கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்களின் பிரதேசங்கள் தமிழ் அரச துணைக் குழுக்களின் துணையோடு பெருந்தேசிய வாதிகளால் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வடக்கில் நிர்வாகம் திட்டமிட்டுச் சீர்குலைக்கப்படுகிறது. பௌத்த புனிதப் பிரதேசங்கள், இராணுவ முகாம்கள் என்று ஒரு தேசம் திட்டமிட்டுச் சூறையாடப் படுகிறது.
கடத்தப்பட்டவர்களும் கைதுசெய்யப்பட்டவர்களும் சித்திரவதை முகாம்களில் வதைக்கப்பட்டபின்னர் சாகடிக்க்ப்படுகின்றனர். கொல்லப்பட்ட கொசுக்களுக்குக் கணக்குச் சொல்லும் இலங்கை அரசு மனிதப் பிணங்களை மட்டும் மறந்துவிடுகிறது.
தமிழ்ப் பேசும் மக்கள் ராஜபக்ச அரசின் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப் படுகிறார்கள். இன்னும் சில வருடங்களில் இலங்கையில் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினருக்குத் தனியான வாழ்வுப் பிரதேசங்களும் அதற்கான அடையாளங்களையும் சிறீலங்கா அரசு முற்றாகச் சிதைத்துவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது.
இந்தியப் பெரு நிறுவனங்களும் சீன வியாபாரிகளும் இணைந்து வட கிழக்கின் வழங்களைச் சூறையாடுகின்றனர். இந்தியப் பழங்குடி மக்கள் போல நிலங்களையும் வழங்களையும் அபகரிப்பதற்காக இலங்கை அரசு இந்த இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களோடு இணைந்து தமிழ்ப் பேசும் மக்களை சொந்த மண்ணில் அகதிகளாக்கிச் சாகடித்து விடுமோ என்ற அச்சக் குரல் பரவலாக ஒலிக்கிறது. வன்னியிலிருந்து வெளியேறிய மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் குடியேற்றப்படவில்லை.
முட்கம்பி வேலி முகாம்கள் இன்னமும் அடிமைகளின் முகாமாகவே அமைந்திருக்கின்றன.
எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்தே தெற்காசிய அரசியலின் அடிமைகளாகப் பாவிக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள் இன்றுவரை அழிவுகளை மட்டுமே சந்தித்துள்ளனர்.
இஸ்ரேலிய உளவுத்துறையும் உலகின் விடுதலை இயங்களை அழிப்பதில் முன்னணி வகிக்கும் மொசாடிலிருந்து தப்பியோடிவரும் என்ற நூலின் ஆசிரியருமான ஒஸ்ரோவ்ஸ்கி புலிகள் என்ற விடுதலை இயக்கதிற்கு மொசாட் பயிற்சியளித்ததாக தமது நூலில் குறிப்பிட்டிருந்தார். அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்ட இராணுவத் தளத்தின் மறுபுறத்தில் இலங்கை அரச இராணுவத்திற்கும் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. புலிகளும் இலங்கை இராணுவத்தினரும் இலங்கைக்குச் சென்று மோதிக்கொண்டு மக்களைப் பலியாக்குவதை விட இஸ்ரேலிய இராணுவத் தளத்திலேயே மோதிக்கொண்டு பலப்பரீட்சை செய்துபார்த்துவிடலாமே என்று தனது ஆதங்கத்தை 1990 இல் அவர் வெளிப்படுத்தினார்.
கிளிநொச்சியில் ஆரம்பித்து நந்திக்கடலோரம் வரை இது தான் நடைபெற்றது. இரண்டு நிரந்தர இராணுவங்களுக்கு இடையேயான பலப்பரீட்சை. அதுவும் பார்வையாளர்களாக இருந்த மக்கள் சூழ இந்த யுத்தம் நடந்திருக்கிறது. மக்கள் போராடப் பயிற்றுவிக்கப்படவிலை. புலிகளுக்கு மக்கள் யுத்ததில் நம்பிக்கையில்லை.மக்கள் பார்வையாளர்களாக இருக்கும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள். வெற்றி கொள்ளப்பட்ட போராட்டங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளவும் முனையவில்லை. தவறான அரசியல் வழிமுறையும் அதலிருந்து முகிழ்த்த போராட்டமும் இன்று ஐம்பதாயிரம் அப்பாவி மக்களை இரசாயனக் குண்டுகளுக்கும், துப்பாக்கிகளுக்கும், சித்திரவதைகளுக்கும் பலியாக்கியிருக்கிறது.
இவ்வாறு இலங்கைத் தீவின் மக்கள்கூட்டத்தின் ஒரு பகுதியினர் சாகடிக்கப்பட்ட பின்னர், தேசிய இனப் பிரச்சனைக்கான எந்தக் குறைந்தபட்ச தீர்வையும் முன்வைக்க இலங்கை அரசு தயாராக இல்லை. தமிழ்த் துணைக்குழுக்களும் இலங்கை அரசும் இணைந்து தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவத் தர்பார் நிகழ்த்திகொண்டிருக்கின்றன.
முள்ளிவாய்க்காலில் தோற்றுப்போன போராட்டம் ஒரு உதாரணமல்ல; சாபக்கேடு. இந்தத் தோலிவியிலிருந்து கற்றுக்கொள்ள எமக்கு முன்னால் ஆயிரம் விடயங்கள் உள்ளன. நாம் வெற்றியடைவதற்கான திசைவழி எந்தப்புள்ளியிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதே இங்கு பிரதனாமானதாகும்.
மக்கள் போராட்டங்கள் அழிந்து போனதற்கான வரலாறில்லை. எங்கெங்கு போராட்டங்கள் வெற்றிபெற்றிருக்கின்றனவோ அங்கெல்லாம் மக்கள்யுத்தங்களே நடைபெற்றிருக்கின்றன. மக்கள் யுத்தங்களைப் பாதுகாக்கவே இராணுவப் படைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இலத்திரனியலினதும், நுண்ணியலினதும், தகவற் தொழில் நுட்பத்தினதும் வளர்ச்சி இனிமேல் மக்கள் யுத்தங்களின் தற்காப்புக் கருவிகளாகக் கூடப் பயன்படுத்தப்படலாம் என பிரஞ்சு அரசியல் ஆய்வாளர் டொமினிக் லெவி கூறுகிறார்.
சிலி நாட்டில் பினோஷேயின் சர்வாதிகாரம் மனிதர்களைத் தெருத்தெருவாகக் கொன்றுபோட்ட போட்ட வேளைகளிலெல்லாம், முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காக நிகழத்தப்பட்ட போராட்டமும் அதற்கான அமைப்புகளும் எமக்கு பயனுள்ள படிப்பினைகளை விட்டுச்சென்றிருக்கின்றன.
மக்கள் போராட்டம் வெற்றியை நோக்கி வழி நடத்தப்பட வேண்டுமானால்
1. அகநிலைச் சூழல்
2. புறநிலைச் சூழல்.
3. போராட்டத்தை வழி நடத்திச் செல்லும் வலிமையுள்ள புரட்சிகரக் கட்சி.
என்பன முன் நிபந்தனைகளாக அமைகின்றன. ஈழப் போராட்டத்தில் முதலாவது நிபந்தனையான அகச் சூழல் தமிழ்ப் பேசும் மக்களுக்கு சாதகமான சூழலைத் தோற்றுவித்திருந்தது.
தேசிய இன ஒடுக்குமுறையின் கோரம் தமிழ்ப் பேசும் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் கூட இலங்கை அரசின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு வாழ முடியாது என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. ஆயுதம் தாங்கிய விடுதலைக் குழுக்களின் போராட்டத்திற்கு தமிழ்ப் பேசும் மக்கள் முழுமையான அங்கீகாரம் வழங்கியிருந்தனர். தெற்கிலே ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டம் மறுபடி மறுபடி முளைவிட்டது.
இரண்டாவதாக புறச் சூழலைப் குறித்தளவில் சர்வதேச அரசுகளிடையேயான முரண்பாடுகளும், உலகம் முழுவதும் ஏகாதிபத்தியத்தின் மீதான வெறுப்புணர்வும் மேற்கில் கூட கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்த வண்னமே இருந்தன. ஈராக்கில் இராணுவம் நுழைந்த போதும், பலஸ்தீனத்தைக் குண்டுபோட்டு அழிக்க முற்பட்ட போதும் இலட்சம் இலடசமாக உலகம் முழுவதும் மக்கள் தெருவுக்கு இறங்கிப் போராடினார்கள்.
ஒரு புறத்தில் ஆசியப் பொருளாதாரத்தின் உருவாக்கம் மேற்குப் பொருளாதாரத்தை விழுங்கிக் கொண்டிருக்க, மறு புறத்தில் இந்தியா எங்கும் அரசிற்கு எதிரான எதிர்ப்பியக்கங்கள் வலுப்பெற்றன. ஆக, புறச் சூழலும் கூட தமிழ்ப் பேசும் மக்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் எண்ணிகையில் அதிகரிக்கச் செய்து எம்மைப் பலப்படுத்திக் கொண்டிருந்தது .
மூன்றாவதாக இந்த இரண்டு பிரதான கூறுகளையும் கையாளவல்ல புரட்சிகரக் கட்சி. இந்தக் கட்சியின் இடத்தை நிரப்பிக்கொண்டிருந்த தூய இராணுவ அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்.
முதலாவதாக, போராடவல்ல மக்களை மக்கள் யுத்ததை நோக்கிப் பயிற்றுவிக்காமல் பார்வையாளர்களாக நிறுத்தி வைத்திருந்த விடுதலை அமைப்புக்களும் அது ஒருமையில் தமிழீழ விடுதலைப் புலிகளாகச் சுருங்கிப் போன வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் பல சந்தர்பங்களில் பார்வையாளர்களான மக்களை எதிரிகளாகக் கூட மாற்றிக்கொண்டனர்.
இரண்டாவதாக புறச் சூழல் எமக்குச் சாதாகமான பல அம்சங்கள் தன்னகத்தே கொண்டிருந்த போதிலும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் தமிழீழ விடுத்லைப் புலிகள். பெரும்பான்மையான, போராட்டங்களையும் அழுத்தங்களையும் வழங்கவல்ல ஒடுக்கப்பட்தல மக்கள் பிரிவினரோடு இணைவை ஏற்படுத்திக் கொள்ளாமல் ஒடுக்கும் சந்தர்ப்ப வாதிகளைச் சார்ந்திருந்தனர். நாடுகளிடையேயன முரண்பாடுகளைக் கையாளும் எந்தத் தந்திரோபாயத்தையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.
இறுதியாக விடுதலைப் புலிகள் என்ற இராணுவ அமைப்பு அவர்கள் தவிர்ந்த எந்தச் சிந்தனை முறையையும் நிராகரிக்கின்ற அவற்றை அழிக்கின்ற எதிர்ப்புரட்சி அமைப்பாக வளர்ச்சியடைந்திருந்தது. அதன் விளைவில் புலிகள் போராட்டத்தைத் தலைமை தாங்கும் தகமையுள்ள கட்சியாக வளர்ந்திருக்க வாய்பிருந்திருகாவிட்டாலும் ஏனைய ஏனைய முற்போக்குச் சிந்தனை கொண்டவக்ர்களையும் அழித்துத் தனிமைப்படுத்தினர்.
இவ்வாறு தான் ஒரு நியாயமான, தேவையான போராட்டம் அழித்துச் சிதைக்கப்பட்டது.
(இன்னும் வரும்..)