Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முதலாவது தேர்தல் அனுபவம் – பெ. சந்திரசேகரன் பற்றிய எனது நினைவுகள் : லண்டனிலிருந்து பி.ஏ. காதர்

-பாகம் ஏழு

முதலாவது தேர்தல் கூட்டம் முடிந்தது. இது சந்திரசேகரனின் பாராளுமன்ற பயணத்தின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் மாத்திரமல்ல எனது வாழ்க்கையில் நான் ஏறிய முதலாவது தேர்தல் மேடையும் அதுதான். கூட்டம் முடிந்த பின்னரும் ஆதரவாளர்கள் கலைவதாயில்லை. அலைமோதிக் கொண்டிருந்தார்கள். பொலிசார் நேரமாகிவிட்டது என அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதைப்பற்றி யாரும் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.

பொலிசாருக்கு நெருக்குதல் இருக்கிறது அவர்கள் சில அரசியலவாதிகளை திருப்தி செய்வதற்காக அப்படி செய்கிறார்கள் என்பதும் அவர்களால் அன்றிருந்த நிலைமையில் எமக்கு செய்தி அனுப்புவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்தது. ஆனால் தலவாக்கெலையில் பொலிசார் இப்படி நடந்து கொண்டால் வெளியிடங்களில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை ஊகிக்க முடிந்தது.

‘நாம் இங்கிருந்து போனால் தான் கூட்டம் கலையும்’ எனக் கூறிவிட்டு அவரது அம்மா என்னைப் பார்க்க ஆவலாக இருப்பதாகச் சொல்லி என்னை தன்னோடு வீட்டுக்கு வருமாறு அழைத்தார். எனக்கும் அவரது அம்மாவையும் சகோதரிகளையும் பார்க்க ஆவலாயிருந்தது. இந்த சந்திப்புக்கு முன்னரே பல தடவைகள் நான் அவரது வீட்டில் தங்கியிருக்கிறேன்.

அம்மா என்னை ‘மாஸ்டர்’ என்று அன்போடு அழைக்கும் போது ‘மகனே’ என்று அழைப்பது போலிருக்கும். அவரது தங்கைகள்- ‘பரமேஸ்’ ‘கிருஷ்ணா’ (இவர்இன்று உயிரோடில்லை) ‘மஞ்சு’- என்னை ‘அண்ணன்’ என்றே அன்புடன் அழைப்பார்கள். என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே அவர்கள் கருதினர். குடும்பவிடங்களை பிரச்சினைகளைக் கூட என்னோடு பகிர்ந்து கொள்வார்கள். கள்ளங்கபடம் தெரியாத குழந்தை மனம் அவர்களுக்கு. அதனால் எனக்கு அந்நியன் என்ற எண்ணம் என்றுமே எழுந்ததில்லை.

அன்றிரவு நான் அவர்களைச் சந்தித்தபோது உணர்ச்சி பொங்க தங்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

சந்திரசேகரனின் வீடு புளோட் உறுப்பினர்களால் நி;ரம்பி வழிந்தது. எனக்கு அன்று அங்கு தங்க இடமிருக்கவில்லை. வீடி தர்மலிங்கத்தின் பாடசாலை அதிபர் விடுதி தலவாக்கெலையில் இருந்தது. சரத் அப்போது ஒரு தோட்டத்தில் பிரதம குமாஸ்தாவாக இருந்தார். அவரது விடுதியும் அருகில்தான் இருந்தது. இருவரும் என்னை தம்முடன் வருமாறு அழைத்தனர். இரவு உணவை அங்கு முடித்துக்கொண்டதும் வீடி என்னை தன்னோடு தன் விடுதிக்கு அழைத்துச் சென்றார். சரத் என்னை மறுநாள் வந்து அழைத்துச் செலல்வதாகக் கூறி விடை பெற்றார். அன்றிரவு வீடிக்கும் எனக்கும் நித்திரை வரவில்லை. எனது சிறைச்சாலை அனுபவங்களைப்பற்றி அறிவதற்கு மிகவும் ஆர்வம் காட்டினார் ஆனால் அதைப்பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க நேரமிருக்க வில்லை.

நாம் எடுத்த முடிவு சரியா அடுத்து நாம் என்ன செய்வது என்பதைப்பற்றி நிறையபேசினோம்.

நானோ வீடி தர்மலிங்கமோ பாராளுமன்ற அரசியலில் அதுவரை ஈடுபட்டதுமில்லை ஆர்வம் காட்டியதுமில்லை. நான் நேற்றிரவு கண்டி வீட்டில் படுக்கையில் இருந்து கொண்டு எப்படி எனது அரசியல் நண்பர்களைச் சந்திப்பது அடுத்து என்ன செய்வது என பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று சில மணித்தியாலத்துக்குள் திடீரென சந்திரசேகரனின் தேர்தல் மேடையில் ஏறியிருக்கிறேன் பிரதம அமைப்பாளர் பொறுப்பு எனக்குத் தரப்பட்டுள்ளது. இது சூழலின் நிர்ப்பந்தமா அல்லது வரலாற்றின் கட்டளையா என்பது பற்றி நாம் விவாதித்தோம். வீடி தத்துவார்த்தரீதியில் விடங்களை விளங்கவோ விளக்கவோ மாட்டார் ஆனால் அனுபவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் விடயங்களை பலகோணங்களில் ஆராய்வார். அவரும் நானும் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் ‘இதுவரை மலையக மக்களின் தொழிற்சங்க பலம் தொழிற்சங்க தலைவர்களுக்கு பாராளுமன்றத்தில் எம் பி பதவிகளையும் அமைச்சர் பதவிகளையும் பேரம்பேசி பெறுவதற்கு பயன்படுத்தப் பட்ட அளவுக்கு அம்மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான கருவியாக சரியானமுறையில் பயன்படுத்தப்படவில்லை.

எனவே மலையக மக்களின் அரசியல் பிரச்சினைகளை முன்னெடுக்கக் கூடிய கட்சி ஒன்று உருவாவது அவசியம். அதற்கான சூழல் இப்போது உருவாகியுள்ளது. அதனைப்பயன் படுத்திக்கொள்ளவது வரலாற்றுக் கடமையாகும்;’ என்ற முடிவுக்கு வந்தோம். மறுநாள் சரத்துடன் தங்கும் போது இவ்விடயத்தை தத்துவார்த்தரீதியாக மேலும் ஆராயலாம் என நினைத்தேன்.

அடுத்தநாள் காலை சரத் வேலைக்கு லீவு போட்டுவிட்டு என்னை வந்து அழைத்துக் கொண்டு போனார். அவர் விடயங்களை நி;தானமாகவும் ஆழமாகவும் பார்க்கக் கூடிய ஆற்றலுடையவர். அவர் மனதிலும் பல சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தன. அவற்றை மனம் திறந்து பேசாமல் அவரால் நித்திரைக் கொள்ள முடியவில்லை. அவர் வீட்டுக்கு சென்ற பின்னர் அன்று முதல் அது எனது வீடாக மாறிவிட்டது. அவரது மனைவி ஒரு தமிழர். ஆங்கிலத்தில் பயிற்சிபெற்ற ஆசிரியை. ஆனால் ஆங்கிலம் கற்ற பலரிடம் இருக்கும் தலைக்கணத்தை இவரிடம் காணமுடியாது. மிகவும் அன்பானவர். கொஞ்சம் மதப்பற்றுள்ளவர். சரத் அதற்கு என்றும் தடையாக இருந்ததில்லை. இருவரும் இணைந்த உள்ளத்தோடு இல்லறம் நடத்தி வந்தார்கள்.

மகிழ்ச்சியான அந்த குடும்பத்திற்கு அவர்களது மகள் அச்சு மேலும் குதூகலம் சேர்த்தார். எனக்கும் அவர் செல்லப்பிள்ளையானார். பின்னர் இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார். சரத்தின் குடும்பம் எனது குடும்பத்திற்கும் நெருக்கமான விருப்பமான குடும்பமாக மாறியது.

சரத்தும் நானும் விரிவாக புதிய அரசியல் சூழலைப்பற்றி விவாதித்தோம். அவரும் அதே கருத்தை வலியுறத்தினார். ‘இலங்கையிலுள்ள ஏனைசமூகங்களைவிட எல்லாத்துறையிலும் நூறாண்டு பின்நிலையிலிருக்கும் மலையக தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஜனநாயக வரம்புக்குற்பட்ட போராட்டங்களைக் கூட இன்னும் பல தசாப்தங்கள் நடத்த வேண்டிய நிலைமை இருக்கிறது. இதற்கான ஒரு அரசியல் கட்சியை நிருவுவது அரசியல் கடமை என்பதை விட அது ஒரு மனித கடமை.’ என அவர் வலியுறுத்தினார்.

நாம் இவ்வாறு உரையாடிக்கொண்டிருக்கும் போது வீடி வீட்டுக்குப் போய் என்னைத் தேடி நான் சரத் வீட்டில் இங்கிருப்பதை அறிந்து சந்திரசேகரன் அங்கு வந்து எமது உரையாடலில் கலந்து கொண்டார். அவரது வார்த்தைகளில் முன்பிருந்த அதே ‘விடயங்களை கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு மாணவனின் மனோபாவமும்’ மனம் விட்டு பேசும் குழந்தைத்தனமும் அப்படியே இருந்தது. (அவர் பிரதியமைச்சராகும் வரை இப்பண்பு நீடித்தது.) எனவே நாம் ஒருமித்த மனதோடு நிலைமைபற்றி விவாதித்தோம். அவர் தனது நிலையை மனம் திறந்து கூறினார். தானும் திட்டமிட்டு பாராளுமன்ற அரசியலில் காலடி யெடுத்து வைக்கவில்லை மக்களின் வற்புறுத்தல் சூழல்களின் நிர்ப்பந்தம் ஆகிய காரணங்களால் இத்தேர்தலில் போட்டியிட நேர்ந்தது தேர்தலின்பின்னர் என்ன செய்வது என்பது பற்றியெல்லாம் தான் அப்போது ஒரு முடிவை எடுத்திருக்கவில்லை என்று கூறி நேற்றுத்தான் தெளிவான வேலைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது என மகிழச்சியுடன் கூறினார். அத்துடன் தான் உமா மகேஸ் வரனுடனும் எமது நிலைப்பாட்டை விளக்கி விட்டதாகவும் அவர் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் உமா மகேஸ்வரன் என்னுடன் அது பற்றி நேரடியாகப் பேசுவார் என்றும் கூறினார். அதே சமயம் புளோட் அமைப்பைச் சேர்ந்த பலர் எமது முடிவால் அதிருப்தியடைந்திருப்பதாகவும் சிலர் நான் தான் இந்த முடிவுக்குக் காரணம் எனக் கருதி என்மீது ஆத்திரங் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

அன்றைய காலகட்டத்தில் சந்திரசேகரன் சரியான முடிவுகள் எடுப்பதில் சிலவேளை தாமதம் காட்டியீருக்கிறார். சிலசமயம் தடுமாறியிருக்கிறார் ஆனால் அவ்வாறான சமயங்களில் அவருக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு சரியெனப் படக்கூடிய கருத்தை முன்வைத்தால் அதை ஏற்றுக் கொண்டு உறுதியாக நின்றிருக்கிறார். அதாவது அவருக்கு அருகே இருப்பவர்களின் கருத்துக்கள் அவர்மீது செல்வாக்கு செலுத்தும் தன்மை அவரிடம் காணப்பட்டது.

அடக்குமுறையும் உயிராபத்தும் மலிந்த அன்றைய நிலைமையில் மக்கள் அரசியல் ஒன்றையே குறிகோளாகக் கொண்டு அர்ப்பணத்தோடு செயற்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் அவரை சூழ இருந்தபோது அப்போது அவருக்கும் எனக்கும் நெருக்கமாக இருந்த பலர் பாராளுமன்ற பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் சகுனித்தனங்களில் ஈடுபட வாய்ப்புகள் இல்லாத வேளையில் சந்திரசேகரனின் இந்த பண்பு சிறப்பான நற்பாத்திரத்தையே வகித்தது. அப்போது உயிராபத்து இருந்தது அச்சுறுத்தலிருந்தது அரசியல் பயணம் கடினமாக இருந்தது. ஆனால் எமது ஒருமித்த மனதுடன் அந்த நிலைமையை எதிர் கொள்வது மகிழ்ச்சியைத்; தந்தது.

விகிதாச்சார முறையில் நடைப்பெற்ற முதலாவது தேர்தல்.

நாம் எமது எதிர்கால வேலைத்திட்டத்தை வகுத்துக் கொண்ட பின்னர் அப்போதைய சூழல் பற்றியும் அச்சுழலில் தேர்தல் பணியை முன்னேடுத்துச் செல்வது பற்றியும் விரிவாக ஆராய்ந்தோம.; ஜே ஆர் அறிமுகப்படுத்திய விகிதாச்சார தேர்தல்முறையின் கீழ் நடைப்பெற்ற முதலாவது தேர்தல் இது. முன்னர் தேர்தல் தொகுதி அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினாகள் தெரிவு செய்யப்பட்டனர். முன்னைய தேர்தல் முறையில் பல குறைப்பாடுகள் இருந்தாலும் அதில் சில சாதமான அம்சங்கள் இருந்தன. தொகுதிகளின் எல்லைகள் குறுகியதாகவும் அதற்குள் இருந்த வாக்காளர்களின் தொகை மட்டுப்படுத்த அளவிலும் இருந்தன. எனவே 1977 வரை ஒரு வேட்பாளர் குறைந்த வளங்களைப் பயன்படுத்தி தனது சொந்த செல்வாக்கைக் கொண்டு தேர்தல் தொகுதிகளில் வெற்றிப் பெறக்கூடிய நிலைமை இருந்தது. அத்தேர்தல் தொகுதிகளில் குறிப்பிட்டளவு நம்பிக்கையான ஆதரவாளர்களை வைத்து மாற்றுக்கட்சியினர் பாரிய தேர்தல் மோசடி செய்வதைத் தடுக்க வாய்ப்பிருந்தது. உதாரணமாக 1956ல் தலவாக்கெலை ஒரு தனியான தேர்தல் தொகுதியாக இருந்தபோது ஐதே கட்சி சார்பில் போட்டியிட்ட கே. ஹேமசந்திரா 1120 (ஆயிரத்தி நூற்றி இருபது) வாக்குகளை மாத்திரமே பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார். இவ்வாறே பஸ் நிலையங்களில் கவிதை பாடி பத்திரிகை விற்றவர்களும் மாட்டு வண்டியில் மண்ணைணனை விற்றவர்களும் கூட ஒரு சிறிய நிலப்பரப்பில் தமக்குள்ள மக்கள் தொடர்பைக் கொண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாக முடிந்தது. ஆனால் 1977 ன் பின்னர் இந்த நி;லைமை இல்லாமற் போய்விட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு மாவட்டமும் தனித்தனி தேர்தல் மாவட்டங்களாக்கப்பட்டன. தொகுதிகள் பெயரளவில் குறிக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட முழு மாவட்டத்திலும் விழுகின்ற மொத்த வாக்குகளும் கணக்கிடப்பட்டே தேர்தலின் வெற்றி தோல்விகள் கணிக்கப் படுகின்றன. தனி நபர்களாக தனித் தொகுதியில்; போட்டிபோடக் கூடிய நிலைமை இல்லாமற் போய்விட்டது. ஒன்றில் சுயேட்சைக் குழுசார்பில் போட்டியிட வேண்டும் அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டும் என்றாகிவிட்டது. முழு மாவட்டத்திலும் பிரச்சாரம் செய்து ஆதரவு தேடுவதற்கு நிறைய வளங்கள் தேவைப்பட்டன. முன்னர் ஒரு தேர்தல் தொகுதியில் பிரச்சாரம் செய்ய ஒரு வாகனமும் கொஞ்சம் பிரசுரமும் போதும்.

வீடு வீடாக நடந்து சென்றே வாக்காளரை சந்தித்து விடலாம். இப்போது மாவட்டம் தோறும் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கே ஏராளமான வாகனங்கள் தேவைப்பட்டன. வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று சந்திப்ப தென்பது சாத்தியமற்ற விடயம். அவர்களை பிரச்சாரம் சென்றடைவதற்கே கவர்ச்சியான சுவரொட்டிகள் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் கூட்டத்தை ஈர்ப்பதற்காக சினிமா நட்சத்திரங்கள் பிரபல பாடகர்கள் தேவைப்பட்டனர். எனவே முன்னர் சாதாரண மனிதனும் போட்டியிடக் கூடியதாக இருந்த தேர்தல் முறை பெரும் பணக்காரர்களுக்கு மாத்திரமே உரிய விவகாரமாக மாறிவிட்டது. அரச வளங்களும் அரச அதிகாரமும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஒரு அம்சமாக ஆகிவிட்டது. ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் இத்தேர்தல் முறையின் பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டது.

தேர்தலில் எவ்வழியிலாவது எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற ஒரே நோக்கில் பணத்தை வாரிஇறைத்து தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த தேர்தலுக்கும் அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து சம்பாதிப்பதற்கு இத்தேர்தல்முறை வழிவகுக்கிறது.

1977ல் போட்டியிட்ட சௌ. தொண்டமானும் அநுர பண்டாரநாயக்கவும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் போட்டி கடுமையாக இருந்தது. ஐதேகட்சி சார்பில மிகவும் பலம் வாய்ந்த அமைச்சரும் தேர்தல் விற்பன்னர்களில் ஒருவருமான காமினி திசாநாயக்க அங்கு போட்டியிட்டார் அவரோடு ரேனுகா ஹேரத்தும் மற்றும் சில சிங்கள வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதொக தனியாக போட்டியிடாமல் ஐதே கட்சி சின்னத்தில் போட்டியிட்டது. அதன் சார்பில் இதொகாவின் நிதிச்செயலாளரான வேலுஅண்ணாமலையும் அப்போது நுவரெலிய பிரதேச சபையின் தலைவராயிருந்த முத்து சிவலிங்கமும் போட்டியிட்டனர். சந்திரசேகரன் இதொகாவிலிருந்து வெளியேறியவர் எனவே அவரது அரசியல் பிரவேசத்;தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற வன்மத்தோடிருந்த இதொகா ஐதே கட்சியுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து போட்டியிடுவதால் நாம் கடுமையான எதிர்ப்பை எதிர்நோக்கி தயாராக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சுதந்திர கட்சி சார்பில் ஆனந்த தசநாயக்க எஸ்.பி.திசாநாயக்க போன்ற பலம்வாய்ந்த சிங்கள அபேட்சகர்கள் போட்டி போட்டியிட்டனர். அக்கட்சியின் சின்னத்தில் அப்போது ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் சார்பில் அதன் பொது செயலாளர் பெரியசாமி சிவசாமி போட்டி போட்டார்.

அப்போது மஸ்கோ சார்பு கம்யூனிஸ் கட்சியுடன் இணைந்திருந்த செங்கொடிசங்கத்தின் சார்பில் பழனியாண்டி சுப்பிரமணியமும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் நிதிச்செயலாளரான பெரியசாமி பெருமாளும் அப்போது வடக்கு கிழக்கு மாகாணசபை அதிகாரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஈபிஆர்எல்எப் சார்பில் வேங்கடசாமி பிரபாகரனும் ஐக்கிய சோசலிச முன்னணியில் ருnவைநன ளுழஉயைடளைவ யுடடயைnஉந போட்டியிட்டனர். இவர்களும் சுதந்திர கட்சியும் எம்மை எதி;ரியாகக் கருதவில்லை. எனினும் எதிரணியினரின் தமிழ் வாக்குகள் பிரிவதற்கு இது காரணமாகியது. நாம் அதிகார பலத்துடன் இருந்த ஐதேகட்சியின் நேரடியான போட்டியை சந்திக்க வேண்டியிருந்தது. அத்துடன் ஜேவிபி தேர்தலைப் பகிஷ்கரிக்குமாறு அப்போது எச்சரிக்கை விடுத்திருந்த சமயத்தில் ஜேவிபியினால் அல்லது ஜேவிபியின் பெயரைப்பாவித்து எம்மை அழிக்க விரும்புவோரால் நாம் தாக்கப்படலாம் என எதிர்பார்க்க வேண்டியிருந்தது.

இத்தகைய சூழலில் புளொட்டின் ஆதரவு எமக்கு ஒரு பெரும் பலமாக அமைந்தது. அப்போதைய அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தங்கியிருந்த எமது வீர இளைஞர்களின் பலத்தோடு; புளொட்டின் ஆதரவு பெரிதும் பலம் சேர்த்தது. அத்துடன் எமது தேர்தல் பணிகளுக்கான நிதியை அதுவே வழங்கியது. அதைவிட புளொட்டின் தலைமைக்கும் ஜேவிபி தலைமைக்குமிடையே நல்லுறவு நிலவியதால் அவர்கள் எமது தேர்தல் நடவடிக்கைக்கு எதிராக எதுவும் செய்யமாட்டார்கள் என்ற வாக்குறுதி எமக்கு புளொட்டின் தலைமையால் தரப்பட்டிருந்தது. நாம் புளோட்டிடம் என்னென்ன உதவிகளை எதிர்பார்க்கிறோம் என்பதைப் பற்றிய பட்டியலை அன்று சரத் வீட்டில் தயாரித்தோம். அப்போது எமது பிரதான தேர்தல் காரியாலயமாக பஞ்சலிங்கம் ஸ்டோர்சின் மேல்மாடி இயங்கியது. இங்கு எப்போதும் சனக்கூட்டமாக இருந்தபடியால் சரத்தின் வீடு முக்கியவிடயங்கள் பற்றி அமைதியாகப் பேசுவதற்கு வசதியாக இருந்தது. அதன்பின்னர் நான் சரத் வீட்டில் நிரந்தரமாக தங்கிவிட்டதால் என்னை இரவில் கொண்டுபோய் விடுவதற்கும் காலையில் அழைத்துக் கொண்டு போவதற்கும் சந்திரசேகரன் வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தார்.

பிரதான விடயங்கள் பற்றி பேசவேண்டியிருந்தால் அவரே அங்கு வருவார். கலந்துரையாடல் நடத்துவதற்கு இது வசதியாக இருந்தது.

உமாமகேஸ்வரனுடன் எமது முடிவுகள் பற்றியும் நாம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்புகள் பற்றியும் தனியாக பேசுவதற்கு இராகலையிலுள்ள எனது தங்கையின் வீட்டை தேர்ந்தெடுத்தோம். உமா மகேஸ்வரன் அங்கு வந்தார். வழமைப்போல அளவோடு பேசினார். எமது முடிவை ஏற்கனவே சந்திரசேகரன் தனக்கு அறிவித்ததாகவும் அதையிட்டு தமக்கு ஆட்சேபனை கிடையாது என்றும் கூறிவிட்டு தமது அரசியல் பணிகள் மலையகத்தில் தொடரும் எனவும் நாம் தனித்தனியாக செயற்பட்டாலும் பொதுவான பிரச்சினைகளில் கூட்டாக செயற்படமுடியும் எனவும் கருத்து தெரிவித்தார். நாம் விரிவான ஐக்கிய முன்னணி என்ற கோட்பாட்டின் அடிப்படையில் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க விரும்புவதால் அனைத்து நேசசக்திகளோடும் இணைந்து செயற்படுவதை விரும்புவதாகக் கூறினோம். அவர் எமக்கு என்னென்ன தேவை என்பதை திவாகரனுடன் (சிவா சின்னப்போடி) கதைக்குமாறும் தம்மாலான அனைத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி செய்வதாகவும் உறுதியளித்தார்.

நாம் எதிர்பார்த்ததை விட சுமுகமாகவும் சுருக்கமாகவும் அக்கலந்துரையாடல் அமைந்தது. அதற்கிடையில் எப்படியோ உமாமகேஸ்வரன் அங்கு வந்திருக்கும் செய்தி கசிந்து அவரைப்பார்க்க ஒவ்வொருவராக மக்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள். எனவே அவர் அவசரமாக அங்கிருந்து போகவேண்டியதாயிற்று. அதன்பின்னர் நாம் திவாகரனுடன் கதைத்தோம். எமக்குத் தேவையான வாகனங்கள் நிதிஉதவி அனைத்;தையும் அவர் அக்கறையோடு பெற்றுத்தந்தார்.

(தொடரும்….)

Exit mobile version