமில்லை. எங்கோ ஒரு புள்ளியில் ஏதோ ஒரு உயிர் தொடங்கி வைக்க காட்டுத் தீயாய் வெடிக்கும் தென்னெழுச்சியும் பொய்த்துள்ளது.
மார்ச் 23ல் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைப் பேரவையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இந்தியாவின் அறிவுரைப்படியே பங்கேற்காது ஒதுங்கினர் எனச் சொல்லப்படுகிறது. அதே நாட்களில் ராசபக்சேயுடனான புரிந்துணர்வு நடந்து முடிந்தது. இந்தப் புரிந்துணர்வு சந்திப்பின்போது கூட்டமைப்பின் தள்ளாடும் தலைவர் சம்பந்தர்,சுரேந்திரன் எம்.பி யை உடன் அழைத்துச் சென்றார். தனதாளாகவும் அதே பொழுதில் ராசபக்ஷேயின் ஆளாகவும் இயங்கும் வல்லமையுடடைய சுரேந்திரனை அழைத்துச் சென்றது மிகப் பாதுகாப்பனது. ஜெனிவா மனித உரிமை அவையில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த புலம்பெயர் தமிழர்கள் சொந்த ரத்தமே பேசவரவில்லையென்கிறபோது அந்த ரத்தத்தின் மீது அவர்களுக்கு ஐயம் எழுந்தது. அந்த ஐயம் தொடர்தடம் பதித்துச் செல்கிறது என்பதில் துளிச் சந்தேகமும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் இங்குள்ள கருணாநிதி போல் என்று சொல்லப்படுகிறது.
ஈழர்களின் பூர்வீகத்தில் இன்றைக்கு அரசியல் களத்தில் உள்ள சக்திகள் இரண்டு. ஒன்று இந்திய ஆதரவாளர்கள் மற்றவர் இலங்கையின் நேரடி ஆதரவாளர்கள். இந்தியாவின் தயவில் எதையாவது பெற்றுக் கொள்ள முடியாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிலை எடுத்திருக்கிறார்கள். இந்திய அழுத்தத்திலேயே இலங்கை செய்யும் என நினைக்கிறார்கள். அதற்காக ஈழ மக்கள் அனைவரையும் இந்தியாவின் பிராந்திய நலன்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தகவமைத்துக் கொள்ளுமாறு வழி நடத்தும் வகையில் கூட்டமைப்பினர் செயல்கள் அமைந்துள்ளன. இந்தியாவை வல்லரசு நாடாக உலகில் உயர்த்திட வேண்டுமென்ற இந்திய ஆளும் வர்க்கங்களின் அவாவும் இதுவே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கிற தமிழினத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டுள்ளனர்., தமிழ்ப் பிரதேசங்களான வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கையைக் கைவிட்டது, சுய அதிகாரமற்ற மாகாண சபைகளை வலியுறுத்துகிற 13-வது திருத்தத்தினை ஏற்றுக்கொண்டமை போன்ற செயல்கள் இலங்கைப் பேரினவாத அரசியலுக்குள் தமிழ் இனத்தின் அரசியலைக் கரைக்கும் முயற்சிதான் என்பதைக் காட்டுகின்றன. சிங்களப் பேரினவாத அரசியலை முழுமையாய் முன்னகர்த்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மே தினப் பேரணியை நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது அவர்கள் நெஞ்சுரமற்ற தலைமைகள் என்பதை அப்பட்டமாகக் காட்டியுள்ளது.
இந்திய சரணாகதி அரசியல் என்பது இலங்கை சரணாகதி அரசியலுக்குச் சமமானது. இரண்டு சரணாகதி அரசியலையும் தாண்டி மக்கள் அரசியலை நடத்துகிற சக்திகள் அங்கு எழுமானால் ஈழத்தமிழனுக்கு அங்கு சுவாசிக்க இடம் உண்டு.
இரண்டாம் தளம்- புலம் பெயர்தமிழர்
உலகெங்குமுள்ள பெரும்பான்மையான நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் புலம்பெயர் ஈழத்தமிழர் வாழ்கின்றனர். யூதர்களுக்கு அடுத்து, நாடற்றவர்களாய் ஆகிய ஈழர்கள் உலக அளவிலும், எண்ணிக்கையளவிலும் யூதர்களை விடப் பெரிய சக்தி. சில நாடுகளில் சில பகுதிகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை, நகரவை உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்யும் சக்தியாகவும் திரண்டுள்ளார்கள். அவ்வந் நாடுகளில் கருத்தியல் அழுத்தத்தை செலுத்தும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. சிதைக்கப்பட்ட ஈழத் தமிழர்களை விட, செயலற்ற தாயகத் .தமிழரை விட, உலகின்கவனத்தை ஈர்க்கும் வல்லமை கொண்டவர்கள் ..
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கால்வைக்க முடியாமல் இராசபக்ஷேயை திருப்பி ஓட வைத்தது, அய்.நா விசாரணைக்குழு அறிக்கை ,அமெரிக்கத் தீர்மானம் போன்ற காரியங்கள் இவர்கள் செயலாளிகள் என்ற சேதியைக் சொல்கிறது. தம் வாழ்வையும் கவனித்துக் கொண்டு, தம் மண்ணின் விடுதலைக்கு உழைப்பார்கள் என்பதை உணர்த்துகிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று மேற்குலகம் தொடங்கிய கருத்தியலை தனக்கானதாக சுவீகரித்து இராசபக்ஷே எப்படி முள்ளிவாய்க்காலை நடத்த முடிந்ததோ, அது போல் உலகம் உருவாக்கி வைத்திருக்கும் பொதுமக்கள் வாக்கெடுப்பு என்ற கருத்தியலை ஈழத்துக்கு சாதகமாக புலம்பெயர் தமிழர்கள் பயன்படுத்த முடியும். தமிழர் பிரதேசங்களில் மட்டுமல்லாது, புலம் பெயர் தமிழரையும் உள்ளடக்கிய பொதுமக்கள் வாக்கெடுப்பினை நடத்தக் கோரி தத்தம் வாழ்விடங்களில் அழுத்தம் தரும் செயல்முறையை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இது அவர்களின் பிரதானக் கடமையாக இருக்கும். அவர்களிடமிருந்து புறப்படும் வாக்கெடுப்புக் கோரிக்கை, அந்நாடுகளிலுள்ள சிந்தனையாளர்கள், சனநாயகவாதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் போன்றோரை ஒரு செயற்தளத்துக் ஈர்க்கும். அமெரிக்க எழுத்தாளராக உருவாகி- கியூபா வெனிசுலா ஆகிய நாடுகளில் களப்பணி ஆற்றிய ரான் ரைட்வைரை இதன் முன்னுதாரணமாகக் காட்டலாம். ஜெனிவா மனித உரிமை அவையில் கியூபா, வெனிசூலா போன்ற நாடுகள் மேற்கொண்ட இலங்கைக்கு ஆதரவான நடவடிக்கையை கடுமையாகச் சாடியவர் அவராவார். விவாத அரங்கு, நேர்காணல்கள், பேரணிகள் போன்ற மக்களிணைப்பு நடைமுறைகளில் இத்தகைய மனிதகுல செயற்பாட்டாளர்களை புலம்பெயர்தமிழர் முன்னிறுத்த வேண்டும்..
ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகளுடனும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகளுடனும் உரையாடலைத் தொடங்கியுள்ளார்கள் புலம்பெயர் தமிழர்கள். இது ஒரு தேவையான முயற்சி. ஒருநாட்டு அரசு இன்னொரு நாட்டுடனான உறவை அரசு மட்டத்திலேயே வைத்துக் கொள்ளும். அரசற்ற ஒரு இனத்தின் குரல் எடுபடுமா? அரசு மட்டங்களில் எடுபடவில்லையென்றாலும் அந்நாட்டில் இயங்கும் சனநாயகவாதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற தளத்துக்கு எடுத்துச் செல்கையில் அங்கு கவனப்படுத்தப்படும். எதிராக வாக்களித்த இந்தோனேஷியா, தாய்லாந்து, சவூதி அராபியா, கத்தர், குவைத் போன்ற நாடுகள் சிறுபான்மை இனங்கள் மீது அடக்குமுறையைத் தொடர்ந்து செலுத்துகின்ற நாடுகளாயினும் அங்கு போராடும் இனங்களிடம் அணுகி உரையாடும் எல்லையை இனித் திறக்க வேண்டும்.
1948க்கு முன்னும் பின்னும் பெற்ற ராசதந்திர வல்லமை எதிரிக்கு மிகப் பெரிய வளம். 60 ஆண்டுகளுக்கு மேலாய் அவனை வீழ்த்த அனுப்புகிற அம்புகளையெல்லாம், பாதிவழியிலேயே முறித்து தன் கைவசப்படுத்துகிற மாயாஜால வல்லமை அவனுக்கு உண்டு. “எதிரி நமது இராணுவ அரண்களை மட்டும் நொறுக்கவில்லை. கூடவே நம்மிடமிருந்த கற்பனைகளையும் தவறான சிந்தனைகளையும் நொறுக்கியிருக்கிறான்’’ என்ற வாசகத்தைக் கவனிக்க வேண்டும். எனவே நாம் முடிக்கப்பட்டதற்கான, வீழ்ந்தததற்கான காரணத்தை நம்மிடையேயும் ,உலக சமூகத்திடையேயும் தேடுகிறது போதே சுய விமரிசனமாய் கற்றுக்கொள்ளவும் வேண்டும். சுயவிமரிசனமாய் கற்றுக்கொள்ளலிருந்தே, நாம் வீழ்ந்துபடாமல் இருப்பதற்கும் முடிக்கப்படாமல் தொடர்வதற்குமான வழிவகைகளைக் காண முடியும்.
“ஜெனிவா வெற்றியானது தமிழினத்தைப் பொறுத்தவரையில் அது புலம்பெயர் தமிழர்களையே சாரும்.. எனவே இன்னும் அவர்கள் வலுப் பெறுவார்கள். அதுபோன்ற சூழல் .வருமானால் அவர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவும் தனிநாடு என்ற இலக்கை நோக்கியதாகவே இருக்கும் ’’ என்று கண்காணிப்பு ஆய்வு மையம் (Observe Research Foundation) சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளதைக் காணலாம்.
மூன்றாம் தளம்-தாயகத் தமிழர்
முள்ளிவாய்க்கால் முடிவுக்கு, களத்தில் போராடி மடிந்த போராளிகளும், மடிந்த எண்ணிக்கையில்லாப் பொதுமக்களுமா காரணம்? இந்திய அரசுக்கு முன் மண்டியிட்டு மடங்கிய தமிழகமும் காரணம், தமிழகமே காரணம். தமிழக அரசியல் தலைமைகள், தத்தமது இயக்கங்களின் இருப்பைத் தக்க வைக்க, ஈழப் பிரச்சனையை பணயப் பொருளாக்கியபோது இது தெளிவாகியது.
இவர்களின் எதிர்ப்பு எவ்வகையிலும் இலங்கைக்கான இந்தியக் கரங்களை தடுத்து நிறுத்தப் போதுமானதாக இல்லை. யுத்தம் நடைபெறுகையில் .நாடாளுமன்றத்துக்குள்ளும் சட்டமன்றத்துக்குள்ளும் நீடிப்பது என்பது நடைபெறும் யுத்தத்துடனான பேரமாக அமைந்தது. பிரதிநிதித்துவ சபைகளுக்கு அப்பால்,வெளியில் சமுதாயக் களத்தில் நடந்த போராட்டங்களும், நடுவணரசை நிலைகுலைய வைக்கவில்லை. குறைந்தபட்சம் நடுவணரசு அலுவலகங்கங்களையோ மாநில அரசின் அலுவலகங்களையோ செயற்படவிடாமல் சில நாட்கள் செய்திருந்தால் கூட எல்லாம் சரியாகி இருக்கும். எல்லை மீறாத, வரையறுக்கப்பட்ட போராட்டங்களால் எல்லாமும் சரிப்படுத்தப்படும் என்பது இவர்களின் நம்பிக்கையாயிருந்தது.
இலங்கைக்கு எதிராய் இந்தியாவை வாக்களிக்க வைத்ததின் மூலம் தமிழக சக்திகள் இப்போதுதான் ஒரு நல்ல செயலை ஆற்றியிருக்கிறார்கள். தமிழக அரசியல் இயக்கங்கள் கொடுத்த நெருக்கடியால் இந்தியா எதிரான முடிவுக்குப் போயிருக்கிறது என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விரக்தியை வெளிப்படுத்துமளவுக்கு நடந்து விட்டது. இந்தியாவின் இந்த முடிவுக்கு ஒவ்வொருவரும் உரிமை பாராட்டிக் கொண்டாலும் `எவ்வாறோ அரைகுறையாகவேனும் ஒரு காரியம் நடந்திருக்கிறது.’ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம் `இந்தியா நெருப்பு வளையத்தில் உள்ளதாக’ ப.சிதம்பரத்தை அதுவே பதற வைக்கிறது.
இந்திய வெளியுறவுக்கொள்கையில் தாங்களும் பங்காற்ற முடியும் என்பதை முதன் முதலாக தமிழர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இலங்கையுடனான இந்திய வெளியுறவுக் கொள்கை இந்திய புலனாய்வுத் துறையான ரோவால் (RAW) வழிநடத்தப்படும் நிலைக்கு மாறாக முதன் முதலாக தமிழக அரசியல் சக்திகள் தீர்மானிப்பதாக ஆகியிருக்கிறது. இதில் ஒரு தொடர்ச்சியைக் கொடுப்பதில்தான் தாயகத் தமிழர், ஈழத் தமிழரின் விழிகளில் கொஞ்சமேனும் ஒளிக்கீற்றை ஏற்ற முடியும். தமிழக அரசியல் கட்சிகளைப் போல், சந்தர்ப்பவாதத்துக்கு தாலி கட்டிக் கொண்ட இயக்கங்களை, இதற்கு முன் நாம் கண்டதில்லை. இனி அதுபோல் இல்லை என்ற புதிய நம்பிக்கையுடன் சந்தர்ப்பவாதத்துக்கு, உள் மடங்காத, புதிய சக்திகள் தமிழகமெங்கும் உருவாகி வருகிறார்கள். இவர்கள் தேசிய இன விடுதலையில் மட்டுமல்லாது, மக்களின்ஒவ்வொரு அசைவிலும் பங்கு கொள்கிறவர்களாக தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஜெனிவா தீர்மானமோ, அதை நடைமுறைக்குக் கொண்டு செல்லும் நகர்வுகளோ, அந்தந்த நாட்டின் உள் அரசியல், புவிசார் அரசியல், அந்நாடுகளின் ஆளும் வர்க்கக் குழுக்களின் நலன் என்ற வகையில்தான் அமையப் போகின்றன. அதன் தெளிவான வெளிப்பாடுகள் புலப்படத் தொடங்கி விட்டன. உடனே தொடங்கி, உடனே முடிவதல்ல. இது மூன்று தமிழர்களின் தோள்களும் சுமக்க வேண்டிய தொடரும் போராட்டம் என உணர்வதில் விடுதலை அரசியல் செயல்பாடு உள்ளது.