நிலப் பிரபுத்துவத்தை உடைத்துக் கொண்டு முதலாளித்துவம் பிறந்த போது, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற கொள்கை முழக்கங்களோடு பிறந்தது. முதலாளித்துவம் பிறந்த சிறிது காலத்திலேயே, இம்முழக்கங்கள் பொய் என்பதும், இச்சமூகமும் சுரண்டல் சமூகம் தான் என்றும் தெளிவாகத் தெரிந்தது. எப்பொழுதும் சுரண்டலுக்கு ஆதரவாக இருக்கும் மதம், இப்பொழுதும் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக இருப்பதற்குத் தன்னை தகவமைத்துக் கொண்டது. ஆனால் முந்தைய சமூகங்களில் மதம் சுரண்டல் வர்க்கத்தைத் தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி புரிந்து கொண்டு இருந்த நிலை மாறி விட்டது. முதலாளித்துவ சமூகத்திலும் மதங்கள் மக்களை மயககத்தில் வைத்துக் கொள்ளவே பணி புரிந்தாலும், ஆட்சி செய்யும் நிலைக்கு உயர முடியவில்லை. மதம், இனம், மொழி, தேசம் முதலிய எல்லைகளைக் கடந்து, சந்தைகளைத் தேட வேண்டிய முதலாளித்துவப் பொருளாதார இயக்கத்திற்கு, மத சுதந்திரம் ஒரு தேவையான கூறாக இருந்தது. ஆகவே எந்த ஒரு மதத்தையும் சாராத நாடுகள் மட்டும் அன்றி, ஒரு மதத்தைச் சார்ந்து இருந்தாலும், முதலாளித்துவ நாடுகளில் மத சுதந்திரம் உறுதி செய்யப்பட்டது.
எந்த ஒரு நல்ல விஷயம் ஆனாலும் அதை நீர்க்கச் செய்து, கெடுத்து வைப்பதில் வல்லவர்கள் பார்ப்பனர்கள்.
மற்ற நாடுகளில், மற்ற மதங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். பார்ப்பன மதத்தைப் பொறுத்த மட்டில் பார்ப்பன ஆதிக்கம் தளர்ந்து விடக் கூடாது என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் அக்கறைப்படாது.
சாதியக் கொடுமைகளைத் தாங்க முடியாமல், அதற்குச் சொந்த நாட்டில் தீர்வு காண முடியாமல், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் ஐக்கிய நாடுகள் அவையில் முறையிட்டனர். ஐ.நா. அவையும் 22.8.2002 அன்று நடந்த இன ஒதுக்கலுக்கு எதிரான கருத்தரங்கில், தீர்மானம் எண் 29இல் சாதி அடிப்படையில் இந்தியாவில் பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டித்தது. அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே வெளியில் தெரியாதபடி இருட்டடிப்பு செய்து, சாதியக் கொடுமைகளைத் தொடருகிறது.
இந்தியாவில் மட்டும் அல்ல; இந்தியர்கள் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் சாதியக் கொடுமைகள் தொடருகின்றன. பிரிட்டனில் வாழும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் இதற்கு எதிராகப் போராடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சாதிய ஒடுக்கலுக்கு எதிராக ஒரு மசோதாவைக் கொண்டு வரச் செய்தனர். இதை இந்திய அரசு கடுமையாக எதிர்த்தது. அவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வந்தால் பிரிட்டிஷ் முதலாளிகள் இந்தியாவில் செய்யும் முதலீடுகள் வெற்றிகரமாக / இலாபகரமாக இயங்குவதற்கு இடையூறு ஏற்படும் என்று மிரட்டியது. அதன் பேரில் அம்மசோதா 17.4.2013 அன்று தோல்வி அடையச் செய்யப்பட்டது.
பா.ஜ.க. இந்திய ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, சிறுபான்மை மதத்தவர்கள் தாக்கப்படுவது மிகுந்து விட்டது, உலக அரங்கில் இதனால் இந்தியாவின் மதிப்பு குறைந்து விட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு ஆபத்து நேர்ந்து உள்ளதைச் சுட்டிக் காட்டிக் கண்டனம் தெரிவித்தார். உடனே இந்தியவில் மத சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்று பிரதம மந்திரி நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
அதன் பின், பிரிட்டனில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகச் சட்டம் கொண்டு வர முயன்ற போது, அந்நாட்டு முதலாளிகளின் மூலதனம் இந்தியாவில் இலாபகரமாக முதலீடு செய்வதில் சிக்கல் ஏற்படும் என மிரட்டி, அச்சட்டம் நிறைவேறாமல் தடுத்த செய்தியை அறிந்தார்கள் போலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே அவ்வளவு தூரம் செய்ய முடிந்த போது, பா.ஜ.க. ஆட்சியில் அதிகமாகச் செய்ய முடியும் என்று காட்ட வேண்டாமா?
பிரிட்டனில் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான சட்டம் கொண்டு வருவதை மறைமுகமாகச் செயல்பட்டுத் தடுத்தவர்கள், இப்பொழுது நேரடியாகவே செயல் பட்டு இருக்கிறார்கள். இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் 30.4.2015 அன்று இந்தியாவில் மத சுதந்திரம் இல்லை என்று அமெரிக்கா கூறுவதை ஏற்க முடியாது என்று அறிவித்து உள்ளது. அவ்வாறு பேசுவது இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதப்படும் என்றும் ஒரேயடியாகக் கூறிவிட்டது. இதற்கு நேரடியான பொருள் என்னவென்றால் பார்ப்பன ஆதிக்கம் தளராமல் இருக்கச் செய்யும் செயல்களுக்கு எதிராக ஏதாவது செய்தால், அமெரிக்காவின் முதலாளித்துவப் பொருளாதார இயக்கத்திற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது தான். சாதியக் கொடுமைகளுக்கு எதிரான சட்டம் பிரிட்டனில் கைவிடப்பட்டது போல, அமெரிக்காவின் மத சுதந்திரப் பேச்சும் கைவிடப்படலாம்.
இதில் நுணுக்கமாகக் கவனிக்க வேண்டிய செய்திகள் சில உள்ளன. மத மோதல்கள் பிரச்சினையை முன்னிலைப்படும் பொழுது இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிப்பது மெதுவாகவும் மிதமாகவும் உள்ளது. ஆனால் சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவதில் மிக மிகத் துடிப்பாக உள்ளது. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? பார்ப்பனர்கள் மற்ற மதத்தினரை எதிர்ப்பதை விட, ஒடுக்குவதை விட, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் ஒடுக்கு முறையில் இருந்து தப்பி விடக் கூடாது என்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்பது தான்.
இதற்கு நேர் எதிராக, நாம் வேறு எந்தப் பிரச்சினையையும் விட, பார்ப்பன ஆதிக்க ஒழிப்புக்கு முதலிடம் கொடுத்துப் போராடுவதே சரியான வழியாக இருக்கும்.
இராமியா
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.5..2015 இதழில் வெளி வந்துள்ளது)