பவுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் மட்டும் முழுமையில்லை. ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்து எஞ்சிய மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் சிங்கள-பவுத்த பேரினவாதம், மியான்மாரில் ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது தொடர் இனவெறி தாக்குதல்கள் நடத்தும் பவுத்த மதவாதம் போன்ற சமூக எதார்த்தங்ககள் இன்றி பவுத்த மதம் இல்லை.
ஐ.நா-வின் கூற்றுப்படி உலகிலேயே அதிக இன்னல்களுக்கு ஆளாகும் இனமாக ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக மாலத்தீவுகள் நூறு வருடங்களுக்கு பிறகு அழிந்து போகும் ஆபத்து சூழ்ந்து இருப்பதை போல எதிர்காலத்தில் ரொகிங்கியா இன மக்கள் வரலாற்றின் பக்கங்களில் மறைந்து போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
ரொகிங்கியா மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ரொகிங்கியா இன மக்கள் மியான்மரின் ரக்கீன் மாகாணத்தில் கணிசமாக வாழ்ந்து வருகிறவர்கள். மியான்மரில் எட்டு லட்சம் ரொகிங்கியா இனத்தவர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தம்மை மியான்மரின் பூர்வகுடிகள் என்று கருதும் போது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பங்களாதேஷிலிருந்து மியான்மருக்கு குடிபுகுந்தவர்கள் என்று அந்நாட்டு பெரும்பான்மை மதவாதிகள் கூறுகின்றனர். 1950-க்கு முன்புள்ள எந்த பர்மீய ஆவணத்திலும் ரொகிங்கியா என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்று கூறி இவர்களை சட்டவிரோத வந்தேறிகளாக பாவித்து அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து வருகிறது மியான்மர் அரசாங்கம்.
1948-ல் ஆங்கிலேயர்கள் மியான்மரை விட்டு வெளியேறிய பிறகு அமைந்த அரசு ரொகிங்கியாக்களை தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்தது. 1978-ல் ரொகிங்கியா மக்கள், ராணுவ சர்வாதிகார கும்பலால் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். 1982-ம் வருடம் புதிய குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டு ரொகிங்கியாக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதன் காரணமாக இம்மக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் முறைப்படியான ஆவணங்கள் எதுவும் பெற முடியாமல் போனது. ஒரு தனி அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தது. தங்கள் பகுதியை விட்டு அவர்கள் இதர பகுதிகளுக்கு செல்ல முடியாது.
உத்தர பிரதேச மாநில முசாபர்நகரில் ஜாட் சாதி பெண் ஒருவர் இஸ்லாமிய இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக சொல்லி இந்து மதவெறியர்கள் பின்னிருந்து எப்படி ஒரு பெரும் வன்முறை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டதோ, அதே போன்றதொரு சம்பவம் 2012 மே மாதம் ரொகிங்கியா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது. வீடு திரும்பும் ஒரு பவுத்த பெண்மணி அடையாளம் தெரியாத நபர்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு, கொல்லப்படுகிறார். அடுத்த சில மணி நேரங்களிலே பர்மீய போலிஸ் மூன்று ரொங்கியா இளைஞர்களை கைது செய்கிறது. சில நாட்கள் கழித்து ரொகிங்கியா மக்களை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு பேருந்தை அடித்து நொறுக்கி 10 முஸ்லிம்களை கொன்றழிக்கின்றனர் பவுத்த மத வெறியர்கள்.
பவுத்த வெறியர்களுக்கு பிரச்சினையை முடிக்க மனமில்லை. அதே மாதம் ரொகிங்கியா மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. ஒரே இரவில் 14 கிராமங்கள் எரியூட்டப்பட்டன. மக்கள் பெருமளவுக்கு இடம்பெயர்கிறார்கள். சுமார் தொண்ணூறாயிரம் முஸ்லிம்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை விட்டு வெளியேறினார்கள். ரக்கீனின் தலைநகரான சித்வேக்கு ஓடிய பலரை பிடித்து அகதிகள் முகாமில் அடைத்தது போலிஸ். மக்கள் தாய்லாந்து-பர்மா எல்லை வரை ஓடினார்கள்.
அதே வருடம் அக்டோபர் மாதத்தில் திரும்பவும் இரண்டாவது அலையாக ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த முறை ரொங்கியா மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு மலேசியாவுக்கு தப்பினார்கள். வழியில் படகு கவிழ்ந்து பலர் மாண்டார்கள். 1.45 லட்சம் ரொகிங்கியா முஸ்லிம்கள் மியான்மருக்கு உட்பட்ட பகுதிகளிலே சிதறி ஓடி பதுங்கி வாழ்கின்றனர். தாய்லாந்து. பங்களாதேஷ், மலேசியாவுக்கு ஓடியவர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் இருப்பார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனை அரசின் முழுமையான ஆதரவோடு நிகழ்த்தப்பட்டிருக்கும் இன சுத்திகரிப்பு நடவடிக்கை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்ற ‘ஜனநாயகத்தின் தேவதை’ ஆங் சான் சூ கீ ரொகிங்கியாக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. 20 வருட சிறை வாழ்க்கையை முடித்துக் கொண்டு வந்த பின்னர் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய பேட்டியில் ரொகிங்கியாக்கள் பிரச்சினை எழுப்பப்பட்டது. அப்போது அவர் வன்முறையை கட்டவிழ்த்து விடும் பவுத்த இனவெறியர்களையும், வன்முறைகளில் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படும் ரொகிங்கியாக்களையும் ஒரே தட்டில் வைத்தார். பவுத்த இனவாதத்தை உரத்து கண்டிப்பதற்கு பதில் ‘எதிர் தரப்பு குறித்த அச்சம் இரு தரப்பிலும் நிலவுவதாக’ தெரிவித்தார். இவருக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.
இந்த வருடம் மார்ச் மாதம் நடந்த வன்முறையில் நாற்பது ரொகிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து 8,900 ரொகிங்கியாக்கள் இந்தியாவுக்குள் வந்திருப்பதாக அரசின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஆனால், இந்தியாவுக்குள் அடைக்கலம் நாடியிருக்கும் ரொகிங்கியாக்களின் எண்ணிக்கை 15,000 வரை இருக்குமென்பது சமூக ஆர்வலர்களின் கணக்கு. பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்குள் குடிபுகும் மக்களை கடுமையாக எச்சரித்து தனது தேர்தல் பரப்புரைகளின் போது அசாமிலும், மேற்குவங்கத்திலும் மோடி பேசியது நினைவிருக்கலாம். அசாமில் மோடி உரையாற்றிவிட்டு வந்த சில நாட்களிலே முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் வன்முறை நிகழ்த்தப்பட்டது. எனவே மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு வரும் ரொகிங்கியாக்கள் மீது புதிய அரசின் பார்வை எப்படி இருக்கும் என்ற நினைப்பே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
ரொகிங்கியா மக்களுக்கு கொடுமைகள் 2012-ம் வருடத்திலிருந்து மட்டும் இழைக்கப்படவில்லை. இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியானவர்கள். ரொகிங்கியா மக்களை மைய நீரோட்டத்திலிருந்து முழுவதுமாக ஒதுக்கி வைப்பதில் முழுமையான வெற்றியை கண்டுள்ளது பவுத்த பெரும்பான்மை சமூகம். அம்மக்கள் மீதான தாக்குதலுக்கு சமூக ஒப்புதல் பெறும் வண்ணம் பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான இனவாத அரசியலை வளர்த்து வருகின்றனர், பவுத்த பிக்குகள்.
நியூ யார்க் டைம்ஸ் இதழின் செய்தி
கட்டுரையில் அசின் விராத்து என்னும் பவுத்த பிக்கு கூறும் போது ”அன்பும், கருணை உள்ளமும் கொண்டிருக்க வேண்டியது தான்; அதற்காக ஒரு வெறிநாயுடன் தூங்க முடியுமா?” என்று ரொகிங்கியாக்களை வெறிநாயாக சித்தரித்து இருந்தார். ”இஸ்லாமியர்களுடன் எக்காரணம் கொண்டும் இணையாதீர்கள். அவர்கள் நமது நிலங்களையும், உடைமைகளையும் பறித்துக் கொள்வார்கள்; எனவே அவர்களை தனிமைப்படுத்துங்கள்” என்று பவுத்த பெரும்பான்மை சமூகத்திடம் விரிவான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. 2007-ம் ஆண்டு ராணுவ சர்வாதிகார கும்பல் அரசை எதிர்த்து போராடிய பவுத்த பிக்குகளுக்கு முழு ஆதரவையும், சுதந்திரத்தையும் வழங்கி வருகிறது, தற்போதைய ராணுவ கும்பலின் ‘ஜனநாயக’ அரசு.
இப்படி பவுத்த பிக்குகளின் இனவாத அரசியலும், ராணுவ சர்வாதிகார கும்பல் அரசின் இனவாத கொள்கையும் இணைந்து பவுத்த பெரும்பான்மை மக்களிடமிருந்து முழுவதுமாக ரொகிங்கியா முஸ்லிம்களை முற்றிலுமாக அந்நியப்படுத்தி உள்ளது. அகதி முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் ரொகிங்கியாக்கள் தமது தற்போதைய வாழ்க்கைக்கு சற்று முன்பான வாழ்க்கையாவது கிடைக்குமா என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் பொது பல சேனா உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராஜபக்சே, மியான்மரில் பவுத்த பிக்குகள் உருவாக்கியிருக்கும் சமூக பலத்தில் ராணுவ சர்வாதிகார கும்பல், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் உருவாகியிருக்கும் சமூக உளவியல் பலத்தில் பாஜக என்று நம்மை பாசிசம் சூழ்ந்து நிற்கிறது. ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகளிடம் ஒற்றுமையை வளர்த்து இந்த நச்சு சூழலை வெட்டி வீழ்த்துவோம்.
தொடர்புடைய பதிவுகள்:
மியான்மார் முஸ்லீம்களின் அவலம்:இலங்கை முஸ்லீம்கள் தொலைவில் இல்லை
பௌத்தத்தின் பெயரால் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாகும் முஸ்லீம்கள் : மியான்மார் கொலைக்களம்
நன்றி : வினவு