ஆதிக்கம் செலுத்தும் மையங்களின் வளர்ச்சியும், ஆதிக்கம் செலுத்தப்படும் விளிம்புகளின் வளர்ச்சிக் குறைவும் உலகளாவிய முதலாளித்துவ விரிவாக்கத்தின் உள்ளார்ந்த விளைவுகளாக இருப்பதால், அவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்களைப் போலப் பிரிக்கவியலாதவை என்ற கருத்து அம்மார்க்சியத்திற்கு அந்நியமானதாய் இருந்தது.
ஆனால், முதலாளித்துவ உலகமயமாதலில் உள்ளார்ந்து இருக்கும் எதிர்த்துருவமாக்கல் என்பது – அதன் உலகளாவிய சமூக, அரசியல் முக்கியத்துவத்தினால் அது ஒரு முக்கியமான உட்பண்பாய் இருக்கிறது – முதலாளித்துவத்தைக் கடந்து செல்ல நாம் கொண்டிருக்கக் கூடிய எந்தவொரு திட்டத்திற்கும் சவால் விடுவதாக இருக்கிறது.
இந்த எதிர்த்துருவமாக்கல் உழைக்கும் வர்க்கங்களின் பெரும் பகுதியினரும், அதற்கும் மேலாக, உலக அமைப்பின் மையங்களாக நிலைகொண்டதால் வளர்ச்சி ஆதாயமடைந்த ஆதிக்க நாடுகளின் நடுத்தர வர்க்கங்களும் சமூகக் காலனியத்துக்குச் செல்லும்படியான சாத்தியத்தின் தோற்றுவாயில் இருக்கிறது. அதே நேரம், அவ்வெதிர்த்துருவமாக்கல் உலக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயற்கையான, நிரந்தரமான கலகத்திற்கு விளிம்புகளை, சீன வழக்கின்படி,’புயற்பிரதேசங்களாக’ மாற்றியமைக்கிறது.
கலகம் என்பதே புரட்சியாகாது தான் ஆனால் புரட்சிக்கான சாத்தியத்துக்கு அது வழிவகுக்கிறது. அதே நேரம், அமைப்புமுறையின் மையத்திலும் முதலாளித்துவ மாதிரி அமைப்பை நிராகரிப்பதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. 1968 ஆம் ஆண்டை ஓர் உதாரணமாகக் காட்டலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்வைக்கப்பட்ட ‘கிராமப்புறங்கள் நகரங்களை வளைத்து நிற்கின்றன’ என்ற கருத்தாக்கம் அக்காரணத்தாலேயே பயன்படுத்த இயலாதவாறு மிகவும் தீவிரத்தன்மை கொண்டதாய் இருந்தது.
முதலாளித்துவம் கடந்து உலகளாவிய சோசலிசம் நோக்கிய நிலைமாற்றத்தை நிகழ்த்துவதற்கான உலகளாவிய தந்திரம் என்பது, அமைப்புமுறையின் மையங்களிலும் விளிம்புகளிலும் நிகழும் போராட்டங்களுக்கு இடையிலான ஒட்டுறவை வரையறுக்க வேண்டியுள்ளது.
ஆரம்பத்தில் இரண்டாம் அகிலத்தின் கருத்தியலிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட லெனின், ‘பலவீனமான கண்ணியில்’, ரஷ்யாவில் புரட்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். ஆனால் இந்தப் புரட்சியின் விளைவாக ஒரு சோசலிசப் புரட்சி அலையே உருவாகும் என்று எப்போதும் நம்பியிருந்தார். இந்த நம்பிக்கை பொய்த்துப்போனது.
பிறகு கிழக்குலகின் கலகங்களைப் புரட்சிகளாக மாற்றுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பார்வைக்கு அவர் வந்தார். ஆனால் அப்புதிய நிலைநோக்கை முறைப்படுத்தியது சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியும் மாவோவும் தான்.
ரஷ்யப் புரட்சி உழைக்கும் வர்க்கத்திடமும் தீவிரமான அறிவுஜீவிகளிடமும் நன்கு வேரூன்றியிருந்த ஒரு கட்சியால் வழிநடத்தப்பட்டதாகும். சீருடையணிந்த விவசாய வர்க்கத்தோடு – இது ஆரம்பத்தில் சோசலிசப் புரட்சிகரக் கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது – அக்கட்சியின் கூட்டணி இயல்பாகவே நடந்தேறியது. அதன் தொடர்ச்சியாகக் கொண்டுவரப்பட்ட விவசாயச் சீர்திருத்தம் ரஷ்ய விவசாயிகளின் நிலவுரிமையாளராகும் பழைய கனவை நனவாக்கியது. ஆனால் இந்த வரலாற்றுச் சமரசம் அதனுடைய வரையறைகளுக்கான விதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது:
எப்போதும் போல் சந்தையானது விதிக்கப்பட்டபடி அதன் இயல்பினாலேயே விவசாய வர்க்கத்தில் பிரிவினைகளை வளரச் செய்தது. குலாக்குமயமாதல் என்று இது பிரபலமாய் அறியப்பட்டது.
சீனப்புரட்சி ஆரம்பத்திலிருந்தே அல்லது 1930களில் இருந்தாவது, ஏழை மற்றும் நடுத்தர விவசாய வர்க்கங்களோடான ஒரு வலுவான கூட்டணியை உறுதிப்படுத்தும் அடித்தளங்களிலிருந்து உருவெடுத்தது. அதே போல, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரும்கூட என்ற சீனப்புரட்சியின் தேசியப் பரிமாணம், கோமிண்டாங்கின் பலவீனங்களாலும் துரோகங்களாலும் ஏமாற்றமடைந்திருந்த பூர்சுவா வர்க்கங்களிலிருந்தும் பரவலாக ஆளெடுக்கும் வாய்ப்பை கம்யூனிஸ்டுகளால் தலைமையேற்கப்பட்ட முன்னணிக்கு வழங்கியது.
இவ்வாறு புரட்சிக்குப் பிற்பட்ட ரஷ்யாவிலிருந்து வேறுபட்டதொரு புதிய சூழ்நிலை சீனப்புரட்சியால் உருவானது. தீவிரமான விவசாயப் புரட்சி விவசாய நிலங்களில் தனியுடைமை என்ற கருத்தையே நசுக்கிவிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களின்பால் சம உரிமைக்கான உத்தரவாதத்தை வழங்கியது.
இன்றுவரை, வியட்நாமைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இல்லாத அந்தத் தீர்மானகரமான சாதக அம்சம்தான் விவசாய முதலாளித்துவத்தின் அபாயகரமான வளர்ச்சிக்குப் பெரும் தடைக்கல்லாக இருந்து வருகிறது.
இந்தப் பிரச்சினையை மையமாகக் கொண்டே சீனாவின் இன்றைய விவாதங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் வேறுவகைகளில் பார்க்கும்போது, கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் பூர்சுவா தேசியவாதிகளின் நுழைவு என்பது, ‘முதலாளித்துவப் பாதையாளர்கள்’ என்று மாவோவால் குறிப்பிடப்பட்டவர்களின் திரிபுகளுக்கு ஆதரவான கருத்தியல் ஆதிக்கத்தையும் தவிர்க்கவியலாமல் ஏற்படுத்தியது.
சீனப் புரட்சிக்குப் பின்னான ஆட்சி குறிப்பிடத் தகுந்த அளவிற்கும் மேலான அரசியல், பண்பாட்டு, பொருளியல் நிறைவேற்றங்களை – நாட்டைத் தொழில்மயமாக்கல், நவீன அரசியல் பண்பாட்டைத் தீவிரமயமாக்கல் போன்றவை – சாதனைகளாகக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தீர்மானகரமான இரு நூற்றாண்டுகளுக்கும் (1750 – 1950) மேலாக நிலவி வந்த, சீனப் பேரரசின் துயரமான வீழ்ச்சியின் மையமாக இருந்த ‘விவசாயிகள் பிரச்சினைக்கும்’ மாவோயிசச் சீனம் தீர்வு கண்டது.
இன்னும் மேலாக, சோவியத் யூனியனின் மிகத் துயரகரமான பிறழ்வுகள் போல ஏதும் நேராதபடிக்கு மாவோயிசச் சீனம் இந்தப் பயன்களை அடைந்தது. பொதுக்கட்டுப்பாட்டாக்கம் என்பது ஸ்டாலினியத்தைப் போன்று கொலைபாதக வன்முறையால் நிர்ப்பந்திக்கப்படவில்லை. உட்கட்சி எதிர்ப்புகள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதில் கொண்டுபோய் விடவில்லை. டெங் ஒதுக்கப்பட்டு, பிறகு திரும்பினார்.
வருமானப் பகிர்வை ஈடிணையற்ற முறையில் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும், அவர்களுக்குள்ளும், அவர்களுக்கும் ஆளும் வர்க்கத்தினருக்கும் இடையிலும் ஒப்பீட்டளவில் சமமானதாக ஆக்கும் நோக்கம் என்பது விடாப்பிடியாகப் பின்பற்றப்பட்டது. இதில் சற்று ‘ஏறக்குறைய’ இருந்ததென்னவோ உண்மைதான்.
சோவியத் யூனியனின் வளர்ச்சித் திட்டமுறைகளுக்கு மாறான தேர்வுகள் மூலம் இந்தச் சமப்பகிர்வு முறைமைப்படுத்தப்பட்டது. இந்தத் தேர்வுகள் 1960களின் துவக்கத்தில் ‘பத்துப் பெரும் உறவுகள்’ என்று வடிவமைக்கப்பட்டன. இந்த வெற்றிகள் தான் 1980க்குப் பிறகு பின்-மாவோயிசச் சீனத்தின் பின்னாளைய வளர்ச்சித் திட்ட வெற்றிகளுக்குக் காரணமாய் அமைந்தன.
இந்தியாவிடமிருந்து வேறுபடும் சீனத்தின் இத்தன்மை – இந்தியா புரட்சியைக் கண்டிராத நாடு என்பதாலேயே இவ்வேறுபாடு – 1950லிருந்து 1980 வரை இந்தியாவும் சீனாவும் மேற்கொண்ட வேறு வேறு வளர்ச்சிப் பாதைகளை விளக்குவதில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாய் இருக்கிறது. மட்டுமல்ல, இன்னும்கூட எதிர்காலம் குறித்த வேறுபட்ட வாய்ப்புள்ள அல்லது சாத்தியமான நிலைநோக்குகளைத் தன்மைப்படுத்தும் நாடுகளை விளக்குவதிலும் முக்கியத்துவம் பெற்றதாய் இருக்கிறது.
சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நிகழ்ந்ததைப் போன்ற அழிவுப்பூர்வமான அதிர்ச்சிகளை பின்-மாவோயிசச் சீனம் தவிர்த்துக் கொண்டு, அன்றிலிருந்து தன் வளர்ச்சியை புதிய முதலாளித்துவ உலகமயமாதலுக்கு உட்பட்டு தன்னைத் ‘திறந்துகொள்வதில்’ ஈடுபடுத்திக் கொள்ள முடிந்ததற்கும் இந்த மேற்சொன்ன வெற்றிகளே விளக்கமாய் இருக்கின்றன.
அதே நேரம், சீனாவின் நீண்டகால நிலைநோக்குகள் சோசலிசத்துக்குச் சாதகமாகவே செயல்படுமா என்ற பிரச்சினையை மாவோயிசத்தின் வெற்றிகள் ‘தீர்மானகரமாய்’ அல்லது ‘மாற்றியமைக்க முடியாத’ வகையில் தீர்க்கவில்லை.
முதற்காரணம், 1950 – 1980 காலகட்டத்தின் வளர்ச்சித் திட்டமுறை தன் ஆற்றலை இழந்துவிட்டது. வேறு பல விஷயங்களோடு சேர்த்து, கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தபோதிலும்கூட, திறந்துவிடுதல் என்பது, பிற்பாடு நிகழ்ந்து வருவது காட்டுவது போல முதலாளித்துவத்தை நோக்கிப் பரிணமிக்கும் போக்குகளைத் தூண்டிவிடக்கூடிய அபாயத்தைக் கொண்டது என்றபோதிலும் தவிர்க்கவியலாததாகிப் போனது.
மேலும், சீனாவின் மாவோயிச அமைப்புமுறை முரணான போக்குகளை – சோசலிசத் தேர்வுகளை வலுப்படுத்தவும் அதே சமயம் பலவீனப்படுத்தவும் கூடிய – ஒருசேரக் கொண்டது என்பதும் ஒரு காரணம்.
இந்த முரண்பாடு குறித்த விழிப்புணர்வோடுதான், ஒரு ‘கலாசாரப் புரட்சியின்’ மூலம் சோசலிசத்துக்குச் சாதகமாகத் தடியை வளைக்கும் முயற்சியில், 1966லிருந்து 1974 வரை ஈடுபட்டார் மாவோ. ‘தலைமையகத்தைத் தகர்த்தெறியுங்கள்’ என்றார் மாவோ. ஆதிக்கப் பதவிகளில் இருக்கும் அரசியல் வர்க்கத்தின் பூர்சுவா அபிலாசைகளின் பீடம் அது! தன்னுடைய நடைமுறைத் திருத்தத்தை நிறைவேற்ற ‘இளைஞர்களிடத்தில்’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று மாவோ கருதினார் இந்த முடிவு தவறானது என்பதை நடதேறிய நிகழ்வுகளின் போக்கு காட்டியது.
கலாசாரப் புரட்சி கைவிடப்பட்ட உடனே, முதலாளித்துவப் பாதையை நாடிய கட்சிக்காரர்கள் தாக்குதலை மேற்கொள்ள ஊக்கம் பெற்றார்கள்.
நீண்ட கடினமான சோசலிசப் பாதைக்கும் இப்போது நடைமுறைப்படுத்தப்படும் முதலாளித்துவத் தேர்வுக்கும் இடையிலான போராட்டம் என்பது நிச்சயமாக ‘தீர்மானகரமாகக் காலாவதியாகி’ விடவில்லை. உலகில் வேறெங்கும் போலவே, முதலாளித்துவம் உருக்கொள்ளும் முயற்சிக்கும் சோசலிச நிலைநோக்குக்கும் இடையிலான முரண்பாடு என்பது நமது சகாப்தத்தின் உள்ளார்ந்த, நாகரிகங்களுக்கு இடையிலான முரண்பாட்டின் உள்ளடக்கமாகிறது.
ஆனால் இந்த முரண்பாட்டை எதிர்கொள்ளத் தேவையான முக்கியமான உடைமைகளை புரட்சியிலிருந்தும் மாவோயிசத்திலிருந்தும் சீன மக்கள் ஏராளமாய்ச் சுவீகரித்திருக்கிறார்கள்.
சமூக வாழ்வின் பல்வேறு தளங்களிலும் இந்த உடைமைகள் இயக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, அரசுக்குச் சொந்தமான விவசாய நிலங்களைப் பாதுகாப்பதிலும் அனைவருக்கும் விவசாய நிலங்களின்பால் உள்ள உரிமையைப் பாதுகாப்பதிலும் இந்த உடைமைகள் மிகத் தீவிரமாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன.
உலகமயமான முதலாளித்துவம் அல்லது ஏகாதிபத்திய விரிவாக்கத்தில் உள்ள பணயங்களை உறுதிப்படுத்தவும் அதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் தீர்மானகரமான முறையில் மாவோயிசம் பங்களித்துள்ளது. இயல்பிலேயே ஏகாதிபத்தியத் தன்மையும் எதிர்த்துருவமாக்கும் தன்மையும் கொண்ட ‘உண்மையில் நிலவிவரும்’ முதலாளித்துவ விரிவாக்கத்தின் தவிர்க்கவியலாத மையம் மற்றும் விளிம்பு முரண்பாட்டை நமது பகுப்பாய்வில் மையப்படுத்திச் சோதிக்க மாவோயிசம் உதவுகிறது.
இவ்வாய்விலிருந்து ஆதிக்கஞ்செலுத்தும் மையங்கள் ஆதிக்கஞ்செலுத்தப்படும் விளிம்புகள் இரண்டிலும் சோசலிசப் போராட்டத்துக்குத் தேவையான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவும் மாவோயிசம் பங்களித்துள்ளது.
இந்தத் தீர்மானங்கள் ‘சீனப் பாணியில்’ ஒரு நேர்த்தியான சூத்திரமாகத் தொகுக்கப்பட்டுள்ளன : ‘அரசுகளுக்குத் தேவை சுதந்திரம்;. தேசங்களுக்குத் தேவை விடுதலை. மக்களுக்குத் தேவை புரட்சி’. அரசுகள், அதாவது ஆளும் வர்க்கங்கள் – உலகின் அனைத்து நாடுகளையும் சேர்ந்த ஆளும் வர்க்கங்கள் – வெறுமனே அந்நியச் சக்திகளின் கைப்பாவைகளாகவோ கட்டளைகளை நிறைவேற்றுபவர்களாகவோ இல்லாத போது, முதலாளித்துவ உலக அமைப்புமுறையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் பொருட்டுத் தங்கள் தளத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும், செயல்படுத்தப்படும் பொருட்களாக இருக்கும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்தியம் நிர்ப்பந்திக்கும் போதெல்லாம், ஒருதலைப் பட்சமான ஒத்துழைப்புக்குக் கீழ்ப்படிந்து போக விதிக்கப்பட்ட நிலையிலிருந்து உலக அமைப்பை உருவாக்குவதில் பங்கெடுப்பதன் மூலம், செயல்படும் மனிதர்கள் என்ற நிலைக்குத் தங்களை உயர்த்திக் கொள்ளவும் முயல்வார்கள்.
தேசங்கள், அதாவது முற்போக்காகச் செயல்படக்கூடிய ஆற்றல் பெற்ற வர்க்கங்களைக் கொண்ட வரலாற்றுப் பிரிவினர், விடுதலையை விரும்புவார்கள், அதாவது ‘வளர்ச்சியையும் நவீனமயமாதலையும்’. மக்கள், அதாவது ஆதிக்கம் செலுத்தப்படும், சுரண்டப்படும் பெருவாரியான வர்க்கங்கள் சோசலிசத்தை விரும்புவார்கள்.
நிலவும் உலகை அதன் அனைத்துச் சிக்கல்களோடும் புரிந்து கொள்வதையும், அதன் தொடர்ச்சியாய் செயல்பாட்டுக்கான பயன்தரும் திட்டமுறைகளை வகுப்பதையும் இச்சூத்திரம் ஏதுவாக்குகிறது.
முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்துக்கான ஒரு நீண்ட, மிக நீண்ட உலகளாவிய நிலைமாற்றம் குறித்த நிலைநோக்கில் இச்சூத்திரத்துக்கு இடமிருக்கிறது. அத்தன்மையினால், இது மூன்றாம் அகிலத்தின் ‘குறுகியகால நிலைமாற்றம்’ என்ற கருத்தாக்கத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொள்கிறது.
————————————————————————————————-
மொழிபெயர்ப்பாளர் எஸ்.வி.உதயகுமார் சமூகவியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். நிர்வாகவியல் ஆலோசகராகத் தற்போது பணியாற்றி வருகிறார்.