Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முகங்கள் – முகமூடிகள் – இலக்கிய சந்திப்பு: துடைப்பான்

ஞானம்(எம்.ஆர்.ஸ்டாலின்)-பிள்ளையான்
gp

வன்னியில் மனிதக் கொலைகளின் அகோரம் தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் முற்றாக விடுபட்டிராத ஜுலை 2009 இல் வெளியான கட்டுரை. காலத்தின் அழுத்தத்தால் மீள் பதிவிடுகிறோம்.

Published on: Jul 5, 2009 @ 17:00

சில நாட்களுக்கு முன் என் நண்பர் ஒருவர், மிகவும் என்னோடு குறைபட்டுக் கொண்டார். இம் முறை நடந்த இலக்கிய சந்திப்புக்கு நான் வரவில்லையென்றும் , எதிர்பார்த்த எவருமே சமூகம் தரவில்லையெனவும் கவலைப்பட்டார். நண்பருக்கு  அவரின் கவலை நியாயமாக இருக்கலாம். எமக்கு? என்ன செய்வது ?

நண்பரிடம் கேட்டேன்; நான் மற்றும் நீங்கள் எதிர் பார்த்தவர்கள் இலக்கிய சந்திப்பை நிராகரித்ததிற்கு என்ன காரணமாக இருக்கும்?  யோசித்துப்பார்த்தீர்களா என்றேன்.  இனியாவது வீட்டிற்கு சென்று ‘நிதானமாக’ இருக்கும் நிலையில் யோசியுங்கள் எனக் கூறினேன்.

90 களில், புகலிட இலக்கிய அரசியல் களம், ஒரு  தேடலை நோக்கிய ஆரோக்கியமான ,அனைத்து வகைப்பட்ட சிந்தனைப்போக்குகளிலும், ஆர்வமும் விமர்சன ரீதியான கருத்தாடல்களும் கொண்ட சூழலை தோற்றுவித்திருந்தது.  தமிழ்தேசிய விடுதலை இயக்கங்களில் ஏற்பட்ட பல்வகைப்பட்ட முரண்பாடுகள் , தோல்விகள் , விழ்ச்சிகள்  , புலம்பெயர்ந்த நண்பர்களை இவற்றிற்கான காரணங்களை நோக்கிய தேடலாக , விமர்சன ஆய்வுகளாக  ,தங்களுடைய சுயவிமர்சனங்களாக வெளிக்காட்ட இக் களங்களை இவ் வெளிகளை பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் அமையப்பெற்றிருந்தது

இக்காலம்  பல்வேறு சிறு சஞ்சிகைகளை , சந்திப்புக்களை , விவாத கருத்தாடல்களை உருவாக்கின.  குறிப்பாக சுவீஸ் நண்பர்களின் மனிதம் குழு , கனடா நண்பர்களின் தேடகம் முதலானவற்றின் செயல்பாடுகள் அர்த்தம் கொண்டதாக அமைந்திருந்தது. வன்முறைகளுக்கு எதிரான அவர்களின் மனோபாவம் , ஜனநாயக அக்கறை , மனித விழுமியங்கள் மீதான நேசிப்பு , இவற்றை நண்பர்கள் வாழ்விலும் செயலிலும் நேர்மையாக உண்மையாக தொடரவேண்டும் என்ற போராட்ட முனைப்பு , நண்பர்கள் மத்தியில் ஊக்கம் மிக்கதாக அமைந்திருந்தது.

தாயகத்தில் அனைத்து தரப்பினராலும் மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரங்களை மீட்க்கும் அவா எழுத்துக்களிலும் ,பேச்சுகளிலும் வெளிப்பட்டன. இயல்பாகவே நண்பர்கள் ஒடுக்கப்ட்ட மக்களின் அரசியல் , பொருளாதார , சமூக விடுதலை நோக்கிய பார்வை கொண்டவர்களாக இருந்தார்கள்.

இக் காலங்களில் தோழர் பரா போன்ற சமூக அக்கறையாளர்களினால் முன் முயற்சினால் தொடரப்பட்டுக்கொண்டிருந்த இலக்கிய சந்திப்புக்களில் இவ்வகைப்பட்ட  நண்பர்களின் தோழர்களின் பிரசன்னம் இயல்பாய் அமைந்திருந்தது. ஆரோக்கிமான கருத்தாடல்கள்  நடந்தன.

இக்காலங்களில் புகலிடச் சூழலில் குறிப்பாக ஐரோப்பாவில் குறைந்தது 25 சிறு சஞ்சிகைகளாவது வந்திருக்குமென நினைக்கிறேன். இலக்கிய சந்திப்பு மக்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் எதிர்த்தியங்கும் மாற்று தளமாக செயல்பட்டது. எனினும் இவ் இலக்கிய சந்திப்புக்குள் திரைமறைவில் கண்ணுத்தெரியாமல் ஒரு அதிகார போட்டியும் , ஆளுமையை யார் செலுத்துவதென்ற பனிப்போரும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. இவற்றின் சூத்திர தாரிகளாக ‘வெறும் இலக்கியவாதிகளாக’  புகலிடத்தில் அந்நேரத்தில் ‘அனைத்து செளபாக்கியங்களுடனும்’ வாழ்வை வளம்படுத்திக்கொண்டிருந்த ஒரு சிலர் இருந்தனர். இவர்கள் சமூக அக்கறை அற்று தங்கள் பிழைப்புவாத வாழ்வுக்காக எந்த சரணாகதியையும் யாருடனும் செய்யத்தயாரானவர்களாக இருந்தார்கள். இயல்பாக இடதுசாரி எதிர்ப்பாளர்களாகவும் இவர்கள் இருந்தனர்.

காலம் செல்லச் செல்ல இவர்களின் ஆளுமை அதிகரிக்க

EPDP அமைப்பாளர் ராமமூர்த்தி,  ராகவன்
rag

ஆரோக்கியமான கருத்தாடல்கள், விவாதங்கள் குன்றிப்போய் தனிநபர் விவாதங்களாக குறுகத் தொடங்கியது. வெறுப்புற்ற பல நண்பர்களும் , தோழர்களும் இலக்கிய சந்திப்பைவிட்டு ஒதுங்கத் தொடங்கினர். எனினும் சமுக அக்கறை கொண்ட தோழர்கள் பரா  ,கலைச்செல்வன்  ,புஸ்பராஐh போன்றவர்கள் இந்த பிழைப்புவாத நபர்களோடு மல்லுக்கட்டி , மல்லுக்கட்டி இலக்கிய சந்திப்பை தொடர்ந்த வண்ணம் இருந்தனர். மாற்றுக்கருத்துக்கான உரையாடல்களுக்கான தளமாக தக்கவைத்துக் கொள்வதில் மிகுந்த போராட்டத்தை எதிர்கொண்டனர்.

இவ் மூன்று தோழர்களின் அடுத்தடுத்த மரணங்கள் இவை தந்த வெற்றிடம் சுயநல சந்தர்ப்பவாத பிழைப்புவாதிகளுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அதன் பின்னான இலக்கிய சந்திப்பு தனக்கான அடையாளங்களை முழுமையாக இழக்கத் தொடங்கியது. இதன் முடிவு வன்முறையாளர்களின், அரச ஆதரவாளர்களின் ,வன்முறை குழுக்களின் ஆராதிப்பாளர்களின் உறைவிடமாக   தொங்கி நிற்கிறது.

இன்று, இலக்கிய சந்திப்பு பரிதாபகரமான தன்  இறுதி நிலையை ஈபிடிபியின் பிள்ளையானின் அரச எடுபிடிகளின் சந்திப்பாய் மாற்றி தன் விழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டது.

மக்களின் மீதான அனைத்து வன்முறைகளையும் எதிர்க்கின்ற , ஜனநாயக விழுமியங்களை நேசிக்கின்ற ,மானிட உரிமைகளை கோருகின்ற நாங்கள் எங்கஙம் ஒடுக்குமுறையாளர்களோடும் , அவர்கள் பிரதி நிதிகளோடும் ஒன்றாய் அமர்ந்து மனிதநேயம் பற்றிப் பேசமுடியும். ?

கருணாவின் முன்னாள் கூட்டாளி இன்னாள் பிள்ளையானின் ஆலோசகன்   பிள்ளையானின் ரி.எம்.வி.பி யின் ஐரோப்பிய அமைப்பாளன் சின்னமாஸ்ரர் என்ற ஸ்ராலினின் அருகமர்ந்து மனித விழுமியங்கள் பற்றி மனித உரிமைகள் பற்றி ஜனநாயகம் பற்றி எவ்வாறு பேசுதல் முடியும். ?

திருகோணமலையிலும்  ,மட்டக்களப்பிலும் சின்னஞ்சிறு பாலகிகள் வர்ஸா , தினுஸா இருவரினதும் மீதும் செலுத்தப்பட்ட வன்முறைகளினதும்,  கொலைகளினதும் துயரம் தந்த ஈரம் மாறு முன்
பிள்ளையானின் ஆலோசகனோடு அருகிருந்து மனித நேயம் பற்றி  பேசும் கொடுமையை நாம் என்னவென்பது?

எவ்வாறு சித்திரவதைக்குள்ளானவர்களும், சித்திரவதையாளர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து

சமாதானம்பற்றியும் ஜனநாயகம் பற்றியும் பேச முடியும்? ஒடுக்குமுறையால் பிதீயூட்டப்பட்ட இலங்கையில், வெளிப்படையாக பேசுவது பற்றிய பயம் இன்றளவும் எங்கெங்கும் நிறைந்திருக்கும் தருணத்தில், ஒடுக்குமுறையாளர்களின் ஏகபிரதிநிதிகளோடு எவ்வாறு உண்மைகளை, மனித உரிமைகளை பேணமுடியும்?

இலக்கிய சந்திப்பில் ஏன் நான் கலந்கொள்ளவில்லை, ஏனைய நண்பர்கள் ,தோழர்களின் வருகையும் வெறுமையாகிவிட்டதே என்ற அந்த நண்பரின் ஆதங்கத்துக்கு இவை சமர்ப்பணங்கள்!

Exit mobile version