Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மீனவர் பிரச்சனையும் இலங்கை இந்திய அரச ஆதரவாளர்களும் : சபா நாவலன்

தமிழகத்தில் அப்பாவி மீனவர்கள் கோரமாகப் படுகொலைசெய்யப்படுவதற்கு எதிரான உணர்வுகள் பல்வேறு தளங்களில் அரசியல் வியாபரமாக்கப்படுகின்றது. முற்றிலும் வேறுபட்ட இரண்டு வகையான பிரச்சனைகளை ஒருங்கிணைத்து இலங்கை இந்திய அரச ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி மிகவும் அபாயகரமானது.

1. இலங்கை இந்திய அரசுகளின் இணைவில் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்படும் வறிய அப்பாவி மீனவர்கள் குறித்த பிரச்சனைகளும் அதற்கு எதிரான அரசியலும்.

2. தமிழ் நாட்டு மீன்பிடிப் பெரு முதலாளிகளின் நவீன -ட்ரோலர் முறை மீன் பிடியால் பாதிக்கப்படும் குறிப்பாக இலங்கைத் தமிழ் மீனவர்களும் பொதுவாக ஏழை மீனவர்களும்.

இந்த இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும், தொடர்புபடுத்தியும் இலங்கை இந்த்திய அதிகார வர்க்கங்களும் அதன் அடிவருடிகளும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

நான்கு வகைப்பட்ட அதிகாரவர்க்க அரசியல் நிகழ்ச்சி நிரலில் பின்னணியில் இயங்கும் இலங்கை இந்திய அரசுகளினது அவற்றின் ஊதுகுழல்களினதும் செயற்திட்டம் வீதிக்குக் கொண்டுவரப்பட்டு அம்பபலப்படுத்தப்பட வேண்டும்.

1.ஈழத்தமிழ் மீனவர்களுக்கு ஆதரவாக இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைப் படுகொலை செய்கிறது என்ற கருத்தை உருவமைக்க முயலும் இலங்கை அரச ஆதரவாளர்கள்.

2. அப்பாவி மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கான உணர்ச்சி அரசியலை முன்வைத்து இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் உரிமையை எதிர்பார்ர்கும் பன்னாட்டு பெருமுதலாளிகள்.

3. பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகத்திற்கு வசதியாக கடற்பரப்பை சூனியப்பிரதேசமாக்கும் இலங்கை, இந்திய தமிழ் நாட்டு அரசுகளின் திட்டம்.

4. இந்த இரண்டு வேறுபட்ட பிரச்சனைகளை ஒருங்கிணைத்து இலங்கை இந்திய மீனவர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயலும் இலங்கை இந்திய அரச ஆதரவாளர்களும் அதன் அடிவருகளும்.

இந்த அபாயகரமான அரசியல் வியாபாரிகளை பகுத்தறிந்துகொள்வதும் அவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்துகொள்வதும் இன்று அவசியமானது.

இலங்கை இந்திய அரச ஆதரவாளர்கள் அரசியல் இரண்டு நோக்கங்களைக் கொண்டது.

1. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்திலிருந்து எழும் எதிர்ப்பியங்களை அழித்தல்.

2. பல் தேசிய நிறுவனங்களின் சுரண்டலை ஊக்குவித்தல்.

மீன்பிடி வர்த்தகத்தின் உலகச் சந்தை வியாபாரிகள் இலங்கை இந்திய மீனவர்களை தமது பொருளாதாய ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவர்கள். கூலி மற்றும் வறிய மீனவர்களின் நாளாந்தத் உழைப்பு மூலதனத்தை சுரண்டும் இவர்கள் கடற்பரப்பை சந்தைக்கு உவந்த பிரதேசமாக மாற்ற முனையும் நடவடிக்கைக்கு இந்திய இலங்கை அரசுகள் துணை போகின்றன. தமிழக மீனவர்களின் கொலைகள் ஊடாகப் பய உணர்வை ஏற்படுத்தி அவர்களை அரச பின்பலம் கொண்ட பெரு முதலாளிகளிடம் சரணடையச் செய்கின்றது.

தவிர, மேற்குறித்த வகைப்படுத்தல்களைப் புரிந்து கொள்ளாத எழுந்தமானமான தமிழ் உணர்வுப் போராட்டங்கள் பல் தேசிய நிறுவனங்களுக்கு எதிர்ப்பின்றிய மக்கள் ஆதரவைத் தோற்றுவிக்கிறது. இந்த நிறுவனங்கள் இந்திய மீனவர்களுக்கு மட்டுமல்ல இலங்கை மீனவர்களுக்கும் எதிராவையே.

ஆக, இந்திய அரசின் திரை மறைந்த ஆதரவுடன் அப்பாவி வறிய மீனவர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தும் மனிதப் படுகொலைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பியக்கங்களும் இலங்கை, இந்திய மற்றும் பல் தேசிய நிறுவனங்களுக்கு எதிரானதாக நடத்தப்பட வேண்டும்.

தேர்தலுக்காகவும் கனி மொழி போன்ற வாக்குக் கட்சி அரசியல் வாதிகள் நடத்துகின்ற போராட்டங்கள் அடிப்படையில் பல் தேசிய நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே நடத்தப்படுகின்றன. வன்னிப் படுகொலை அவலங்களை இனப்படுகொலை என்றும் ராஜபக்ச போர்க்குற்றவாளி என்றும் கூறத்துணியாது, அவருக்குப் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த கனிமொழியின் மீனவர்கள் மீதான காதல் எல்லை கடக்கும் இந்தியப் பெரு முதலாளிகளின் மூலதனத்திற்கானது.

இலங்கைக் கடல் எல்லைக்குள் நவீன உபகரணங்களோடு மீன்பிடித்த மீனவர்களின் கைதிற்கு எதிரான போராட்டங்கள் பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்கானதாக அமையும் அதே வேளை தமிழ் நாட்டு வறிய மீனவர்களின் படுகொலைகளிற்கு எதிரான போராட்டங்கள் இந்திய இலங்க அரசுகளின் ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உருவாகும் தன்மைகளைக் கொண்டிருகிறது.

புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில்ருந்து உருவாகவல்ல ஈழ ஆதரவு அரசியலை அழிப்பது தமது நோக்கங்களில் ஒன்றாக அமையும் என நாராயணன் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த காலத்தில், வன்னிப் படுகொலைக்களுக்குச் சற்றுப் பின்னான காலப்பகுதியில் பாதுகாப்புப் படை உயரதிகாரிகளின் மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

கே.பியை மையமாகக் கொண்டு இலங்கை அரசின் ஆதரவுத் தளம் புலம் பெயர் நாடுகளில் உருவமைக்கப்பட்டது. புலிகளின் ஆதரவாளர்களிலிருந்து தன்னார்வ நிறுவனங்கள் வரைக்கும் விரிந்த வலைப்பின்னல் ஒன்று இலங்கை அரச நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெற்றிகரமாகத் தயாராகிவிட்டது.

புலம் பெயர் நாடுகளை விட மிகவும் உன்னிப்பாகக் கவனம் செலுத்தப்பட்ட மற்றொரு ஆதரவுத்தளம் தமிழ் நாட்டிலிருந்தது. விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பிலிருந்து இன்றைய மீனவர் பிரச்சனை வரைக்கும் தமிழக மக்கள் மத்தியில் ஈழத் தமிழர்கள் மீதான வெறுப்பையும் இவர்களிடையே முரண்பாட்டையும் ஏற்படுத்தும் நாடகத்தை இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டு நிறைவேற்றி வருகின்றன.

தமிழ் நாட்டின் மீது உச்ச பட்ச கவனம் செலுத்தப்படுவதற்கு ஈழ ஆதரவுப் போக்கு மட்டும் காரணமல்ல. இதன் மறுபக்கத்தில் இந்திய, தமிழ் நாட்டு அரச அதிகாரங்கல் மீதான எதிர்புணர்வு தமிழ் நாட்டின் ஒரு தொகுதி இளம் சமூகத்தின் மத்தியில் அதிகரித்திருந்தது. ஈழப் பிரச்சனையை முன்வைத்து எதிரிகளை அடையாளம் காண்கின்ற இவர்கள், இடதுசாரி இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கஷ்மீர் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவான பல எதிர்ப்பியக்கங்கள் தமிழ் நாட்டில் உருவாகின. பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் இராணுவ அடக்குமுறைக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் வெற்றிகண்டன. இந்திய அரச அதிகாரத்திற்கு இவைகள் புதிய நெருக்கடிகளைத் தோற்றுவித்தன.

மினவர் பிரச்சனையை முன்வைத்து ஈழ ஆதரவளர்களையும் அவர்களின் எழுச்சியையும் கையாள்கின்ற “அரிய சந்தர்ப்பம்” இந்திய அரசிற்கு கிடைத்திருக்கின்றது. இந்திய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் இவர்களைத் தனிமைப்படுத்தவும், ஈழம் சார்ந்த முரண்பாடுகளை உருவாக்கவும் இந்திய இலங்கை அரசுகள் மீனவர் பிரச்சனையை ஆயுதமாகப் பயனபடுத்திக்கொள்கின்றன.

வன்னிப் படுகொலைகளின் சற்றுப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட அதிகார வர்க்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் இப்போது பிரதான கட்டத்தை அடைந்துள்ளது. நேபாளத்திலிருந்து வெளியாகும் ஹுமால் பத்திரிகையில் கடந்த ஆண்டு ஜூலை மாத இதழில் புலம் பெயர் தன்னார்வ நிறுவனமான சிறிலாங்கா ஜனநாயக முன்னணியின் முதன்மை உறுப்பினரான அகிலன் கதிர்காமர் நீண்ட கட்டுரையையும் யாழ்ப்பாண மீனவர் தன்னார்வ நிறுனம் ஒன்றின் தலைவரின் நேர்காணைலையும் வெளியிட்டிருந்தார். சாராம்சத்தில், போர் முடிந்துவிட்டது, அமைதிச் சூழலில் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தமிழக மீனவர்கள் எதிராகச் செயற்படுகின்றனர் என்று அக்கடுரையும் நேர்காணலும் கூற எத்தனிக்கின்றன.

ஆக, இலங்கை இந்திய அரசுகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஒரு தொடர்ச்சியக் கொண்டதாக அமைகிறது.

1. தமிழக மீனவர்கள் – வறிய மீனவர்கள் உட்பட – இலங்கை மீனவர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்குதல்.

2. ஈழ மீனவர்களைப் பாதுகாக்க இலங்கை அரச படைகள் தமிழ் நாட்டு மீனவர்களைக் கொலைசெய்கின்றன என்ற சிந்தனையைத் தோற்றுவித்தல்.

3.ஈழத் தமிழ் மீனவர்கள் மத்தியில் இலங்கை அரச ஆதரவுப் போக்கைத் தோற்றுவித்தல்.

4. இதனூடாக ஈழத் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையேயான பகையுணர்வை ஏற்படுத்தல்.

5. ஈழ ஆதரவாளர்களைத் தனிமைப்படுத்தல்.

6. இதனூடாக இந்திய எதிர்ப்புப் போராட்டங்களைத் தமிழ் நாட்டில் பலவீனமடையச் செய்தல்.

இலங்கை இந்திய அரச ஆதரவாளர்கள் இந்த நிகழ்ச்சி நிரலின் பின்புலத்தில் அணிதிரண்டுள்ளனர். அபாயகரமான இவர்கள் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

1. இந்திய இலங்கை மீனவர்களின் அடிப்படை எதிரிகள் பல் தேசிய நிறுவனங்கள் என்பதன் அடிப்படையில் இரண்டு மீனவர் சமூகங்கள் மத்தியிலும் போராட்டங்களும் இணக்கப்பாட்டிற்கான பேச்சுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. முரண்ப்ட்டடுகளை திட்டமிட்டு உருவாக்கும் இவ்விரு அரசுகளின் சூழ்ச்சி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட வேண்டும்.

3. வறிய மீனவர்களின் கொலைகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

கட்டுரையின் இறுதிப் பகுதி சில நாட்களில் வரும்..

Exit mobile version