Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும் : புதிய திசைகள்

சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில்இனஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதியசமூக அமைப்புமுறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைஉண்மையில் வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியின் கொள்கை அறிக்கை, வேலைத்திட்டம் என்பன ஆங்கிலத்திலோ அல்லதுதமிழிலோ கிடைக்கப் பெற்றிருக்காத இன்றைய சூழலில், தோழர் குமார் குணரத்தினத்தின்ஐரோப்பிய பயணத்தின் போதான அவரது கருத்துக்களில் இருந்தும், சம உரிமைஇயக்கத்தின் வேலைத்திட்டதில் இருந்தும் அவர்களை புரிந்து கொள்ளவும், சாத்தியமான தளங்களில் இணைந்து வேலைசெய்யவும் முயற்சிக்கிறோம்.

சமீபகால இலங்கைவரலாற்றில் பெருந்தேசிய இனத்தை அடித்தளமாக கொண்ட ஓர் அமைப்பில் இருந்து, இனவாதத்திற்கும், இனஒடுக்குமுறைக்கும் எதிராக அழைப்புவிடப்படுவதும், இனங்களுக்கான சமத்துவதிற்காக போராட முன்வருவதும், வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். சாத்தியமான முற்போக்கு அரசியல் பொதுத்தளங்களில் இணக்கம் கண்டு வேலைசெய்வது என்பது சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த விளையும் அமைப்புகளினதும், தனிநபர்களினதும் பிரதான கடமை என்பது எமது கருத்து.எமது அரசியல் எதிரியானாலும் சரி, அரசியல் நண்பர்களானாலும் சரி, சமூகத்தில் அவர்களால் முன்வைக்கப்படும் கொள்கைகள்,திட்டங்களுக்கு சரியான மாற்றீடு வைத்தோ அல்லது இணைந்து வேலைசெய்வதற்கான ஒரு திட்டத்தை வைத்தோ அல்லது சரியான வகையில் மறுத்தோ இயங்கும் மரபு பின்பற்றப் படவேண்டும் என்று கருதுகிறோம். இவை எமது மக்களை வளப்படுத்தும் நடவடிக்கைகள்.

இலங்கை இனவாத அரசால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிரானவையாகவும்,ஒடுக்குமுறையை அடிப்படையாக கொண்ட ஏமாற்று திட்டங்களுமாகவுமே இருந்துள்ளன. இவற்றை சரியான வகையில் அம்பலப்படுத்தி எமது தரப்பில் இருந்து மாற்று திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை, பதிலாக அவ்விடயத்தை முற்றாக புறந்தள்ளுவதும் யுத்தத்தின் மூலம் பதில் சொல்ல முனைவது என்பதும் கடந்த கால நடைமுறையாக இருந்து வந்திருக்கிறது. இதே நடைமுறையை பெருந்தேசிய இனத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஓர் அரசியல் இயக்கத்திற்கும் நாம் காட்டுவது தவறாகும். இன்றயவரை இதை ஒரு நேசக்கரமாக புரிந்து கொள்வோம்.
சம உரிமை இயக்கம் முன்வைத்துள்ள செயல் திட்டத்திற்கு சரியான மாற்று திட்டங்கள் அல்லது உடன் படும் திட்டங்களை முன் வைப்பதிற்கு பதிலாக முழுமையாக எதிர்ப்பது அல்லது நிபந்தனையின்றி ஆதரிப்பது என்ற போக்குகள் தவிர்க்கப்படவேண்டும்.

இன்று விடயங்களை, நபர்களின் போட்டி, இணையங்களின் போட்டி அரசியலாக்கி மக்களுக்குதேவையான அரசியலின் தலையை உருட்டுவதென்பது, பொறுப்பற்ற,கோமாளித்தனமான அரசியலாகவே எமதுகண்களுக்கு தெரிகிறது. சமூகத்திற்கு தேவையான இவர்களது கருத்துக்கள், சிந்தனைகள் இவர்களது தனிநபர் குறைபாடுகளால் வீணடிக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.

ஜே வி பி என்னும் ஓர் இனவாத, சந்தர்ப்பவாத அமைப்பு, இடதுசாரி என்னும் போர்வையில் இருந்த படுமோசமான வலதுசாரி அமைப்பு என்ற வகையில்,அவர்களில் இருந்து ஓர் உட்கட்சி போராட்டதினூடாக ஜனநாயகதிற்கான கோரிக்கைகளுடன் வெளிவந்த ஓர் அமைப்பாகவே இன்றைய எங்களது புரிதலில் முன்னிலை சோசலிசக்கட்சியை புரிந்து கொள்ள முடிகிறது.அவர்களது கட்சியின் கொள்கைகளும், எதிர்கால நடைமுறைகளும் அவர்களை யார் என்று முழுமையாக புரிந்து கொள்ள உதவும் என்று கருதுகிறோம்.

பிரித்தானிய ஆட்சிக்காலத்திற்கு பிந்திய வரலாற்றுடன் தொடங்கும் சம உரிமை இயக்கதின் அறிக்கை, பிரித்தானியர் ஆட்சிக்கு முன் இலங்கை தீவில் இரு அரசுகள் இருந்தன என்பதை குறிக்கத்தவறியிருப்பதை நாங்கள் தற்செயலான நிகழ்வாக கருதவில்லை. கடந்த இரு தசாப்தங்களாக இலங்கை தீவில் இரு தேசங்கள் நிறுவனமயப்பட்டு இருந்தன என்பதை அவர்கள் பார்க்கத்தவறுவது என்பது சமூகத்தில் நிலவும் பிரதான முரண்பாடான தேசிய இனப்பிரச்சனையை புரிந்து கொள்வதில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்று கருதுகிறோம்.”அனைத்து தேசிய பிரஜைகளுக்குமான சம உரிமை” என்னும் அவர்களது சொல்லாடல், இரு தேசங்களின் இருத்தலை மறுப்பதாகவும் இலங்கை என்னும் ஒரு போலி தேசியத்தை முன்னிலைக்கு கொண்டு வருவதாகவே நாம் புரிந்துகொள்கிறோம்.
சுயநிர்ணய உரிமை என்பது இடது சாரிகள் என்ற முகாமிற்குள் நின்றுகொண்டு அராஜகம் பேசுவோரின் கருப்பொருளாகியிருப்பது வேதனைக்குரிய விடயம். சுயநிர்ணய உரிமை என்பது ஓர் தேசிய இனத்தின் அடிப்படை ஜனநாயக உரிமை. பிரிவினைக்கான ஒரு போராட்டம் நடைபெற்றதால் இலங்கையின் வடகிழக்கு தமிழ் மக்கள் இவ்வுரிமையை இழந்து விடமாட்டார்கள்.இதற்கு மார்க்சிய ஆசான்களை அடிக்கடி துணைக்கு அழைக்கவேண்டிய தேவை இருப்பதாக நாங்கள் கருதவில்லை.இனங்களுக்கிடையேயான ஐக்கியம் பற்றி பேசும் போது, பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக்கொள்ளாத சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையில் இன ஒடுக்குமுறையேயாகும். சுயநிர்ணய உரிமை என்பது இலங்கை இனப்பிரச்சனை சூழலுக்குப்பொருந்தாது என்னும் தோழர் குமார் குணரத்தினத்தின் கருத்து, தாய் கட்சியின் சந்தர்ப்பவாத குணாம்சம் இவர்களிடமும் ஒட்டியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது எமக்குள் இருக்கும் பிரதான விவாதப்பொருளாக அமையும் என்று கருதுகிறோம்.

பொது எதிரிக்கு எதிராக போராடுபவர் மத்தியில் முரண்படுகளை ஏற்றுக்கொண்டு உடன்பாடுகளில் ஊன்றி நின்று ஒரு பொது தளத்தில் கூட்டாக வேலை செய்து முரண்பாடுகளை களைய முனைவதுதான் எதிரியை பலவீனப்படுத்துவதற்கும், எம்மை பலப்படுத்துவதற்கும் உள்ள ஒரே வழி என்பது எங்கள் ஆழமான நம்பிக்கை. முன்னிலை சோசலிச கட்சியுடனான உறவையும் புதிய திசைகளாகிய நாங்கள் இவ்வகையிலேயே கருதுகிறோம்.

இன அழிப்பு, இனவாதம் ஆகியவற்றுக்கெதிரான அவர்களது போராட்டத்துடனும், இன ஒற்றுமையை உருவாக்குவதற்கான அவர்களது முயற்சிகளுடனும் இணைந்து வேலை செய்வது என்பது எமது இன்றளவிலான முடிவாகும்.

முன்னிலை சோசலிச கட்சியுடனான எமது அரசியல் உறவு மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் அறியத்தருவோம்.

Exit mobile version